Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 1, 2007

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

ரூ. 10 கோடியில் தயாராகும் நெல்லை மாநாடு?

ப. இசக்கி

திருநெல்வேலி, நவ. 30: தமிழ்நாட்டின் இளைஞர்கள் யார் பக்கம் என்பதை நிரூபிக்க நடைபெறவுள்ளதாகக் கருதப்படும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அந்தக் கட்சி ரூ. 10 கோடிவரை செலவிட்டு திருநெல்வேலி நகரைத் தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும், அவர்களின் மனதில் இடம்பிடிக்கவும் நிர்வாகிகள் செய்து வரும் ஏற்பாடுகளுக்கான செலவு, கட்சி செய்யும் செலவை ஒப்பிட்டால் அதில் பாதியை எட்டும் என ஏற்பாடுகளை பார்க்கும்போது பளிச்செனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் நாளொரு கட்சியும், பொழுதொரு தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

திரைப்பட மோகத்தில் திக்குதெரியாமல் திரியும் இளைஞர்களை இந்த புதிய தலைவர்கள் கொத்துக் கொத்தாக கொத்திக் கொண்டு போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை உற்றுநோக்கிய திராவிடக் கட்சிகள், இருக்கும் இளைஞர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதியவர்களைத் தம் பக்கம் கவரவும் தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக அறிவித்ததுதான் வரும் டிசம்பர் 15, 16 ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இளைஞரணியின் முதல் மாநாடு.

பிரச்னைகளுக்கு நடுவே மாநாடு:

கூட்டணியின் பலத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுக்கு கூட்டணிக்குள்ளும் பிரச்னை உண்டு.

  • காவிரி,
  • முல்லைப் பெரியாறு,
  • பாலாறு என நாட்டைப் பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு.
  • கூலிக்கு செய்யும் கொலைகளால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை,
  • விலைவாசி உயர்வு,
  • ரேசன் அரிசி கடத்தல்

என பொதுமக்களை பாதிக்கும் பிரச்னைகளும் உண்டு. இவற்றுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய அவசர, அவசியத்தைவிட கட்சியை நிலை நிறுத்த வேண்டிய அவசர, அவசியமே இந்த மாநாட்டுக்கான காரணமாக அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திருநெல்வேலி நகரம் தன்னை அலங்கரித்துக் கொள்ள தயாராகி விட்டது. இந்த மாநாடானது இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தி இராத வகையிலும், இனிமேலும் மற்ற அரசியல் கட்சிகள் நடத்த முடியாத அளவிலும் இருக்க வேண்டும் என்பது இளைஞரணியின் செயலரும், மாநில உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலினின் எண்ணம். அவரது எண்ணத்தை ஈடேற்றும் வகையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பிரமாண்ட பந்தல்:

மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 450 அடி அகலத்தில் 960 அடி நீளத்தில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல், முதல்வர் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 84 அடி உயரம், 500 அடி அகலம் கொண்ட அரண்மனை நுழைவு வாயில் போன்ற முகப்பு, அதே அளவில் அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓலைகளைக் கொண்டு அழகுற அமைக்கப்படும் உள்புற நுழைவு வாயில், மாநாட்டு கொடியை ஏற்ற 84 அடி உயரத்தில் கொடிக்கம்பம், முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஸ்டாலினும் தங்க உள்ள தாழையூத்தில் இருந்து மாநாட்டு பந்தல் வரை சுமார் 14 கி.மீ. சாலையில் 55 இடங்களில் மின்அலங்கார கோபுரங்கள், இடையிடையே நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு வளைவுகள், 25 ஆயிரம் குழல் விளக்குகள், 25 ஆயிரம் கொடிகள், சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல் போர்டு’கள் என நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

மாநாட்டில் தலைவர்கள் அமர அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் சதுர அடி கொண்ட நிரந்தர மேடையானது ஆந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதித் தரம் வாய்ந்த கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கு திரட்டப்படும் சுமார் 5 லட்சம் பேருக்காக தங்கும் இடமாக 64 திருமண மண்டபங்களும், 350 விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர திறந்தவெளி மைதானங்களும், தோட்டங்களும் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என தெரிவித்து வரும் ஸ்டாலின், அதற்கான ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வருகிறார். அதிமுகவினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றுவதிலும் நிர்வாகிகள் கவனமாக உள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக சுமார் ரூ. 10 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை கட்சியின் தலைமையே ஏற்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டு செலவுகளை கூர்ந்து கவனித்து வரும் அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்தன.

மாநாட்டுக்காக இதுவரை மாவட்டங்களின் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ. 5 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரூ. 2 கோடி வசூலாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயதுக்கேற்ப தங்கம்:

இந்த மாநாட்டு பிரமாண்டத்திற்கு முத்தாய்ப்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அவரவர் வயதை குறிக்கும் வகையில்

  1. முதல்வர் கருணாநிதிக்கு 84 பவுன் தங்கத்திலும், 3 கிலோ வெள்ளியிலும்,
  2. ஸ்டாலினுக்கு 54 பவுன் தங்கத்திலும், 2 கிலோ வெள்ளியிலும்

நினைவுப் பரிசுகளை வழங்க மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நெல்லை மாநாடு

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, டிச. 4: நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் முதலாவது மாநில மாநாடு திமுகவுக்கு மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் இளைஞர் அணி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை திமுகவின் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாக மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் முதல் முறையாக மாநில அளவிலான இளைஞர் அணி மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாநாடு தமிழக அரசியல் அரங்கில் மிக அதிக அளவிலான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்த முக்கியத்துவத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன.

திமுகவில் இருந்து வைகோ உள்ளிட்ட சிலர் வெளியேறி மதிமுகவை தொடங்கிய போது அவர்களுடன் திமுகவின் இளைஞர் அணியினர் சென்றுவிட்டதாக பேசப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து இளைஞர் அணியின் இருப்பை உறுதி செய்தார் ஸ்டாலின்.

அண்மையில் அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜயகாந்த் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் தனது தேமுதிக பக்கம் இழுக்க பகீரதப் பிரயத்னம் செய்து வருகிறார்.

நடிகர் சரத்குமாரும் இதே பாணியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே உள்ள ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இளைஞர்களை ஈர்ப்பதே தனது நோக்கம் என்று கூறி வருகிறார் நடிகர் கார்த்திக்.

முன்பெல்லாம் தொண்டராகவே தன்னை பல ஆண்டுகளாக ஈடுபடுத்திக் கொண்ட தலைமுறையின் காலம் தற்போது மாறிவிட்டது. இப்போதெல்லாம் எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும், அந்த பதவி தனது பொதுவாழ்க்கைக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்ற எண்ணம் தமிழக இளைஞர்களிடம் மேலோங்கி வருகிறது. இதற்கு இளைஞர்கள் தேர்ந்தெடுப்பது விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் கட்சிகளைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தொண்டராக இருப்பதைவிட புதிதாக தொடங்கப்படும் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருப்பதே தனது எதிர்கால பொது வாழ்க்கைக்கு உகந்தது என்று இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

இத்தகைய சிந்தனை பெரிய கட்சிகளை யோசிக்க வைத்துவிட்டது. இளைஞர் அணியை நம்பியுள்ள அதுவும் குறிப்பாக அந்த அணியில் இருந்து ஒருவரை கட்சியின் தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறும் திமுகவை மிக தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. அதன் வெளிப்பாடே நெல்லை மாநாடு என்றால் அது மிகையல்ல.

தொடங்கிய காலம் முதல், தேர்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் இளைஞர் படையையே நம்பியுள்ள திமுகவுக்கு தனது படையில் உள்ள வீரர்களின் தலையை எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

“”புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளை தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களை சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது” என திமுக இளைஞர் அணி தலைவரும் துணைப் பொதுச் செயலாளருமான மு.க. ஸ்டாலின் செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசும் போது குறிப்பிட்டு வருகிறார்.

விஜயகாந்த், சரத்குமார் கட்சிகளின் இளைஞர் ஈர்ப்பு அணுகுமுறை அளித்த கவலையே நெல்லை மாநாட்டுக்கான அவசியமாக நோக்கப்படுகிறது.

புதிய கட்சிகள் வருகைக்கு இடையே இளைஞர் அணியின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஸ்டாலினை பின்னால் இருந்து அழுத்துவது, இப்போது இந்த மாநாட்டிற்கான அவசியமாக கூறப்படும் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்போதே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால்தான் கருணாநிதிக்கு பின்னர் முதல்வர் பதவி தொடர்பாக கட்சிக்குள் போட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.

ஸ்டாலின் தலைமை பதவிக்கு வரும் போது, கருணாநிதியின் குடும்பத்துக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. இதற்காக திமுக அறக்கட்டளையில் மு.க. அழகிரி அல்லது அவருக்கு நெருக்கமானவர்கள் உள்பட புதிதாக சிலரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை தலைமை தொடங்கிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமை பதவியை அளிப்பதை ஏற்பதாக பொதுச் செயலாளர் க. அன்பழகன், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமி உள்ளிட்டோர் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இது மட்டுமல்லாது ஸ்டாலினை கட்சியின் தலைவராக்குவது தொடர்பான அறிவிப்பை நெல்லை மாநாட்டிலேயே கருணாநிதி அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் பகிரங்கமாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

55 வயதான நிலையில் ஸ்டாலின் இப்போது பொறுப்புக்கு வந்தால்தான் தனது முதுமை பருவத்துக்குள் குறிப்பிடும் படியான சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பாக அமையும் என்ற எண்ணம் பரவலாக கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. எனவே, திமுகவின் அடித்தளமான இளைஞர் அணியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்துக்கும் நெல்லை மாநாடு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை மூத்தவர்களின் கையைபிடித்துக் கொண்டு நடந்து வந்த இளைஞர் அணி என்ற “வாரிசு’, தனக்கு வழிகாட்டிய மூத்தவர்களை வழி நடத்த முடியும் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறது என்பதுதான் நெல்லையில் நடைபெற இருக்கும் திமுக இளைஞர் அணி மாநாடு வெளிப்படுத்தும் உண்மை.

————————————————————————————————————————————-
Nellai Tirunelveli conference DMK MK STalin Karunanidhi
திமுக மாநாட்டு பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு: கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டு பந்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் (வலது ஓரம்) மற்றும் அதிகாரிகள்.

திருநெல்வேலி, டிச. 4: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக மாநாட்டுக்கான பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பல லட்சம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய காவல் துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் செவ்வாய்க்கிழமை வந்தார்.

அவர் பந்தலையும், மேடைப் பகுதியையும் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல காவல் துறைத் தலைவர் சஞ்சீவ்குமார், திருநெல்வேலி சரகக் காவல் துறை துணைத் தலைவர் பெ. கண்ணப்பன், மாநகரக் காவல் துறை ஆணையர் மஞ்சுநாதா, திருச்சி காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகர துணை ஆணையர் தினகரன் (சட்டம் – ஒழுங்கு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பந்தலின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பந்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் பந்தலை சுற்றி வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பந்தலை பார்வையிட்ட பின்பு, மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள இடங்களையும், பேரணி செல்லும் பாதையையும், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்கும் இடத்தையும் விஜயகுமார் பார்வையிட்டார்.

முன்னதாக, தாழையூத்தில் முதல்வர், அமைச்சர் ஸ்டாலின் தங்கும் இடங்களில் இருந்து மாநாட்டுத் திடல் வரை அவர்கள் வந்து செல்லும் பாதையையும் அவர் ஆய்வு செய்தார்.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!

நெல்லை மாநாட்டு ஏற்பாடுகள்: ஒரே நாளில் 5 அமைச்சர்கள் ஆய்வு

திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டுப் பந்தலை புதன்கிழமை பார்வையிட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சுவாமிநாதன் (வலமிருந்து நான்காவது). உடன் (இடமிருந்து) என். மாலைராஜா எம்.ல்.ஏ, இளைஞரணி துணைச் செயலர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுகவனம் எம்.பி., மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரான துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மாவட்டப் பொறுப்பாளர் வீ. கருப்பசாமி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு.

திருநெல்வேலி, டிச. 5: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை 5 அமைச்சர்கள் புதன்கிழமை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருநெல்வேலியில் இம் மாதம் 15, 16-ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தலை அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பந்தல், “காவிய கலைஞர்-84′ ஒளி-ஒலி காட்சிக்கான ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேரணியை முதல்வர் அமர்ந்து பார்க்க அமைக்கப்பட்டு வரும் தனி மேடை ஆகியவற்றை மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குடிசைமாற்றுத் துறை அமைச்சர் சுப. தங்கவேலன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் புதன்கிழமை காலையும் மாலையும் பார்வையிட்டனர்.பின்னர், இவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

கூடுதல் பாதுகாப்பு: மாநாட்டுப் பந்தலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளாக உதவி ஆணையர் மரியஜார்ஜ் தலைமையில் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் தினமும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
————————————————————————————————————————————-

நெல்லையில் சனிக்கிழமை தொடங்கிய திமுக இளைஞரணி மாநாட்டு கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு
பிறகு மேடையை பார்வையிடும் முதல்வர் கருணாநிதி. உடன் (வலமிருந்து) மாநிலங்களவை
உறுப்பினர் கனிமொழி, மத்திய அமைச்சர் ராசா, தயாளு அம்மாள், கருப்பசாமி பாண்டியன் எம்எல்ஏ,
அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஆர்க்காடு வீராசாமி, திருநெல்வேலி
துணை மேயர் கா. முத்துராமலிங்கம்.

Host unlimited photos at slide.com for FREE!
“திமுக வளர்ச்சிக்கு கருணாநிதி நிதி வசூலித்தது எப்படி?’

புதுச்சேரி, டிச. 6: திமுக வளர்ச்சிக்கு தமிழக முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கருணாநிதியும், தானும் நிதி வசூலித்த வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு இம் மாதம் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.

இதில் கட்சியினர் ரூ.20 லட்சம் நிதி அளித்தனர். இதைப் பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:

“தேர்தலுக்காக போஸ்டர் அச்சடிக்க வேண்டும். கொடி, தோரணம் கட்ட வேண்டும். அதனால் அதிக தொகுதியில் திமுக போட்டியிடுவது சிரமம்’ என்று 1967-ம் ஆண்டு தேர்தலின்போது கட்சியின் தலைவராக இருந்த அண்ணா கூறினார். அப்போது கட்சியின் பொருளாளராக இருந்த கருணாநிதி, எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை மட்டும் சொல்லுங்கள் என்று கேட்டார். ரூ.10 லட்சம் தேவைப்படும் என்று அண்ணா கூறினார். அந்த அளவுக்கு நிதி திரட்டித் தருவதாகக் கூறி கருணாநிதி ஊர் ஊராகச் சென்றார்.

“மிஸ்டர்’ ரூ.11 லட்சம்

ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்தினார். கட்சிக் கொடி ஏற்றி வைத்தால் நிதி கொடுக்க வேண்டும். கூட்டம் நடத்த நிதி அளிக்க வேண்டும். கட்சிக்காரர் வீட்டில் டீ குடிக்க வேண்டுமென்றால் ரூ.200 நிதி அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறி சிறுக சிறுக நிதி திரட்டினார் கருணாநிதி. 1967-ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கட்சி மாநாட்டில் இப்படி திரட்டிய நிதியாக ரூ.11 லட்சத்தை அண்ணாவிடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

அந்த மாநாட்டில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளர் “மிஸ்டர்’ ரூ.11 லட்சம் என்று அறிவித்தார் அண்ணா.

அப்போது தலைவர் கருணாநிதியைப் பார்க்க தினந்தோறும் 50 பேராவது வருவார்கள். அங்கு ஒரு நோட்டுப் புத்தகத்தைப் போட்டு எங்கள் அமைப்பு சார்பில் நிதி வசூல் செய்ய தொடங்கினோம். அதில் உங்களால் முடிந்த நிதியை அளியுங்கள் என்று எழுதியிருந்தோம். மேலும் அந்த நோட்டுப் புத்தகத்தில் 10 பேரின் பெயரை நாங்களாகவே எழுதி வைத்துவிட்டோம். இவர்களின் பெயர்களைப் பார்த்தாவது மற்றவர்களும் நிதி கொடுப்பார்கள் என்ற காரணத்துக்காக அப்படி செய்தோம். அப்படி நிதி வசூல் செய்த புத்தகத்தை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

திமுக மாநாடு: முதல்வர் கருணாநிதி அறிவிக்கப் போவது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, டிச. 11: திருநெல்வேலியில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவுரையாற்றும் முதல்வர் கருணாநிதி என்ன அறிவிக்கப் போகிறார் என்பது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி ஓர் அறிவிப்பு இருந்து அதை அரசியல் உலகம் எதிர்பார்க்குமேயானால், அதைவிட அதிக எதிர்பார்ப்பு அக் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்தாக வேண்டும். ஆனால், விவரம் தெரிந்த மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் சிந்தனை ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தாலும் அது தெளிவானதாகவே இருக்கிறது.

தமிழக இளைஞர்கள் யார் பக்கம் என நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் விளைவாக அறிவிக்கப்பட்டது திருநெல்வேலி மாநாடு. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞர்கள் சுமார் 3 லட்சம் பேர், கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 2 லட்சம் பேர் என மொத்தம் 5 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை இளைஞரணியின் செயலராகவும், கட்சியின் துணைப் பொதுச்செயலராகவும் இருக்கும் மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என பல தரப்பிலும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுவே மாநாட்டுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி வெளியிடுவாரா?

“”தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் எனது இறுதிமூச்சு வரை பணியாற்றுவேன். கழகத்தின் பணி தொடர இளைஞர்கள் என்றும் எங்களுடன் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தலைவர் வெளியிட்டு உங்களையும் (பத்திரிகையாளர்கள்), எங்களையும் (கட்சியினர்) அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என பட்டென்று பதில் சொன்னார் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

“பாஜக வெற்றி பெற்றால் அத்வானிதான் பிரதமர் என்பது குஜராத் தேர்தலை கருத்தில்கொண்டு சொல்லப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இப்போது எந்தத் தேர்தலும் இல்லை. அப்படி இருக்கும்போது, முதல்வர் மாற்றம், கட்சித் தலைமை மாற்றம் என்பதெல்லாம் இப்போதைய அவசியம் இல்லாத ஒன்று என்பதை கருணாநிதி நன்கு அறிவார்’ என்பது மூத்த நிர்வாகிகளின் கருத்து.
Host unlimited photos at slide.com for FREE!
கருணாநிதியின் எண்ண ஓட்டம்:

இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அடிக்கடி கூறி வருகிறார் கருணாநிதி. அதற்காக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதியை மட்டும் மாற்றிவிட்டு எஞ்சியவர்களுடன் இப்போதைய அமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு ஸ்டாலின் தலைமையில் கட்சியையும், ஆட்சியையும் நடத்த முடியுமா? அது சாத்தியமா? மாற்றம் என்றால் அது ஒட்டுமொத்தமானதாக இருக்க வேண்டும்; அது இப்போதைக்கு சாத்தியமில்லை. எல்லாவற்றையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள கருணாநிதியின் மனம் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்கின்றனர் அவரது எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்தவர்கள்.

கட்சித் தலைமை மாற்றம், ஆட்சி மாற்றம் அவசியம் என்ற சூழல் உருவானால்கூட மாநாட்டுக்குப் பிறகு நிகழும் விளைவுகளை அசைபோட்டுப் பார்த்துவிட்டு தவிர்க்க முடியாத நிலையில் மாற்றங்கள் நிகழலாம். அதற்குகூட அடுத்த 6 மாத காலம் ஆகும் என்கின்றன கட்சி வட்டாரங்கள்.

இந்த மாநாடு மூலம் மாற்றங்களை நிகழ்த்த முதல்வர் திட்டமிட்டிருந்தால் அவருக்கு நெருக்கமான மூத்த நிர்வாகிகளிடம் இலைமறைகாயாக ஆலோசித்திருப்பார். அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, இப்போதைக்கு மாற்றங்களுக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர் தகவலறிந்த இளைஞரணியினர்.

“கட்சித் தலைமை எனக்கு; ஆட்சித் தலைமை ஸ்டாலினுக்கு’ என குடும்பத்திற்குள் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் மற்றவர்கள் எதிர்பார்ப்பதுபோல இப்போதைக்கு பகிரங்க மோதல் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.
Host unlimited photos at slide.com for FREE!
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்:

மாநாட்டில் திருப்புமுனை அறிவிப்புகள் இல்லாவிட்டால் என்னதான் நிகழப் போகிறது?

தமிழக இளைஞர்களை திமுக பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கு சமூக, பொருளாதார மேம்பாட்டை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட சில அரசுத் துறைகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்ற திட்டங்களை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி, அவை அமல்படுத்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
தி.மு.க. மாநாடு: இதுவரை 60,000 சுற்றுலா வாகனங்களுக்கு முன்பதிவு

சென்னை, டிச. 12: தி.மு.க. இளைஞர் அணி மாநாடுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதன்கிழமை நிலவரப்படி, 60,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநாடு தொடங்க இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் முன்பதிவு அதிகரிக்கும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், மேக்சி கேப் உள்ளிட் பல்வேறு வகையான வாகனங்கள் அடக்கம்.

இந்த நிலையில், நெல்லையில் நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டுக்குச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலா வாகனங்களை அந்தக் கட்சியினர் முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இரண்டு நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. நெரிசலைத் தவிர்க்க சில மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாள் முன்பே நெல்லைக்கு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இதனால், சுற்றுலா வாகனங்களுக்கான முன்பதிவு திமுகவினரால் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60,000-த்துக்கும் மேற்பட்ட வாகனங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

இதன் எண்ணிக்கை, இரண்டொரு நாளில் மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா வாகன ஓட்டிகள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சரின் அறிவிப்பில் சந்தேகம்: இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் ஆயுள்கால நிர்ணயம் குறித்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை தெரிவித்தார்.

ஆயுள்கால நிர்ணயித்துக்கு சுற்றுலா வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை காரணமாக வைத்து, மாநாட்டை ஒட்டி போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஈடுபட்டால் கட்சித் தொண்டர்கள் நெல்லைக்கு வருவதில் சிரமம் ஏற்படும். இதனாலேயே, சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுள்கால உத்தரவை தள்ளிப் போட்டுள்ளதாக கூறுகின்றனர் வாகன உரிமையாளர்கள்.

————————————————————————————————————————————-
Host unlimited photos at slide.com for FREE!
திமுக மாநாடு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (டிச. 15, 16) ஆகிய 2 நாள்களும் நடைபெற உள்ள திமுக இளைஞரணி முதல் மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை திருநெல்வேலிக்கு செல்கின்றனர்.

பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு முதலே மாநாட்டுக்கு செல்லத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் முன்பக்கம் கோட்டை போன்ற முன்முகப்பும், உள்புறத்தில் 84 அடி உயரத்தில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட உள்முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பணிகள் முடிவடைந்து விட்டன.

பந்தலின் உள்புறம் சுமார் 4 ஆயிரம் சதுர அடி கொண்ட மேடையும், அதன் முன்புறம் தர்பார் மண்டபம் போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மேடை கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரண்டு போர் வீரர்கள் கையில் ஈட்டியுடன் நிற்பது போன்ற சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளின்போது புத்தம் புதிய மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட உள்ளது.

திருவிழாக் கோலம்: மாநாட்டுக்கு வரும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை வரவேற்க மாநகர் முழுவதும் நூற்றுக்கணக்கான “டிஜிட்டல்’ வரவேற்பு பதாகைகள், 55 மின் அலங்கார கோபுரங்கள், நகரின் எல்லையில் நான்கு வரவேற்பு கோபுரங்கள், ஏராளமான கொடிகள், தோரணங்கள் என நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இரவில் மிளிரும் அலங்கார கோபுரங்களை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

அடிப்படை வசதிகள்: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்காக பந்தல் வளாகத்தில் உணவகம், குடிநீர், பல்பொருள் அங்காடிகள், கழிப்பறை, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி போன்றவற்றை தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயணம்: மாநாட்டில் கலந்து கொள்ள அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வியாழக்கிழமை இரவு நெல்லைக்கு சென்றார். அவர் தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகிறார்.

மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு அனந்தபுரி ரயில் மூலம் சனிக்கிழமை காலையில் நெல்லைக்கு செல்கிறார். ரயில்நிலையத்தில் 56 குதிரைகள் மற்றும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் செல்லவிருக்கின்றனர்.

மாநாட்டுப் பந்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு டி.ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி.க்கள், 1000 போலீஸôர் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டுப் பாதுகாப்புப் பணியில் 6,500 போலீஸôர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க வைத்திருந்த பலூன் வியாழக்கிழமை வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
————————————————————————————————————————————-

திமுக இளைஞரணி மாநாடு: கண்காணிப்பு பணியில் 100 உளவுப்பிரிவு போலீஸôர்

திருநெல்வேலி, டிச.13: திமுக இளைஞரணி மாநாட்டில் ரகசியத் தகவல்களை சேகரிக்க உளவுப்பிரிவு போலீஸôர் 100 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றனர்.

தமிழக குற்றப்புலனாய்வுப் பிரிவு, நுண்ணறிவு பிரிவு என இரு உளவுப் பிரிவுகளைச் சேர்ந்த போலீஸôர் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வருகின்றனர்.

இதில் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த போலீஸôர் மட்டும் 65 பேர் வருகின்றனர். இவர்கள் மாறு வேடத்தில் மாநாடு நடைபெறும் பந்தல், மாநாட்டு பந்தலின் வெளிப் பகுதி, ஊர்வலம் செல்லும் பாதை, தலைவர்கள் தங்கும் இடம், மக்கள் அதிகமாக சந்திக்கும் பகுதி என முக்கியமானப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
————————————————————————————————————————————-

கருணாநிதி இன்று நெல்லை வருகை

திருநெல்வேலி, டிச. 14: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்க சனிக்கிழமை (டிச.15) தமிழக முதல்வர் மு. கருணாநிதி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார்.

முன்னதாக அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை காலை 7.30 அனந்தபுரி ரயில் மூலம் திருநெல்வேலி வருகிறார். ரயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்திலிருந்து காரில் புறப்பட்டு அவர் தாழையூத்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். ரயில் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர் காவல்துறை ஆணையர் எம்.என். மஞ்சுநாதா மற்றும் துணை ஆணையர் இரா. தினகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முதல்வர் வருகையையொட்டி ரயில்நிலையம் முதல் தாழையூத்து விருந்தினர் மாளிகை வரை போலீஸôர் போக்குவரத்தை தடை செய்து அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.
————————————————————————————————————————————-

தலைவர்களைப் புகழ்ந்து வர்ணனைகள் வேண்டாம்: ஸ்டாலின்

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தலைப்புகளில் பேசுவோர் தலைவர்களை புகழ்ந்து வர்ணனை செய்யக் கூடாது என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுப் பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை காலையில் குடும்பத்தினருடன் வந்து மீண்டும் பார்வையிட்டார் ஸ்டாலின்.

மாணவ, மாணவிகளுடன் உரையாடல்: ஸ்டாலின் மாநாட்டுப் பந்தலைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பந்தலை பார்க்க வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள டி.டி.டி.ஏ ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 100 பேரும் ஆசிரியர்கள் 17 பேரும் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். குழந்தைகள் அனைவரும் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். உடனே ஸ்டாலினும், அவரது மனைவி துர்க்காவதியும் குழந்தைகளின் அருகில் சென்று அவர்களுடம் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

நுழைவுக் கட்டணம்:மாநாட்டில் பங்கேற்க வருவோருக்கு நுழைவுக் கட்டணமாக ஆண்களுக்கு ரூ. 20-ம், பெண்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட உள்ளது. நுழைவுச் சீட்டு வழங்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக மொத்தம் 20 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
————————————————————————————————————————————-

நெல்லையில் இன்று திமுக இளைஞரணி மாநாடு

திருநெல்வேலி, டிச. 14: திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாடு சனிக்கிழமை பிற்பகல் பேரணியுடன் தொடங்குகிறது.

மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் இளைஞரணியின் செயலரான மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அன்று இரவில் முதல்வர் கருணாநிதியும் பேசுகிறார்.

திமுக வரலாற்றில் முதல்முறையாக நடைபெறும் இந்த இளைஞரணி மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட பந்தலும், மாநகர் முழுவதும் சிறப்பான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் மலர்களை பார்வையிட்ட அமைச்சர் ஸ்டாலின்
மனைவி துர்கா மற்றும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி.

மாநாட்டின் தொடக்கமாக, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநாட்டுப் பந்தல் முன் கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 84 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்புக் கொடிக்கம்பத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார்.

இதில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதன்பிறகு கருணாநிதியும், நிதி அமைச்சர் அன்பழகனும் வாகனத்தில் சென்று பந்தலை சுற்றிப் பார்க்கின்றனர்.

இளைஞர் பேரணி: மாநாட்டையொட்டி இளைஞர் பேரணி, பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்படுகிறது. இந்தப் பேரணியை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடக்கிவைக்கிறார். பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

சனிக்கிழமை இரவு நடைபெற உள்ள “காவியக் கலைஞர்-84′
ஒளி-ஒலிக் காட்சிக்கான ஒத்திகை.

இந்தப் பேரணியை, மகராஜநகர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து கருணாநிதியும், அன்பழகனும் பார்வையிடுகின்றனர். இந்த மேடையின் வலதுபுறமும், இடதுபுறமும் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் முதல்வரின் குடும்பத்தாரும், அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் அமர்ந்து பேரணியைப் பார்வையிடுகின்றனர்.

ஒலி-ஒளிக்காட்சி: பேரணி மாநாட்டுத் திடலில் முடிகிறது. அங்கு இரவு 8 மணிக்கு தி.க. தலைவர் கி. வீரமணி தலைமையில், கவிஞர் வைரமுத்து முன்னிலையில் நடைபெறும் “காவியக் கலைஞர்-84′ என்ற கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும்.

பேரணியைப் பார்வையிட்ட பின்னர் இங்கு வரும் கருணாநிதி உள்ளிட்டோர் இந்த ஒலி-ஒளிக்காட்சியைப் பார்வையிடுகின்றனர். முதல்நாள் நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவடைகின்றன.

ஸ்டாலின் தலைமையுரை: மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

முதல்வர் கருணாநிதியை வரவேற்க மாநாட்டுத் திடல் அருகே
அமைக்கப்பட உள்ள வரவேற்பு வளைவை அலங்கரிக்க
ஆரஞ்சுப் பழங்களை கோர்க்கும் தொழிலாளர்கள்.

காலை 9.30 மணிக்கு தொடங்கி பல்வேறு தலைவர்கள் பேசுகின்றனர். 12 மணிக்கு மத்திய அமைச்சர் ஆ. ராசா பேசுவார். பகல் 12.30 மணிக்கு மாநாட்டுத் தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுவார்.

கருணாநிதி நிறைவுரை: பிற்பகல் 2 மணிக்கு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கும் மாநாட்டில், 3 மணிக்கு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. மாலை 4 மணிமுதல் 6 மணி வரை 28 சிறப்பு தலைப்புகளில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்ட 28 பேர் பேசுகின்றனர். இரவு 7 மணிக்கு கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் பேசுவார். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு நிறைவுரையாற்றுவார்.

மாநாட்டில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சனிக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வருகிறார் கருணாநிதி. ரயில்நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
————————————————————————————————————————————-

Host unlimited photos at slide.com for FREE!

28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் பேச்சு

திருநெல்வேலி, டிச. 16: திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ச்சியில் 28 தலைப்புகளில் திமுக பிரமுகர்கள் உரையாற்றினர்.

“இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி’- திருச்சி சிவா எம்.பி., “மகளிர் முன்னேற்றத்தில் திமுக’- கனிமொழி எம்.பி., “சேது சமுத்திரத் திட்டம்- நூற்றாண்டுக் கனவு’- சபாபதி மோகன், “கலைஞர் ஆட்சியில் சமூகப் பணிகள்’- முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, “கலைஞர் அழைக்கின்றார், இளைஞனே எழுந்து வா’- அன்பழகன், “சமத்துவபுரங்களும்- சாதி ஒழிப்பும்’- வி.பி.ராஜன், “உலகை குலுக்கிய புரட்சிகள்’- கோவி.செழியன், “நீதிக் கட்சி தோன்றியது ஏன்?’- நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இந்திய அரசியலில் திமுக’- புதுக்கோட்டை விஜயா, “அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு’- தாயகம் கவி, “புதிய புறநானூறு படைப்போம்’- கரூர் கணேசன், “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’- தாமரை பாரதி, “வர்ணாசிரமத்தில் வந்த கேடு’- தஞ்சை காமராஜ், “பெண்ணுரிமை பேசும் திருநாட்டில்…’- தாட்சாயிணி, “திராவிட இயக்கப் பயணம்’- ஈரோடு இறைவன், “சிறுபான்மை சமுதாய காவல் அரண்’- கரூர் முரளி, “சமூக நீதிப் போரில் திமுக’- திப்பம்பட்டி ஆறுச்சாமி, “அண்ணாவும் கலைஞரும் காத்த அரசியல் கண்ணியம்’- சரத் பாலா, “மத நல்லிணக்கமும், மனித நேயமும்’- சைதை சாதிக், “சாதி பேதம் களைவோம்’- வி.பி.ஆர். இளம்பரிதி, “திராவிட இயக்க முன்னோடிகள்’- குடியாத்தம் குமரன், “அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்வோம்’- சென்னை அரங்கநாதன், “உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு’- கந்திலி கரிகாலன், “கலைஞர் ஆட்சியில் தொழிற்புரட்சி’- புதுக்கோட்டை செல்வம், “தமிழர் நிலையும் கலைஞர் பணியும்’- கனல் காந்தி, “திராவிடர் இயக்கமும் மகளிர் எழுச்சியும்’- இறை. கார்குழலி, “தீண்டாமை ஒழிக்கச் சபதமேற்போம்’- திருப்பூர் நாகராஜ், “மனித உரிமை காக்கும் மான உணர்வு’- வரகூர் காமராஜ் ஆகியோர் பேசினர்.

சிறப்புத் தலைப்புகளில் தலைவர்கள் பேச தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் 4.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி மாநாட்டு மேடைக்கு வந்தார்.

சிறப்புத் தலைப்புகளில் முக்கியத் தலைவர்கள் தவிர, இதர நிர்வாகிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே பேசினர்.
————————————————————————————————————————————-

ஸ்டாலின் எப்போது முதல்வர்?

Host unlimited photos at slide.com for FREE!
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை
நிறைவுரையாற்றுகிறார் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி.

திருநெல்வேலி, டிச. 16: காலம் அதிகம் இருக்கிறது; நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எதிர்பார்ப்பது விரைவில் நடக்கும்; எப்போது நடக்கும் என்பது விரைவில் அறிக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டிலோ, அதற்கு பின்னரோ அமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவின் தலைமைப் பொறுப்பும், அதிகாரத்தில் நிலை உயர்வும் கிடைக்கும் என ஊடகங்கள் தெரிவித்து வந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய நிறைவுரை:

இந்த மாநாட்டை எங்கே நடத்துவது என யோசித்தபோது நெல்லைதான் பொருத்தமான ஊர் என்றும், இங்கேதான் மழை வராது என்றும் நினைத்து இங்கே நடத்தலாம் என முடிவு செய்தோம்.

இந்த மாநாட்டுக்கு ரூ. 40 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும், தமிழ் பத்திரிகையிலும் எழுதியுள்ளார்கள். மாநாட்டின் வரவு-செலவு கணக்கை பார்க்க நாங்கள் அவர்களை கணக்கு பிள்ளையாக நியமிக்கவில்லை. வருமான வரித் துறையினரிடம் கணக்கு காட்டும் போது இவர்கள் வந்து உதவட்டும்.

இந்த மாநாட்டில் நுழைவுக் கட்டணம் மூலம் கிடைத்துள்ள வருமானம் ரூ. 40 லட்சத்து 18 ஆயிரத்து 422 ஆகும்.

இந்தத் தொகையை இளைஞரணியினர் அவர்களது அன்பகம் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மாநாட்டில் ஸ்டாலினையும், என்னையும் புகழ்ந்து பேசினீர்கள். ஸ்டாலின் என் மகன்தான் என்றாலும் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்துள்ளேன். அதேபோல, அவர் எனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார் என நம்புகிறேன்.

சபையில் மகனை முந்தியிருக்க செய்ய வேண்டியது தந்தையின் கடமை. அதை நான் செய்துள்ளேன். இவனை பெறுவதற்கு இவனது தந்தை என்ன தவம் செய்தாரோ என மற்றவர்கள் கூறும் நிலையை உருவாக்க வேண்டியது மகனின் கடமை. அதை ஸ்டாலின் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

சனிக்கிழமை நடைபெற்ற “கலைஞர் காவியம்-84′ ஒலி-ஒளிக் காட்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து ஒரு கடிகாரத்தை கூறி அதில் ஒரு முள் பெரியது என்றும், ஒரு முள் சின்னது என்றும், பெரிய முள் சற்று வேகமான முள், ஆத்திரப்படும் முள் என்றும் கூறினார். அவர் யாரை பெரிய முள், யாரை சின்ன முள் என கூறினார் என்பதற்குள் நான் செல்லவில்லை. முள் இரண்டும் முள்ளாக இருக்க வேண்டும். கடிகாரம் நேரத்தை சரியாகக் காட்ட வேண்டும். கழகம் நன்றாக இருக்க வேண்டும்.

ஸ்டாலின், நான் உனக்கு தந்தை என்றாலும் குடும்ப பாசத்தில் குடும்பம்தான் பெரியது என்று நான் நடந்து கொண்டது கிடையாது. அது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும்.

தந்தை வழியில் நடப்பேன் என்று சொன்னால் மட்டும் போதாது. நடந்து காட்ட வேண்டும். அவ்வாறு நடப்பாய் என்ற நம்பிக்கை எனக்கும், பேராசிரியருக்கும் உண்டு. அதில் சந்தேகம் இல்லை.

சுய மரியாதை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் ஏச்சு, பேச்சு கேட்டாக வேண்டும். அதையும் தாங்கிக் கொண்டு பாடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
————————————————————————————————————————————-

3 பதில்கள் -க்கு “DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details”

  1. […] Posted by bsubra on December 6, 2007 பலமல்ல, பலவீனம்! தொடர்பான முழுமையான செய்தித் தொகுப்பு: DMK youth wing conference in Tirunelveli – Preparations, Arrangements, Details « Tamil News […]

  2. visu said

    visit this exclusive site for dmk youth wing http://www.dmkyouthwing.com/

  3. Kalyan said

    Yes excellently they have gathered lot of information regarding the footprints of dmk youth wing ..
    thanks for the useful link..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: