மனிதாபிமானம் மடிந்துவிட்டதா?
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்க பொருள்களுடன் படகில் புறப்பட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களிடமிருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதும் வியப்பை அளிக்கவில்லை. உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு இதுதான் வழி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இலங்கைவாழ் தமிழர் பிரச்னையில் பாராமுகமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு யதார்த்த நிலைமையைப் புரியவைப்பதற்கு இதைவிட வேறு வழியில்லை என்பதால், இந்த முயற்சியை நாம் ஓர் அடையாளப் போராட்டமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு நமக்கு நட்பு அரசு என்றும், நாம் இலங்கை அரசைப் பகைத்துக்கொண்டால் இன்னோர் அண்டை நாடு நமக்கு எதிராளியாகிவிடும் என்றும் நமது வெளியுறவுத் துறையினர் கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. பண்டாரநாயகே காலத்திலிருந்தே இலங்கை அரசு எந்தவொரு விஷயத்திலும் இந்தியாவுக்கு ஆதரவு நாடாக இருந்ததில்லை. உலகச் சந்தையில் ரப்பர் மற்றும் தேயிலையில் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாகவும் போட்டி நாடாக மட்டுமே இலங்கை தொடர்ந்திருக்கிறது. அதனால், இலங்கையின் நட்பு தேவை என்பதற்காக எல்லா விஷயங்களிலும் நாம் மௌனம் காக்க வேண்டிய அவசியம் கிடையாது.
தென் ஆசியாவில் மக்கள்தொகை அடிப்படையிலும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ பலத்தின்படியும் இந்தியாதான் வல்லரசு என்கிற ஞானோதயம் நமது ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்குமே இல்லை எனும்போது நமது வெளிவிவகாரக் கொள்கை எப்படித் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமையும்? இந்திராகாந்தியிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையும், தைரியமும் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம் காணாமல்போனதன் விளைவுதான் இப்போது உதவிப்பொருள்களைப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை மக்களுக்கு அனுப்ப முடியாத அவலநிலைக்குக் காரணம்.
வெளிவிவகாரக் கொள்கையை விட்டுவிடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானம் கூடவா இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று சரித்திரமும், நாளைய சந்ததியும் நம்மை எள்ளி நகையாடுமே என்று சிந்தித்துப் பார்க்கக்கூடவா நம்மால் முடியாமல் போய்விட்டது? 1957-ல் இலங்கையில் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது, உடனடியாக உதவிப்பொருள்களை அனுப்பி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவையும் 1987-ல் இலங்கை ராணுவத்தால் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு, இலங்கை அரசிடம் அனுமதி பெறாமலே உணவுப் பொட்டலங்களையும் உதவிகளையும் விமானம் மூலம் அனுப்ப உதவிய அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனையும் இன்று பதவியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
பசி, பட்டினி என்கிற கூக்குரல்கள் யாழ்வாழ் மக்களிடமிருந்து எழுகின்றன. சப்தம் கேட்கிறது. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. அங்கே பிரச்னையே இல்லை என்கிறது சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம். அது என்ன என்று மனிதாபிமான அடிப்படையில் கேட்கக்கூட ஆள் இல்லை. சரி, உணவுப்பொருள்கள், மருந்துகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அதை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு சேர்க்க அரசு உதவுகிறதா என்றால் அதுவுமில்லை. அதுதான் ஏன் என்று புரியவும் இல்லை.
தமிழ் உணர்வும், தமிழினத்தின் மீது அக்கறையும் இல்லாதவர்கள் பதவியில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமான அடிப்படையில்கூட செயல்பட முடியாத நிலையில்தானா மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்? தட்டிக்கேட்க வேண்டியவர்கள் கைகட்டி நிற்கும் நிலைமை வந்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே…