Russia vs USA – India Foreign Relations: External Affairs
Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007
வாஷிங்டனுக்கே வெளிச்சம்!
இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் என்கிற செய்தி வரும்போதெல்லாம், 1979-ல் இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயின் ரஷியப் பயணம்தான் நினைவுக்கு வரும். ரஷியா என்றாலே எட்டிக்காயாகக் கசந்த மொரார்ஜி தேசாய், அன்றைய ரஷிய அதிபர் பிரஸ்னேவிடமும், பிரதமர் கோசிஜினிடமும் நட்புக்குப் பேசிவிட்டு எந்தவித உருப்படியான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல் திரும்பினார் என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இப்போதும் பேசப்படும் விஷயம்.
1979-க்குப் பிறகு பெரிதாக எதையும் சாதிக்காத இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் ஒன்று இருக்குமானால் அது பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய மாஸ்கோ பயணமாகத்தான் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே, ரஷியாவுடனான நெருக்கம் பெருமளவு குறைந்து கொண்டிருப்பதும், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்கிற கருத்து ரஷியர்களுக்கு ஏற்பட்டிருப்பதும்கூட இதற்குக் காரணம். இந்தியப் பிரதமர் ஒருவரின் மிகவும் குறைந்தகால ரஷியப் பயணம் எது என்று கேட்டாலும், சமீபத்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் மாஸ்கோ பயணம்தான். 28 மணிநேரம் மட்டுமே பிரதமர் மாஸ்கோவில் இருந்தார் என்றாலும், ரஷியப் பிரதமருடன் கணிசமான நேரத்தை அவர் பேச்சு வார்த்தைக்காக ஒதுக்கினார் என்பதை மறுக்க முடியாது.
சில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷியாவும் கையெழுத்து இடுவதாக ஏற்பாடு. அதிலும் குறிப்பாக, இந்திய-ரஷிய வர்த்தக உறவு சம்பந்தப்பட்ட ஒப்பந்தமும், நிலவுக்குப் போகும் விண்கலம் தொடர்பான ஒப்பந்தமும் குறிப்பிடப்படும்படியான இரண்டு ஒப்பந்தங்கள் என்பதை மறுக்க முடியாது. போதைப் பொருள்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றும் இரண்டு பிரதமர்களுக்கிடையே கையெழுத்திடப்பட்டது. இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் போர்விமானங்களைத் தயாரிப்பது பற்றிய உடன்பாடு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இப்போது அரைகுறை மனதுடன் இந்த முயற்சிக்கு ரஷியா ஒத்துக்கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நான்கு புதிய உலைகள் அமைப்பதும் கையெழுத்துக்குத் தயாராக இருந்த இன்னொரு ஒப்பந்தம்.
சோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகும்கூட இந்திய – ரஷிய உறவு தொடர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம், இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வுதான் என்று சொல்ல வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதற்குக் காரணம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் நாம் செய்து கொண்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தமும்தான். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் நடைமுறைப்படுத்தியே தீருவது என்கிற இந்திய அரசின் முனைப்பு ரஷிய அரசுக்கு இந்தியா மீது இருந்த நல்லெண்ணத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
உள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் மீறி, நமது தாராப்பூர் அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளை அளிக்க ரஷிய அதிபர் புதின் முன்வந்தார் என்பதை மறுக்க முடியாது. அப்படி இருந்தும், நாம் ரஷியாவிடம் நமது நல்லெண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அமெரிக்காவை முற்றிலுமாக நம்புவது ரஷியாவை நம்மிடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கிறது என்கிறார்கள் வெளியுறவுத் துறை வல்லுநர்கள்.
இதுபோன்ற, உயர்நிலை மாநாடுகள் இரண்டு நாட்டுத் தலைவர்களும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நல்லுறவை உறுதிப்படுத்தவும் உதவும் என்பார்கள். சரி, கூடங்குளம் அணுசக்தி நிலையத்துக்கு நான்கு உலைகளை ரஷியா அளிப்பதாக இருந்ததே, அதைப் பற்றிய ஒப்பந்தம் ஏன் கையெழுத்திடப்படவில்லை? இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய உதவி தேவையில்லை என்று நினைத்ததாலா? இதைப் பற்றி அரசுத் தரப்பிலிருந்து கிடைக்கும் பதில் வெறும் மௌனம் மட்டுமே!
உயர்நிலை மாநாடு நடக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகளான ரஷியாவும் இந்தியாவும், இப்படியொரு மாநாடு முடியும்போது கூட்டறிக்கை அளிப்பது வழக்கம். இந்தமுறை, ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷிய அதிபர் புதினும் அப்படியொரு கூட்டறிக்கை வெளியிடவில்லை?
வரவர இந்தியாவில் என்ன நடக்கிறது, ரஷியாவில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரிவதில்லை. எல்லாம் அந்த வாஷிங்டனுக்குத்தான் வெளிச்சம்!
மறுமொழியொன்றை இடுங்கள்