‘Indo-US accord on Nuclear deal is a must for growth’ – DMK chief Karunanidhi’s daughter Kanimozhi
Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2007
அணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை!: கனிமொழி
புதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.
கனிமொழி பேசியதாவது:
இந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.
இதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.
சிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.
2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.
நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.
அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.
சில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
நான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.
அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.
உலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொருளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.
இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.
இந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.
bsubra said
Savithri Kannan Article: ஒப்பந்தமில்லை அடமானம்: “இந்த இறுதி ஒப்பந்தம் குறித்த இந்திய விஞ்ஞானிகள் சிலரின் கருத்துகள்; கல்பாக்கம் அணுமின் சக்தி இயக்குனர் பல்தேவ்ராஜ், “அணு எரிப்பொருள் மறு ஆக்க தொழில் நுட்பத்தில் 1960களிலிருந்தே நாம் முன்னோடி நாடு. இந்த தன்னகரில்லா தொழில் நுட்பம் 100 சதவிகிதம் சுயசார்புடையது. இதில் வேறெந்த நாட்டையும் நாம் சார்ந்திருக்கவேண்டியதில்லை. அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், “சில அம்சங்கள் நாம் எதிர்பார்த்தபடி இல்லாதது வருத்தமே!” “