Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Simpsons – Vedanthangal in Chennai: A retreat for migrating birds (North Madras)

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

சுற்றுச்சூழல்: சென்னையில் ஒரு வேடந்தாங்கல்!

சென்னை என்றாலே ஒருவருக்கு என்ன நினைவுக்கு வரும்?

போக்குவரத்து நெரிசல். புழுதிபடிந்த சாலைகள். வாகனப்புகை நடுவில் சிக்கித் திணறும் மனிதர்கள். வீடுகளில் தோட்டம் வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி. சாலையில் 30 நிமிஷம் நடந்தால் 300 வகையான மாசுகள் படிந்துவிடும் அளவுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுகள். நடக்கவே முடியாத இட நெருக்கடி. ஏதோ கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில் வேண்டுமானால் கொஞ்சம் பச்சைப் பசேல் செயற்கைப் புல் வெளிகளைப் பார்க்கலாம்.

மாநகராட்சியின் புண்ணியத்தால் எங்கேயாவது தென்படும் பூங்காக்கள்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நகர்ப்புறங்களில் விழுந்துவிட்ட இடைவெளி என்னவோ அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதிலும் வடசென்னையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கும் குப்பைகள். தெருவில் வழிந்தோடும் சாக்கடை. தொழிற்சாலைகளின் புகை மண்டிய வானம். நெடி வீசும் காற்று. அவசர அவசரமாக வேலைக்குச் செல்லும் மனித இயந்திரங்கள். மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது சந்தேகம் என்று கூறும் அளவுக்கு நெருக்கடி. புறாக் கூண்டு குடியிருப்புகள்.

ஆனால் இந்த வடசென்னைப் பகுதியில் வனம் போல் ஒரு பகுதி; அங்கே பல வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆம்! இங்கே ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் இது உண்மை.

நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள். ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நீர்ப்பறவைகள். வேடந்தாங்கல் எல்லாருக்கும் தெரியும். ஆனால் சென்னையில் வேடந்தாங்கல் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம் அது இருப்பது சென்னை செம்பியம் பகுதியில்தான்.

தொழிற்சாலை என்றாலே அது சுற்றுச் சூழலைக் கெடுக்க வந்தது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆம் இந்த சென்னை வேடந்தாங்கல் உருவானதே ஒரு தொழிற்சாலையால்தான்.

நிலம் கிடைத்ததா? அதில் தொழிற்சாலையைத் தொடங்கினோமா? லாபம் சம்பாதித்தோமா? என இருக்கும் பல தொழிற்சாலை நிர்வாகங்களின் மத்தியில் வித்தியாசமாக, கிடைத்த நிலத்தில் இருந்த குளங்களை நல்லபடியாகப் பாதுகாத்து, தொடர்ந்து பராமரித்து வந்தது சிம்சன் நிறுவனம். அதன் விளைவாக வந்து சேர்ந்தனர் பல வெளிநாட்டுப் பறவை விருந்தினர்கள்.

முதன் முதலில் 1978-ல் இங்கு “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரிய வகை பறவைகள் இருப்பதைத் தற்செயலாகப் பார்த்தனர். அடடா! நம் பகுதியை நாடி பறவைகள் வர ஆரம்பித்துவிட்டனவே! என ஆச்சரியப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இங்குள்ள 2 குளங்களையும் அட்டகாசமாகப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது.

சென்னையில் மழை வருவதே அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான். அதிகம் போனால் ஒரு பத்துநாட்கள் பெய்யும். அப்புறம் ஆண்டு முழுதும் வாட்டி வதைக்கும் வெயில்…வெயில்…தண்ணீர் பஞ்சம்…பற்றாக்குறை.

சில வருடங்களில் இந்தப் பத்து நாள் மழையும் கூட ஏமாற்றிவிடும். மக்கள் குடிக்கத் தண்ணீரின்றி படும்பாடு சொல்லி மாளாது. அப்படிப்பட்ட சிங்காரச் சென்னை மாநகரில் ஒரு குளத்தை வற்றாமல் பாதுகாப்பது என்பது சாதாரண விஷயமா? என்ன?

இந்த வளாகத்தில் பெய்யும் மழை நீரில் ஒரு துளி கூட வீணாகாமல் அனைத்தையும் சேகரித்து இந்தக் குளங்களுக்கு வழங்கும் சிறந்த மழை நீர் சேகரிப்பு அமைப்பு இங்கு செயல்படுகிறது.

அதன் விளைவாக – முறையான இயற்கை வழி பராமரிப்பின் காரணமாக – அந்த 2 குளங்களும் தற்போது பறவைகள் சரணாலயமாக மாறியுள்ளன. சென்னையில் மிக வேகமாக அழிந்து வரும் “வக்கா’ எனப்படும் இரவில் உணவு தேடும் அரியவகை கொக்கு, முக்குளிப்பான், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், கொண்டை நீர்க்காகம், பாம்புதாரா, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, குருட்டு கொக்கு, செங்குருகு, கம்புள் கோழி, தாழைக்கோழி, நாமக்கோழி, நீர்க்கோழி, நில தாழைக்கோழி, மேற்கத்திய பொன் முதுகு மரங்கொத்தி போன்ற 110 வகை பறவைகள் இங்கு வந்து இளைப்பாறிச் செல்கின்றன.

இவற்றில் இரவில் உணவு தேடும் வக்கா உள்ளிட்ட சில வகைப் பறவைகள் இந்த குளங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவை மட்டுமல்லாது ஐரோப்பா, இலங்கை போன்ற அயல் நாடுகளில் இருந்து “பிட்டா’ உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.

“”சிம்சன் நிறுவனத்தால் சுமார் 29 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இந்த குளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 22 ஆயிரம் பறவைகள் இருந்தன. அப்போது, பி.என்.எஸ். எனப்படும் மும்பையை சேர்ந்த அமைப்பு சார்பில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்தது. இதையடுத்து, இந்த இடம் உலக அளவிலான பறவைகள் சரணாலயங்கள் பட்டியலில் இடம் பெற்றது” என்றார் செம்பியம் எஸ்டேட் மேலாளர் பி. சிவராமமூர்த்தி.

“வக்கா’ எனப்படும் பறவைகள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக அப்போது இருந்தனவாம்.

நிறையப் பேருக்கு இப்படியோர் அதிசயம் இருப்பது தெரியாது என்றாலும் தெரிந்தவர்கள் இங்கு வந்து குவிவது சாதாரண நிகழ்வு.

இந்த சரணாலயம் இருக்கும் செம்பியம் பகுதி மட்டுமல்லாது சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து கண்டுகளிக்கின்றனர். இதற்கு நிறுவனத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

இங்கு வந்து இந்த குளங்களையும், அதில் தங்கும் பறவைகளையும் பார்த்து செல்கின்றனர்.

இந்தப் பறவைகளின் பழக்க வழக்கங்கள், நீர் நிலைகளின் சுற்றுச்சூழல் தன்மை போன்றவை குறித்து நீர்ப்பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சென்னை கால்நடை அறிவியல் கல்லூரி மாணவர்களும் ஆராய்ச்சி கட்டுரைகளை உருவாக்கியுள்ளனர்.

110 வகையான பறவைகள் வந்து சென்ற இந்தப் பகுதியில் தற்போது 10, 12 வகைகளை சேர்ந்த சில நூறு பறவைகள் மட்டுமே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் குளங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி இருந்த மற்ற நீர் நிலைகள் மிக வேகமாக அழிந்து வரும் நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருவது கவலை தரக்கூடிய ஒன்றாகும்.

“”இந்த இடத்தைச் சிறப்பாகப் பராமரிக்க விரும்புகிறோம், இது தொடர்ந்து நடைபெறும், பறவைகள் வந்தாலும், வராவிட்டாலும் இந்தக் குளங்கள் இதே அளவு முக்கியத்துவத்துடன் சிறப்பாகப் பராமரிக்கப்படும்” என்று உறுதியாகக் கூறுகிறார்கள் சிம்சன் நிர்வாகத்தினர்.

சென்னை மக்கள் தொழில் வளர்ச்சி, புதிய குடியிருப்புகள் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இவர்களே பறவைகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சென்று வேடந்தாங்கலை ரசிப்பார்கள். நம்மிடம் அதுபோன்ற இடம் இல்லையே என அப்போது அங்கலாய்ப்பார்கள். இதற்குக் காரணம் இப்படியோர் இடம் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தச் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பிற நீர்நிலைகளைக் கான்கிரீட் வனங்களாக மாற்றாமல் இருந்தால்தான் இங்கு பறவைகள் தொடர்ந்து வரும்.

ஆனால் செம்பியம் வளாகத்துக்கு அருகில் இருந்த மாதவரம் ஏரி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

“சிம்சன்’ நிறுவனம் மட்டும் இந்தப் பகுதியைத் தொடர்ந்து பறவைகள் சரணாலயமாக வைத்திருக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.

ஆனால் நீர் நிலைகளை அரசும், மக்களும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் பலருக்கும் தெரியாத இந்தப் பறவைகள் சரணாலயம் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகையில் அமைந்த இந்தக் குளிர்வனம் காய்ந்து போவதை யார்தான் கற்பனை செய்ய முடியும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: