Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

State of India – Public Policy, Planning commission goals, Regional Development: N Vittal

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 15, 2007

மக்களுக்காகவே நிர்வாகம்!

என். விட்டல்

இந்தியா என்ற ஒரு தேசத்தை இணைப்பது எது என்று கேட்டு தொடர்ச்சியாக சில கட்டுரைகளை வெளியிட்டது ஒரு பத்திரிகை. இந்தியச் சுதந்திர தினத்தின் வைர விழாவையொட்டி இக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. இந்தியாவை இணைப்பது அதன் கலையா, கலாசாரமா, பண்பாடா, வரலாறா என்று பல கேள்விக் கணைகளை எழுப்பின அக்கட்டுரைகள்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாம் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்புச் சட்டம் நமது நாட்டை, மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அழைக்கிறது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா 3 வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை 1. பிரிட்டிஷ் மகாராணியாரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. 2. பிரிட்டிஷ் மகாராணியைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டு, சுயமாக ஆட்சி நடத்திய 600 சுதேச சமஸ்தானங்கள். 3. வட-மேற்கு எல்லைப்புற மாகாணம், வட-கிழக்கு மாநிலங்கள். இங்கு பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி கிடையாது. ஒரு ஏஜெண்ட் மட்டும் இருந்தார். வட-மேற்கும் வட-கிழக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

மாகாணங்கள் என்ற அமைப்பு பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்டதே சுவையான வரலாறு. வட இந்தியாவில் வசித்தவர்கள், விந்திய மலைக்குத் தெற்கில் வசித்த அனைவரையும் மதறாசி என்ற ஒரே பெயரில் அழைத்தனர். மதறாஸ் மாகாணம் என்பதில் தமிழ்நாடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் சேர்ந்திருந்தன. எனவே மலையாளி, தெலுங்கர், கன்னடியரைக்கூட மதறாசி என்றே வட இந்தியர்கள் அழைத்தனர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. தங்களுடைய தாய்மொழி மீது கொண்ட பற்றினால் மக்கள் இப்படி மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிப்பதை விரும்பினர். அப்படிப் பிரித்ததே சில இடங்களில் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அது, கலாசார ரீதியாகக் குறுகிய மனப்பான்மையையும் மக்களிடையே ஏற்படுத்தியது. இன, பிராந்திய அடையாளங்கள் புதிதாக உருவாயின.

தனி நாடு கோரிய திமுக, சீனப்படையெடுப்புக்குப் பிறகு “திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டது. அதே சமயம், “மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தை முன்னே வைத்தது. இப்போது மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சியான காங்கிரஸýடன் இணைந்து மத்தியில் கூட்டணி அரசு அமைத்துள்ளன. திமுகவின் கோரிக்கை நிறைவேறியிருப்பதாகக் கூட இதைக் கருதலாம்.

தேசப் பாதுகாப்பு, தனி மனிதப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய மூன்றும் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வோம். பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை எல்லா அரசுகளும் எல்லா தனி மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். 1991-க்குப் பிறகு பொருளாதார தாராளமயம் அவசியம் என்பதில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு மிகவும் அவசியம். இவற்றை அளிக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் அரசுக்குத்தான் இருக்கிறது.

அடித்தளக் கட்டமைப்பு என்றவுடன் தொலைத்தொடர்புத் துறைதான் முதலில் நினைவுக்கு வருகிறது. அது எப்படி வளர்ந்து பரவிவிட்டது! அடுத்தது ரயில்வே துறை. சரக்குகளைக் கையாள்வதில் திறமையும் வருவாய் ஈட்டுவதில் சாமர்த்தியமும் காட்டி, உபரி வருவாயைப் பெற்றுள்ளது ரயில்வேதுறை.

ரயில்வேயும் தொலைத்தொடர்புத் துறையும் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பவை. இப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வராத பல துறைகளில் வளர்ச்சி திருப்திகரமாகவும் சீராகவும் இல்லை. மின்சாரத்துறையையே எடுத்துக் கொள்வோம். என்.டி.பி.சி., பவர் கிரிட் என்ற இரு மத்திய நிறுவனங்களும் திறமையான செயல்பாடு, குறித்த நேரத்தில் திட்டங்களை முடிப்பது ஆகிய சிறப்புகளுக்காகப் புகழ் பெற்றவை. பெரும்பாலான மாநிலங்களில் மின்சார வாரியங்கள் நிதி நிலைமையில் மிகவும் பின்தங்கியும், ஏராளமான கடன் சுமையிலும் தள்ளாடுகின்றன. இதற்குக் காரணம் அந்த மின்வாரியங்கள் அல்ல. இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களால் அவற்றின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாகிவிட்டன.

வாக்குவங்கியைக் குறிவைத்துச் செயல்படும் மாநில அரசியல்கட்சிகளால் மின்சார வாரியங்கள் பலிகடாவாகிவிட்டன. மிக முக்கியமான மின்னுற்பத்தித் துறையை இப்படி விடுவது சரிதானா? ரயில்வே, தொலைத் தொடர்பு போல மின்சாரத்துறையையும் மத்திய அரசே தன் பொறுப்பில் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடுவதற்காகக் கூறப்படும் யோசனை அல்ல. பொருளாதார வளர்ச்சிக்காகவே கூறப்படுகிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர்வளத்துறையை மத்திய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காவிரி நிதிநீர்ப் பகிர்வு போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு வலுவாகத் தலையிட முடியும்.

வளர்ச்சிக்கு அடுத்தபடியாக ஆனால் வளர்ச்சியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது மனிதனின் உயிருக்குப் பாதுகாப்பு தருவது. கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் விவகாரம் அல்லது குற்றச்செயல் என்றால் உடனே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது வழக்கமாகிவருகிறது. சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தல் என்று வந்துவிட்டால் மாநிலப் போலீஸôர் மீது நம்பிக்கை இல்லை, மத்திய துணை நிலை ராணுவப் படைகளை அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றனர். அப்படி இருக்க, மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை விசாரிக்க, ஃபெடரல் போலீஸ் படை இருந்தால் நன்றாக இருக்குமே?

மாநில உணர்வு, சொந்த அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் மாநிலத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிந்தால் அந்த மாற்றங்களைச் செய்யத் தயங்கக் கூடாது. நன்மை செய்யும் என்று நினைத்து மேற்கொள்ளப்படும் மாற்றங்களால் தீமை அதிகம் வந்தால், எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளவும் தயங்கக்கூடாது. நிர்வாகம் என்பது மக்களுக்காகத்தானே தவிர, நிர்வாகத்துக்காக மக்கள் இல்லை.

சாலை வசதி, மின்னுற்பத்தி, தண்ணீர் வளம் ஆகிய முக்கிய பிரச்னைகளில் மாநிலங்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய அதிகாரத்தை மத்திய அரசுக்கு ஒப்புக்கொடுத்து வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும். மாநில அரசுகளின் ஒப்புதலுக்காகக் காத்திராமல், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச் செயல்களை சி.பி.ஐ. விசாரிக்க புது ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அரசு நிர்வாகம் என்பது தனி மனித பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் மாற்றம் பெற வேண்டும்.

(கட்டுரையாளர்: ஊழல் ஒழிப்புத் துறை முன்னாள் ஆணையர்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: