Dec 6 – Wavuniya & Mannar clashes: Sri Lanka news, updates
Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2007
வவுனியா மன்னார் மோதல்கள்: 10 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
![]() |
![]() |
இலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் மன்னார் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் வியாழக்கிழமையும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் முன்னரங்கப் பகுதியொன்றில் இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தின் போது காணாமல் போனதாக படையினரால் தெரிவிக்கப்பட்ட 4 இராணுவத்தினரின் சடலங்கள் நேற்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
போர்முனைச் சண்டைகளின்போது காணாமல் போயுள்ள வேறு இரண்டு இராணுவத்தினரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் புதன்கிழமை வரையிலான சில தினங்களில் மன்னார் மாவட்டப் போர்முனைகளில் இராணுவத்தினருடனான மோதலின் போது 11 விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.
இப்பகுதியில் தற்செயலாக இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.
முல்லைத்தீவுக்கு மேற்கே வற்றாப்பளை என்னுமிடத்தில் விடுதலைப் புலிகளின் இரகசிய சந்திப்புத் தளம் ஒன்றை விமானப்படையினர் நேற்று மாலை குண்டு வீசித் தாக்கியுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
எனினும் வற்றப்பளை மக்கள் குடியிருப்புக்கள் மீதே விமானப்படையினர் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்