Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Companies slash prices to sell cement in Tamil Nadu at Rs 200/bag: Tamil Nadu Cement Corporation (TANSEM)

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2008

பாவம், பொதுஜனம்!

கட்டுமானத் தொழில் என்று சொல்லும்போது, அதில் தொழிற்சாலைகள், அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் என்று அனைத்துமே அடங்கும். இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் 40 சதவிகிதம் கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கும், ஏனைய 60 சதவிகிதம் வீட்டு வசதித் துறைக்கும் பயன்படுகிறது.

ஒரு மூட்டை சிமென்ட் ரூ. 200 ஆக இருந்தது. கடந்த ஆறே மாதங்களில் நாளொரு விலையும், பொழுதொரு தட்டுப்பாடுமாகக் குதித்தெழுந்து இப்போது ரூ. 260 என எட்டாத உயரத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. தங்கமும் சிமென்டும் போட்டி போடுவதைப் பார்த்தால், சராசரி மனிதனுக்கு மயக்கம் வராத குறை.

சிமென்ட் விலையைக் குறைக்கும் எண்ணத்தில், கடந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு மூட்டை ரூ. 190க்கும் குறைவாக விற்பனை செய்யும் சிமென்டிற்கான கலால் வரியை டன்னுக்கு ரூ. 50 குறைத்தது என்பது மட்டுமல்ல, அதற்கு அதிகமான விலையில் விற்பனை செய்யும் சிமென்டுக்கு டன்னுக்கு ரூ. 200 கலால் வரி உயர்த்தப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், சிமென்ட்டின் விலையை ரூ. 190க்கும் குறைவாக வைத்திருப்பார்கள் என்ற நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்துவிட்டது.

சுமார் ஒரு லட்சம் டன் சிமென்ட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் இறக்குமதி செய்து பொது விநியோகத் துறை மூலம் ரூ. 20 குறைத்து விற்பனை செய்யலாம் என்பது அரசின் முடிவு. இதேபோல அதிக விலைக்கு சிமென்ட் விற்கப்படுமானால், தமிழகத்திலுள்ள சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை வேறு பலமாக எழுப்பப்படுகிறது. ஒரு சில தனியார் சிமென்ட் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூட முடியாத அரசு, இந்த நிறுவனங்களை எப்படி நிர்வாகம் செய்யும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் மொத்த சிமென்ட் உற்பத்தி தற்போது 160 மில்லியன் டன்கள். கூடுதலாக இந்த ஆண்டு 13 மில்லியன் டன் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தும் தட்டுப்பாடு தொடர்வது ஏன் என்பது புரியவில்லை. சிமென்ட் விலை உயர்வால் பல வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டிருப்பதாகவும், திட்டமிட்ட முதலீடு போதவில்லை என்றும் நிறுவனங்களும், அரசுத் துறைகளும், வீடு கட்டும் சராசரி மனிதர்களும் அலறும் நிலை. கட்டமைப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் மத்திய அரசு, சிமென்ட் விலை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அதிகரிப்பதை ஏன், எதற்காக வேடிக்கை பார்க்கிறது? மாநில அரசுகள் பழியைச் சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தி மௌனம் சாதிக்கிறது சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம். அது ஏன்?

பொது விநியோகம் மூலம் மாதம் ஒன்றிற்கு 20 லட்சம் மூட்டைகள் சிமென்ட்டை மூட்டை ஒன்றிற்கு ரூ. 200 வீதம் விற்பதற்கு ஆலை அதிபர்கள் ஒப்புக்கொண்டிருப்பதால், தட்டுப்பாடு முற்றிலும் விலகிவிடும் என்று எப்படி நம்புவது? அரசு அதிகாரிகள் வழங்கும் பர்மிட் என்பது, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் லாபமடைய வழிகோலாது என்பது என்ன நிச்சயம்?

இதற்கு உடனடித் தீர்வு இறக்குமதிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தரநிர்ணயங்கள் தளர்த்தப்பட்டு இறக்குமதி என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சிமென்ட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, இறக்குமதி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது யாருக்கு லாபமோ இல்லையோ, நிச்சயமாக சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமான விஷயம். இறக்குமதி சிமென்ட்டின் தரத்துக்கு நாங்களும் சிமென்ட் தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சிமென்ட் விலை குறைவதும், தட்டுப்பாடு நீங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தரக் கட்டுப்பாடு தளர்த்தப்படாமல் இருப்பது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிலேயே பாலங்கள் இடிந்து விழுகின்ற நிலையில், தரத்தைத் தளர்த்துவது ஆபத்து.

முதலில் மணல். இப்போது சிமென்ட். யார் காட்டில் மழை பெய்யப் போகிறது என்று யார் கண்டது? பாவம், பொதுஜனம்!

ஒரு பதில் -க்கு “Companies slash prices to sell cement in Tamil Nadu at Rs 200/bag: Tamil Nadu Cement Corporation (TANSEM)”

  1. bsubra said


    தமிழக அரசு செய்திக்குறிப்பு:
    சிமென்ட் விலையைக் குறைப்பது குறித்த தங்களுடைய ஒப்புதல் கடிதத்தை முதல்வரிடம் ஆலை அதிபர்கள் அளித்தனர். “தமிழகத்தில் சிமென்ட் விலையைக் குறைக்க வேண்டும்’ என முதல்வர் தெரிவித்த கருத்தை மனதில் கொண்டு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பயன்தரும் வகையில், மாதம் ஒன்றுக்கு 20 லட்சம் மூட்டை சிமென்டை, மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

    டவுட் தனபாலு: முதல்வரோட எச்சரிக்கைக்கு நல்ல பலன் கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்… இதுல மூணு சந்தேகம்… ஒண்ணு: தமிழகத்துல ஒரு மாசத்துக்கு மொத்தம் எத்தனை லட்சம் சிமென்ட் மூட்டை விற்பனை ஆகுது…? 2வது: 20 லட்சம் மூட்டைக்கு மேல வாங்குறவங்க பாதிக்கப்பட்டா பரவாயில்லையா…? 3வது: இதுவரை எத்தனை லட்சம் வித்துருக்குன்னு ஒவ்வொரு மாசமும் யார் கணக்கு பார்க்கிறது…?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: