Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு! * தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இடைத் தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இடைத் தேர்தல் வந்தால், குறைந்தபட்சம் ரூ.75 கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டியிருக்கும்.

மூன்று கட்சிகள் பலத்த போட்டியுடன் களம் இறங்கும் நிலையில் உள்ளதால், தேர்தல் வந்ததும் இக்கட்சிகள் சர்வ சாதாரணமாக ரூ.500 கோடி வரை செலவழிக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் அரசியல் குழப்பம் உச்ச கட்டம் அடைந்துள்ளது.

கர்நாடக முதல்வராக 2004, மே 28ல் பொறுப்பேற்ற காங்., கட்சியைச் சேர்ந்த தரம் சிங்குக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளித்தது. துணை முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சித்தராமையா நியமிக்கப்பட்டார்.

தரம் சிங்கின் பதவி 20 மாதங்களே நீடித்தது. கூட்டணியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் குடைச்சல் கொடுக்கத் துவங்கி, தனது ஆதரவை வாபஸ் பெற்றது. சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வழியில்லாமல், 2006, ஜன., 28ம் தேதி தரம் சிங் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில், மீண்டும் தேர்தல் வேண்டாம் என்ற முடிவில், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு பா.ஜ., ஆதரவு அளிப்பதாகக் கூறி, அரசு அமைக்க ஒத்துழைத்தது. இவர்கள் இருவரிடையே ஒரு ஒப்பந்தமும் ஏற்பட்டது.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான தேவகவுடாவின் மகன் குமாரசாமியை முதல்வர் ஆக்குவது என்றும், மொத்தமுள்ள 40 மாதங்களில், 20 மாதங்கள் இக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்றும், மீதமுள்ள 20 மாதங்களுக்கு பா.ஜ., கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற முடிவில் தான் கடந்த 3ம் தேதி வரை குமாரசாமி அதிகாரப்பூர்வ முதல்வராக இருந்தார்.

குமாரசாமி அரசு 20 மாதங்களை முடித்து விட்ட நிலையில், கடந்த வாரம் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.,விடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவுக்கு, தன் மகனைப் பதவியிலிருந்து இறக்க மனம் இல்லை.

பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதால், அக்கட்சியை மெதுவாக சூகழற்றி’விட்டு, காங்.,கிடம் ஆதரவு கேட்பதற்காக டில்லிக்கு பயணித்தது பலன் தரவில்லை. பா.ஜ., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் நேற்று முன்தினம் முறைப்படி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியைப் பரிந்துரைக்குமாறு கோரியும், கவர்னர் தாக்கூரிடம் காங்., கட்சி கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சட்டசபையில் பெரும்பான்மை இழந்த குமாரசாமியிடம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் பரிந்துரைத்தார்.

நேற்று முன்தினம் தனது பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை அமலாக்கம் செய்ய, மத்திய அமைச்சரவையும் ஜனாதிபதிக்கு தன் சிபாரிசை அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசியல்வாதிகள் நடத்தும் நாடகத்தால், மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் விரயமாகிறது.

கர்நாடகாவில் 2004ல் நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கு ரூ.40 கோடி செலவழிக்கப்பட்டது. இப்போது மாறியுள்ள அரசியல் சூழ்நிலையால், இடைத் தேர்தல் நடத்த வேண்டுமெனில் மேலும் ரூ.35 கோடி கூடுதலாக செலவாகும். இந்த தகவலை தெரிவித்தவர் கர்நாடக இணை தேர்தல் அதிகாரி பெரோஸ் ஷா கானம்.

கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் ரூபாய் வரை செலவானது. உல்லால், சாமுண்டீஸ்வரி தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆன செலவு ரூ.20 லட்சத்தையும் தாண்டியது’ என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தல் நடந்தால், தேர்தல் அதிகாரிகள் நான்கு பேரை கூடுதலாக நியமிக்க வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு ரூ.200 செலவாகிறது. தேர்தலின் போது அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 செலவாகிறது.

22 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரத்துக்கும் பேட்டரி பொருத்தவும் செலவு ஏற்படுகிறது. ஒரு வேட்பாளர் ரூ.10 லட்சம் வரை செலவிடலாம் என்றாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஒரு தொகுதிக்கு ரூ.50 லட்சம் வரை செலவழிக்கின்றனர்’ என்று சிட்டிசன் உரிமை அமைப்பின் தலைவர் நாகராஜ் கூறுகிறார். பெங்களூரு என்.ஜி.ஓ., இயக்கத்தினர் கூறுகையில், சூஎல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக ரூ.600 கோடி செலவழிப்பதாக கூறுகின்றனர்.

வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் 70 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுகின்றனர்’ என்றனர். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதிக்கு தனது வேட்பாளர்களுக்கு ரூ. இரண்டு கோடியிலிருந்து மூன்று கோடி ரூபாய் வரை செலவழிப்பதாகவும் கட்சியினர் கூறுகின்றனர்.

ஒரு பதில் to “Election Mela in Karnataka: Tracking Poll Expenses and Party Expenditure”

  1. […] பதவி ஆசைக்காக மட்டும் மீண்டும் கர்நாடகாவில் தேர்தல் நடத்தும் செலவா… மொத்தமுள்ள 224 தொகுதிகளில் எந்த […]

பின்னூட்டமொன்றை இடுக