எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதா?: டாக்டருக்கு செஞ்சிலுவைச் சங்கம் நோட்டீஸ்
ஜே. ரங்கராஜன்
சென்னை, ஜன. 8: எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் டாக்டரின் கிளினிக்கை உரிய காரணம் எதுவும் இன்றி மூடுமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளை வளாகத்தில் நெஞ்சக நோய் மருத்துவ நிபுணரும் இந்திய நலவாழ்வு நல்லறம் (“ஹெல்த் இந்தியா ஃபவுண்டேஷன்’) அமைப்பின் தலைவருமான டாக்டர் செ. நெ. தெய்வநாயகம் சிறிய புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை 2002-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
அரசுப் பணியில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள டாக்டர் செ.நெ.தெய்வநாயகம், எச்ஐவி நோயாளிகள் உள்பட இதுவரை மொத்தம் 6,045 நோயாளிகளுக்கு இந்த புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளார். மொத்த நோயாளிகளில் 3,000 பேர் எச்ஐவி நோயாளிகள். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளி அளிக்கும் ரூ.50 பதிவுக் கட்டணத்திலிருந்து, ரூ.10-ஐ செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வாடகையாக அளித்து வந்தனர்.
அலோபதி – சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை முறையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள கட்டணத்தில் இரண்டு சித்த மருத்துவர்களுக்கு மாதம் தலா ரூ,.8,000, ரூ.5,000 சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அலோபதி மருத்துவ நிபுணரான செ.நெ.தெய்வநாயகம், சித்த மருத்துவ நிபுணர்களான ஜி.சிவராமன், தெ. வேலாயுதம் ஆகியோர் ஊதியம் பெறாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
திடீர் நோட்டீஸ்:
இந் நிலையில் கடந்த ஜன.2-ம் தேதியன்று இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைவராக உள்ள டாக்டர் விமலா ராமலிங்கத்திடமிருந்து அவரது செயலர் மூலம் டாக்டர் தெய்வநாயகத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
“”அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம், ஜெர்மனி செஞ்சிலுவைச் சங்கம், ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்கம், இங்கிலாந்து செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்டவை நிதியுதவி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த போதிய இடம் இல்லாததால் உங்களது இடத்தை புதன்கிழமை (9.1.2008) முதல் காலி செய்து விடுங்கள்” என்று அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆளுநர், முதல்வருக்கு பேக்ஸ்:
இதையடுத்து ஆளுநரும் இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைமை காப்பாளருமான பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் தெய்வநாயகம் பேக்ஸ் அனுப்பியுள்ளார்.
“இறக்கும் நிலையில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செஞ்சிலுவைச் சங்கம் விடுதி நடத்துகிறது; தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் குழந்தை எச்ஐவி நோயாளிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவமனை நடத்துகிறது. இந் நிலையில் தமிழக செஞ்சிலுவைச் சங்கம் செய்ய வேண்டிய பணியைச் செய்துவரும் “ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ சிகிச்சைப் பிரிவு மூடும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த பேக்ஸ் செய்தியில் டாக்டர் தெய்வநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.