Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Malaysia: Over 200 Indian workers claim being abused

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

மலேசியத் தமிழர் போராட்டம் பற்றிய செவ்விகள்

அமைச்சர் டத்தோ சாமிவேலு
அமைச்சர் டத்தோ சாமிவேலு

மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவழியினரின் நியாமான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாகக் கூறி, அங்குள்ள தமிழர்கள் கடந்த சில தினங்களாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மலேசிய இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டங்களில் நியாயம் இல்லை என்று மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அந்நாட்டு பொதுப்பணித் துறை அமைச்சருமான டத்தோ சாமிவேலு தமிழோசையிடம் தெரிவித்தார். அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழக் கூடிய நாட்டில், உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் நூறு சதவீத உரிமைகள் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசியாவில் அரசின் அனுமதி பெற்றுக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்களுக்கு அரசு மானியங்கள் கூட வழங்கிவருவதை சுட்டிக் காட்டிய மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கோயில்களை எந்த அரசுமே ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.

ஆனாலும் தொடர்ந்து தமிழ் பள்ளிகள் மூடப்படுவது, தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்விகளில் வாய்ப்புகள் மறுக்கப்படுவது, கோயில்கள் உடைக்கப்படுவது போன்ற காரணங்களே தமது போராட்டத்துக்கான காரணங்கள் என்று இந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்பான இந்து உரிமைகள் நடவடிக்கை குழுவின் தலைவர் கணபதி ராவ் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தாங்கள் அரசுக்கு பல மனுக்கள் கொடுத்திருந்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் நகரங்களில் தமிழ்ப் பள்ளிகள், கோவில்கள் ஆகியவை கட்டப்படுவது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மலேஷியாவின் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கவலை

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், “இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

மலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள்.

இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி.

“வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்” என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


வரம்பு மீற வேண்டாம்!

“”மலேசியத் தமிழர் பிரச்னைப்பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கவலைப்படத் தேவையில்லை. அவருடைய மாநிலத்திலேயே ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் அவர் கவலைப்படவேண்டுமே தவிர மலேசியப் பிரச்னையில் கருணாநிதி கருத்துத் தெரிவித்துப் பேசாமல் இருந்தால் போதும்”- இப்படிக் கூறியிருப்பது மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ். தகவலை வெளியிட்டிருப்பது, கோலாலம்பூரிலிருந்து வெளிவரும் “நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ்.

அப்படி என்னதான் தவறாகப் பேசியிருப்பார் தமிழக முதல்வர்? மலேசியாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அந்தத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதினார். இதைக்கூட ஒரு தமிழக முதல்வர் செய்யாமல் இருந்தால் அவர் முதல்வராக இருப்பதிலேயே அர்த்தமில்லை என்பது பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.

மலேசிய மக்கள்தொகையில் ஏழு சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியர்கள். அந்த இந்தியர்களிலும் பெருவாரியானவர்கள் தமிழர்கள். சொல்லப்போனால், மலேசியாவில் குடியேறி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் தமிழர் குடும்பங்கள் ஏராளம். ஆனால், சிங்கப்பூரில் இருப்பதுபோல், மலேசியவாழ் தமிழர்களுக்கு உரிமைகள் எதுவும் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் எப்பொழுதுமே இரண்டாம் தரக் குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், ஹிந்துக் கோயில்கள் பல இடிக்கப்படுகின்றன. மலேசியப் பல்கலைக்கழகங்களில் இந்தியர்களுக்கு இடம் தரப்படுவதில்லை. புதிய தொழில்களை இந்தியர்கள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பன போன்ற ஏராளமான மனக்குறைகள் மலேசியவாழ் இந்தியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் மலேசிய அரசிலும் அரசியலிலும் “டத்தோ’ சாமிவேலு போன்ற தமிழர்கள் பங்கு பெற்றும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

மலேசிய அமைச்சர் “டத்தோ’ சாமிவேலுவை பலவீனப்படுத்தும் எண்ணத்துடன்தான், அங்குள்ள தமிழர்கள் எதிரணியினரால் திரட்டப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், தங்களது உரிமைகளைக் கேட்டு அகிம்சா வழியில் போராடுவது எப்படித் தவறாகும்? தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இந்தியர்கள் கோலாலம்பூரில் நடத்திய பிரமாண்டமான பேரணியை மலேசிய போலீஸôர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டபோது பலர் படுகாயம் அடைய நேரிட்டது.

அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழர்களை அந்நாட்டு போலீஸôர் நடத்திய விதம் தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும், மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் கருணாநிதியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.

மலேசிய தமிழர் பிரச்னை பற்றிப் பேசினால், அந்த அரசு நமக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவிடும். அதனால் பல்லாயிரம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும் என்றெல்லாம் கூறப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதற்காக, அடிப்படை உரிமைகள் மீறப்படுவதையும் அடக்குமுறையையும் மௌனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. சிங்கப்பூரில் இருப்பது போல, மலேசியாவிலும் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தரவேண்டிய கடமை இந்திய அரசுக்கு நிச்சயம் உண்டு.

அதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் கருணாநிதி எப்படி இப்படியொரு கடிதம் எழுதலாம் என்று கேள்வி எழுப்பியிருக்கும் மலேசிய அமைச்சரைக் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி -தமிழர்களுக்காகத் தமிழக முதல்வர் குரல் கொடுக்காமல், தான்சானியா பிரதமரா குரல் கொடுப்பார்? வரம்பு மீறியிருப்பது தமிழக முதல்வரல்ல, மலேசிய அமைச்சர்தான்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: