Ramar Sethu Project – Adams Bridge: Environmental Impact & Scientific facts
Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007
சேதுத் திட்டம் யாருக்காக?
டி.எஸ்.எஸ். மணி
கடந்த செப்டம்பர்-18, 2007 அன்று “வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை. “கடல் கால்வாய்த் திட்டம் இந்தியாவில் ஒரு மத உணர்வு தடங்கலால் தடைப்பட்டுள்ளது’ என்ற ராமலட்சுமியின் கட்டுரை.
அதில், “சுற்றுச்சூழல் மற்றும் மீனவர் வாழ்வுரிமைக்கான ஒரு போராட்டம், மத முத்திரையுடன் கெடும் வாய்ப்பாக திசை திரும்பிவிட்டது’ என முடிக்கப்பட்டிருந்தது.
“சுற்றுச்சூழலை அழிக்கும் ஆபத்துகளை, இந்தச் சேது கால்வாய்த் திட்டம் எப்படியெல்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது எனத் திட்ட ஏற்பாட்டாளர்கள் முன் வைத்த, “”சுற்றுச்சூழல் தாக்கல் பற்றி மதிப்பீடு” மீதே நாம் காணமுடியும்.
* இந்த வங்காள விரிகுடா-பாக் விரிகுடா பகுதி அநேகமாக மென்மையிலிருந்து கடினம் வரையான களிமண்ணை இயற்கையாகக் கொண்டுள்ளது. தனுஷ்கோடிக்கு வடக்கிலும் தெற்கிலும் மணலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தக் கால்வாய்த் திட்டத்தை, நடைமுறைப்படுத்த முடியாது என 140 ஆண்டுகளாகத் தள்ளிப் போடப்பட்டது. தூர்வாரி ஆழப்படுத்தல் மூலம் கால்வாய் தோண்டினால் ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டி வரும். அதன் செலவு கணக்கிலடங்காது.
* தூத்துக்குடி அருகே உள்ள “வான் தீவு’ ஆதம்பாலத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. “தேசிய கடல் பூங்கா’விலிருந்து 25 கி.மீ.க்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்ற “வனவிலங்குச் சட்டம்’ கூறுகிறது. “தேசிய கடல் பூங்கா’ எனவும், “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ எனவும், மன்னார் வளைகுடா, யுனெஸ்கோவால் வரையறுக்கப்பட்டுள்ளது. அத்தகைய “சுற்றுச்சூழல் விதிகளை’ மீறி இந்தத் திட்டம் வருகிறது.
* ஏற்கெனவே பாக் விரிகுடா மண்ணில் அதிகளவு கடின உலோகக் குவிதலும், எண்ணெயும் காணப்படுகிறது. அதனால் மாசுபட்டுள்ளது. அங்கே கால்வாய்த் திட்டம் வருமானால் “பல்லுயிரியல் பாதுகாப்பு பகுதி’ மேலும் கெட்டுவிடும்.
* கடல் விசிறி, கடல் பஞ்சு, முத்துச் சிப்பி, சங்கு, கடல் அட்டை ஆகிய வகைவகையான உயிரியல் ஊற்றுகள் அழியத் தொடங்கும்.
* இங்கு 600 வகை மீன் இனங்கள் உள்ளன. அவற்றில் 200 வகைகள் வணிக முக்கியம் பெற்றவை. அவற்றின் அழிவு வருமானத்தை இழக்கவைக்கும். மீனவர் வாழ்வுரிமையையும் பறித்துவிடும்.
* 1992 முதல் 1996 வரை இந்தப் பகுதியில் மீன் உற்பத்தி 55 ஆயிரம் டன்னிலிருந்து, 2001-ம் ஆண்டு 2 லட்சம் டன்னாக 4 மடங்கு உயர்ந்துள்ளது. அந்த உற்பத்திக்கு இந்தத் திட்டம் ஊறு விளைவிக்கும்.
* தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில், உயிரினங்கள் மன்னார் வளைகுடாவிலிருந்து, பாக் விரிகுடா செல்லும். மற்ற காலத்தில் மறுதிசை செல்லும். அவை பாம்பன் பாலம் வழியாகவும், அரிமுனை வழியாகவும் செல்லும். கால்வாய் தோண்டுவதால் அந்த உயிரினங்களின் நடமாட்டம் தடைப்படும்.
* தூர்வாரி ஆழப்படுத்தினால், கடலுக்கு அடியில் உள்ள தாவர, விலங்கு இனங்கள் அழிந்துவிடும்.
