Assam violence – Plantation workers’ protests continue
Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007
கொஞ்சம் பொறுங்கள்
அசாம் மாநிலத்தில், குவாஹாட்டியில் ஊர்வலம் நடத்திய அசாம் ஆதிவாசி மாணவர்கள் சங்கத்தினரை பொதுமக்கள் தாக்கியதில் பலர் இறந்துள்ளனர். ஒருவர் மட்டுமே இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் பத்திரிகைகளும் ஊடகங்களும் 12 பேர் இறந்ததாகச் சொல்கின்றன.
பழங்குடியினரான தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிய இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், 60 பேருந்துகளில் இவர்கள் வந்திறங்கியபோதே காவல்துறை தடுத்திருக்க வேண்டும். காவல்துறையும் மாநில அரசும் அதைச் செய்யவில்லை.
ஊர்வலத்தில் சில இளைஞர்கள் கடைகளையும் சாலையில் இருந்த வாகனங்களையும் கல்லெறிந்து சேதப்படுத்தியதால்தான் பொதுமக்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அசாம் மாநிலத் தேயிலைத் தோட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காததால் நீரினால் பரவும் நோய்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள சூழலில், தொழில் பின்னடைவு காரணமாகத் தேயிலை நிறுவனங்கள் தங்கள் மருத்துவமனைகளைப் புறக்கணித்துவிட்டதால் மருத்துவத்துக்கும் வழியில்லாத சூழலில், நகர்ப்புறத்தில் கிடைக்கும் வசதிகள் மீது ஏற்பட்ட எரிச்சல்தான் இந்த வன்முறைக்கு காரணம். அதற்காக இதை நியாயப்படுத்த முடியாது.
ஆனால், இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையே தவிர, பொதுமக்கள் அல்ல. மேலும், வலிய வன்முறையில் ஈடுபடும் கும்பலுக்கு அடிபடாமல் தப்பிச் செல்லும் போக்குகள் தெரியும். காவல்துறையிடமும் பொதுமக்களிடம் அடிபடுவோரில் பெரும்பாலோர், வியூகத்தைவிட்டு வெளியேறும் வழி அறியா அபிமன்யு-க்கள்தான்.
சட்டத்தை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழ்நிலையில், உண்மையான குற்றவாளிகளைவிட அப்பாவிகளும், மிகச் சாதாரண குற்றம் புரிந்தவர்களுமே கொடுமைக்கு ஆளாகிறார்கள். தம்மைவிட மெலிந்தவர்கள் சிக்கும்போது அங்கே மனிதம் விரைவில் மறைந்து போகிறது.
பிடிபட்ட திருடர்களைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொல்வதும், மந்திரக்காரி என்று கருதப்படும் பெண்ணின் மீது கல்லைப்போட்டு சாகடிப்பதும், பேருந்தில் திருடியதாகக் கருதப்படும் பெண் ஆடைக்குள் எந்தப் பொருளையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்பதை பொதுஇடத்திலேயே நிரூபிக்கச் சொல்வதும்… என எல்லாமும் உடைமை இழந்தவனின் இயல்பான மனவெழுச்சியாக எடுத்துக்கொளளப்படுகிறது. சமுதாயத்தினுடைய தார்மிகக் கோபத்தின் வெளிப்பாடாக “மதிக்க’வும் படுகிறது.
ஒரு பாம்பு அல்லது தேளை அடித்துக் கொல்வதைப் போன்ற மிக இயல்பாக நடத்தப்படும் இந்த வன்மத்தை சமூகத்தின் கோபமாக நியாயப்படுத்த முடியாது. சமூகம் என்பது நாலு பேர் என்பதற்காக, நாலு பேரின் கோபம் சமுதாயத்தின் கோபமாக மாறிவிட முடியுமா என்ன?
அரசு அலுவலகங்களிலிருந்து அரசியல் கட்சிகள் வரை நிலவும் ஊழல்களின் மீதும், அரசாங்க செயல்பாடுகளில் காணப்படும் முறைகேடுகளின் மீதும் சமுதாயத்துக்கு ஏற்படாத கோபம் இங்குமட்டும் எப்படி சாத்தியமாகிறது? அல்லது, அவற்றின் மீது கோபம் கொள்ள முடியாத இயலாமைதான் இந்த எளிய குற்றவாளிகள் மீது காட்டப்படுகிறதா? கணவனை உதைக்க முடியாத இயலாமையில் குழந்தையை அடித்து நொறுக்கும் தாயின் உளவியல் கோளாறு போன்றதுதானா இவையும்?
சட்டத்தைத் தனியொரு மனிதன் அல்லது ஒரு கும்பல் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதும், அதை மீறிச் செயல்பட்டால் அதிகம் பாதிக்கப்படப்போவது தாங்கள்தான் என்பதும் புரியும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லாத பேருந்தை நிறுத்தி அதன் ஓட்டுநரை அடித்தால், அந்த வழித்தடத்தில் பேருந்தே வராது என்கிற உண்மை புரிகிறபோது, அந்தக் கோபம் சாலைமறியலாக மாறி, ஒரு மணி நேரத்தில் தணிகிறது. இதேபோன்ற புரிதலை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் ஏற்படுத்த முடியும். அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
குற்றம் புரிந்தவர் எத்தகைய தவறைச் செய்திருந்தாலும், சட்டம்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான அதிகாரம் இல்லாத நபர் சட்டத்தைத் தன் கையில் எடுத்தால் அது கையைச் சுடும் என்பது உணர்த்தப்பட வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்