Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Chithra Lakshmanan series in Cinema Express – K Subramaniyam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 28, 2007

நெஞ்சம் மறப்பதில்லை – BBC Tamil

 

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தவர்கள் பற்றிய தொடர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த மேதைகள்,சிரிக்க வைத்த சிந்தனையாளர்கள், நையாண்டி நாயகர்கள், நடிப்புச் சுடர்கள் மற்றும் சிந்திக்க வைத்த எண்ணற்ற இயக்குனர்கள் என்று, தமிழ் திரையுலகில் முத்திரை, பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்று, செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழோசையில் ஒலிபரப்பாகும்.

இத் தொடரை பி பி சியின் முன்னாள் தயாரிப்பாளர் சம்பத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

பகுதி 1

முதல் பகுதியில் தியாகபூமி, சேவாசதன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனரான கே சுப்பிரமணியன் அவர்களின் திரையுலக சாதனைகள் குறித்து அவரின் மகன் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துக்களை கேட்கலாம்.

————————————————————————————–

உள்ளதை சொல்கிறேன் – சித்ரா லட்சுமணன்

இயக்குனர்களின் முன்னோடி!

“பவளக் கொடி’யின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த முருகன் டாக்கீஸ் என்ற நிறுவனத்திற்காக கே. சுப்ரமணியம் அவர்கள் இயக்கிய படம் “நவீன சாரங்கதாரா’. அப்போதெல்லாம் ஒரே கதையைப் பல தயாரிப்பாளர்கள் படமாக எடுப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

அதே போன்று “”சாரங்கதாரா’ கதையையும் லோட்டஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தினர் படமாக்கிக் கொண்டிருந்ததால் தனது படத்திற்கு “நவீன சாரங்கதாரா’ என்று பெயரிட்டார் கே. சுப்ரமணியம். “பவளக் கொடி’யில் ஜோடிகளாக இணைந்த தியாகராஜ பாகவதரும், எஸ்.டி. சுப்புலட்சுமியும் இந்த படத்திலும் நாயகன் நாயகியாக நடித்தனர்.

இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான ஊதியத்தை முன்னதாகவே பெற்றுக்கொண்டு, அந்த பணத்தை மூலதனமாகக் கொண்டு “மதராஸ் யுனைடட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை கே. சுப்ரமணியம் அவர்களும், எஸ்.டி. சுப்புலட்சுமி அவர்களும் கூட்டாகத் தொடங்கினர். அந்த பட நிறுவனத்தின் மூலம் சமூக சீர்திருத்தக் கதைகள் கொண்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்தனர்.

“பவளக் கொடி’ படத்தில் பணியாற்றியபோதே ஒரு இயக்குனர் என்ற நிலையில் மட்டுமின்றி நற்குணங்கள் பலவற்றிற்கு சொந்தக்காரராக சுப்ரமணியம் அவர்கள் விளங்கியது சுப்புலட்சுமி அவர்களின் மனதைக் கவர்ந்தது. சுப்ரமணியம் அவர்களுடைய கலைத் திறனும், பெண்களை அவர் மதிக்கின்ற பாங்கும் அவர் மீது சுப்புலட்சுமி கொண்டிருந்த உயர்ந்த அபிப்ராயத்தை உறுதி செய்தன.

ஆகவே தன்னை அறிமுகப்படுத்திய அந்த கலை மேதையையே மணந்துகொண்டு இல்லற வாழ்க்கையைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்தார் அவர். இருவரும் ஏற்கனவே கூட்டாக ஒரு பட நிறுவனத்தை நடத்தி வந்ததால் இருவருக்குமிடையே ஏற்பட்ட நெருக்கத்தால் சுப்ரமணியம் அவர்களும் சுப்புலட்சுமி அவர்களின் விருப்பத்திற்கு தடையேதும் கூறாமல் அவரை மணந்து கொண்டார்.

“நவீன சாரங்கதாரா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் சுப்ரமணியம் – சுப்புலட்சுமி தம்பதியர் தாங்கள் துவங்கியிருந்த நிறுவனத்தின் மூலம் “சதாரம்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தனர். இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை.

அதே நேரத்தில் லோட்டஸ் நிறுவனத்தினர் தயாரித்த “சாரங்கதாரா’ படமும் படு தோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியை பற்றி கவலைப்படாமல் “நவீன சாரங்கதாரா’வின் கதை முடிவில் சில மாற்றங்களைச் செய்து படமாக்கினார் கே. சுப்ரமணியம். படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அடுத்து “உஷா கல்யாணம்’, “கிழட்டு மாப்பிள்ளை’ ஆகிய இரண்டு கதைகளை ஒரே திரைப்படமாக எடுத்து வெளியிட்ட கே. சுப்ரமணியம் அதைத் தொடர்ந்து தனது சொந்த நிறுவனத்தின் சார்பில் “பக்த குசேலா’ படத்தை எடுத்தார். இப்படத்தில் கிருஷ்ண பகவானாகவும், குசேலரின் மனைவியாகவும் இரு வேடங்களில் நடித்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

ஆண், பெண் ஆகிய இரு வேடங்களில் படம் முழுவதிலும் நடித்த ஒரே பெண்மணி இன்றுவரை எஸ்.டி. சுப்புலட்சுமி ஒருவர் மட்டுமே. குசேலர் பாத்திரத்திற்கு அன்று நடித்துக் கொண்டிருந்த எந்த நடிகரும் பொருந்த மாட்டார்கள் என்று சுப்ரமணியம் அவர்கள் கருதியதால் தான் ஏற்கனவே பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருந்த பாபநாசம் சிவன் அவர்களையே அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் ஒல்லிய தோற்றம், இடுங்கிய கண்கள், ஒட்டிய வயிறு ஆகியவைகள் குசேலராகவே அவரை சுப்ரமணியம் அவர்களின் கேமரா கண்களுக்கு அடையாளம் காட்டியுள்ளன. “”நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்ற நடிகர்களோ, நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்களோதான் சினிமாவில் நடிக்க தகுதியானவர்கள் என்றில்லை. கலை ஆர்வம் உள்ள எவராலும் நடிக்க முடியும்” என்ற கருத்தினைக் கொண்ட கே. சுப்ரமணியம் அவர்கள் திரை உலகின் எல்லா பிரிவுகளிலும் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர்.

பின்னாளில் தொடர்ந்து பல புது முகங்களை கே. சுப்ரமணியம் அவர்களைப் போலவே பல துறைகளிலும் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற திரைப்பட இயக்குனர்களுக்கு முன்னோடி என்றே அவரை குறிப்பிட வேண்டும். அவர் அறிமுகப்படுத்திய கலைஞர்களின் பட்டியலை பின்னால் பார்ப்போம்.

“பக்த குசேலா’வைத் தொடர்ந்து அவர் தயாரித்த “பாலயோகினி’ திரைப்படம் சீர்திருத்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அந்தத் திரைப்படத்தில் பிராமண விதவைப் பாத்திரம் ஒன்றில் நிஜ வாழ்க்கையில் விதவையாக இருந்த ஒரு பிராமண பெண்மணியையே நடிக்கச் செய்தார் அவர்.

அதனால் பழைமையில் ஊறிய சிலர் கூடி அவரை பிராமண ஜாதியைவிட்டு தள்ளி வைத்தனர். அதனாலெல்லாம் அவர் மனம் தளரவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவத்திற்குப் பிறகு மேலும் வேகமாகவும், அழுத்தமாகவும் சமுதாய சீர்திருத்தப் படங்களை எடுக்கத் தொடங்கினார். அவரை ஒரு “பிராமணப் பெரியார்’ என்றே சொல்லலாம் என்று “தமிழ்ப்பட உலகின் தந்தை’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வலம்புரி சோமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் உருவாகி வெளியான “பாலயோகினி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

திறமையான தொழில் நுணுக்கக் கலைஞர்கள், தரமான லாபரெட்டரி, படமெடுக்க எல்லா வசதிகளும் கொண்ட ஸ்டூடியோ இப்படி எல்லா சூழ்நிலையும் சாதகமாக அமைந்திருந்ததால் தனது முதல் படத்திற்குப் பிறகு ஆறு படங்களை கல்கத்தாவிலேயே தயாரித்த சுப்ரமணியம் அவர்களுக்கு சென்னையில் எல்லா வசதிகளும் அமையப் பெற்ற ஒரு ஸ்டூடியோவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எந்த ஒரு முடிவு எடுத்தாலும் அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள சுப்ரமணியம் சில தயாரிப்பாளர்களை கூட்டாக சேர்த்துக்கொண்டு இப்போது ஜெமினி பார்சன் அப்பார்ட்மென்ட், பார்க் ஹோட்டல், பார்சன் காம்ப்ளெக்ஸ் ஆகியவை உள்ள இடத்தில் “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற நிறுவனத்தை நிறுவினார்.

அவர் ஸ்டூடியோவை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடம் “ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் பெரும் காடாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் இந்த ஸ்பிரிங் கார்டன்ஸ் என்ற இடத்தில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயர் ஆட்சிக்கு இந்தியாவில் அடிகோலிய ராபர்ட் கிளைவ் ஆட்சி புரிந்ததாக கூறப்படுகிறது. ஸ்டூடியோவை நிறுவியதும் கல்கத்தாவிலிருந்து சைலன்போஸ், கமால்கோஷ் ஆகிய ஒளிப்பதிவாளர்கள், திரன்தாஸ் குப்தா என்ற லாபரெட்டரி நிபுணர், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளர், ஹரிபாபு என்ற ஒப்பனைக் கலைஞர் என்று பல திறமைசாலிகளை சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர்களில் பலர் அதற்குப் பிறகு சென்னை வாசிகளாகவே மாறி பல திரை படங்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். தனது சொந்த ஸ்டூடியோவில் தனது அடுத்த படமான “சேவா சதனம்’ திரைப் படத்தைத் தயாரித்தார் சுப்ரமணியம் அவர்கள்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த “சேவா சதனம்’ கதையின் மூலக்கதை ஒரு ஹிந்தி நாவல்.

அந்த நாவல் மொழி பெயர்க்கப்பட்டு “சேவா சதனம்’ என்ற பெயரில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது. இதை எந்த இடத்தில் கே. சுப்ரமணியம் அவர்கள் தயாரித்தாரோ அந்த “மோஷன் பிக்சர் புரொட்யூசர்ஸ் கம்பெனி’ என்ற ஸ்டூடியோவை பின்னாளில் வாங்கியவர் “ஆனந்தவிகடன்’ அதிபரான எஸ்.எஸ். வாசன் அவர்களே.

ஆகவே பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோ ஸ்தாபிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதலில் படமாக்கப்பட்ட கதையும் எஸ்.எஸ். வாசன் அவர்களின் ஆனந்த விகடனில் வெளியான கதைதான் என்பதை எண்ணிப் பார்க்கும்போது காலம் போகும் சில விசித்திர முடிச்சுகள் பற்றி வியக்காமல் இருக்க முடியவில்லை.

“சேவா சதனம்’ படத்தில் இந்தியாவின் இணையற்ற இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அறிமுகமானதைப் பற்றி அவரது வாழ்க்கைக் குறிப்பில் விரிவாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதால் அதைத் தவிர்த்துவிட்டு பெரும் புரட்சியைத் தமிழ்ப் பட உலகில் உண்டு பண்ணிய “தியாக பூமி’யைப் பற்றி அடுத்து பார்ப்போம்.

அந்தப் படம் உருவான விதம் குறித்து கீழ்க்கண்டபடி தனது “தமிழ் சினிமாவின் கதை’ என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் அந்த நூலின் ஆசிரியரான அறந்தை நாராயணன். “”டைரக்டர் கே. சுப்ரமணியமும், அப்போது “ஆனந்த விகடன்’ ஆசிரியராயிருந்த “கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள்.

தமிழிப் பத்திரிகை உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உருவாக்க இந்த நண்பர்கள் திட்டமிட்டார்கள். பாக்யராஜின் “மெüன கீதங்கள்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோதே படத்தின் ஃபோட்டோக்களுடன் “குமுதம்’ வார ஏட்டில் அதே கதை தொடர் கதையாக வெளி வந்ததே! நினைவிருக்கிறதா?

இந்தப் புதுமையைத் தமிழில் முதன் முறையாக செய்தவர்கள் டைரக்டர் கே. சுப்ரமண்யமும், கல்கி கிருஷ்ணமூர்த்தியும்தான். ஆனந்த விகடனில் தொடர் கதையாக வரத் தொடங்கியபோதே அந்தக் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வந்தது. திரைப்படத்தின் ஸ்டில் ஃபோட்டோக்களே தொடர் கதைக்கான படங்களாகப் பிரசுரிக்கப்பட்டன. சினிமாவுக்கென்றே அதுவும் எஸ்.டி. சுப்புலட்சுமி, பேபி சரோஜா, பாபநாசம் சிவன் ஆகிய நடிகர்களை மனதில் வைத்தே கல்கி இந்தக் கதையை எழுதினாராம்.

அந்தத் தொடர் கதைதான் திரைப்படமாக வெளிவந்த “தியாக பூமி’.
மே மாதம் 20-ஆம் தேதியன்று வெளியான “தியாக பூமி’ படம் நல்ல வெற்றி பெற்றது. தியாகபூமி புடவை, தியாகபூமி வளையல் என்றெல்லாம் பார்டர்களும், புடவைகளும், வளையல்களும் தோன்றின. அது மட்டுமல்ல, படத்தின் நாயகியான உமாராணி பேரிலும் பொருள்கள் விற்பனைக்கு வந்தன. “உமாராணி பார்டர், உமாராணி ஹேர் ஸ்டைல்’ ஆகியவையும் தோன்றின. பட்டிக்காட்டு சாவித்திரியாகவும், உமாராணியாகவும் இரு வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார் எஸ்.டி. சுப்புலட்சுமி.

“தியாக பூமி’ படத்தின் இறுதிக் காட்சிகளில் தேசியக் கொடியைக் கரங்களில் தாங்கியவாறு பெண்கள் ஊர்வலமாகப் போகிறார்கள்.

“”பந்தம் அகன்று நம் திருநாடு உயர்ந்திட வேண்டாமா?” என்று பாடியபடி அவர்கள் போகிறார்கள்.

சாவித்திரியின் இதயத்தில் இந்த ஊர்வலமும் இந்தப் பாடலும், புதிய உணர்ச்சியை, உத்வேகத்தை ஊட்டுகிறது.

தேசத்துக்காகப் பாடுபட புறப்படுகிறாள் சாவித்திரி.

“ஜெய ஜெய பாரதம்’ என்ற தேச பக்தர்கள் முழக்கத்துடன் போலீஸ்வேன் காராக்கிரகம் நோக்கிப் போகிறது.

“தியாக பூமி’ படத்தின் கதை இவ்வாறு முடிகிறது இந்தப் படம் ஓடலாமா? புகழ் பெறலாமா?

எனவே “தியாக பூமி’ படத்துக்கு தடையுத்தரவு தேடிவந்தது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அறந்தை நாராயணன்.

பிரச்சினைகளை எதிர்கொண்டே பழக்கப்பட்ட கே. சுப்ரமணியம் வெள்ளையர் ஆட்சி தடை விதித்தால் அடங்கி விடுவாரா? “தியாக பூமி’ படம் மக்களைச் சென்றடைய வேகமாக திட்டங்கள் வகுத்தார்.

cinemaexpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: