Thorium Power: Fuel & Energy – commercial nuclear reactors
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2007
தோரிய வளம்-இந்திய பலம்!
எஸ். ராஜாராம்
இந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அபரிமித தொழில் வளர்ச்சியால் பெருகிவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்பது மத்திய அரசின் வாதம்.
அணுசக்தி திட்டத்திற்கு முக்கிய தேவையான யுரேனியத்தைப் பெற இந்த ஒப்பந்தம் துணைபுரியும். ஆனால், மாற்று எரிசக்தி உத்தியில் ஆர்வம் காட்டும் விஞ்ஞானிகள், யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.
தோரியமும் யுரேனியத்தைப்போல கதிர்வீச்சுத் தன்மை கொண்டதுதான். ஆனால், யுரேனியம் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்ற கருத்தும் உள்ளது.
அணுஉலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.
உலகில் முதன்முதலில் அணுஉலைகளில் தோரியம் எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். 1995-ல் குஜராத்தில் உள்ள காக்ரபார்-1 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 300 நாள்களும், காக்ரபார்-2 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 100 நாள்களும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
தோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிக்க இயலாது. அதனுடன் யுரேனியம் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது- இது இந்திய தொழில்நுட்பம். யுரேனியத்தைவிட தோரியம் சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
“”யுரேனியத்தைப் பயன்படுத்திய பின்னர் மிஞ்சும் கழிவின் கதிர்வீச்சுத்தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், தோரியக் கழிவின் கதிர்வீச்சுத் தன்மை சுமார் 500 ஆண்டுகளுக்கே இருக்கும்.
பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி இல்லாமல் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் தோரியமே சிறந்தது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹஷேமி-நிஜாத்.
உலகம் முழுவதும் சுமார் 4.5 மில்லியன் டன் தோரியம் இருப்பு உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து, ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது.
“”உலகில் உள்ள மொத்த யுரேனியம் இருப்பையும் மின் உற்பத்திக்காக ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கே வரும். எனவே, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதிகரித்து வரும் அணுசக்தி தேவைக்கு தோரியம் முக்கியமான, சிறந்த தீர்வு”- சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஐஏஇஏ கூட்டத்தில் இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் தெரிவித்த கருத்து இது.
தற்போது, அணுஉலைகளில் மின் உற்பத்திக்குப் பிறகு யுரேனியக் கழிவுகளைப் பாதுகாக்க மிகுந்த பொருள்செலவு ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அணுக் கதிர்வீச்சு கசியும் அபாயமும் (செர்னோபில் விபத்து போன்று) உள்ளது. யுரேனியக் கழிவுகளில் இருந்துதான் புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டு அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், தீவிரவாதிகளின் கையில் அது சிக்காமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஆனால், தோரியக் கழிவுகளில் இந்த அளவுக்கு அபாயம் இல்லை. பொதுவாகவே தோரியத்தில் வெடிக்கும் மூலக்கூறுகள் இல்லை என்பதால், அதன் கழிவுகளில் இருந்து அணுஆயுதத் தயாரிப்புக்காகப் பிரித்தெடுக்க எதுவும் இல்லை.
மேலும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அணுஉலைகளில் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தபிறகு, அதன் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, கதிர்வீச்சுத் தன்மையை முற்றிலும் குறைக்கும் தொழில்நுட்பத்திலும் (இப்ர்ள்ங்க் சன்ஸ்ரீப்ங்ஹழ் ஊன்ங்ப் இஹ்ஸ்ரீப்ங்) இந்தியா முன்னேற்றப்பாதையில் உள்ளது.
வியன்னா கூட்டத்தில் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
ஏற்கெனவே யுரேனியம் செறிவூட்டுதலிலும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்திலும் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தற்போது தோரிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. இருப்பினும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வணிகரீதியாக, முழுவீச்சில் மின்உற்பத்தி செய்வதற்கு மேலும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
அவ்வாறு முழுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதீத தோரிய வளம் மூலம் அணுசக்தி உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பெறும் என்பது உறுதி!
மறுமொழியொன்றை இடுங்கள்