Kovilpatti 1950 – History of DMK – Kalainjar Mu Karunanidhi’s Speech
Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007
கோவில்பட்டியில்
1950-ம் ஆண்டு தி.மு.க. மாநாட்டில் ஆற்றிய உரை
கருணாநிதி அறிக்கை
சென்னை, நவ.28-
1950-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் தான் ஆற்றிய உரை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி தனது அறிக்கையில் விளக்கி உள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நினைவுபடுத்தி கொள்கிறேன்
பழைய நினைவுகளை அசை போடும் பொழுது பனிக்கட்டியிலிருந்து கிளம்புகிற ஆவியை ரசிப்பது போன்ற ஓர் இன்பம்! தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு அணிவகுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை உடன்பிறப்புக்களுக்கு; அதே நெல்லை மாவட்டம், கோவில்பட்டியில் 1950-ம் ஆண்டு என்னுடைய 25-வது வயதில் தலைமை ஏற்று, 2 நாட்கள் மாநாட்டை நடத்தியதையும்-நான் அங்கே ஆற்றிய உரையை அச்சியற்றி சென்னை முன்னேற்றப் பண்ணை எனும் பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டதையும் – இதோ நினைவுபடுத்திக் கொள்கிறேன். அதற்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையிலே இளைஞர் அணி மாநாடு நடைபெறுகிற நேரத்தில் – அப்போது என்ன பேசினேன் என்பதை இளைய திலகங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ள ஏதுவாக அதனை இப்போது இயக்க வளர்ச்சிக்கும் கட்டுக்கோப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
மட்டிலா மகிழ்ச்சி
“கோவில்பட்டியில் கூடும் இம்மாநாட்டில் நான் தலைமை வகிப்பதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்றுள்ளது. சென்ற ஆண்டு தி.மு.க.வின் துவக்க விழாவில் கோவில்பட்டியில் நானேதான் கலந்து கொண்டேன். இப்போது அதே நகரில் மாநாட்டிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும்போது மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.
என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப் படுவதின் நோக்கம் இயக்கம் இளைஞர்களின் சொத்து – உழைப்பாளிகள் அமைத்த மாளிகை – அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும் – நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும், எடுத்துக்காட்டத்தான் என்பது என் எண்ணம்.
சரண்புக மாட்டோம்
தலைமை வகிப்பது என்பது கட்சியிலே ஒரு நட்சத்திரத்தை உண்டாக்குவது என்பதல்ல. அப்படி தலைமை வகிப்பவர்கள் கருதினாலும் – அல்லது தலைமை வகிப்பவரைப் பற்றிக் கருதினாலும் அது பெரும் தவறு! வரப் போகும் போராட்டங்களிலே இதுவரை கழகத்தின் சார்பாக நடைபெற்ற மாவட்ட மாநாடுகளின் தலைவர்கள் வரிசைக் கிரமமாக களத்திலே நிறுத்தப்பட வேண்டும். அந்தந்த மாவட்ட மாநாட்டுத் தலைவர்களின் சார்பாக நான் தலைமைக் கழகத்தை கேட்டுக் கொள்வதெல்லாம் `எங்களை எதிர்காலப் போராட்டத்தின் தளபதிகளாக்குங்கள்’ என்பதுதான்! மார்பிலே வேல்தாங்கி மரணத்தை அணைப்போமே தவிர மாற்றாரிடம் சரண்புக மாட்டோம். மாசற்றக் கொள்கைகளை எதிரிகட்குக் காணிக்கையாக்க மாட்டோம். இந்த உறுதியோடுதான் இன்றைய மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறேன்.
செப்டம்பர் 17. நாம் மறக்க முடியாத நாள் பெரியார் பிறந்த நாள். பெரியார் பிறந்த நாளும் – நாம் அவரை விட்டுப் பிரிந்த நாளும் அதுதான்! சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் செயலில் இறங்கப் புறப்பட்ட நாள். அந்நாள் தோன்றி ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண்டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை – நாம் புரிந்த செயல்கள் எத்தனை – நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை – நாம் செய்யாமல் விட்டு விட்ட காரியங்கள் எத்தனை – என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.
ஐநூறு கிளைகள்
ஒரே ஆண்டில் ஐந்நூறு கிளைகளை நிறுவியிருக்கிறோம். எந்த இயக்கமும் செய்து காட்ட முடியாத அரும்பெரும் செயல்! ஐந்நூறு கிளைகள். ஐம்பதுக்கு மேற்பட்ட பிரச்சாரக் காளையர்கள். அன்றாடம் கூட்டங்கள். மாவட்டந்தோறும் மாநாடுகள். இது தித்திப்பான செய்திதான். ஆனால் பூரண திருப்தியளிக்கக் கூடியதல்ல.
நம் கொள்கையை கீதமாக்கிக் கொண்டவர்கள் – நம் பாதையில் நடந்து வரத் துணிந்தவர்கள் – நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களை இணைக்க முடியவில்லை. இணைக்கும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐநூறு கிளைகள். அந்தக் கிளைகளுக்கும் மத்திய கழகத்திற்கும் தொடர்பு அறுந்துதான் போயிருக்கிறது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் – அந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு . . மத்தியக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகத்திற்குச் சென்று, மாவட்டக் கழகம், கிளைக் கழகங்களுக்கு அறிவித்து கிளைக்கழகம், அளிக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென்று ஏற்பாடு இருக்கிறது. ஆனால் முறைப்படி நடக்கவில்லை. தலைமைக் கழகம் ஒரு சங்கிலியின் பதக்கமாகவும் கிளைகள் முத்துக்களாகவும் கோர்க்கப்படவில்லை. இந்தக் குறையை விரைவில் களைய வேண்டும்.
இந்த இணைப்பு உறுதியாக இருந்தால்தான் கிளைக் கழகத்தின் சந்தேகங்கள் – சச்சரவுகள் – நடவடிக்கைகள் – இவைகளை நல்ல முறையில் சீர்படுத்தி இயக்கத்தைச் செழிப்பாக்க முடியும். பிரச்சாரக் குழு மட்டும் வேலை செய்து பயன் இல்லவே இல்லை. சென்ற ஆண்டு போட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்முறைக்கு வந்தாக வேண்டும்.
நாம் வளர்ந்திருக்கிறோம். வளர்ந்து கொண்டேபோகிறோம். அதற்கும் ஒரு கட்டுப்பாடு – ஒழுங்கு – நியதி வேண்டுமென்பதுதான் பிரச்சினை.
மகத்தான இயக்கம்
ஆரியம் ஒரு மாயை, அது பல உருவில் நடமாடும் என்பது கண்டு இலக்கியத் துறையிலே – நாடகத் துறையிலே – கலைத் துறைகளிலே – ஆரியத்தின் கைவரிசையை எதிர்க்கப் பலப்பல அணுகுண்டுகளை நடமாட விட்டிருக்கும் இயக்கம் – இத்துணை மகத்தான இயக்கம் நிலவுபோல வளர்வதும், தேய்வதும் பின் வளர்வதுமாயுள்ளது. நிச்சயமாக நமக்குத் தெரியும் கழகத்திலே நான் மேலே குறிப்பிட்ட அமைப்பு முறைகள் சீர்திருத்தப்படா விட்டாலுங்கூட கழகம் அழிந்து விடாது என்று. ஆனாலும் சந்திரனைப் போல தேயும். பிறகு வளரும். ஆனால் சந்திரனைப் போல அழியாமலே இருக்கும்.
நம்முடைய ஆசையெல்லாம் இயக்கம், அழியாமலுமிருந்து அதோடு வளர்வதும் தேய்வதுமின்றி எப்போதும் வளர்வது என்பதாகவே இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் அழுத்தந்திருத்தமாகக் கூற வேண்டியிருக்கிறது, அமைப்பு முறை தேவையென்று. அந்தத் தேவையை மத்யக் கழகத்திலிருந்துதான் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதல்ல. மாவட்ட, கிளைக் கழகங்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே அமைப்பு கண்டு மாவட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு மத்ய கழகத்தை தங்களோடு இணைத்து செயல் புரியச் செய்ய வேண்டும். விழுதுகள் இருந்தால் தான் ஆலமரத்திற்கு அழகு. இது கழகத் தொண்டர்கள் – செயலாளர்கள் அறியாததல்ல.
அர்ப்பணிக்க வேண்டும்
நாட்டு நிலைமை மிக மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் நாடு நம்மை எதிர்பார்த்து நிற்கிறது.
இந்தித் திணிப்பு எதிர்ப்பிலே வெற்றி பெற்று விட்டோம். வாகை மாலை சூடி விழாக்களும் நடத்தி விட்டோம். இந்த வெற்றியைக் கொண்டாடும் நேரத்திலேயே நெஞ்சு கொதிக்கும் நெருப்புச் செய்தியொன்று நம்மை நெருங்கிற்று.
ஆம், அதுதான் அல்லாடியாரின் ஆனந்தத் தாண்டவம் – அக்கிரகாரத்தின் வெற்றி முரசம் – திராவிடத்தின் முன்னாள் பழம்பெருந்தலைவர்கள், உரிமைப் போர்த் தளபதிகள் தியாகராயர், டாக்டர் நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேசன், போன்ற பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை (கம்ïனல் ஜி.ஓ.) யைக் குழியில் தள்ளிவிட்டு பார்ப்பனீயம் பாடுகின்ற பள்ளுப்பாட்டைத்தான், தோழர்களே! குறிப்பிடுகிறேன். முப்பது ஆண்டுகளாக அமுலிலிருந்து வரும் வகுப்புவாரி முறை அடியோடு சாய்கிறது. சட்டம் கம்ïனல் ஜி.ஓ.வுக்கு மாறானதாயிருக்கிறதாம். அதற்காக சமூக நீதியை சாய்த்து விட வேண்டுமாம்.
சமூகநீதி தேவை என்றால்…
1920இல் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சைக்கு சென்ற மாணவர்களின் தொகை இருபதாயிரம். இன்று 1950ல் அறுபத் தெட்டாயிரம். இப்படி வளர்ந்து வந்த திராவிடரின் கல்வி உயர்வைக் கருவறுக்க சட்டத்தை வாளாக்குகிறார்கள். சட்டம் செய்தவர்கள் ஐந்து பேர். அதில் மூன்று பேர் தென்னாட்டு நிலை தெரியாத வட நாட்டவர். இருவர் தென்னாட்டவர். அதில் ஒருவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியார், மற்றவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். எங்கிருந்து நீதி கிடைக்கும் இந்த நிரபராதித் திராவிடருக்கு!. எங்கிருந்து உரிமை கிடைக்கும் உளுத்துப்போன சமுதாயத்துக்கு!….. சமூகநீதி தேவையென்றால் பரந்த நோக்கம் பேசுகிறார்கள். தகுதி, திறமையென்கிறார்கள்.
இந்தத் தகுதியும் திறமையும் சமுதாயப் பிரச்சினை வரும்போது காட்டப்படுகிறதா? கல்விச் சாலைக்குச் செல்ல தகுதி திறமை என்று கர்ஜிக்கிற கனவான்களைக் கேட்கிறேன் – காலையில் எழுந்து ஸ்னானம், நேமம், நிஷ்டை, விரதம், அளவில்லாத ஆண்டவன் பக்தி, பழுத்த ஆஸ்திகம் இத்தனை திருக்குணங்களும் அமைந்த திராவிடன் ஒருவன், ஆலயத்து சென்று ஆண்டவனைத் தொட்டு அர்ச்சிக்க அபிஷேகிக்க முடியாதே. அதே நேரத்தில் இரவெல்லாம் இன்பவல்லியோடு கூடிக் கிடந்து வெற்றிலை காய்ந்த வாயுடனே ஆண்டவனைத் தொட்டுக் குளிப்பாட்டி, உணவூட்ட ஒரு பெரு வியாதி பிடித்த பார்ப்பனருக்குக் கூட உரிமை இருக்கிறதே – இதில் எங்கே தகுதி, திறமை? யாரிடமிருக்கிறது தகுதி….. ஆனால் யார் நுழைய முடிகிறது கோயிலில். இவைகளை ஒழித்துக் கட்டி விட்டு, உயர்ந்தோர் எனப் பேசும் ஆணவத்தை அகற்றி விட்டு பிறகு கம்ïனல் ஜி.ஓ. தேவையற்றது என்றால்கூட அதில் அர்த்தமுண்டு. எப்படியோ அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.
அடுத்த திட்டம்
நாம் முன்பு கூறியபோது நையாண்டி பேசியவர்கள் இன்று நம்மோடு சேர்ந்து `அந்தோ! அநீதி!’ என அலறுகிறார்கள். சென்னை அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்று விட்டது நீதி கேட்க! அதுவும் நம் முயற்சியால்தான், கிளர்ச்சியால்தான் முடிந்தது என்பதை நினைத்துப் பெருமையடைகிறோம்.
அப்பீலுக்கு போயிருக்கிறவர்கள் அங்கும் தோல்வி கண்டால் – அதன் பிறகு அரசியல் சட்டம் திருத்தப்படாவிட்டால் அப்போது எரிமலையாகக் குமுறப்போகிறது நமது கிளர்ச்சி. மூன்று கடல்களும் பொங்கி ஆதிக்க இமயத்தை மூழ்கடிக்கும் கிளர்ச்சி. சாவா? வாழ்வா? என்று முடிவு கட்டுகிற கிளர்ச்சி.
கோரப்பசி
ஆளவந்தார் சுப்ரீம் கோர்ட்டிலிருந்து திரும்புகிற வரையில் நமக்கு வேறு பல வேலைகள் உண்டு. சமூக நீதி பற்றிய விளக்கவுரைகளாற்றி மக்களை விழிக்கச் செய்ய வேண்டும். மக்கள் விழிப்படைவார்கள். ஆனால் செயலாற்ற உடலில் வலுவில்லை. காரணந்தான் தெரியுமே – கொடுமையான காரணம். பசி. . பசி . . பருத்திக் கொட்டையை சாப்பிடு என முன்ஷி சிபார்சு செய்யுமளவுக்கு வளர்ந்து விட்ட பசி – திருநெல்வேலியிலும் வேறிடங்களிலும் தான் பெற்ற செல்வத்தைத் தன் வயிற்றில் கிடந்த வைடூரியத்தை, தாயார் விலை கூறி விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும்படி செய்த கோரப் பசி – இந்தப் பசி நீக்க, பாராள வந்தவர் எடுத்துக் கொண்ட முயற்சி, எட்டு அவுன்ஸ் அரிசியை ஆறு அவுன்சாக்கியதுதான்.
பசியால், மக்கள் மாளும் நேரத்தில் பாராமுக மாயிருக்கும் சர்க்காருக்கு – ஒருமுறை நினைவு படுத்தும் நிகழ்ச்சியை நாம் நடத்திக் காட்ட வேண்டும். சென்னையிலே பட்டினிப் பட்டாள ஊர்வலம் நடந்த பிறகு நல்லதொரு எதிரொலி ஏற்பட்டது. அதுபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நாடெங்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டு பசியால் மாளும் மக்களின் பட்டியலை சர்க்காருக்குத் தர வேண்டும்.
அகவிலை உயர்வை எதிர்த்து ஒரு போர்! அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர்! புத்தகங்களின் தடை உத்தரவை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே ஒரு போர்! அந்தப் போரிலே கலந்து வாகை மாலை சூட – வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! சிறுத்தையின் உறுமல் – சிங்கத்தின் சீற்றம் – கறுத்த கழுதையே அங்கேன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை – மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று என்று மார் தட்டிட வாரீர்! புரட்சிப்பண் பாடிட வாரீர்!
வாரீர் வாரீர்… வாலிப வீரர்களே! வைர நெஞ்சுடைத் தோழியர்களே! வண்மை நிறை பெரியோர்களே! … என அழைக்கிறேன்.”
இளைய உடன்பிறப்புகளே! அன்று அரும்பு மீசை இளைஞனாக இருந்த என் குரல் இப்படிக் கோவில்பட்டியிலே ஒலித்தது. இன்றும் அந்த இளைமைத் துடிப்புடன் ஒலிக்கிறது; இந்தக் குரல் ஒலியிலே அணிவகுத்திடு! பணி தொடர்ந்திடு!
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்