Ration Cards – Public Distribution System: Nexus between dealers and food dept officials
Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007
ரேஷன் முறையில் புதிய அத்தியாயம்
டி. புருஷோத்தமன்
பொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.
ஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.
ஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.
எனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.
ரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இதனால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.
இதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.
குறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.
அதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
தில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
மேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
லாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.
ஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.
இந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்