Amrutha Publications: Interview with Prabhu Thilak on Chennai Book Fair 2008
Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008
முகங்கள்: படித்தது மருத்துவம் பிடித்தது புத்தகம்!
அவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர். தற்போது சேலம் வினாயக மிஷன்ஸ் கிருபானந்தவாரியார் மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியல்துறையில் எம்.டி.படிக்கும் மாணவர். ஆனால் அவர் புத்தகங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார். அம்ருதா பதிப்பகம் என்கிற பெயரில் நல்ல நூல்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபுதிலக்.
அவர் காவல்துறை உயர் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதியின் மகன்.
சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கான புத்தக வெளியீட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்…
“”நான் படித்தது மருத்துவம் என்றாலும் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். காரணம் எங்கள் வீட்டு கிச்சன் முதல் பெட்ரூம் வரை புத்தகங்கள் எப்போதும் இருக்கும். அம்மா ஒரு பெரிய இலக்கியவாதி. இந்தச் சூழலில் வளர்ந்த எனக்குப் புத்தகங்களின் மேல் எப்போதும் விருப்பம் அதிகம்.
அம்ருதா அறக்கட்டளையின் சார்பாக இந்தப் பதிப்பகத்தை 2005 இல் ஆரம்பித்தோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட தலைப்பில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம்.
ஏற்கனவே நிறையப் பதிப்பகங்கள் இருக்கின்றன. எனவே நாங்கள் புத்தகப் பதிப்பில் இறங்கும் போது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.
புத்தக வெளியீடு என்பது இப்போது வியாபாரம் ஆகிவிட்டது. இதற்கு எழுத்தாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன. பதிப்பாளர் தரப்பிலும் குறைகள் உள்ளன.
நிறைய எழுத்தாளர்களுக்கு தங்களுடைய புத்தகங்களை வெளியிட நல்ல பதிப்பகம் அமைவதில்லை. தான் எழுதியவை புத்தகமாக வெளிவருமா என்று புத்தகம் வெளியிட வாய்ப்புக் கிடைக்காத எழுத்தாளர்கள் ஏங்கும் நிலை உள்ளது.
அதிலும் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு பெரும்பாலான பதிப்பகங்கள் முன் வருவதில்லை.
சில பதிப்பகங்கள் எழுத்தாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு புத்தகங்களை வெளியிடுகின்றன.
இம்மாதிரியான சூழ்நிலையில் அதிகம் அறிமுகம் ஆகாத எழுத்தாளர் என்றாலும் தரமான படைப்பு என்றால் வெளியிடுகிறோம். உதாரணமாக சேலம் இலா.வின்சென்ட் என்பவரின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாப்லோ அறிவுக் குயிலின் “குதிரில் உறங்கும் இருள்’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டோம். பாலுசத்யாவின் “காலம் வரைந்த முகம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டோம்.
மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் நிறைய வெளிவந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் அதிலும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்று விரும்பினோம். மொழிபெயர்ப்பு நூல்கள் என்றால் முதலில் ரஷ்ய நூல்கள், அமெரிக்க நூல்கள், பிரெஞ்ச் நூல்கள் என்றுதான் மொழிபெயர்த்தார்கள். இப்போது லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை நோக்கி ஓடுகிறார்கள். ஆனால் அவற்றிற்கு நிகரான இலக்கிய வளம் நமது ஆசிய நாட்டு இலக்கியங்களுக்கு உள்ளது. மிகப்பெரிய அமெரிக்காவைப் போரில் வீழ்த்திய வியட்நாம் அதன் ஆயுத பலத்தால் மட்டுமா வீழ்த்தியது? அதன் ஆன்மபலமும் அல்லவா அமெரிக்காவின் வீழ்ச்சிக்குக் காரணம்? அமெரிக்கா போன்ற நாடுகள் செல்வ வளத்தில் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் ஞான வளம் ஆசிய நாடுகளுக்கே உரியது. நபியாகட்டும், கன்பூசியஸ் ஆகட்டும், கெüதம புத்தராகட்டும் எல்லாரும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களே. நமது இந்தியாவிலேயே சிறந்த சிந்தனையாளர்கள், வளமான இலக்கியங்கள் உருவாகவில்லையா? அந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடத் தீர்மானித்தோம்.
மலையாள இலக்கியவாதி என்றால் பெரும்பாலோருக்கு தகழி சிவசங்கர பிள்ளையைத் தெரியும். வைக்கம் முகம்மது பஷீரைத் தெரியும். பிற எழுத்தாளர்களை அவ்வளவாகத் தெரியாது. பொற்றேகாட், கேசவதேவ், மலையாற்றூர் ராமகிருஷ்ணன், சி.ஏ.பாலன் போன்றோரைச் சிலருக்குத்தான் தெரியும்.
பால்சக்கரியாவின் “அன்புள்ள பிலாத்துவுக்கு’ என்ற நாவலை வெளியிட்டோம். நாங்கள் பலருக்கும் தெரியாத பி.சுரேந்திரன் என்ற மலையாள எழுத்தாளரின் “மாயா புராணம்’ என்ற நாவலை வெளியிட்டோம். கோயில் நுழைவுப் போராட்டத்தை மையமாக வைத்து கன்னடத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தி எழுதிய நாவலை “பாரதிபுரம்’ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறோம். தாகூரின் “சிதைந்த கூடு’ நூலை வெளியிட்டிருக்கிறோம்.
எங்கள் பதிப்பக வெளியீடுகள் எந்தக் குறிப்பிட்ட சார்புநிலையும் எடுப்பதில்லை. மனித மேம்பாட்டுக்கு, சமூக மேம்பாட்டுக்கு உதவும் நூல்களை வெளியிடுவதே எங்கள் நோக்கம். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாரையும் யாரும் காயப்படுத்தக் கூடாது. இவைதான் எங்கள் நோக்கம். விருப்பம்.
நமது மகாபாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் இல்லாத விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?
நல்லது கெட்டது, கெட்டதில் உள்ள நல்லது எல்லாம் மகாபாரதத்தில் உண்டு. எல்லாரும் மன்னிக்கும்தன்மையுடனும் பெருந்தன்மையுடனும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய இதிகாசங்கள் தோன்றின. ஆனால் இன்றைய வாழ்க்கை எப்படி உள்ளது? கொலை, கொள்ளை, வெறுப்பு, இப்படி ஆரோக்கியமில்லாத சமூகமாகிவிட்டது. அர்த்தமுள்ள பொழுது போக்குகள் இல்லை. இவற்றை மாற்றி நல்ல சமுதாயத்தை அமைக்க விரும்பும் பலர் குதிரைக்குக் கண்பட்டை அணிந்ததுபோல் ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். அப்படியில்லாமல் மனித மேம்பாட்டுக்கு உரிய நல்ல கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு உள்ளது.
அதனால்தான் “கிறிஸ்து மொழிக் குறள்’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம். “நபி(ஸல்) நமக்குச் சொன்னவை’ என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறோம்.
“சல்வடார் டாலி’ என்ற பெண்ணியச் சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இதில் இந்தியப் பெண் எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். இதில் பெண்ணின் வாழ்வு யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணிய நோக்கில். பெண்ணியம் என்றால், “நீ சிகரெட் பிடித்தால் நான் சிகரெட் பிடிப்பேன்’ “நீ ஜீன்ஸ் போட்டால் நானும் போடுவேன்’ என்கிற மாதிரியான பெண்ணியம் அல்ல. பெண்ணின் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பு.
விட்டல்ராவ் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர். இன்றைய எந்த இலக்கியக் குழுவிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். அவர் தமிழ்நாட்டின் பல கோட்டைகளுக்கும் நேரில் போய் அந்தக் கோட்டைகளின் வரலாறு, புவியியல், மக்கள் வரலாறு , மக்களின் கலை, கலாச்சாரம் எனப் பலவற்றை ஆராய்ந்து “தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல் எழுதியுள்ளார். அந்த அருமையான நூலை முக்கியமான பதிப்பகங்கள் வெளியிடத் தயங்கிய சூழ்நிலையில் நாங்கள் அதை வெளியிட்டோம்.
சிறந்த எழுத்தாளர்கள் 18 பேரின் சிறந்த பத்துக் கதைகளைத் தொகுத்து மாணவர் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. அதுவும் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போக்கு அறவேயில்லை. முந்திய தலைமுறையைச் சேர்ந்த எம்.வி.வி., ந.பிச்சமூர்த்தி, தி.ஜ.ர. போன்றவர்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏன் இன்னும் சொல்லப் போனால், ந.பிச்சமூர்த்தியின் இனிஷியல் “ந’ வா? “நா’ வா? என்று கேட்டால் பல இலக்கியவாதிகளே குழம்பினார்கள். எனவே மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூல் வரிசையைக் கொண்டுவந்திருக்கிறோம்.
இன்று மல்டி நேஷனல் கம்பெனிகள் வந்துவிட்டன. பணம் சம்பாதிப்பதே நோக்கமாகக் கொண்ட சமூக மனோபாவம் வந்துவிட்டது. ஆனால் பணம் சம்பாதிப்பது சந்தோஷத்திற்கான வழிகளில் ஒன்று. பணத்தால் வெளியே ஜில்லென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஏஸியை வாங்கிவிடலாம். ஆனால் மனதுக்கு குளிர்ச்சியைப் பணத்தால் ஏற்படுத்த முடியுமா? அது நல்ல இலக்கியங்களாலும், நூல்களாலும்தான் முடியும். அதனால்தான் இந்தப் பதிப்பக முயற்சியில் “அணில் கை மணல் போல’ நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு ஈடுபட்டிருக்கிறோம்.
This entry was posted on ஜனவரி 11, 2008 இல் 5:13 முப and is filed under Amruta, Amrutha, Authors, Books, Chennai, Collections, Culture, Essays, Fiction, History, Kannada, Karnataka, Kerala, Literature, Malayalam, publications, Publishers, Readers, Students, Tagore, Tamil, Thilagavathi, Thilagavathy, Thilakavathi, Thilakavathy, Thinkers, Translations, UR, URA, Writers. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்