Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sandalwood smuggler Veerappan’s Area: Encroachments in Sathiyamangalam – Losing ones native lands to power, money & politics

Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007

வீரப்பன் காட்டை குறிவைக்கும் அரசியல்வாதிகள்!

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன.

ஈரோடு, டிச.4: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு புகலிடமாக இருந்த சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அரசியல்வாதிகள் வளைத்துப்போட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு போட்டியாக அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியத் தொழிலதிபர்களும் நிலத்தை வாங்கி வருவதால் பழங்குடியினரின் பாரம்பரிய விளைநிலங்கள் முற்றிலும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதியில் தாளவாடி, கடம்பூர், ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட இடங்களில் ஒருகாலத்தில் வீரப்பன் கால்படாத இடமே இல்லை என்று சொல்லும் நிலை இருந்தது.

அப்போது இப் பகுதியில் பழங்குடியினர் தவிர பிற மக்கள் நடமாட்டம் அறவே இருந்ததில்லை.

வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. மன இறுக்கத்தைப் போக்கும் இயற்கைச் சூழல், உடலை சிலிர்ப்பூட்டி மகிழ்ச்சி தரும் மிதமான குளிர் போன்ற சிறப்பு அம்சங்களால் இப் பகுதி அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களின் கண்பார்வையில் பட்டது.

தங்களது அரசியல் செல்வாக்கு, ஆள்பலம், பண பலம் ஆகியவற்றைப் பயன்படுத்திய இவர்கள், பண்ணைத் தோட்டம், விருந்தினர் இல்லம், ஓய்வு இல்லம் உள்ளிட்டவற்றை மலைப் பகுதியில் உருவாக்கினர்.

இந்நிலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஈரோடு, கோவை மாவட்டத்தில் பிரதானக் கட்சிகளில் முக்கிய பொறுப்பை வகித்த, வகிக்கும் அரசியல்வாதிகள், மற்றும் சத்தி தொகுதியில் இதுவரை இருந்த எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோருக்கு சத்தி வனப் பகுதியில் பண்ணைத் தோட்டங்கள் உள்ளன. ஒருபுறம் அரசியல்வாதிகள் என்றால் மற்றொருபுறம் முக்கியத் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளால் பழங்குடியினர் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

வீரப்பன் காட்டுப் பகுதியில் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் பகுதி தொழிலதிபர்களின் ஓய்வு இல்லங்கள், பண்ணைத் தோட்டங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆசனூரில் பல ஏக்கர் வாங்கியுள்ளார். தொலைதூரத்தில் இருக்கும் தொழிலதிபர்களைக்கூட கவர்ந்து இழுக்கும் இடமாக வீரப்பன் காடு மாறிவிட்டது.

சுமார் 30 ஏக்கர், 50 ஏக்கர் என வாங்கியுள்ள தொழிலதிபர்கள், வார விடுமுறை நாள்களில் இங்கே தங்கியிருந்து இரவு நேரங்களில் தங்களது நிலத்துக்குள்ளேயே மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர் என்பது பழங்குடியினரின் பிரதான குற்றச்சாட்டு.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கெனவே பணியாற்றிய ஆட்சியருக்கு, ஆசனூரில் பல ஏக்கர் நிலம் உள்ளது என்கின்றனர் பழங்குடியினருக்காக போராடிவரும் தன்னார்வ அமைப்பினர்.

அதுபோல பவானிசாகர் அருகே நரிக் குறவருக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலத்தை முன்னறிவிப்பு இன்றி ஆக்கிரமித்ததாக பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழ்நாடு பழங்குடியினர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.மோகன்குமார் கூறியது:

ஈரோடு மாவட்ட பழங்குடியினருக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை குடும்பத்தில் ஏதாவது ஒரு வாரிசுதாரர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்றுவிட்டு மற்றவர்களின் கையெழுத்தை போலியாக போட்டு ஆக்கிரமிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் பலத்துக்கு சமமாக பழங்குடியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

பழங்குடியினரின் நிலங்களுக்கு பட்டா இல்லாததும், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் நிலத்தை அபகரிப்பவர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. இதைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் மோகன்குமார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன் கூறியது:

பழங்குடியினர் இடங்களை வேறு நபர்கள் வாங்குவதைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லை. இருப்பினும் நிலத்தை அபகரிப்பது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

வீரப்பன் காட்டில் களைகட்டும் ரியல் எஸ்டேட் தொழில்

பீ.ஜெபலீன் ஜான் ஆர்.சிவக்குமார் டி.சாம்ராஜ்

ஈரோடு, டிச.5: சந்தன வீரப்பன் காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் களை கட்டியுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரமாக இருந்த ஒரு ஏக்கர் நிலம் இப்போது ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையாகிறது.

“”உதகை, முதுமலை போல வெகுவிரைவில் இதுவும் சுற்றுலாத்தலமாக விளங்கும். விரைவில் பலமடங்கு விலை உயரும்” -இது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்.

வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் இதுபோன்ற பல்வேறு கவர்ச்சிகர வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மைசூர் பிரதான சாலைகளில் காணப்படுகின்றன.

தங்கும் விடுதி, ரிசார்ட் போன்றவற்றில் இரு நாள்கள், ஒரு வாரம் என தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, மிதமான குளிர் பிரதேசமான இப் பகுதி மிகவும் பிடித்ததாக மாறி வருகிறது.

சொந்தமாகத் தங்கும் விடுதி கட்டிக்கொண்டால் என்ன? என்ற ஆசை எழும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவர்ந்து விடுகின்றனர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர். தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏதுவாக 15 சென்ட், 20 சென்ட் எனத் தரம் பிரித்து நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இப் பகுதியில் ஒரு சென்ட் இடம் ரூ.18 ஆயிரம் (பிரதான சாலையில் இருந்து 2 கி.மீ. உள்பகுதியில்) முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை, திருப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களே இங்கு பெரும்பாலும் நில விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

மலைப் பகுதியில் இருக்கும் மக்களிடம் ஆசை வார்த்தை காட்டி மலிவு விலையில் இடத்தை வாங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மலைப்பகுதி மக்களிடம் இருக்கும் நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கைமாற்ற இப் பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் துணைபோகின்றனர் என்பது பழங்குடியினர் நலப் போராட்ட அமைப்பினரின் பிரதான குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநிலத் தலைவரும், நீதிபதி சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளிவரக் காரணமாக இருந்தவருமான வி.பி.குணசேகரன் கூறியது:

விற்பனைக்காகக் காத்திருக்கும் மனைகள்.

தாளவாடி, கடம்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இடம் பழங்குடியினர் வசமிருந்து கைமாறிவிட்டது என்கின்றனர் பழங்குடியினர் நல போராட்ட அமைப்பினர். இப்போது ஆசனூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

மலைப்பகுதி மக்களின் நிலத்தை, சமவெளி மக்கள் ஆக்கிரமிப்பதால் பழங்குடியினரின் உரிமை, வேலைவாய்ப்பு பறிபோகிறது. தாளவாடி, கடம்பூர், ஆசனூர் பகுதியில்தான் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. இப்போது பர்கூர் மலைப் பகுதியையும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குறிவைத்துவிட்டனர்.

பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பழங்குடியின நிலங்களை பிறர் ஆக்கிரமிப்பதைத் தடுக்க தனிச்சட்டம் உள்ளது. இதுபோன்ற சட்டம் தமிழகத்திலும் தேவை. 1996-ல் அப்போதைய வனத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் செய்த பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் குணசேகரன்.

இது குறித்து மாநில வனத்துறை வாரிய உறுப்பினரும், மாவட்ட கெüரவ வனஉயிரின காப்பாளருமான ப.கந்தசாமி கூறியது:

தென்னிந்தியாவிலேயே அதிகமாக சத்தியமங்கல வனத்தில்தான் யானைகள், புலிகள், காட்டுமாடுகள், கடமான், புள்ளிமான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள், பல்வேறு ரக பறவைகள் காணப்படுகின்றன. சத்தி வன அழிவுக்குக் காரணமே ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள்தான். மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் வனவிலங்கள் எண்ணிக்கை குறையத் துவங்கிவிட்டது. வனப் பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவது தவறான நடவடிக்கை. வனப்பரப்பு குறைவது மனித இன அழிவுக்கு துவக்கமாக மாறிவிடும் என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இதற்குத் தீர்வாக இருக்கும் என்றார் கந்தசாமி.

சமவெளிப் பகுதிகளை வளைத்துப்போட்டு நிலத்துக்கு செயற்கை விலையேற்றத்தை ஏற்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அடுத்த இலக்கு, மலைப் பகுதியாக மாறியுள்ளது. பழங்குடியினர் மட்டுமன்றி வன உயிரினத்தையும் காப்பாற்ற இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: