Nov 23: Sri Lanka Updates – Eezham, LTTE, War zone News
Posted by Snapjudge மேல் நவம்பர் 23, 2007
பேசாலையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல்
![]() |
![]() |
இலங்கையின் வடமேற்கே மன்னார் பேசாலையில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 17 விடுதலைப் புலிகளும், வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
முகமாலை மற்றும் பெரியதம்பனை பகுதிகளில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் மேலும் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
மன்னார் பேசாலை கடற்பரப்பில் இன்று காலை மீனவ படகுகளுடன் கலந்து 6 படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் பேசாலை பொலிஸ் நிலையம் மற்றும் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
தரையிலிருந்தும் கடலிலிருந்தும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று சேதமடைந்ததாகவும், சேதமடைந்த படகை இழுத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் விடத்தல் தீவு பகுதியை நோக்கித் தப்பிச்சென்றதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.
இந்தத் தாக்குதலில் 17 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கடற்படையினர், படையினருக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த மோதல் சம்பவம் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும் விடுதலைப் புலிகளைத் தாக்க முற்பட்ட படையினரின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தமக்கு எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலினால் பேசாலை பிரதேசம் குண்டுச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களினால் அதிர்ந்ததாகவும், இதனால் மக்கள் அச்சமடைந்து பேசாலை வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதல்கள், படையினரின் நடமாட்டம் போன்றவை காரணமாக பேசாலை பகுதியில் இன்று பிற்பகல் வரையில் பதற்றம் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் அரை மணித்தியாலம் வரையில் நீடித்த இந்தக் கடும் சண்டையின்போது ஏவப்பட்ட மோட்டார் மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களினால் 3 வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பேசாலை பகுதியில் நிலவிய பதட்டம் காரணமாக காலை 8 மணிக்குப் பின்னர் பிற்பகல் வரையில் மன்ன்னாருக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான வாகனப் போக்குவரத்துக்கள் தடைபட்டிருந்ததாகவும் பிற்பகலில் நிலைமை சீரடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மறுமொழியொன்றை இடுங்கள்