RAW book row – CBI Raids: Violation of Official Secrets Act
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2007
நியாயமில்லை, நியாயமேயில்லை…!
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி குறிப்பிட்ட காலவரம்புக்குப் பிறகு தனது அனுபவங்களையும் பதவிக்காலத்தில் சந்தித்த பிரச்னைகள் மற்றும் சம்பவங்களையும் புத்தகமாக எழுதலாமா கூடாதா? எழுதக் கூடாது என்று தனது துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு ( Research and Analysis Wing). இந்திய அரசின் வெளியுறவு ரகசியப் புலனாய்வுத் துறைதான் “ரா’ ( RAW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் பிரிவு.
இப்படியோர் உத்தரவு பிறப்பித்ததற்குக் காரணம், இந்தப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வி.கே. சிங் என்பவர் தனது பணிக்கால அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டதுதான். “ரா’ அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களையும், ரகசியக் கண்காணிப்புக்காக அரசால் ஒதுக்கப்படும் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் தனது புத்தகத்தில் அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்ததுதான் நமது புலனாய்வுத் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
புலனாய்வுத் துறையைப் பற்றிய விமர்சனங்கள் எழக்கூடாது என்பதாலும் அதைப் பற்றி பேசினாலோ கேள்வி கேட்டாலோ அது தேசத் துரோகம் என்பதுபோலக் கருதப்படுவதாலும் அதிகாரிகள் எந்தவிதக் கேள்வியும் கேட்கப்படாமல் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர் என்கிற அந்த அதிகாரியின் குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையை எழுப்பியதோ இல்லையோ புலனாய்வுத் துறையினரிடம் கோபத்தை ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. மத்திய புலனாய்வுத் துறை ( C.B.I) யின் மூலம், அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மற்றும் அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர் ஆகிய இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன.
அந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கியமான பிரச்னைகளை எழுப்பி இருக்கிறார் மேஜர் ஜெனரல் சிங். முதலாவது, “ரா’ அமைப்பு, ஆட்சியாளர்களால் எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பது. மக்கள் வரிப்பணம் புலனாய்வு என்கிற பெயரில் கணக்கு வழக்கே இல்லாமல் செலவழிக்கப்படுவதால், “ரா’ அமைப்பின் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் செலவுகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும் சிங் ஆலோசனை கூறியிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் கூறியிருக்கும் சம்பவங்களும் குற்றச்சாட்டுகளும் தவறு, உண்மைக்குப் புறம்பானவை என்றால், அவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்குத் தொடர்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அவர் எழுப்பி இருக்கும் பிரச்னைகளும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்களும், அரசு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் என்கிற வரம்பிற்குள் உட்படாது. இந்த நிலையில், அவர் மீது தொடுக்கப்பட்ட மத்திய புலனாய்வுத் துறை சோதனை, அந்தத் துறை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், “ரா’ அமைப்பிலுள்ள அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதையும்தான் காட்டுகிறது.
இந்தப் பிரச்னையில் இன்னொரு விஷயமும் அடங்கும். 1923-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் அடிமை இந்தியாவை அடக்கியாள உருவாக்கப்பட்ட அரசின் ரகசியக் காப்புச் சட்டம் ( Official Secrets Act) இப்போதும் தொடர வேண்டிய அவசியம்தான் என்ன? எந்தவிதக் கேள்வியும் இல்லாமல், சாட்சிகள் இல்லாமல், சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் தேசநலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறிக் கைது செய்து சிறையிலடைக்கும் வெள்ளையர் கால அரசின் ரகசியக் காப்புச் சட்டம் இப்போதும் தொடர்கிறது என்பதிலிருந்து என்ன தெரிகிறது?
இந்தியக் குடியரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்திபடைத்த குடிமகன், அடக்குமுறை ஏகாதிபத்திய ஆட்சிக் கால சட்டங்கள் காரணமாக சுதந்திரமாக நடமாட முடியாது என்றால் அது நியாயமில்லை. எந்தவொரு துறையும் மக்களின் கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பது என்பது நியாயமே இல்லை.
This entry was posted on ஒக்ரோபர் 5, 2007 இல் 1:25 பிப and is filed under Abuses, Airforce, Army, Author, Books, CBI, Center, Contempt, Experiences, FBI, General, Govt, Intelligence, leak, Major, Military, Navy, Non-fiction, Officer, Oppression, OSA, Politics, Power, Publisher, Raids, RAW, Secrets, Singh, Violation, Writer, Writing. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
Vito said
You can definitely see your expertise within the work you write.
The arena hopes for more passionate writers like you
who aren’t afraid to mention how they believe. At all
times go after your heart.