Rare Paintings of Ancient India – Preserving the heritage and arts
Posted by Snapjudge மேல் நவம்பர் 18, 2007
பாரம்பரியம்: அழிந்துவரும் அரிய ஓவியங்கள்!
ந. ஜீவா
“”நமது தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த கோயில்கள் 38 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் இந்தக் கோயில்களில் உள்ள பல அரிய வரலாற்றுச் சான்றுகள் அழிந்து வருகின்றன” என்று கவலைப்படுகிறார் கே.டி.காந்திராஜன்.
கம்ப்யூட்டர், எம்பிஏ என்று படித்தோமா? கை நிறையச் சம்பாதித்தோமா என்று இக்காலத்தில் பலரும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் போது ஆர்ட் ஹிஸ்டரி படித்துவிட்டு பழைய கால ஓவியங்களைத் தேடித் தேடி ஆராய்ச்சி செய்து வருகிறார் அவர்.
சென்னை நுண்கலைக் கல்லூரியில் கெஸ்ட் லெக்சரராகப் பணியாற்றும் கே.டி.காந்திராஜன், கோயில்களில் உள்ள சுவரோவியங்களையும், தமிழகத்தில் உள்ள பல பாறை ஓவியங்களையும் ஆராய்வதில் நிபுணர். அவருடைய ஆராய்ச்சியில் அவர் தெரிந்து கொண்டவற்றை நாமும் தெரிந்து கொள்ள அவரை அணுகினோம்…
“”நான் சிறுவனாக இருந்த போதே பெயின்டிங் பண்ணுவேன். அந்த ஆர்வத்தில் சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் ஒன்றரையாண்டுகள் பெயின்டிங் டிப்ளமோ படித்தேன். அதன்பின் வரலாறு படிக்கும் ஆர்வம் வந்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஆர்ட் ஹிஸ்டரி படித்தேன். நாயக்கர் கால ஓவியங்கள் பற்றி தற்போது ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
நாயக்கர்களின் செல்வாக்கு தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 14 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. அவர்கள் காலத்திய ஓவியங்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளில் அதிகம் உள்ளன.
கோயிலை ஒரு பக்திசார்ந்த இடமாக மட்டுமல்லாமல், அவற்றை கொண்டாட்டத்திற்கான இடமாகவும் அவர்கள் கருதினர். பண்டிகை, விழாக்கள் என கோயிலை எப்போதும் பிஸியான இடமாக மாற்றுவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர். கோயில்களின் சுவர்களில் ஓவியங்கள் வரைந்தனர். மண்டபங்களில் ஓர் இடம் காலியான இடமாக இருக்கக் கூடாது என்று அங்கெல்லாம் ஓவியங்களை வரைந்து வைத்தனர்.
பாண்டியர், பல்லவர் காலத்திலேயே இதுபோல ஓவியங்கள் வரையப்பட்டன. என்றாலும் நாயக்கர் காலம் போல அதிக அளவில் வரையப்படவில்லை. பாண்டியர், பல்லவர் கால ஓவியங்களை அஜந்தா, எல்லோரா ஓவியங்களுடன் ஒப்பிடலாம்.
நாயக்கர் கால ஓவியங்கள் வித்தியாசமானவை. மக்களின் சமூக வாழ்வைப் பிரதிபலிப்பவை. கடந்த காலத்தின் கண்ணாடி போல அவை இருக்கின்றன. அவை நாட்டுப்புறத்தன்மையுடன் இருக்கின்றன.
நாயக்கர் கால ஓவியங்களைப் பார்த்து அக்கால மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அரசன் அணியும் ஆபரணங்கள் எவை? பிற மனிதர்கள் அணியும் ஆபரணங்கள் எவை? போன்ற நுட்பமான விவரங்கள் கூட அக்கால ஓவியங்களில் பதிவாகியிருக்கின்றன.
அக்காலத்தில் நாயக்க மன்னர்களுக்கும், முஸ்லீம் மன்னர்களுக்கும் வெளிநாட்டுக்காரரிடம் இருந்து குதிரைகளை வாங்குவதில் போட்டியிருந்திருக்கிறது. தூத்துக்குடிப் பகுதியில் குதிரை வாங்குவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக நிறைய சண்டை நடந்துள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள திருப்புடை மருதூரில் உள்ள ஓவியங்கள் குதிரை வியாபாரத்தைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடு
கின்றன. கப்பலில் போர்த்துக்கீசியர் குதிரைகளைக் கொண்டு வருவது போன்ற காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
மதுரை பாண்டிய அரசனுக்கும், தெலுங்கு அரசனுக்கும் சண்டை நடைபெறுவதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை தோல்வி அடைகிறது. இதைக் குறிப்பிடும் ஓவியங்கள் ஓர் அனிமேஷன் பிக்சர் போலவே வரையப்பட்டுள்ளன. குதிரை, யானை போன்றவற்றின் கால்கள் ஒன்றையொன்று தட்டிவிடுவதைப் போல வரைந்து ஸிம்பாலிக்காகச் சண்டை வரப் போவதைச் சுட்டிக் காட்டியிருந்தார்கள் அந்த ஓவியத்தில்.
அதுபோல ராமநாதபுரத்தில் “ராமலிங்க விலாஸம்’ அரண்மனையில் சேதுபதி மன்னர்கள் கால ஓவியங்கள் இருக்கின்றன.
நாயக்கர் கால ஓவியங்கள் என்று பொதுவாகச் சொன்னாலும் எல்லா ஓவியங்களும் ஒரே மாதிரி இல்லை. அதுவும் ஒரே காலத்தில் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே மாதிரியில்லை. உதாரணமாக தசரதன் இறப்பைச் சித்திரிக்கும் மதுரைப் பகுதி ஓவியங்களில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் ஈமச்சடங்கு நடப்பது போலச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அதுவே கும்பகோணம் ராமசாமி கோயில் ஓவியங்களில் வேறுவிதமான சடங்குகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள ஓவியங்களில் அச்சடங்குகள் தெலுங்கு மக்கள் சடங்குகளை போல உள்ளன.
பாறை ஓவியங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏழு இடங்களில் உள்ள பாறை ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தமிழ்நாட்டில் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் நிறையப் பாறை ஓவியங்கள் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அதிகம். இதுவரை 70 இடங்களில் பாறை ஓவியங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இருளர், குரும்பர், கோத்தர், தோடர், பணியர், காட்டுநாயக்கர் போன்ற பழங்குடி மக்களின் பாறை ஓவியங்கள் பல சேதிகளை நமக்குச் சொல்கின்றன.
குரும்பர் இன மக்கள் வரைந்த ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்களாகும். அவர்கள் வரைந்த ஓவியங்களுக்கு முன் பிக்காúஸô கூட நிற்க முடியாது.
இந்தப் பழங்குடியின மக்கள் எல்லாரும் வேட்டையாடி வாழ்பவர்கள் என்று பரவலான நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மையில் அப்படிச் சொல்ல முடியாது. தோடர் இன மக்கள் எருமை வளர்த்து பால் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். எருமைதான் அவர்களுடைய வாழ்க்கை. கோத்தர் இன மக்கள் அவர்கள் பகுதியில் கிடைக்கும் இரும்புத் தாதுவை எடுத்து பிற பழங்குடியின மக்களுக்குத் தேவையான ஆயுதங்கள் செய்கின்றனர். பானை செய்து கொடுக்கின்றனர். இருளர், குரும்பர் இன மக்கள் வேட்டையாடி உயிர் வாழ்கின்றனர். காலம் காலமாக இந்த விஷயங்கள் எல்லாம் அவர்கள் வரைந்த ஓவியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஓரளவுக்கு குறிஞ்சி நில வாழ்க்கையை அந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன எனச் சொல்லலாம். ஆனால் பழங்குடி மக்கள் ஏதோ நீலகிரி மாவட்டத்தில் மட்டும் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம், பழனி, ஆனைமலை, போடி ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். இந்த மக்களின் வாழ்வைச் சித்திரிக்கும் சாட்சியங்களாக அவர்களின் பாறை ஓவியங்கள் இருக்கின்றன.
மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் சமணர் குகைகள் உள்ளன. ஓவியங்களும் உள்ளன. இந்தப் பகுதியில் கல்குவாரி வேலை நடக்கிறது. இதனால் அங்கே வெடி வைக்கிறார்கள். அந்த அதிர்வில் ஓவியங்கள் உதிர்ந்து போகின்றன. அதைப் பற்றிக் கவலைப்படுபவர் யாருமில்லை.
அந்தப் பகுதிக்குச் செல்லும் இளைஞர்கள் சமணர் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் பாறைகளில் தங்களுடைய சொந்த ஓவியங்களை வரைகிறார்கள். இல்லையென்றால் பழைய ஓவியங்களின் அருமை தெரியாமல் அவற்றைச் சிதைக்கிறார்கள். நான் பத்தாண்டுகளுக்கு முன்பு பல இடங்களில் பார்த்த பல அரிய ஓவியங்கள் இன்று போய் பார்க்கும் போது காணாமல் போய்விட்டிருக்கின்றன.
அதற்கடுத்து நமது கோயில்கள் பல அறநிலையத் துறையின் கீழ் வருகின்றன. சில மத்திய தொல்லியல்துறையின் கீழும், சில மாநில தொல்லியல்துறையின் கீழும் வருகின்றன. இவற்றை யார் பராமரிப்பது, எப்படிப் பராமரிப்பது என்பதில் குழப்பங்கள் நிலவுகின்றன.
காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்றத்தில் நாயக்கர் கால ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றை ரிப்பேர் பண்ணுவதாகச் சொல்லி அந்தப் பாரம்பரிய ஓவியங்களை ரீ டச் என்கிற பெயரில் அதனுடைய ஒரிஜினாலிட்டியைக் குலைத்துவிட்டார்கள். 16 – 17 ஆம் நூற்றாண்டு பெயின்டிங்கை தொல்லியல்துறை சார்ந்த ஓவியர்களே சரியாகப் புரிந்து கொண்டு சரி செய்வது சிரமம். ஆனால் அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மரபு ஓவியங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஓவியர்களிடம் கான்ட்ராக்ட் விட்டு அந்தப் பணியைச் செய்தார்கள். கண்ணின் கருமணி போல் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஓவியங்கள் இன்று மீட்கவே முடியாதபடி அழிந்து போனதுதான் மிச்சம்.
அறநிலையத்துறையின் பராமரிப்பின் கீழ் வரும் கோயில்களில் உள்ள ஓவியங்களில் எண்ணெய் தடவுகிறார்கள். பெயின்ட் அடிக்கிறார்கள். சுண்ணாம்பு அடிக்கிறார்கள். சில இடங்களில் மக்கள் பார்க்கவே முடியாதபடி கம்பி வேலி போட்டுத் தடுக்கிறார்கள். இதுதான் அவர்களின் பராமரிப்பு வேலை.
பாரம்பரியச் சின்னங்களைப் பராமரிப்பதில் தொல்லியல்துறை, கல்வித்துறை, அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, காவல்துறை, நிதித்துறை எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நம்நாட்டில் இருக்கும் அரிய வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து போகாமல் தடுக்க மக்களிடம் அவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு முதலில் நமது பெருமையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமது பெருமை நமக்குத் தெரியாததுதான் பிரச்சினை.”
மறுமொழியொன்றை இடுங்கள்