Tamil Cinema History – ‘Pesamozhi’ documentary on movies
Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007
ஆவணம்: தொலைந்து போன சினிமா சரித்திரம்!
தமிழ்மகன்
இந்திய தேச வரை படத்தில் இருந்து ஒரு கிராமமே காணாமல் போய்விட்டதை ஒரு சினிமாவில் சுவாரஸ்யமாகச் சொன்னார்கள். தமிழின் 30 ஆண்டு சினிமா சரித்திரமே காணாமல் போயிருக்கிறது என்கிறது “பேசாமொழி’ ஆவணப்படம்.
இரண்டாண்டு கடும் முயற்சிக்குப் பிறகு இந்த ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தயாரித்தவர் ம.செந்தமிழன். இந்த ஆவணப் படம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட “பகீர்’ கருத்துகள் இவை.
தமிழ்த் திரைப்பட வரலாறு 1931-ல் வெளியான “காளிதாஸ்’ படத்திலிருந்து ஆரம்பமாகிறது. அதற்கு முன்னர் மெüன மொழிப் படங்கள் இங்கே திரையிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எத்தனை மெüன மொழிப் படங்கள் தயாரானது என்று தெரியவந்துள்ளதா? வேறு பகுதியில் தயாரான படங்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதாகச் செய்தி உண்டா?
1897-ல் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாகச் சென்னை விக்டோரியா ஹாலில் சினிமா திரையிடப்பட்டது. அதற்கு 6-7 மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தியாவின் முதல் திரையிடல் நடைபெற்றது. 1905- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே “லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்’ என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த “ரயிலின் வருகை’ (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.
அப்போது திரைப்படங்கள் வெளியிட திரையரங்குகள் இருந்தனவா?
இல்லை. நிரந்தரத் திரையரங்குகள் உருவாகாத நேரத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுதும் சுற்றி படங்களைத் திரையிட்டிருக்கிறார். ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். சினிமா மீது மக்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு தமிழகம் முழுதும் டெண்ட் திரையரங்குகள் நிறைய உருவாக்கியிருக்கிறார். மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தித்தான் ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். படம் பார்ப்பதற்கு அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கப்பட்டன. மெüனப் படம் அதன் கதையை விளக்குவதற்காகக் கையில் குச்சியுடன் திரையருகே நின்றிருப்பார். 1928-ல் படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். நிரந்தர திரையரங்குகளைக் கட்டியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவருக்கு 18 திரையரங்குகள் இருந்தன. கோயம்புத்தூரில் இருந்த வெரைட்டி ஹால் திரையரங்கு அவருடையதுதான். இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டரின் பெயரே எலக்ட்ரிக் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்தக் கட்டடம் இப்போது சென்னை அண்ணா சாலை போஸ்ட் ஆபீஸ் அருகே உள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தாதா சாகிப் பால்கேதான் இந்திய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்பட்டு வருகிறார். ஆனால் பால்கேவுக்குத் திரைப்பட ஆர்வம் வருவதற்கே காரணமாக இருந்தது சாமிக் கண்ணு காண்பித்தத் திரைப்படங்கள்தான்.
அவரைப் போல வேறு யாரெல்லாம் இருந்தார்கள்?
நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மருதமுத்து மூப்பனார். அவர் இங்கிலாந்து சென்று இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து இங்குத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். 1916-ல் “கீசகவதம்’ என்ற படத்தை நடராஜ முதலியார் உருவாக்கியிருக்கிறார். இவர்கள் எடுத்தப் படங்களோ, அல்லது இவர்களைப் பற்றிய விவரங்களோகூட யாருக்கும் தெரியவில்லை. திரைத்துறை சம்பந்தமாகப் படிப்பவர்களுக்குக்கூட இவர்களைப் பற்றி பாடம் நடத்தப்படுவதில்லை. நேராக கிரிபித், ஹிச்காக், பெலனி என்றுதான் பாடம் நடத்துகிறார்கள். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட காணக் கிடைக்காததுதான் வேதனை.
ஏன் இந்த நிலை? உங்கள் கருத்து என்ன?
பேசும் படம் வந்த பின்புதான் அது அந்த மொழியின் திரைப்படம் என்ற கருத்து நிலவுகிறது. மற்ற மொழிகளில் அப்படியில்லை. அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் பேசா மொழி படத்திலிருந்தே அவர்களின் திரைப்பட வரலாற்றைப் பார்க்கிறார்கள். மற்றெல்லா மொழிகளிலும் அப்படித்தான். அவர்களின் மக்கள் தயாரித்த அவர்களின் மக்கள் நடித்த அவர்கள் பகுதியில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களும் அவர்களின் மொழிப்படம்தான். இங்கே ஆந்திரத்திலும் கேரளத்திலும்கூட அவர்களின் பேசா மொழிப் படங்களின் ஆவணங்கள் காணக் கிடைக்கின்றன. இங்கே விஸ்காம் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பேசும் படங்கள் வந்தபின்புதான் தமிழ் சினிமாவின் சரித்திரம் தொடங்கியதாகப் பாடம் நடத்துகிறார்கள். பேசாமொழிப் படங்கள் நம் படங்கள் இல்லை என்ற இந்தப் போக்கும் அவற்றை இழக்க ஒரு காரணமாகிவிட்டது. இந்த ஆவணப் படத்தில் பாமரன் சொல்லுவது போல, தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது. ஆனால் வரலாற்று பதிவுகளைப் பாதுகாக்கும் பழக்கம்தான் இல்லை.
இந்தப் படத்தின் விளைவுகள் ஏதேனும் உண்டா?
கோவையில் உள்ள சாமிக் கண்ணு வின்சென்டின் வாரிசுதாரர்கள் படத்தைப் பார்த்துவிட்டுப் பேசினார்கள். அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் ஆவணங்களையும் அளித்தார்கள். அமெரிக்காவில் இருந்து ஒரு பெண்மணி பேசினார். அவர், சாமிக்கண்ணுவிடம் பணியாற்றியவரின் மகள். அவரும் பல தகவல்களைப் பகிரிந்து கொண்டார். விவரங்கள் எங்கோ கொட்டிக் கிடக்கின்றன. நாம் ஒரு அடி எடுத்து வைத்தால்தான் அவை நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும். அந்த ஓர் அடிதான் இந்தப் பேசா மொழி.
S.Anand said
வரும் 2009 ஜனவரி 11 அன்று , கோவை விழா தொடர்பாக ஒரு திரைப்ப்ட விழா – தமிழ் சினிமா வரலாற்றில் கோவையின் பங்கு குறித்து – நடக்கவிருக்கிறது. திரு தியடோர் பாஸ்கரன் கலந்துகொள்கிறார். இது பற்றிய எமெது சுட்டி http://konangalfilmsociety.blogspot.com/ பதிவில் , இந்த கட்டுரையை வெளியிடுகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு ஆட்சேபனை ஏதும் இருக்காது என நம்புகிறோம். இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும். மிக்க ந்ன்றி.
எஸ்.ஆனந்த்
anandsiga@gmail.com
bsubra said
ஆனந்த், நன்றி __/\__ 🙂
Gokul R said
Is it possible to procure this Documentary on DVD ?
Is it available for purchase online/download ?
Please provide info as to how to access this documentary. Thanks.
M.Devendran said
sir,
Viscom manavarkaluku tamil cinemavin varalatrai nangal Vincent Sami kaanu Vidam Iruthuthan arambithu, thodarndhu Nataraja Mudaliyar ena pesa padangal thalipil Cinema paadam Edthu varugirom.
Thagavaluka Ithai Solkiraen.