Safe Disposal of Medical Waste: Biological hazards – ☣
Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007
அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்!
சா. ஜெயப்பிரகாஷ்
மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.
மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்துவமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.
நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் “கல்சர்’ பொருள்கள் போன்றவற்றை “ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்’ ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.
கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.
ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோகிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.
இவை மட்டுமல்ல… மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக் கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன? சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகும் விதிமீறல் தொடரும் என்றால், ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 5000 வீதம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், மாநிலத்தின் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி?
அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
மாநிலத்தின் 5 மையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கழிவுகளைப் பெற்று, அழிக்கப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே இவர்கள் செய்து வந்த அரைகுறை முறையும் சுகாதாரமற்றது என்று தடை செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில், உலக வங்கியின் உதவியுடன் “சுகாதார முறைகளை மேம்படுத்தும் திட்டம்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைக் கழிவுகளை தனியாரிடம் ஒப்படைத்து அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
என்றாலும், திட்டங்கள் தொடங்கப்படும் போது இருக்கும் வேகம் நிறைவு பெறும் போதும் அதே அளவுக்கு வேகத்துடன், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும்போது அப்போதுமட்டும் “மூக்கைப் பொத்திக் கொண்டு’ செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.
சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை.
This entry was posted on திசெம்பர் 27, 2007 இல் 8:35 பிப and is filed under Animals, Bacteria, bacterial, biohazard, Biological, CDC, Disease, diseases, Disposal, Doc, Doctor, Environment, Harmful, hazard, Hazards, hazmat, Health, Hospital, Human, Infection, Infectious, medical, microorganism, Microwave, Needles, organism, Precautions, Risk, Safe, Safety, Threat, Toxin, Viral, Virus, Warfare, warning, Waste. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. உங்களால் முடியும் leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்