Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Protect the Hindu Temples and cherish the Heritage – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2007

திருக்கோயில்களைக் காப்போம்!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான கோயில்கள் உள்ளன; அதாவது, சுமார் 32,000 கோயில்கள் இருக்கின்றன. மடாலயங்கள், சமய அறக்கட்டளை போன்ற இந்து சமய அமைப்புகளின் எண்ணிக்கை 34,160. இவற்றின் சொத்துகள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 20 கோடிக்குமேல் வருவாய் கிட்ட வேண்டும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகக்குறைவே. இந்தச் சொத்துகளை, இடையே இருப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர்.

இத்திருக்கோயில்கள் கடந்தகாலங்களில் மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் வணிகர்களாலும் கட்டப்பெற்றவை. கோயில்களின் நிர்வாகம், பூஜைகள் தங்குதடையின்றி நடக்கக்கூடிய வகையில், மானியங்கள், கட்டளைகள் நிறுவப்பட்டன.

சிற்பம், ஓவியம், சமயசாஸ்திரம், கலை, இலக்கிய ஆராய்ச்சி போன்ற அனைத்துக் கலைகளையும் வளர்க்கும் அமைப்புகளாக கோயில்கள் இருந்தன. பஞ்சநிவாரணப் பணிகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது என வரலாறு கூறுகிறது. கோயில்களின் சமுதாயப் பணி குறித்தும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கோயில்களில் கொள்ளை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன:

  • குமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் கலசங்கள், கிரீடம் திருட்டு;
  • களக்காட்டில் ஒரு கோடி பெறுமான கோயில் நகைக் கொள்ளை;
  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் காணாமல் போனது;
  • ராமனைக் கண்விழித்துப் பாதுகாத்த லட்சுமணனின் சிலை, ராமேஸ்வரத்தில் களவு போனது;
  • 1971-ல் திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாஷ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம், குத்தகை வருமானம் சரியில்லையென்று காரணம்காட்டி குறைந்தவிலைக்கு அரசியல் கட்சிக்காரர்களுக்கு விற்கப்பட்டது;
  • தஞ்சை மாவட்டம் பத்தூர் விசுவநாதசாமி ஆலயத்தில் ரூ. 3 கோடி பெறுமான நடராஜர் விக்ரகம் திருடப்பட்டது; பின்னர் லண்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டு மீட்கப்பட்டது;
  • தஞ்சை அரண்மனை தேவஸ்தான பொறுப்பில் உள்ள 88 கோயில்களிலும் களவு;
  • வறுமை தாங்காமல் 3 அர்ச்சகர்கள் தற்கொலை;
  • சமயபுரம் உண்டியலில் தங்கக் காசுகள் மாயம்; மன்னார்குடி கோயிலில் நகைத் திருட்டு; நாகை, நீலாயதாட்சி அம்மன் கோயிலில் “கோமேதக லிங்கம்’ களவு போனது; புதுக்கோட்டை திருப்புனவாசல் கோயில் கலசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கலசம் மாயம்; நெல்லையப்பர் கோயில் நகைக் கொள்ளை – நிர்வாக அதிகாரியே உடந்தை;
  • காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் நகைத் திருட்டு;
  • மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 112 கிரவுண்டு நிலத்தைக் குறைந்தவிலைக்கு அரசாங்கத்திற்கு பட்டா செய்து தந்ததில் கோயிலுக்கு இழப்பு;
  • கோவில்பட்டியில் சிவஞானபுரம் பத்ரகாளியம்மன் கோயில் கொள்ளை;
  • விருதுநகர் மாவட்டம், முத்துராமலிங்கபுரம், கங்காபரமேஸ்வரி கோயில் கொள்ளை என – பட்டியல் நீள்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மனுக்குச் சாற்றப்பட்ட நகைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று அதைப்போல் நகைசெய்துவிட்டு திருப்பித் தருவதாக விக்டோரியா மகாராணி குடும்பத்தினர் கேட்டபோது, கோயில் நிர்வாகம் சம்மதிக்கவில்லை. நகைகளை புகைப்படங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதித்தனர். மத உணர்வுகளை அரச குடும்பத்தினர் அன்று மதித்தனர்.

கோயில்களில் பல கோடி பெறுமான நகைகள், சிலைகள் கொள்ளை போகின்றன. இதைத் தடுக்க ஆட்சியாளர்கள் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையில் இருந்தது. அதற்குப் பின்பு மடாதிபதிகள், ஜமீன்தார்கள், உள்ளூர் வணிகர்கள், செல்வந்தர்கள் பொறுப்பில் நிர்வாகம் அளிக்கப்பட்டது. சொத்துகளைக் கண்காணிக்க சுயஅதிகாரம் கொண்ட குழுவிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. நீதி கட்சி ஆட்சிக்காலத்தில், கோயில் பாதுகாப்புச் சட்டம் வந்தது. ஆணையர் தலைமையில் வருவாய் வாரியம் நிறுவப்பட்டது.

கோயில் வரவு – செலவுக் கணக்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டன. 1940-ல் ஆர்.பி. கிருஷ்ண அய்யர் தலைமையில் ஒரு குழு, 1943, 1944, 1946, 1954, 1956, 1981-ல் இந்து அறநிலையச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டி தலைமையில் கோயில் நிர்வாகச் சீர்திருத்தங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்தது.

தஞ்சை பெரியகோயிலுக்கு மன்னன் ராஜராஜனால் 12,000 வேலி நிலம் கொடையாக வழங்கப்பட்டது என்பது கல்வெட்டு செய்தி. ஆனால் இந்த நிலம் தற்போது அக்கோயிலுக்குச் சொந்தமில்லை என்பது அதிர்ச்சிதரும் செய்தி. திருச்செந்தூர் கோயில் வேல் திருட்டு தொடர்பாக நீதிபதி பால் குழு சில பரிந்துரைகளைச் செய்தது:

அறங்காவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், பொருளாதார வசதி உடையவர்களாகவும், சமயப்பற்று உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அறங்காவலர் குழுத்தலைவர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கோயில் அமைந்துள்ள அப்பகுதியில் வசிப்பவரே அறங்காவலர் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதிக வருமானம் உள்ள பெரிய கோயில் உண்டியல்களுக்கு இரட்டைப்பூட்டு முறை உள்ளது. ஒரு கொத்துச்சாவி நிர்வாக அதிகாரியிடம், மற்றொன்று அறங்காவலர் குழுத் தலைவரிடமும் உள்ளன. இதனால், நிர்வாக அதிகாரியும், குழுத்தலைவரும் ஒன்று சேர்ந்து தவறுசெய்ய வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சாவிக்கொத்தை உதவிஆணையாளரிடம் அல்லது துணைஆணையாளரிடம் கொடுக்க வேண்டும். உண்டியலைத் திறக்க, சாவிக்கொத்தை அனுமதியளிக்கப்பட்ட ஆய்வாளர் மூலம் அவர்கள் கொடுத்து அனுப்பலாம்; அந்த ஆய்வாளர் உண்டியல் திறக்கும்போதும், எண்ணும்போது இருக்க வேண்டும்.

உண்டியல்களில் இரட்டைப்பூட்டின் ஒரு சாவிக்கொத்தை அறங்காவலர் குழுத்தலைவரிடமிருந்து வாங்கி அதனை வட்டாட்சியாளர் அல்லது கோட்டாட்சி ஆட்சியாளர் பாதுகாப்பில் வட்டக் கருவூலத்தில் வைத்திருப்பது நலம்.

சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரும் ஒரு தனி முத்திரையை வைத்திருப்பது அவசியம். அம்முத்திரை குறிப்பிட்ட அதிகாரியின் முத்திரை என்பதுதான் என்பதைக் காட்டும்வகையில், அம்முத்திரைகளின் அடையாளக் குறியீடுகள் அமைந்திருக்க வேண்டும். காணிக்கை எண்ணும்போது பொதுமக்கள் பிரதிநிதிகள் இரண்டு பேராவது இடம்பெற வேண்டும்.

1960-ம் ஆண்டு மத்திய அரசு சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு கோயில் நிர்வாகத்தை ஆராய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறநிலைய ஆணையர், பல்கலைக்கழகத் துணைவேந்தரைப் போன்று சுயஅதிகாரம் கொண்டவராக நியமிக்கப்பட வேண்டும். அறநிலையப் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயமும் அமைக்க வேண்டும் என்று பரிந்துரையும் செய்தது. இந்தப் பரிந்துரைகளை எந்த மாநிலமும் இதுவரை செயல்படுத்தவில்லை.

கோயில்கள், ஊழல்பெருச்சாளிகளின் கூடாரங்களாக மாறும்முன், அவற்றின் கலைச்செல்வங்களையும், சொத்துகளையும் பாதுகாக்க வேண்டும். அதை அழிக்கின்ற சூழ்நிலையை நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே, கோயில்கள் அனைத்தும் சுயஅதிகார அமைப்புக் குழுவின்கீழ் கொண்டு வரப்பட வேண்டும். நீதிபதிகளின் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும்.

கோயில்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அகராதியை அரசு வெளியிட வேண்டும். தலவரலாறு, சமயநூல்களை மலிவு விலையில் வெளியிட வேண்டும். கோயில் வளாகங்களில் சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். அதிக வருமானமுள்ள ஆலயங்களில் அனாதை இல்லங்கள், பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளிகளை ஏற்படுத்தலாம். அர்ச்சகர்கள், ஓதுவார்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பண்டைய அரசர்கள் கட்டிய பல கோயில்கள் அழிந்துவிட்டன. பல கோயில்களில் வெளவால்கள், பெருச்சாளிகள் பெருகியுள்ளன. புதர்கள் மண்டியுள்ளன. தெப்பங்களும் சீர்கேடடைந்துள்ளன. இவற்றைச் சீரமைக்க வேண்டும். சில தனியார் நிறுவனங்கள் ஆலயப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

1984-ல் கோயில் சிலைகளை அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி நடந்தபோது நாடாளுமன்றத்தில் வைகோ கண்டனக் குரல் எழுப்பினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் இதுகுறித்து பழ. நெடுமாறன் எடுத்துரைத்தார்.

ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல; நமது வரலாற்றைச் சொல்லும் அற்புதக் கொடைகளும் ஆகும். இவற்றைக் காப்பது நம் கடமை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: