2008 – International year of sanitation, languages, planet Earth and the potato
Posted by Snapjudge மேல் ஜனவரி 1, 2008
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2008
இதற்கு முந்தைய ஆண்டுகளை விட புதிய 2008ம் ஆண்டு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக உள்ளது.
- சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு,
- சர்வதேச மொழிகள் ஆண்டு,
- சர்வதேச புவி ஆண்டு மற்றும்
- சர்வதேச உருளைக்கிழங்கு ஆண்டாக 2008ம் ஆண்டை ஐ.நா., அறிவித்து, பெருமைப்படுத்தியுள்ளது.
இந்த நான்கு முக்கிய நோக்கங்களுடன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஐ.நா., முயற்சி செய்து வருகிறது. சர்வதேச சுகாதார துாய்மை ஆண்டு: நாம் வாழும் பகுதியை துாய்மையாக வைத்திருந்து சுகாதாரம் பேணுவதே 2008ம் ஆண்டின் நோக்கமாக ஐ.நா., அறிவித்துள்ளது. உலகில் 260 கோடி மக்களுக்கு கழிப்பிட மற்றும் சுகாதார வசதி இது வரை கிடைக்கவில்லை.
இவர்கள் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் 41 சதவீதம். இதனால், 20 கோடி டன் மனிதக்கழிவுகள் திறந்த வெளியில் நோய் உற்பத்திக் கூடங்களாக உள்ளன. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும், இது பிரச்னையாகவே உள்ளது. இது போன்ற சுகாதார சீர் கேட்டால் எளிதில் தவிர்த்துவிடக்கூடிய வயிற்றுப் போக்கு உள்ளிட்ட தொற்றுக் நோய்களுக்கு ஏழைகள் ஆளாகிறார்கள். இந்த பிரச்னையால், உலக அளவில் 20 வினாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தடுக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க முடியும். 2015ம் ஆண்டுக்குள் உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாத மக்களில் பாதிப்பேருக்காவது அந்த சுகாதார வசதி கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஐ.நா.,வின் மில்லினிய இலக்குக்காகத்தான் இந்த ஆண்டை கடைபிடிக்க 2006ம் ஆண்டிலேயே ஐ.நா., முடிவு செய்தது.
சர்வதேச மொழிகள் ஆண்டு: உலகின் பல்வேறு மொழிகளை சிறப்பிக்கும் வகையில் சர்வதேச மொழிகள் ஆண்டாக 2008ஐ கடைபிடிப்பது என ஐ.நா., பொதுச்சபை முடிவு செய்துள்ளது. உலகின் வேறுபட்ட கலாசாரம், பன்முகத்தன்மையை இது வளர்க்கும் என்று ஐ.நா., நம்புகிறது.
- அரபு,
- சீனம்,
- ஆங்கிலம்,
- பிரெஞ்சு,
- ரஷ்யன் மற்றும்
- ஸ்பானிஷ்
ஆகிய ஆறு மொழிகள் ஐ.நா.,வின் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இந்த ஆறு மொழிகளுடன் இந்தி மற்றும் போர்ச்சுக்கீசிய மொழிகளுடன் மொத்தம் 8 மொழிகள்தான் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன.உலகம் முழுவதும் 6 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன.இவற்றில் பெரும்பாலான மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. 417 மொழிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோல்களாக மொழிகள் கருதப்படுகின்றன. மொழி அழிவது ஒரு சமூகம் அழிவதையே குறிப்பிடும். ஆகவே, அவற்றை காப்பாற்றும் பொறுப்பு அரசுகளுக்கு உண்டு. இதையடுத்து யுனெஸ்கோ நிறுவனம், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் அழியும் நிலையில் உள்ள மொழிகளை காப்பாற்ற அழைப்பு விடுத்துள்ளது.
சர்வதேச புவி ஆண்டு: சர்வதேச புவி ஆண்டாக 2008 அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட முக்கிய விஷயங்களில், இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இயற்கை மற்றும் மனித முயற்சிகளால் நாம் வாழும் உயிர்கோளத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது.
இயற்கை மாற்றத்தால் உடல்நலப் பாதிப்புகளை தவிர்ப்பது, மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது.
ஒரு குறிப்பிட்ட இயற்கை வளத்தை அதிகமாக பயன்படுத்தி, இயற்கை சேதப்படுத்துவதை விட, புதிய இயற்கை வளங்களை கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வது.
நகர்ப்புறங்களில், மக்கள் வாழ்வதற்கு தகுந்த வசதிகளை ஏற்படுத்தித் தருவது.
பருவ நிலை மாற்றத்தால் வாழும் மக்களுக்கு நன்மை விளைய வேண்டும். தீமைகளை தவிர்க்க முயற்சி செய்வது.
நிலத்தடி நீர் வளத்தை முறையாக பயன்படுத்துதல். தற்போது உலகம் முழுவதும் 4 லட்சம் புவி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்கலைக்கழகங்களில் புவி தொடர்பான அறிவியல் பாடங்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசுகள் பொறுப்புடன் நடந்து கொண்டு உயிர் வாழ்வதற்கு உள்ள இந்த ஒரே உயிர்கோளத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு இயற்கை விடும் சவால்!
க. ரகுநாதன்
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறை பனியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது சீனா.
சீனாவின் மத்திய, தெற்கு மாகாணங்களில் பனி படர்ந்த சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டத்தால் விமானப் போக்குவரத்தும் நின்றுவிட்டது. இருக்கும் ஒரே வழி ரயில்வே மட்டுமே.
பிப்.7-ம் தேதி தொடங்கிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக இப்பகுதியில் இருந்து சென்ற லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்துப் போயினர். 4 லட்சம் பேருக்கு 3 ஆயிரம் ரயில்களே இயக்கப்பட்டன. மின் உற்பத்தி பாதிப்பால் பல நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளன. ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இயற்கை விடுத்த சவாலை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் சீன அரசு உள்ளது.
ஒருபுறம் தனது பொருளாதார வலிமை, உள்கட்டமைப்பு பிரமாண்டம் ஆகியவற்றை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் பொன்னான வாய்ப்பாக ஒலிம்பிக் போட்டியை சீனா கருதுகிறது. மறுபுறம் ஜனநாயக சக்திகள் சீன அரசின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தயாராகி வருகின்றன. இன்னொரு புறம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசு அரசுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
ஒலிம்பிக் வீரர்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாரத்தான் போன்ற ஒரு சில போட்டி அட்டவணை மாற்றப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க சீன சுற்றுச்சூழல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், போட்டியின்போது மழை வந்துவிடக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்க அரசும், விஞ்ஞானிகள் குழுவும் தயாராகி வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
கடும் உறை பனிக்கு “லா நினோ’ எனும் கடலடி குளிர் நீரோட்டமே காரணம் என்று அரசு கூறினாலும், இதற்கு புவி, வெம்மை அடைவதுதான் முதன்மைக் காரணம் எனலாம்.
உலகின் ஓரிடத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றோரிடத்தில் நிச்சயம் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இதைப் போன்ற காலநிலை மாறுபாடுகள் உதாரணம்.
உலகில் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டால் எழும் புகை ஆகியவற்றால் வெளியேறும் கரியமில வாயு வளிமண்டத்தில் டன் கணக்கில் கலந்துள்ளது. இவைதான் புவி வெப்பம் அதிகரிக்க மூல காரணம். இது கடலடி நீரோட்டத்தையும் பாதிப்பதால் நிலப் பகுதியில் இது போன்ற பருவநிலை மாறுபாடு ஏற்படுகிறது.
பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க 1997-ம் ஆண்டு கியோட்டோ ஒப்பந்தம் உலக நாடுகளால் கொண்டு வரப்பட்டது. அது 2012-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதை 2008-12ம் ஆண்டுக்குள் 5 சதவீத அளவுக்கு வளர்ந்த நாடுகள் குறைக்க வேண்டும் என்பது முக்கிய விதி.
இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டாலும், தொழிலதிபர்கள் நிர்பந்தம், அரசியல் காரணங்களால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதுவரை ஒப்புதல் பெறப்படவில்லை (கடந்த டிசம்பரில் செனட் சபை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது). இதனால் அதை நிறைவேற்றும் நிர்பந்தம் அரசுக்கு இல்லை. இதை நிறைவேற்றினால் தங்களது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.
உலக அளவில் இந்தியாவும், சீனாவும் 10 சதவீத வளர்ச்சியை நோக்கிச் சென்றாலும், உலக பசுமைக்குடில் வாயுவை 10 சதவீதமே வெளியேற்றுகின்றன. ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் 42 சதவீதம் வெளியிடுகின்றன.
வாயுக்கள் வெளியாவதைக் குறைப்பதற்காக தங்களது தொழில் வளர்ச்சிக்குத் தடையான கொள்கைகளை ஏற்க வளரும் நாடுகள் தயங்குகின்றன. வளர்ந்த நாடுகளும் (குறிப்பாக அமெரிக்கா) தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க மறுக்கின்றன. இதனால் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு எத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யாமல் டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடந்த பருவநிலை மாறுபாட்டுக்கான மாநாடு முடிந்துள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விவசாய மானியத்தைக் குறைக்கக் கோரும் உலக வர்த்தக ஒப்பந்தம் ஆகிய ஒப்பந்தங்களை வற்புறுத்தி உலக நாடுகளைப் பணியவைக்கும் அமெரிக்கா, உலகையே அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற மறுப்பது வேடிக்கையானது.
எல்லாவற்றிலும் தனது முன்னிலையை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா, சுற்றுச்சூழல் ஒப்பந்தத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புவி வெம்மையைக் குறைக்க முன்வர வேண்டும்.
உலக வெம்மை அதிகரிப்பால் புயல், பெரும் மழை வெள்ளம், கடும் வறட்சி, கடும் உறை பனி, அதன் காரணமாக உணவு உற்பத்தி பாதிப்பு, பஞ்சம் என்று பல்வேறு இன்னல்களை மனித குலம் சந்திக்க வேண்டி வரும். இவை முதலில் பாதிக்கப்போவது ஆப்பிரிக்க, ஆசியக் கண்டத்தில் உள்ள வளரும் நாடுகளைத்தான்.
பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது, நாம் வாழும் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பது. இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெறும் சமுதாயம் நீண்ட காலம் நிலைக்காது. எனவே இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால உலக நலனுக்கு உகந்தது என்பதை வளரும் நாடுகள் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளும் உணர வேண்டும்.
இல்லாவிடில் காதல் போயின்…காதல் போயின்…மட்டுமல்ல, பசுமை போயினும் சாதல்தான்!
மறுமொழியொன்றை இடுங்கள்