Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜனவரி 3rd, 2008

Makkal TV serial on sandalwood smuggler ‘Veerappan’

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

மணம் பரப்பும் “சந்தனக்காடு’

மக்கள் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சந்தனக்காடு’ தொடர், நேயர்களின் ஏகோபித்த ஆதரவோடு ஐம்பதாவது பகுதியைக் கடந்துள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளும் ஒருசேர செவ்வாய்க்கிழமை (ஜன.1) ஒளிபரப்பானது. சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை ஒப்பனையில்லாமல் வெளிப்படுத்தி வரும் இந்தத் தொடரை ஒரு தேர்ந்த திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு இயக்கியிருக்கிறார் வ.கெüதமன். இந்தத் தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தொடரைப் பார்த்துவிட்டு தொடருக்கு எதிராகத் தான் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார்.

“சந்தனக்காடு’ குறித்து இயக்குநர் பாலா… “”நான் கடவுள்’ படப்பிடிப்பில் இருந்தாலும் என்னுடைய கடுமையான வேலைப் பளுவிற்கு இடையே இந்தத் தொடரைப் பார்த்து வருகிறேன்.

சில சமயம் அதனுடைய தொடர்ச்சியைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது எதையோ இழந்ததைப் போல உணர்ந்தேன். ஒரு சிறந்த திரைப்படத்துக்கான கதைக் களத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறது” என்கிறார்.

பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வரும் “சந்தனக்காடு’ தொடர், மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Posted in Makkal, Media, Sandalwood, Serial, Soaps, TV, Veerappan | Leave a Comment »

Sri Lanka scraps truce pact with LTTE & Ceasefire agreement will end after Thai pongal: Tamil Tigers

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வ முன்னறிவிப்பு

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்பிரவரி 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்புடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக இலங்கை அரசாங்கம் நோர்வேயிடம் உத்தியோகப்பூர்வமாக 14-நாள் முன்னறிவிப்பினை வழங்கியிருக்கிறது.

போர்நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுக்கப்பட்டுள்ள இந்த 14-நாள் முன்னறிவிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முடிவிற்குவரும் என்று தெரிவித்திருக்கிறது.

அத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2002ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதி உருவாக்கப்பெற்ற இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் செயற்பாடுகளும் முடிவிற்குவரும் என வெளிநாட்டமைச்சின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, பல்லாயிரக்கணக்கான தடவைகள் புலிகள் அமைப்பினரால் மீறப்பட்டு செயலற்றுப்போயுள்ள ஒரு ஒப்பந்தத்தினைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்க அரசு தயாராக இல்லை என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுவது பயனற்றது என்று தெரிவித்த அமைச்சர் யாப்பா, எதிர்காலத்தில் நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, புலிகள் ஆயுதங்களை கீழேவைத்துவிட்டு பேச்சுகளிற்குத் தயார் என்று கூறினால் அது குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்றும் அதேவேளை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவினூடாக அரசியல் தீர்வொன்றினைக் காண்பதில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசின் இந்த பாரதூரமான முடிவு தமக்குக் கவலையளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத்தூதுவர் எரிக் சொல்க்ஹெய்ம், வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மேலும் வன்முறைகள் அதிகரிக்கவே வழிகோலும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் அறிவிப்பு குறித்து இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் கருத்து எதையும் வெளியடவில்லை. இந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணநாயக அவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நார்வே அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகுதான் தங்களது கட்சி இது குறித்து கருத்து வெளியிட முடியுமென்று தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு – கண்டனம்

இரா.சம்பந்தர்

அரசாங்கத்தின் அறிவிப்பு பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தத்திலிருந்து விலகியதாக அறிவித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறிவந்துள்ளது என்று தெரிவித்தார்.

இராணுவ ரீதியில் ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறும் நிலை இந்த போர்நிறுத்த காலத்தில் ஏற்பட்டதுதான் தாங்கள் இங்கே வலியுறுத்துகின்ற விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் போர்நிறுத்த விலகல் அறிவிப்பு குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் யோகராஜன், மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரது கருத்துகளையும் நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


வட இலங்கை மோதல்கள் – முரண்பட்ட தகவல்கள்

பதுங்கு குழி

மன்னார் பாலைக்குழி பகுதியில் வியாழக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் 6 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் 6 படையினர் காயமடைந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் 6 பதுங்கு குழிகளைக் கொண்ட முன்னணி பாதுகாப்பு வரிசையொன்றும் படையினரால் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

இந்த மோதல்களை உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள், மன்னார் பாலைக்குழி அணைக்கட்டு பகுதியில் பெரும் எடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், இதில் 10 படையினர் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்ததாகவும் தங்கள் தரப்பில் சேதம் எதுவுமில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர்.

வவுனியா நாவற்குளம் பகுதியில் வியாழனன்று இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில், மேலும் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கிடையில், மன்னார் உயிலங்குளம் மணற்குளம் பகுதியில் மோட்டார் குண்டு ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 4 சிவிலியன்கள் காயமடைந்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து ஏவப்பட்ட மோட்டார் குண்டே வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களும், 13 வயது சிறுவன் ஒருவனும், 7 வயதுடைய சிறுமி ஒருவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாக மன்னார் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். காயமடைந்தவர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணி வெடி

இதேவேளை, மணலாறு பதவியா பகுதியில் இராணுவ டிரக் வண்டியொன்று அமுக்க வெடியில் சிக்கியதையடுத்து, 3 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4 படையினர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.


மகேஸ்வரன் கொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட மகேஸ்வரன்

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளவினுள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழனன்று வவுனியாவில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வங்கிகள், அலுவலகங்கள் என்பனவும் இயங்கவில்லை.

யாழ் நகரில் கடைகள் திறக்கப்படாதிருந்ததாகவும், இராணுவத்தினர் வந்து கடைகளைத் திறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, கடைகள் யாவும் திறக்கப்பட்டதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் காரைநகரில் கறுப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்டு, கடைகள் அலுவலகங்கள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டு காரைநகர் பிரதேசம் சோகமயமாகக் காட்சியளித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மகேஸ்வரனின் கொலை தொடர்பாக, யாழ்பாணத்தைச் சேர்ந்த வசந்தன் என்ற நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழும், மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது அவருடைய பாதுகாப்பு பணியிலும் இருந்துள்ளார் என்றும் ஆனால் இந்தக் கொலை குறித்து யார் மீதும் இலங்கை அரசு சந்தேகப் படவில்லை என்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக பேசவல்ல இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்கவல்ல தெரிவித்திருந்தார்.

ஆனால் ஈ.பி.டி.பி.யுடனோ தன்னுடனோ வசந்தன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இந்த செய்தி எவ்வித அடிப்படையும் இல்லாத பொய் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Agreement, Assassin, Assassinations, Attacks, Ceasefire, dead, Douglas, Eelam, Eezham, EPDP, Jaffna, Killed, LTTE, Mahesvaran, Maheswaran, Mannaar, Mannar, Murder, Peace, Ranil, Sri lanka, Srilanka, Tamil, Tamil Tigers, Tigers, Truce, Vavuniya, War, wavuniya, Wawuniya | 1 Comment »