* “அரிதான உயிரினமான’ கடல் பசுக்கள், பருவ மாற்றத்தில் இடம் பெயர்பவை. அவை அழிந்துவிடுமென, மறைந்த பேராசிரியர் சென்னை பல்கலைக்கழக “மானுடயியல்’ துறை தலைவர் சுதர்சன் எச்சரித்திருந்தார்.
* “தமிழ்நாடு அறிவியல் கழக’ முன்னாள் தலைவரான மறைந்த பேராசிரியர் சுதர்சன், “சேது கால்வாய்த் திட்டம்’, சுற்றுச்சூழலையும், மீனவர் வாழ்வுரிமையையும் அழித்து விடுமென ஓர் ஆய்வு அறிக்கையை 2004-ம் ஆண்டே வெளியிட்டார்.
* கட்டுமான காலத்திலும், செயல்படும் காலத்திலும் கடலை மாசுபடுத்தும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய் துளிகள், கிரீஸ், பெயிண்ட், பிளாஸ்டிக் பைகள் போன்ற மாசுபடுத்தும் பொருள்கள், கடல் நீரோட்டத்தில் கலந்து இயற்கையைத் தொடர்ந்து அழித்து வரும்.
* கப்பல் போக்குவரத்தால், அந்நிய பொருள்களும், உயிர்களும், வங்காள விரிகுடாவிலிருந்து, இந்துமகா கடலுக்கும், திசைமாறிப் பயணமாகி, பகுதிசார் உயிரின வகைகளை, சிதறடித்துவிடும் ஆபத்து அதிகமாக உள்ளது.
* “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதி’ யாக இருக்கும் மன்னார் வளைகுடாவின் செழிப்பான இயற்கை சூழலும், அதன் விசித்திரமான வளமாக இருக்கும் தாவர இனமும், விலங்கு இனமும் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.
* திட்டமிடப்பட்டுள்ள சிறிய கால்வாய் வழியாகச் செல்லும்போது, கப்பல்கள் முட்டிக் கொண்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. அப்போது சிதறும் எண்ணெய், அடித்தள வண்ணப் பூச்சுகள் ஆகியவை கடல் வாழ் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்விற்கும் எதிரானவை.
* அமெரிக்கக் கடலில், 1990 முதல் 1999 வரை 50 ஆயிரம் எண்ணெய் சிதறல்களை, “எண்ணெய் அல்லாத இதர சரக்குகளை ஏற்றி வந்த கப்பல்களே’ ஏற்படுத்தியுள்ளன. அதன் விளைவாக அமெரிக்க கடலில் இப்போதெல்லாம் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மிகவும் குறைந்துவிட்டன.
* கடந்த 10 ஆண்டுகளில், இத்தகைய எண்ணெய் அல்லாத சரக்கு கப்பல்கள்தான், “சுற்றுச்சூழலை’ கடுமையாகப் பாதித்துள்ளன.
* பவளப்பாறைகள் “மன்னார் வளைகுடா’வின் சிறப்பு அம்சம். அவை கிடைக்கும் தீவுகள் ராமேசுவரத்திற்கும், தூத்துக்குடிக்கும் மத்தியில் உள்ளன. இவை “எண்ணெய் சிதறல்களால் அழிந்துவிடும்.
* கடல் ஆமைகள் இங்கே அதிகம் உள்ளன. கட்டுமானப் பணியே கூட அவற்றின் உயிரைப் பறித்துவிடும்.
* தூர்வாரி ஆழப்படுத்துதலால் ஏற்படும் கடல் நீரோட்ட பாதிப்புகளைப் பற்றி திட்ட ஆதரவாளர்கள் கவலைப்படுவதில்லை.
* தூத்துக்குடிக்கும், ராமேசுவரத்திற்கும் இடையில் இருக்கும் 21 தீவுகள்தான், சுனாமி தாக்குதலிலிருந்து அந்த இரண்டு கரையோர நகரங்களையும் காப்பாற்றியவை. அத்தகைய தீவுகள் இத்திட்டத்தால் அரிக்கப்பட்டு, அழியும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
* ஐ.நா.வின் ஆய்வில், இந்தியாவில் “பல்லுயிரியல் பாதுகாப்புப் பகுதிகளாக’ 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
“யுனெஸ்கோ’வின் அந்தத் தேர்வில், மிக முக்கிய பகுதிகளாக மூன்றை முடிவு செய்தார்கள். அவை நந்தாதேவி, நீலகிரி மற்றும் மன்னார் வளைகுடா. அதில் , “மன்னார் வளைகுடா’வின் பல்லுயிரியலை பாதுகாக்க’ ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்திற்கு (UNDP) பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு முயற்சி, சேது கால்வாய்த் திட்டத்தால் வீணாகி விடுமென மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
* மத்திய அமைச்சரவை இதை “கிழக்கின் சூயஸ் கால்வாய்’ என அழைக்கிறது. வங்காள விரிகுடாவிலிருந்து, மன்னார் வளைகுடா செல்ல அதிகபட்சம் 24 மணிநேரம் மிச்சப்படும் என்பது அவர்களது வாதம்.
அத்தகைய வாதம் ஒரு மாயை என்பதை கப்பல் துறை நிபுணர்களும், பொருளாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.
* பனாமா, சூயஸ் கால்வாய்கள் நிலத்தில் தோண்டப்பட்டவை. சேது கால்வாய் கடல் நீரில் தோண்டப்படுகிறது. பனாமாவும், சூயசும் 1.50 லட்சம் டன் எடையுள்ள கப்பல்கள் பயணிக்க உதவும். ஆனால் சேது கால்வாயில், வெறும் 30 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்களை மட்டுமே அனுமதிக்க முடியும்.
ரூ. 2600 கோடி முதல் ரூ. 3500 கோடி வரை சேதுத் திட்டத்துக்குச் செலவாகும். இதுவரை ரூ. 300 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
* ஜேகப் ஜான் என்ற பொருளாதார நிபுணர் மேற்கண்ட ஆய்வில், “திட்ட அறிக்கை நகல்’ அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியில் லாபம் இல்லை என்கிறார்.
“எகனாமிக் அண்ட் பொலிடிகல்’ வீக்லி-2007, ஜூலை-2ல் வெளியான அவரது கட்டுரையில், இத்திட்ட ஆதரவாளர்களின் வாதம் தவறு என விளக்கியுள்ளார். “எந்த ஓர் இந்திய மேற்கு கடற்கரை நகரிலிருந்து, இந்திய கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் கப்பலும், சேது வழி செல்வதால் எந்தப் பலனும் பெறப்போவதில்லை. சேது கால்வாய் உள்ளே செல்லவும் திரும்ப வெளியே வரவும் , “பைலட் கப்பல்’ இரண்டு மணி நேரம் எடுக்கும். தனியான சர்வதேச வாடகைக் கட்டணம் கோரப்படும். கால்வாய் வழியே செல்வதற்கு தனிக் கட்டணமும் வசூலிக்கப்படும். இவை கப்பலின் செலவைக் கூட்டிவிடும் என்கிறார் அவர்.
* தூத்துக்குடியிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு 22 மணி நேர பயணம் குறையும் என்றால், ஐரோப்பாவிலிருந்து புறப்படும் கப்பல்களுக்கு வெறும் 8 மணி நேரத்தை மட்டுமே மிச்சப்படுத்தும். ஆகவே, வெளிநாட்டுக் கப்பல்களுக்கு சேது கால்வாய் அதிகம் தேவைப்படாது. இதனால் திட்டத்திற்கு ஆகும் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் இழப்புதான் மிஞ்சும் என்கிறார் அவர்.
(கட்டுரையாளர்: மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்)
————————————————————————————————————————————–
சேது: அபாயத்தின் மறுபக்கம்!
ச.ம. ஸ்டாலின்
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் “தமிழினத் துரோகிகள்’ என முத்திரை குத்தியிருக்கிறது திமுக அரசு.
உலகெங்கும் சூழலியல் மாற்றங்கள் குறித்த பேரச்சமும் விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்து வரும் நிலையில், இந்தியா தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு திட்டத்தை இத்தனை சாதாரணமாக நிறைவேற்ற எத்தனிக்க முடியாது.
சூழலியல் மாறுபாடுகளிலேயே மிக அபாயகரமானதும் மர்மமானதும் கடல் சூழல்தான். இந்தியாவைப் பொருத்தவரையில் இதற்குச் சரியான உதாரணம் சேது சமுத்திரத் திட்டம். ஆழம் குறைந்த இந்திய – இலங்கை கடற்பகுதியில் கால்வாய் அமைப்பதன் மூலம் இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பல் போக்குவரத்தை கால்வாய் வழியே மேற்கொள்வதற்கான திட்டம் இது.
தமிழர்களின் நூற்றாண்டு கனவாகவும் மாபெரும் பொருளாதாரப் புரட்சித் திட்டமாகவும் புனையப்பட்டிருக்கும் இத்திட்டத்துக்கு 1860-ல் அடித்தளமிட்டவர் கமாண்டர் டெய்லர். தொடர்ந்து டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்ட்சன், ஜான்கோட், பிரிஸ்டோ எனப் பலரால் இத்திட்டத்துக்கான சாத்தியம் குறித்து சாதகமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டபோதும் ஆங்கிலேயே அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டியது.
சுதந்திர இந்தியாவில் ஏ. ராமசாமி முதலியார், சி.வி. வெங்கடேசுவரன், நாகேந்திர சிங், எச்.ஆர். லட்சுமிநாராயணன் என அனைவரும் சாதகமான அறிக்கைகளையே அளித்தனர். இவர்கள் அனைவரின் அறிக்கைகளிலும் உள்ள முக்கிய ஒற்றுமை – சூழலியல் பிரக்ஞை இல்லாததுதான்.
இத்தகைய திட்டங்களைச் செயலாக்கும் முன் தீவிரமான பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தைப் பொருத்தவரையில் அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடலியல் விஞ்ஞானிகள், மீனவர்களின் யோசனைகள் ஏற்கப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால் நம் விஞ்ஞானிகளின் வாய்கள் அரசால் இறுகக் கட்டப்பட்டுள்ளன. மீனவர்கள் ஊமைகளாக்கப்பட்டுள்ளனர். சூழலியல் சார்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒரே ஆய்வு “நீரி’ (தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) மேற்கொண்ட விரைவு சூழல் தாக்கம் குறித்த ஆய்வு மட்டுமே. அதுவும் முழுமையானது அன்று; கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கடல் வெறும் நீர்ப்பரப்பன்று; அது ஓர் உலகம். கடல் எனக் குறிப்பிடப்படுவது அதனுள் இருக்கும் ஆயிரமாயிரம் உயிரினங்களையும் அற்புதங்களையும் அபாயங்களையும் உள்ளடக்கியதுதான்.
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் மன்னார் வளைகுடா பகுதி ஆசியாவின் உச்சபட்ச பராமரிப்பு கோரும் கடற்கரை உயிரியக்கப் பகுதிகளில் ஒன்று. 5,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இருந்த இப்பகுதியில், ஏற்கெனவே, கடல் சூழல் மாசால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்துவிட்டன. தற்போதுள்ளதாகக் கருதப்படும் 4000 உயிரினங்களில் 1500 வகைகள் அருகிவரும் வகைகளாகக் கண்டறியப்பட்டவை.
மேலும், இப்பகுதிக்கு கிடைத்துள்ள பெருங்கொடை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய பவளப்பாறைகள், படிமங்கள். பவளப்பாறை இனங்களில் உலகிலுள்ள 82 சத வகையினங்கள் இங்கு காணப்படுகின்றன.
இத்திட்டத்தால் கடலின் நீரியங்குதிசை, நீரோட்டத்தின் ஒழுங்கு, அலைகளோட்டம், சூரிய ஒளி ஊடுருவல் மாறுபடும். இதன் தொடர்ச்சியாக உயிரினங்களின் வாழ்வியல்பு, உறைவிடம், இடப்பெயர்வு பாதிக்கப்படும்.
சூழலியல் முக்கியத்துவமிக்க இப்பகுதி பேராபத்தானதும்கூட. வானிலையாளர்களால் அதிக கவனத்துடன் கண்காணிக்கப்படும் இப்பகுதி இயற்கைச் சீற்றங்களுக்கு அதிகம் இலக்காகும் அபாயமிக்க பகுதி. இங்கு ஏற்படும் எந்த மாற்றமும் தென்னிந்திய கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இத்தகைய ஒரு பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் போன்ற அசுரத்தனமான திட்டங்களை மேற்கொள்வதற்கும் அணுகுண்டுகளை வெடித்துப்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.
ஒருபுறம், அடிப்படையிலேயே நகர்வுத்தன்மை வாய்ந்த கடலில் கால்வாயின் நிரந்தரத்தன்மை குறித்து தொழில்நுட்ப ரீதியிலான கேள்வி எழுப்பப்படுகிறது. மறுபுறம், இத்திட்டத்துக்கான செலவு, பராமரிப்பு, சுங்க வரி ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக அமையுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இன்னொருபுறம் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், சூழலியலில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அபாயமிக்க இத்திட்டத்தைச் செயலாக்கத் துடிப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் அறிவியல்பூர்வமான – நேர்மையான பதில் அரசிடம் இல்லை.
Oh Pakkangal - Njaani in Kumudham « Snap Judgment said
[…] சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் சுற்றுச் சூழல் பாதிப்புக் கிடையாது என்றும் சுனாமியிலிருந்து […]