Interview with Yediyurappa – State of Karnataka and BJP, Janata Dal, Deve Gowda & Congress
Posted by Snapjudge மேல் நவம்பர் 4, 2007
நிரூபிக்கவேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல!: எடியூரப்பா
எடியூரப்பா – கர்நாடக அரசியலில் கடந்த முப்பது ஆண்டுகளாக பரவலாக மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர். ஜனசங்க காலத்திலிருந்து அரசியலில் இருக்கும் எடியூரப்பாவின் மிகப்பெரிய பலம் நேர்மையானவர், கைசுத்தமானவர் என்கிற நல்ல பெயர். சக்தி வாய்ந்த லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது அடுத்த பலம். எடியூரப்பாவும் குமாரசாமியும் இணைந்து ஆட்சி அமைத்தபோது அது உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அமைந்தது. காரணம்,
கர்நாடகத்தில் சக்தி வாய்ந்த இரண்டு சாதிப் பிரிவுகளான லிங்காயத்துகளும் வொக்கலிகர்களும் இணைந்த கூட்டணியாக
அது இருந்தது என்பதால்தான். மதச்சார்பற்ற ஜனதா தளம் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்த பிறகும்
அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை என்கிற அரசியல் குழப்பத்துக்கு நடுவில் எடியூரப்பாவின் கருத்துகளை அறிந்துகொள்ள முற்பட்டோம். கர்நாடகத்தின் முன்னாள் துணை முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா
“தினமணி’ ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி.
குமாரசாமி அமைச்சரவையிலிருந்து விலகி, ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
எங்களது உடன்பாட்டின்படி ஆட்சி மாற்றத்திற்கு அவர் தயாராக இல்லை என்பதால் நாங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டது உண்மை. சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவித்திருந்தால் அதில் பிரச்னையே இருந்திருக்காது. குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம்.
அப்படியானால் இப்போது சட்டமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு வழிகோலுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கும் இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டால் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. குமாரசாமி அமைச்சரவைக்கு நாங்கள் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்ட போது அப்படியொரு நிலைமை இருந்தது. அப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது, மதச்சார்பற்ற ஜனதாதளம் எங்களை ஆதரிக்க முன்வந்திருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எங்களது கூட்டணிக்கு இருப்பதால், எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதுதான் நியாயம். அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் அதைத்தான் சொல்கின்றன.
உங்களுக்கே இது சந்தர்ப்பவாதமாகப் பட வில்லையா?
அரசியலில் ஈடுபடுவதும், ஆட்சியில் அமர்வதும் மக்களுக்குச் சேவை செய்யவும், நமது கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்தவும் நமக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்பதுதான் உண்மை. எங்களுக்குப் பெரும்பான்மை இருந்தும், ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தடுக்கப்படுகிறது, மறுக்கப்படுகிறது என்னும் போது நாங்கள் பழி வாங்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.
பாரதிய ஜனதா கட்சியைப் பற்றி வசைமாரி பொழிந்த தேவகௌடா மற்றும் குமாரசாமியின் ஆதரவை நீங்கள் ஏற்றுக் கொள்வது சந்தர்ப்பவாதமில்லையா?
நாங்கள் அவர்களது ஆதரவைக் கோரவில்லை. அவர்கள்தான் வலியவந்து ஆதரவு தந்திருக்கிறார்கள். மேலும் எங்களது ஒப்பந்தப்படி உடனடியாக ஆட்சியை எங்களிடம் ஒப்படைக்காதது தவறு என்று குமாரசாமி பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, அதற்கு மக்கள் மன்றத்திடம் மன்னிப்பு கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அவரது எண்ணத்தையும், செயல்பாடுகளையும் சந்தேகிப்பது நியாயமல்ல. அவரே வலியவந்து ஆதரவு அளித்த பிறகு, எங்களுக்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு ஆட்சியமைக்க எங்களை அழைக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பதில் எந்தவித சந்தர்ப்பவாதமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
உங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த குமாரசாமி இப்போது திடீரென்று வலிய வந்து ஆதரவு தருவது ஏன்?
சட்டமன்றம் கலைக்கப்படாமல் இருக்கும் நிலைமை. புதுதில்லியில் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் நிருபர்களிடம் பேசும் போது, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்காவது இருக்குமானால், அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதில் தனக்குத் தடையேதுமில்லை என்று அறிவிக்கிறார். அதைத் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார். இதுதான் நடந்தது.
அதனால் ஆளுநர் உங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?
மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எனது தலைமையில் ஆட்சி அமைக்க, தனது ஒப்புதலை அளிக்கிறது. அந்த ஒப்புதல் கடிதத்தை முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவருமான குமாரசாமி ஆளுநரிடம் அளிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். எங்களது கட்சியும்
ஏகமனதாக என்னைத் தேர்வு செய்கிறது. 129 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு இருக்கும் நிலையில், என்னை ஆட்சி அமைக்க அழைப்பதுதானே முறை?.
நீங்கள் ஆளுநரைச் சந்தித்துப் பேசிய போது அவர் என்னதான் சொன்னார்?
உங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பது தெரிகிறது. நான் அரசியல் சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் கட்டுப்பட்டவன். அதற்கு ஏற்றவாறு அறிக்கை தயாரித்து எனது பரிந்துரையுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.
அவரது செயல்பாடு குறித்து உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா?
ஓர் ஆளுநரின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பது முறையல்ல. ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் ஆளுநரிடம் வருத்தம் உண்டு. குமாரசாமி அமைச்சரவையிலிருந்து நாங்கள் விலகி, எங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டபோது, ஆளுநர் நியாயமாகச் செய்திருக்க வேண்டிய விஷயம், குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்வதல்ல. சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைமையில்தான் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அவர் பரிந்துரை செய்திருக்க வேண்டும்.
மதச்சார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், நீங்கள் எப்படிப் பெரும்பான்மையை நிரூபித்திருப்பீர்கள்?
அது ஆளுநர் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல. எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்புப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றமே தவிர ஆளுநர் மாளிகை அல்ல. இந்தச் சட்டமன்றத்தைப் பொருத்தவரை அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அந்த வகையில், ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.
குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ஆளுநரின் செய்கைகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க நான் விரும்பவில்லை. இந்த முடிவு ஆளுநரால் எடுக்கப்பட்டதா, இல்லை, மத்திய அமைச்சரவையால் எடுக்கப்பட்டதா என்பதும் எனக்குத் தெரியாது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்து அல்லது அந்தக் கட்சியில் பிளவு ஏற்படுத்தி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கும் முயற்சிதான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்திருப்பது என்று அப்போது பத்திரிகைகள் எழுதின. அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
இத்தனை குழப்பங்களுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்கிறீர்களா?
அதிலென்ன சந்தேகம்! தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்கிற மனோபாவம் காங்கிரஸ் தலைமைக்கு எப்போதுமே உண்டு. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். அவற்றில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பிரதமரைச் சந்தித்தீர்களே, அவர் என்ன சொன்னார்?
பிரதமரை நாங்கள் சந்தித்தபோது உள்துறை அமைச்சரும் இருந்தார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார்கள். குடியரசுத்தலைவரும் அதையேதான் சொன்னார். ஆனால், ஒரு வார காலமாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லையே?
அவர்களுக்குத் தெரிந்த அரசியல் சட்டத்தில் இப்படித்தான்எழுதப்பட்டிருக்கிறதோ என்னவோ? அரசியல் சட்டப்படி எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது தான் நிஜம்.
இன்னாரால் நிலையான ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் திருப்தி அடைந்தால்தான் ஒருவரை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்கிற பிரிவும் இருக்கிறதே?
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகு இந்தப் பிரிவுக்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. எந்தவொரு அரசின் பெரும்பான்மையும் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு இருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அனுமதித்து, சட்டமன்றத்தில் எங்களது பெரும்பான்மையை நிரூபிக்க கோருவதுதான் ஆளுநர் நியாயமாகச் செய்ய வேண்டிய விஷயம். அவர் அதைச் செய்யத் தவறினால், அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார் என்கிற பழியைச் சுமக்க நேரும்.
ஜனதா தளத்தில் அதிருப்தியாளர்கள் இருப்பதும், அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும் தெரிந்த பிறகும் உங்களை அவர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது நியாயமா?
அதிருப்தியாளர்கள் இருந்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்போது இல்லை. பிரகாஷ் எங்களுடன் இருக்கிறார் என்பது மட்டுமல்ல. தனது முழு ஆதரவையும் எங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். அது ஒருபுறம் இருக்கட்டும். அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள், கட்சி பிளவுபட வாய்ப்பிருக்கிறது, பெரும்பான்மை கிடையாது போன்ற சாக்கு போக்குகளைச் சொல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதைத்தானே பொம்மை வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. 224 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் 79 உறுப்பினர்களுடைய பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சிதான். அடுத்தபடியாக 65 உறுப்பினர்களுடைய காங்கிரஸ் கட்சியும், மூன்றாவதாக 58 உறுப்பினர்களுடைய மதச்சார்பற்ற ஜனதாதளமும் இருக்கின்றன. சட்டமன்றத்தில் அதிக இடங்களை உடைய பெரிய கட்சி என்கிற வகையில் பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் சட்டமன்றத்தைக் கலைப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை குழி தோண்டிப் புதைப்பதற்குச் சமம்.
உங்களுக்குப் பெரும்பான்மை இல்லாதபோது எப்படி ஆட்சி அமைக்க அழைப்பது? சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும் போது மதச்சார்பற்ற ஜனதாதளம் எதிர்த்து வாக்களிக்காது என்பது என்ன நிச்சயம்?
இதைப்பற்றி ஆளுநர் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதிக எண்ணிக்கையை உடைய கட்சி என்கிற வகையில் எங்களுக்கு வாய்ப்பளித்த பிறகு, எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதபட்சத்தில் அவர் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதோ, அல்லது சட்டமன்றத்தைக் கலைப்பதோ நியாயம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல் அப்படிச் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
குமாரசாமி மன்னிப்பு கேட்டுவிட்டார், நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள், ஆனால், அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகெüடா 12 நிபந்தனைகளை விதித்திருக்கிறாரே, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பாரதிய ஜனதா கட்சியுடன் 20 மாதங்களுக்கு முன்னால் கூட்டணி அமைத்தது குமாரசாமிதானே தவிர தேவகெüடா அல்ல. முதலில் அவர் அதை எதிர்த்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகளில் பல குமாரசாமிக்கு உடன்பாடானவை என்று கருத முடியாது. இன்னொரு விஷயம். தேவகெüடாவின் நிபந்தனைகள் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி நான் இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.
இவ்வளவு பிரச்னைகள், மனக்கசப்புகள், பரஸ்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் மீண்டும் இணைந்து சுமுகமாகச் செயல்பட முடியும் என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக முடியும். எங்களது 20 மாத கால ஆட்சிதான் அதற்கு உதாரணம். தனிப்பட்ட முறையில் எனக்கும் குமாரசாமிக்கும் உள்ள உறவும் நெருக்கமும் நடந்த சம்பவங்களால் சிறிதும் பாதிக்கப்படவில்லை. இதோ இப்போதுகூட எனது அறையில்தான் அவர் அமர்ந்திருக்கிறார், நீங்கள் பார்த்தீர்களே. எங்களது இந்தக் கூட்டணி 20 மாதங்களில் சாதித்திருக்கும் சாதனைகள் ஏராளம். நாங்கள் ஒன்றுபட்டு இருந்தால் இதைவிட பலமான சக்தி வேறு எதுவும் கிடையாது என்பது ஊரறிந்த ரகசியம். எங்களது கூட்டணியின் சுமுகமான செயல்பாடு குறித்து சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை.
பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி பலமானது என்கிறீர்கள். உங்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்பதால் மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெறுப்படைந்திருப்பதாகச் சொல்கிறீர்கள். இந்தச் சூழ்நிலையில் தேர்தலைச் சந்தித்து மக்களின் பேராதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டியதுதானே?.
தேவையில்லாமல் மக்கள் மீது தேர்தலைத் திணிப்பது முறையல்ல. இன்னும் 19 மாதங்கள் இந்தச் சட்டமன்றத்திற்கு ஆயுள் இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் என்று சொன்னால், குறைந்தது அடுத்த நான்கு மாதங்களுக்காவது அரசு இயந்திரமே ஸ்தம்பித்துப் போய்விடும். அத்தனை வளர்ச்சிப் பணிகளும் நிறுத்தப்பட்டுவிடும். கடந்த 20 மாதங்களில் நாங்கள் செயல்படுத்தத் தொடங்கிய திட்டங்கள் முழுமை அடையாத நிலைமை என்பது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்படும். வேறு வழியில்லை என்றால் மக்கள் மன்றத்தை சந்திப்பதுதான் முறை. இப்போது வழி இருக்கிறது என்பது மட்டுமல்ல, நிலையான அரசு அமையவும் வாய்ப்பு இருக்கும் நிலையில் தேர்தல் என்பது தேவையில்லாத செலவு.
நீங்கள் தேர்தலைச் சந்திக்க பயப்படுகிறீர்கள் போலிருக்கிறதே?
சொல்லப்போனால் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான். சட்டமன்றம் கலைக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, நான் தெளிவாகவே ஒரு கருத்தை வலியுறுத்தினேன். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளுமே யாருடனும் சேர்ந்து ஆட்சி அமைப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பார்களேயானால், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாகத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று சொன்னவன் நான்தான். காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தல், தேர்தல் என்று உதட்டளவில் சொன்னார்களே தவிர, இப்போதும் அவர்கள் தேர்தலுக்குத் தயாராக இல்லை. காங்கிரஸ் தேர்தலைத் தள்ளிப்போட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் தனது ஆட்சியை நடத்த விரும்புகிறதே தவிர தேர்தலைச் சந்திக்க தயாராக இல்லை. அதனால்தான் சட்டமன்றத்தைக் கலைக்காமல் வைத்தார்கள். குமாரசாமி மீண்டும் பாஜகவுடன் கைகோர்ப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
நடந்துமுடிந்த சம்பவங்களால் பாரதிய ஜனதாவின் இமேஜ் குறைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? ஆட்சிக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்ய பாஜக துணிந்துவிட்டது என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன?
எங்களது இமேஜ் எள்ளளவும் குறையவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது. நான் துணை முதல்வராகத் தொடர சம்மதித்திருந்தால், பதவிதான் பெரிது என்று கருதி இருந்தால், இந்தப் பிரச்னைகளே எழுந்திருக்காது. அக்டோபர் 2-ம் தேதிக்குப் பிறகு நான் ஒருநாள்கூடத் துணை முதல்வராகத் தொடர மாட்டேன் என்று சட்டமன்றத்தில் கூறியிருந்தேன். அதேபோல, முதல்வரிடம் எங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டோம். ஆட்சிக்கு ஆதரவளித்து வந்ததைத் திரும்பப் பெற்றோம். இவையெல்லாம் எங்களது பதவி ஆசையாலா அல்லது பதவியின் பளபளப்பில் நாங்கள் மயங்காததாலா?
உங்களுடைய கருத்துப்படி ஆளுநர் காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்கிறீர்கள். அப்படித்தானே?
நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப் பதவியின் கெüரவத்தை நான் குலைக்க விரும்பவில்லை. ஆனால், மக்கள் அப்படி நினைக்கிறார்கள். ஆளுநர் மாளிகை காங்கிரஸ் கட்சி அலுவலகமாகச் செயல்படுகிறது என்பது மக்கள் மத்தியில் நிலவும் பரவலான கருத்து. நடந்து கொண்டிருக்கும் செயல்களையும், செயலிழந்த நிலையையும் பார்க்கும்போது, மத்திய அரசின் வற்புறுத்தல்களுக்கு ஆளுநர் அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. காங்கிரஸின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்று மக்கள் சந்தேகப்படுவதில் தவறில்லை.
மகாராஷ்டிர ஆளுநர் எஸ்.எம். கிருஷ்ணா பெங்களூருக்கு வந்ததும், சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதும் தேவகெüடாவின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறதே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எஸ்.எம். கிருஷ்ணா ஒரு ஜென்டில்மேன். அவர் இதுபோன்ற அரசியல் பேரங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது எனது கருத்து. எனக்கு அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் மரியாதைக்குரிய சிலரில் எஸ்.எம். கிருஷ்ணாவும் ஒருவர்.
ஒரு சின்ன சந்தேகம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?
பாரதிய ஜனதா கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணியாகத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அது நடக்கும் என்று நம்புகிறேன். அடுத்த 19 மாதங்கள் நாங்கள் இணைந்து ஆட்சியில் தொடர்ந்தால், கர்நாடகத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் ஆட்சி அமையாது. அந்த அளவுக்கு எங்களது ஆட்சியின் செயல்பாடுகள் அமையும்.
இனி ஆளுநர் என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்?
எங்களை ஆட்சி அமைக்க அழைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியே கிடையாது. அரசியல் சட்டப்படி அதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி. மேலும், 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. எங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல்போனால், சட்டமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்கு வழிகோல வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் வேறு வருகிறது. இங்கே எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதன் தாக்கம் குஜராத்தில் எதிரொலிக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். அதனால், எந்த நேரத்திலும் ஆளுநர் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பளிச்சென்று சொல்லுங்கள். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் தேவகெüடாவா? காங்கிரசா?
நிச்சயமாக காங்கிரஸ்தான். அதில் காங்கிரஸ்காரர்களுக்கேகூட சந்தேகம் இருக்காது.
—————————————————————————————————————————————–கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா
ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வருகிறார் முதல்வர் பதவியை ஏற்கவுள்ள பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா (இடது). உடன் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி.
பெங்களூர், நவ. 9: ஆட்சி அமைக்க ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்ததையடுத்து கர்நாடக முதல்வராக பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா (64) நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கிறார்.
கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவுக்கு வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து எடியூரப்பாவும், முன்னாள் முதல்வர் குமாரசாமியும் வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும் எனவே புதிய அரசு அமைக்கும்படி எடியூரப்பாவிடம் தாக்கூர் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா, தனது தலைமையில் பாஜக- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும் என்றார்.
பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:
பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைச்சரவை நவம்பர் 12-ம் தேதி பதவி ஏற்கும். பதவி ஏற்பு நேரம், இடம் குறித்து நாளைக்குள் முடிவு செய்யப்படும் என்றார்.
குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அக்டோபர் 7-ம் தேதி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி முதல் கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
முதலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்ளாத மதச்சார்பற்ற ஜனதா தளம் பிறகு ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும், எம்எல்ஏக்களும் அக்டோபர் 27-ம் தேதி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கடிதம் கொடுத்தனர்.
மேலும் பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமைய ஆதரவு தெரிவிக்கும் 129 எம்எல்ஏ.க்களின் பிரமாணப் பத்திரமும் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பிறகும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் நவம்பர் 6-ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் முன் இரு கட்சிகளையும் சேர்ந்த 125 எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினர்.
இதையடுத்து நவம்பர் 8-ம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு, கர்நாடக ஆளுநர் அளித்த அறிக்கை மீது விவாதித்தது. பிறகு கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார் தாக்கூர்.
கெüடாவுடன் குமாரசாமி, எடியூரப்பா ஆலோசனை
மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெüடாவுடன் பாஜக தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
தில்லியில் வியாழக்கிழமை நடந்த மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில், கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் அரசு அமைய நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து கர்நாடகத்தில் பாஜக -மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு அமைகிறது. வியாழக்கிழமை தில்லி சென்றிருந்த எடியூரப்பா மத்திய அமைச்சரவையின் முடிவு குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத்சிங் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வியாழக்கிழமை இரவு பெங்களூர் திரும்பினார்.
வெள்ளிக்கிழமை காலை எடியூரப்பா மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா சென்றார். காவிரி ஆற்றில் குளித்த பிறகு அங்குள்ள சாஸ்வதி மந்திரில் நடத்தப்பட்ட சூர்ய நாராயணா ஹோம பூஜையில் கலந்து கொண்டார்.
பிறகு ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில், சந்திரமவுளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்து வழிபட்டார்.
ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தேவெ கெüடாவை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது குமாரசாமியும் உடனிருந்தார்.
புதிய கூட்டணி அமைச்சரவை எப்போது பதவி ஏற்பது, யார்-யாருக்கு எந்தெந்த துறைகள் என்பது குறித்து அவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பிறகு எடியூரப்பாவும், குமாரசாமியும் ரகசிய இடத்தில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு இருவரும் அங்கிருந்து நேராக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு, ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்தார்.
தென் மாநிலங்களில் முதன்முதலாக…
தென் மாநிலங்களில் முதல்முறையாக கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நவம்பர் 12-ம் தேதி அமைக்கிறார் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு கர்நாடகத்தின் 25-வது முதல்வராக வரும் திங்கள்கிழமை பதவி ஏற்கிறார் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.
அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.
—————————————————————————————————————————————–
35 ஆண்டு அரசியல் அனுபவம் மிக்கவர் எடியூரப்பா
பெங்களூர், நவ. 9: மண்டியா மாவட்டம் பூகானகெரே கிராமத்தில் 1943-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பூகானகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா (பி.எஸ். எடியூரப்பா). பிறகு இவரது குடும்பம் ஷிமோகா மாவட்டம் ஷிகாரிபுராவுக்கு இடம் பெயர்ந்தது. அங்கேயே தனது ஆரம்பக் கல்வியைத் துவக்கினார் எடியூரப்பா.
ஜனசங்கத்தில் சேர்ந்த எடியூரப்பா 1972-ம் ஆண்டு ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விவசாயிகளின் தலைவர் என்று ஹிந்து மதத் தலைவர்களிடையே பிரசித்தி பெற்றவர் எடியூரப்பா. அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் இத்தலைவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே முடிவு எடுப்பார்.
அரசியலில் மிக நீண்ட கால அனுபவம் மிக்கவர். பாஜக துவக்கம் முதலே இக்கட்சியில் இருந்து வருகிறார். கர்நாடக அரசியலில் 35 ஆண்டு காலம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்தவர்.
1983-ம் ஆண்டு முதன் முதலாக ஷிகாரிபுரா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏயாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 முறை இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1999-ம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இதனால் 2000-ம் ஆண்டு முதல் 2004 வரை சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
கட்சியின் பல்வேறு பொறுப்புக்களை வகித்த இவர், மாநில பாஜக தலைவராக இருமுறை பதவி வகித்துள்ளார். பாஜகவை கிராம அளவில் வளர்த்தத் தலைவர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் இவர்.
பாஜக நடத்தும் போராட்டங்களில் முன்னின்றி கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். குறிப்பாக விவசாயிகள் நலனுக்காக ஏராளமான முறை போராட்டங்களை நடத்தியுள்ளார்.
2004-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தாலும், பாஜகவை ஆதரிக்க காங்கிரúஸô, ம.ஜனதாதளமோ முன்வரவில்லை.
இதனால் காங்கிரஸ் தலைமையில் ம.ஜனதாதள கூட்டணி அரசு அமைந்தது. இதனால் முதல் இடத்தைப் பிடித்தும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது பாஜக. இந்நிலையில்தான் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வந்த ம.ஜனதாதள தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது.
அப்போது ம.ஜனதாதளத்துக்கு 50 எம்எல்ஏக்கள் மட்டும் இருந்தாலும், 79 எம்எல்ஏக்கள் உடைய பாஜகவுக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது.
இவ்விரு கட்சிகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் குமாரசாமி ஒப்படைக்காததால் அக்டோபர் 7-ம் தேதி குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது.
இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மாநில சுற்றுப்பயணத்தை பாஜக மேற்கொண்டது. இப்போராட்டத்தால் கலக்கம் அடைந்த ம.ஜனதாதளம், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது.
ஆனால் தென் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு கர்நாடகம் நுழைவு வாயிலாக ஆகிவிடக்கூடாதே என்ற கவலையில் காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணி அரசைத் தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தது.
ஆனால் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால் வேறு வழியின்றி பாஜக தலைமையில் அரசு அமைக்க மத்திய அரசு நவம்பர் 8-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இதைத் தொடர்ந்து நவம்பர் 12-ம் தேதி கர்நாடகத்தின் 25-வது முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் எடியூரப்பா. தென் மாநிலங்களில் அமையும் முதல் பாஜக அரசு இது என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————————————————————–
அமைச்சரவையில் சம இடங்கள் வேண்டும்: குமாரசாமி கோரிக்கை
பெங்களூர், நவ. 9: எடியூரப்பா தலைமையில் அமையும் அமைச்சரவையில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு சம அளவில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த சட்டத் திருத்தப்படி, கர்நாடகத்தில் 34 அமைச்சர்களுக்கு மேல் நியமனம் செய்யக் கூடாது.
இந்த வகையில் கூட்டணி ஆட்சி அமையும்போது இரு கட்சிகளும் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்கள் என்று பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி அமைக்கின்றன. 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் -பாஜக கூட்டணி அரசு அமைந்தபோது முதல்வராக ம.ஜனதாதளத்தை சேர்ந்த குமாரசாமி பதவி ஏற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.
அதுபோல் ம.ஜனதாதளத்தைச் சேர்ந்த முதல்வர் உள்பட 16 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அதுபோல் துணை முதல்வர் உள்பட பாஜகவை சேர்ந்த 18 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 79 எம்எல்ஏக்களை பாஜக கொண்டுள்ளதால் அக்கட்சிக்கு கூடுதலாக அமைச்சரவையில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இப்போது 21 மாதங்களுக்குப் பிறகு பாஜக தலைமையில் ம.ஜனதாதள கூட்டணியில் ஆட்சி அமையவுள்ளது. இப்போது முதல்வர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், துணை முதல்வர் பதவி ம.ஜனதாதளதுக்கு போகிறது.
இந்த சமயத்தில் அமைச்சர் பதவியை இரு கட்சிகளும் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த முறை அமைச்சர்களின் எண்ணிக்கையை பாஜகவும்- ம.ஜனதாதளமும் 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்வோம் என்றார்.
—————————————————————————————————————————————–
அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை படம் பிடித்து காட்டியது கர்நாடகா
21,புதன், நவம்பர் 2007
கார்த்திகை 05
புதுடில்லி: கர்நாடகாவில் அரசியலில் திடீர் திடீரென ஏற்பட்ட திருப்பங்கள், அம்மாநிலத்தில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் சந்தர்ப்பவாதிகள் என்பதை உறுதிப்படுத்துவதாகவே கர்நாடக அரசியல் அமைந்து விட்டது.
காங்., ஆட்சியை கவிழ்த்த, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், மற்ற கட்சிகளால் மதவாதக் கட்சி என்று வர்ணிக்கப் படும் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தது. இதை முதல் சந்தர்ப்பவாதம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். முதலில் பா.ஜ.,வுடன் கூட்டு சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்களை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி துõக்கிய தேவகவுடா, பின்னர் தனது மகன் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆலோசகராகவே மாறிவிட்டார். இது முதல் பல்டி.
ஒப்பந்தப்படி, 20 மாதத்துக்கு பிறகு பா.ஜ.,விடம் ஆட்சி ஒப்படைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதை தேவகவுடா உறுதி செய்து விட்டார். பா.ஜ., ஆட்சிக்கு வழி விட மறுத்தார். இடைத் தேர்தல் நிலை உருவானது. இந்த குழப்பத் தில் தேர்தலை சந்தித்தால், “அம்பேல்’ தான் எனக் கருதிய தேவகவுடா, பா.ஜ.,வுடன் மீண்டும் பேச்சுக்கு முன்வந்தார். இது இரண்டாவது சந்தர்ப்பவாதம்.
தேவகவுடா சொல்வதற்கெல்லாம் பா.ஜ., தலையைத் தலையை ஆட்டியது. இது பா.ஜ.,வின் சந்தர்ப்பவாதம். எப்படியும், இவர்களின் கூட்டணி அரசு நீடிக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்ட காங்., சட்டசபை கலைப்பை வற்புறுத்தாமல், வேடிக்கை பார்த்தது. இது காங்.,கின் சந்தர்ப்பவாதம்.
சொன்னதற்கெல்லாம் வளைந்து கொடுத்த பா.ஜ.,வுக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மூலம் கடிதம் கொடுக்க வைத்தார் தேவகவுடா. முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதும், தேவகவுடா மூளையில் புதிய யோசனை உதித்தது.
இதுவரை நாடுகளுக்கு இடையில் தான் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் ஒப்பந்தம் கையெழுத்தாகி வந்தன. முதல் முறையாக, 12 அம்சங்கள் என்ற பெயரில் 12 நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தை தயாரித்தார் தேவகவுடா. வளைந்து கொடுத்து வந்த பா.ஜ., இந்த விஷயத்தில் விறைப்பாக நிமிர்ந்து நின்றது. மீண்டும், “யு’ டர்ன் எடுத்த கவுடா, பா.ஜ., ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க மறுத்தார். விளைவு, ஏழு நாள் முதல்வராக பதவி இழந்தார் எடியூரப்பா.
காங்., ஆட்சியை கவிழ்த்த கவுடா, அடுத்ததாக பா.ஜ., ஆட்சியையும் கவிழ வைத்தார். இதனால், கர்நாடகாவில் கவுடாவின் கட்சி தீண்டத்தகாத கட்சி என்ற நிலைக்கு சென்று விட்டது. இனி எந்த கட்சியும் தேவகவுடாவுடன் கூட்டு சேர தயாராக இல்லை.
“அரசியல் தார்மீகத்தை எல்லாம் தாண்டி, கடுமையான மூளை விளையாட்டுகளில் அப்பா தேவகவுடாவும், மகன் குமாரசாமியும் ஈடுபட்டதால் தான் இந்த நிலை’ என்று கவலைப்படும் பா.ஜ., அனுதாப அலையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. தனி மெஜாரிட்டி தான் நிலையான ஆட்சியை ஏற்படுத்தும் என்பதால், தங்களுக்கு ஓட்டுகள் அள்ளிக்கொண்டு போகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது காங்., எப்படியும் புது அரசியல் வியூகங்களை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று கருதுகிறார் தேவகவுடா. தேர்தல் முடிவுகளில் தான் மக்களின் மன நிலை தெரியவரும்.
சர்ச்சையில் சிக்கிய கவர்னர்: கர்நாடகாவில் கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஷ்வர் தாக்கூர் எடுத்த முடிவுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதியும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான ரமா ஜோன்ஸ் விமர்சனம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மனம் மாறி, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தேவகவுடாவின் மதசார்பற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரிடம் கடிதம் கொடுத்தனர். பா.ஜ.,வுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதாக உறுதி செய்த பிறகே, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதன் பின், சட்டசபையிலும் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார். இது தேவையற்றது. கர்நாடகாவில் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு கவர்னர் ராமேஷ்வர் தாக்கூரின் இந்த முடிவு தான் காரணம்.
அதேபோல, ஆதரவை பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் படி பா.ஜ.,வை மதசார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது, சட்டவிரோதமானது; இது அரசியலில் தார்மீகம் என்பதை படுபாதாளத்தில் தள்ளும் செயல். முக்கிய துறைகளை கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடித்தது தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முக்கிய காரணம். முதல்வருக்கு உரிய அந்தஸ்தை தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் கேட்கிறார். இவ்வாறு ரமா ஜோன்ஸ் கூறியுள்ளார்.
—————————————————————————————————————————————–
கட்சித் தாவலின் மறுவடிவம்?
ஆசை கண்ணை மறைக்கும் எனும் வாழ்வியல் உண்மையை உணர்த்திய அங்கத-துன்பியல்-நாடகம்தான் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்ததும் துறந்ததும்.
நல்ல நாடகங்களில் இறுதி முடிவை முன்கூட்டியே உணர்த்துகின்ற படிமங்கள், காட்சிகள் இடம்பெறுவதைப்போலவே, கர்நாடக அரசியலிலும் இறுதி முடிவின் அடையாளங்கள் தொடக்கம் முதலாகவே தோன்றிக்கொண்டே இருந்தன.
“முன்பாதி நான் முதல்வர்; பின்பாதி நீர் முதல்வர்’ என்ற முதல் ஒப்பந்தமே தார்மிகக் குறைபாடு கொண்டதுதான். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 56 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், அதிக இடங்களை வென்ற பாஜகதான் முதல்வர் பதவியில் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
ஒப்பந்தப்படி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது ஆட்சிக்காலம் முடிந்தவுடன் தாமாக முதல்வர் பதவியை பாஜகவுக்கு மாற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல, காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் தயாராகியது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை அதில் உள்ள அதிருப்தியாளர் கோஷ்டி மூலம் பிளவுபடுத்த காங்கிரஸ் முயலுகிறது என்பதால் கோபம் கொண்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டு அமைக்க திரும்பி வந்தபோது, அல்லது தேவ கெüடா 12 நிபந்தனைகள் விதித்தபோதாகிலும் பாஜக புரிந்துகொண்டிருக்க வேண்டும். புரியாமல் இருந்திருக்க முடியாது. ஒருவேளை, வாஜ்பாய் 13 நாட்களில் பிரதமர் பதவியை இழந்தார் என்ற களங்கம் மறைய, எடியூரப்பா 8 நாள் முதல்வர் பதவியை ஏற்றிருப்பாரோ! அல்லது, அடுத்த ஆறு மாதத்தில் தேர்தலைச் சந்திக்கும்போது மக்களின் பரிவு வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் யுக்தியாக இருக்குமோ!
எதுவாக இருப்பினும், இன்றைய அரசியலில் நிபந்தனையற்ற ஆதரவு என்பதற்கு என்ன பொருள்?
ஆளுநர் மாளிகையில் எம்எல்ஏக்கள் அனைவரும் கூட்டமாக அணிவகுத்து நின்று, கடிதம் கொடுத்து, பெரும்பான்மையைக் காட்டி, ஆட்சிக்கு அழைக்கும்படி ஆளுநரைக் கட்டாயப்படுத்திய பின்னர், ஆட்சியில் அமர்த்திய பின்னர், ஆதரவை விலக்கிக் கொள்வது ஜனநாயகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கேலிக்கு இலக்காக்கிவிட்டது.
இத்தகைய முறையற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசரத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டம் போல, ஆதரவு அளிப்புக்கும் ஒரு தெளிவான, விதிமுறைகளுடன்கூடிய சட்டம் இன்றியமையாதது.
அரசுக்கு ஆதரவை அளிப்பதும் அல்லது பாதியில் ஆதரவை விலக்கிக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவு அளிப்பதும் கட்சித் தாவலின் மறுவடிவம்தான். கட்சித் தாவலில் உறுப்பினர்கள் இடம் மாறி எண்ணிக்கையை சரி செய்வதைப் போன்றதுதான், வெளியிலிருந்து அல்லது உள்ளிருந்து அளிக்கப்படும் ஆதரவு தடம் மாறுவதும்.
இனி வரும் காலங்களில், மாநில அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிப்பது என்பது அரிதாகி வருகிறது. துணையாக வேறு சில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகளே அதிகமாகி வருகின்றன.
தேர்தலில் போட்டியிடும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெற்றிக்காக அக்கட்சி நிறுத்தும் வேட்பாளர்களைத் ஆதரித்து தேர்வு செய்த வாக்காளர்களுக்கு, அவர்கள் எத்தனை மோசடி செய்தாலும் திரும்பப் பெறும் அல்லது நீக்கும் உரிமை இல்லை. அப்படியெனில், மக்களின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்த இவர்கள் அளிக்கும் ஆதரவை மட்டும் விருப்பப்படி மாற்றிக்கொள்ளும் உரிமை எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?
மக்கள் எப்படி ஆதரவை அளித்துவிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த தேர்தல் வரை பொறுமை காக்கின்றார்களோ, அதேபோல “நிபந்தனையற்ற ஆதரவு’ தரும் கட்சிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு, பொறுமை காப்பதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். சிறந்த ஜனநாயக மரபாகவும் அமையும். ஆதரவைத் தருவதாகக் கடிதம் கொடுப்பதும், தராமல் கவிழ்ப்பதும், பாதி ஆட்சியில் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று மிரட்டிக்கொண்டே இருப்பதும், ஓர் அரசு முழுமையாக செயல்படுவதற்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதே மத்தியிலும் மாநிலத்திலும் இப்போது நாம் காணும் உண்மை நிலை.
ஐந்து ஆண்டுக்கு முற்றாக ஆதரவு “உண்டென்று சொல்; இல்லை அன்றென்று சொல் இந்த திரிசங்கு சொர்க்கம் தேவையில்லை’.
—————————————————————————————————————————————–
தேவ கௌடா கட்சி உடைகிறது
பெங்களூர், நவ. 24: கர்நாடக சட்டப் பேரவையைக் கலைக்கும் அறிவிப்பு வெளியானதும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக உடைந்து, ஒரு பிரிவினர் காங்கிரஸிலும் மற்றொரு பிரிவினர் பாஜகவிலும் சேர்வார்கள் என்று தெரிகிறது.
தேவ கெüடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தபோது முதல் 20 மாதங்கள் ம.ஜனதா தளம் தலைமையிலும், அடுத்த 20 மாதங்கள் பாஜக தலைமையிலும் ஆட்சி அமைக்க இரு கட்சித் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் ஒப்பந்தப்படி ஆட்சியை பாஜகவிடம் ம.ஜனதாதளத் தலைவர் குமாரசாமி ஒப்படைக்கவில்லை. இதனால் குமாரசாமி தலைமையில் இருந்த அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளத்தின் மூத்த தலைவரான எம்.பி.பிரகாஷ் முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் திடீரென அக்டோபர் 27-ம் தேதி பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ம.ஜனதாதளம் ஆதரவு தெரிவித்து, ஆட்சியும் அமைக்கப்பட்டது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் நவம்பர் 19-ம் தேதி நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா அரசுக்கு எதிராக வாக்களிக்க ம.ஜனதாதளம் முடிவு செய்ததால், எடியூரப்பா அமைச்சரவை ராஜிநாமா செய்தது.
இது மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர்கள் தேவ கெüடா, குமாரசாமி ஆகியோர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துவிட்டு, திடீரென பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதால் பிரகாஷ் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் மீண்டும் காங்கிரஸýடன் சேர்ந்து ஆட்சி அமைக்க கெüடா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. கெüடாவுடன் கூட்டுசேர காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசு சட்டப் பேரவையை கலைக்கவும் பரிந்துரை செய்தது.
இதுதொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. நாடாளுமன்றம் இந்த அறிக்கை மீது திங்கள்கிழமை விவாதம் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றே கர்நாடக சட்டப் பேரவை கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப் பேரவையின் பதவிக்காலம் இன்னும் 19 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போது தேர்தலைச் சந்திக்க எந்தக்கட்சி எம்எல்ஏக்களும் விரும்பவில்லை.
இந்த சூழ்நிலைக்குக் காரணம் ம.ஜனதாதள தலைமைதான் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கருதுகிறார்கள். சட்டப் பேரவை கலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியான பிறகு ம.ஜனதாதளம் இரண்டாக பிளவுபடும் என்று கூறப்படுகிறது.
அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி.பிரகாஷ் தலைமையில் ஒரு பிரிவினர் காங்கிரஸ் கட்சியில் சேரத் திட்டமிட்டுள்ளனர். இதில் பல முக்கியத் தலைவர்களும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை கூடிய காங்கிரஸ் உயர் நிலைத் தலைவர்கள் கூட்டத்தில் ம.ஜனதாதளத்திலிருந்து பலர் காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்திருப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அப்போது கட்சியில் சேருவோருக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தீர்மானிக்கப்பட்டது.
இதுபோல் மற்றொரு பிரிவினர் பாஜகவில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குமாரசாமிக்கு மிகவும் நெருக்கமான செலுவராய சுவாமி, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்.
இதை ம.ஜனதாதளத்தின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதையே பெரும்பான்மையினர் விரும்பினர். இந்நிலையில்தான், பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை ம.ஜனதாதளம் விலக்கிக் கொண்டதால் எடியூரப்பா அரசு கவிழ்ந்தது. எனவே செலுவராய சுவாமி உள்பட ம.ஜனதாதளத்தின் பல எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சில நாள்களில் கர்நாடக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
—————————————————————————————————————————————–
மறுமொழியொன்றை இடுங்கள்