Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

SriKrishna Commission Report – Pay Commission suggests Firing over Suspension

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

ஆபத்துக்கு அச்சாரம்!

மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.

முன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.

தான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.

ஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

தனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.

அரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.

அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: