Thanks to Nandhigram – Dinamani op-ed
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
நந்திகிராமுக்கு நன்றி!
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில், ஏற்றுமதியை மட்டும் கருத்தில்கொண்டு தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்குவது என்கிற மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையின் முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புகள் இருந்து வந்தன. வரிச்சலுகை, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான தொழிலாளர் நலச் சட்டங்கள் என்று பல்வேறு சலுகைகளை இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிப்பது தேவைதானா என்கிற கேள்வி பரவலாகவே காணப்பட்டது.
ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொழில் சார்ந்த அத்தனை தொழிற்சாலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்படுகிற ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். அதாவது, ஜவுளித்துறை சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், பஞ்சில் தொடங்கி ரெடிமேட் ஆடைகள் வரை ஜவுளி சம்பந்தப்பட்ட எல்லா தொழிற்சாலைகளும் இருக்கும். இதனால், மதிப்புக் கூட்டுவரியிலிருந்து விலக்குக் கிடைக்கும். வரி பளு மற்றும் போக்குவரத்துச் செலவு இல்லாமல் இருப்பதால் தயாரிக்கப்படும் பொருள்களின் விலை குறைவாக இருக்கும்.
சீனாவில் ஏற்றுமதியை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் வேறுவிதமாக உருவாக்கப்பட்டன. மொத்த நிலப்பரப்பில் நாற்பது சதவிகிதம் தொழிற்சாலைகளும், இருபது சதவிகிதம் சிறப்புப் பொருளாதார மண்டல ஊழியர்களின் வசதிக்காக அமைந்த வணிக வளாகங்களும் அமைவது பற்றி யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், மீதமுள்ள நாற்பது சதவிகித இடத்தில் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டி விற்பனை செய்யும் திட்டம்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சந்தேகப்பட வைத்துவிட்டது.
தனிநபரின் விளைநிலங்களையும், பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த இடங்களையும் குறைந்தவிலைக்கு அரசு கையகப்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏற்றுமதியின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களே என்பதுகூட வருத்தமான விஷயமல்ல. அப்பாவி மக்களின் விளைநிலங்களைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அடுக்குமாடி வீடுகள் கட்டி அதில் கொள்ளை லாபம் அடிக்க விரும்புகிறார்களே என்பதுதான் எதிர்ப்புக்கான அடிப்படைக் காரணம்.
மேற்கு வங்கம் நந்திகிராமில் நடந்த கலவரமும் துப்பாக்கிச் சூடும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் விளைவாக, ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் உறுப்பினர்கள் இப்போது சில பரிந்துரைகளையும் செய்திருக்கின்றனர்.
அதன்படி, முன்பு திட்டமிட்டதுபோல வளர்ச்சித்துறை இயக்குநரின் முழுப்பொறுப்பில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இயங்கும் என்றாலும், தொழிலாளர் நலச் சட்டங்களைப் பொருத்தவரை மாநில அரசின் தொழிலாளர் துறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மட்டும்தான் எதையும் செய்ய முடியும்.
நாடாளுமன்றக் கமிட்டியின் இன்னொரு பரிந்துரை உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் சுமார் 1,254 சிறுதொழில்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் எழுபது அரசு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளால் மூடிக் கிடக்கின்றன. செயல்படாத பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களையும், தொழிற்பேட்டைகளையும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய விழைகிறது நாடாளுமன்றக் கமிட்டியின் பரிந்துரை.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இடமும் கிடைத்துவிட்டது. தொழிலாளர் நலச் சட்டங்களில் எந்தவித மாற்றங்களையும் செய்ய வேண்டாம். நந்திகிராமில் தங்களது உரிமைக்காகப் போராடியதன் விளைவுதான் இப்போது இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைத் தந்திருக்கிறது. நிச்சயமாக, நன்றி நந்திகிராமத்து ஏழை விவசாயிகளுக்குத்தான்!
————————————————————————————————————————————-
முரண்பாடு தேவையில்லை
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சியிலேயே பலர் ஆதரிக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் கோவா மாநிலத்தின் தற்போதைய முதல்வரான திகம்பர் காமத், முந்தைய பிரதாப் சிங் ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு அனுமதி அளித்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கலைப்பது என்று முடிவெடுத்திருப்பது அதைத் தெளிவுபடுத்துகிறது.
கோவா மாநிலத்தில் 15 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் ஒத்துழைப்புடன் மூன்று மண்டலங்களில் பணிகளும் தொடங்கிவிட்டன. சுமார் 500 கோடி ரூபாய் மூலதனம் வர இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர். 12 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றாலும் இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.
ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், மருந்து தயாரிப்புக்காக உருவாக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கான அதிநவீன இயந்திரங்களையும் இறக்குமதி செய்து விட்டோம் என்று பரிதாபக் குரல் கொடுக்கின்றன. சட்டப்படி, அனுமதி பெற்ற மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் நிராகரிக்கும் உரிமை மாநில அரசுக்குக் கிடையாது என்கிறார்கள் இந்த உரிமையாளர்கள்.
மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கோவா என்று பல மாநிலங்களில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் பொதுமக்களே போர்க்கொடி தூக்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெரிய அளவில் தனியாரிடம் இடங்களை வாங்கி இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது என்பது இயலாத விஷயம். காரணம், ஒரே இடத்தில் 1000 ஏக்கர் இடம் கிடைப்பதில்லை. இந்த விஷயத்தில் அரசின் தலையீடு நிச்சயம் தேவைப்படுகிறது.
அதேநேரத்தில், தனியார் லாபம் சம்பாதிக்க ஏழை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை ஏன் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல, இதற்கு ஏன் நிலத்தைக் குறைந்த விலைக்கு அரசு கையகப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இல்லாமல், சிறப்புச் சலுகைகள் பெறாமல், இந்தத் தயாரிப்பாளர்கள் ஏன் உலகச் சந்தையில் போட்டிபோட முடியாது என்கிற கேள்விக்கும் அவர்கள் தரப்பில் சரியான பதில் தரப்படுவதில்லை. சீனாவுடன் போட்டி போட வேண்டும் என்று பயமுறுத்துகிறார்களே தவிர அதற்குச் சரியான காரணங்கள் தருவதில்லை.
போதிய மகசூல் தராத விளைநிலங்களும், தண்ணீர் இல்லாத விவசாய நிலங்களும் தொழில் மண்டலங்களாக மாறுவது தவறு என்று சொல்லிவிட முடியாது. நமது உணவு உற்பத்தி பாதிக்கப்படாத வரையில், தன்னிறைவுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் இந்த விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் தொழில் மண்டலங்களாகவோ, அறுபதுகளில் செய்ததுபோலத் தொழிற்பேட்டைகளாகவோ மாற்றப்படுவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தொழில் மண்டலங்கள் தனியாருடையதாக இல்லாமல், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலத்தின் சொந்தக்காரர்களுக்கும், அந்த நிலத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அங்கே நிறுவப்படும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.
தெளிவான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலைமை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை தொடர்வது நல்லதல்ல. ஆளும் கூட்டணிக்குள்ளும், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் காணப்படும் முரண்பாடும், தெளிவின்மையும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துவதுதான் மிச்சம். தொழில் வளமும், பொருளாதார முன்னேற்றமும் அடிப்படை இந்தியனின் வயிற்றில் அடிப்பதாக அமைந்தால் அதனால் என்ன பயன்?
சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பொருத்தவரை, தேவை தெளிவும், தொலைநோக்குப் பார்வையும், மக்களின் உணர்வுகளை மதிக்கும் மனோபாவமும். அரசிடம் இவை காணப்படவில்லை என்பதற்கு உதாரணம்தான் கோவாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பம்!
மறுமொழியொன்றை இடுங்கள்