Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for செப்ரெம்பர் 12th, 2007

Parallel Prime Minister: Pranab Mukherjee – Neeraja Chowdhry

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2007

“இன்னொரு பிரதமர்’ பிரணாப் முகர்ஜி!

நீரஜா செüத்ரி

பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்; பிரதமருக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்த்துவைப்பவர்; இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், இடதுசாரிக் கட்சிகளுக்கும் பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றி, அரசு கவிழும் அபாயத்தில் தள்ளாடிக்கொண்டிருந்தபோது, இடதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவது அவர்தான் என்று கூறப்பட்டவர்; அவரது இத்தனை தகுதிகளையும் அங்கீகரிக்கும் வகையில்தான் “”இன்னொரு பிரதமர்” என்று கடந்த வாரம் குறிப்பிடப்பட்டார் அவர். அந்த அவர்தான் – மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இடதுசாரிகளின் வற்புறுத்தலை அடுத்து, அமெரிக்காவின் “ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு சமரச ஏற்பாடு செய்யப்படும் என்ற பேச்சு எழுந்தபோதே, அந்தக் குழுவின் தலைவராக பிரணாப்தான் நியமிக்கப்படுவார் என்பது தெளிவாகிவிட்டது. அரசியல் நெளிவு சுழிவுகளை அறிந்த அனுபவசாலி, தேர்தலுக்கு வழிவகுத்துவிடக்கூடிய அளவுக்கு முற்றிவிட்ட நெருக்கடியையும் தீர்க்கக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதால் அவர் அக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அரசியலிலும் நிர்வாகத்திலும் பிரணாப் மிகுந்த அனுபவசாலி. காங்கிரஸ் கட்சியில் வேறு யாருக்கும் இவ்வளவு அனுபவம் கிடையாது. இதற்கு ஒரே விதிவிலக்கு அர்ஜுன் சிங் மட்டும்தான். ஆனால், அர்ஜுன் சிங்கைப் போல தனி வழியில் போகாமல், பிரதமருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க முடிவு செய்துவிட்டார் பிரணாப். இப்போதைய அரசில் பல்வேறு முக்கியமான முடிவுகளெல்லாம் அமைச்சர்கள் குழுக்களின் மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 50 குழுக்களுக்குத் தலைமை வகித்திருக்கிறார் பிரணாப்.

மத்திய அமைச்சரவையில் இருக்கக்கூடிய எந்த அமைச்சரிடமும் கண்டிப்புடன் பேசக்கூடிய ஒரே தலைவர் ~ பிரதமர்கூட அல்ல ~ பிரணாப் முகர்ஜி மட்டும்தான். மத்திய அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரும் பொழுது, அதில் விவாதிக்கப்படக்கூடிய, தனது அமைச்சகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமல்லாமல், பிற அமைச்சகங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் படித்துவிட்டே வருகிறார் பிரணாப். அபார நினைவாற்றல் கொண்டவர் அவர்.

அதனால்தான், உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்க வேண்டுமென்றாலும் சரி, பஞ்சாப் ~ ஹரியாணா நதிநீர்ப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, மேற்கு வங்கத்தில் ரசாயன தொழில் பூங்காவை அமைக்க ஆதரவு அளிப்பதாக இருந்தாலும் சரி, அணுவிசைச் சட்டத்தைத் திருத்தும் யோசனையைக் கிடப்பில் போடுவதாக இருந்தாலும் சரி, அவை குறித்து முடிவு எடுப்பதில் மதிப்புமிக்க யோசனைகளை அவரால் கூற முடிகிறது.

சோனியாவின் மதிப்புக்கு உரியவராக அவர் இருக்கிறார் என்றால் அதற்கு வேறொரு காரணம் இருக்கிறது. காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், காங்கிரஸ் கட்சி இடதுசாரி~சார்பு~நடுநிலைமையை வகிக்க வேண்டியதன் அவசியத்தை அறிந்திருப்பவராவார்.

மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் தாராளமயமாக்கல் கொள்கையைச் செயல்படுத்துபவர்களாக இருந்தபோதிலும், கடந்த 3 ஆண்டுகளாக இடதுசாரிகளிடன் நட்புறவு கொண்டிருப்பதால் கட்சிக்குக் கிடைத்திருக்கும் பெயரானது, அந்த அவசியத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது. அதோடு, இடதுசார்பு தோற்றமானது, தேசிய அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக சோனியா காந்தி உருவாவதற்கும் உதவியிருக்கிறது. அவருக்கும் அது தெரியும்.

இவ்வளவு முக்கியமானவராக இருந்தபோதிலும், அரசியல் வட்டாரத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கும் வாய்ப்பு பிரணாப்புக்குக் கிடைக்காமல் போய்விட்டது. மத்திய உள் துறை அமைச்சராகவும் ஆக முடியாமல் போய்விட்டது.

அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பொழுதோ, பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுத் துறைக்கு ~ அதுவும், பத்து ஆண்டுகளுக்கு முன், நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த பொழுது கவனித்துவந்த ஒரு துறைக்கு ~ மாற்றப்பட்டுவிட்டார் பிரணாப். அரசை நடத்திச் செல்வதில் அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால், நிச்சயமாக இது அவருக்கு அளிக்கப்பட்ட கெüரவம் என்று கூற முடியாது.

2004-ல் அமைச்சரவையில் சேருவதற்கு முதலில் தயக்கம் காட்டினார் பிரணாப். பின்னர், உள் துறை அமைச்சர் பதவி ~ அதுதான் அவர் இன்னும் வகிக்காத பொறுப்பு ~ அளிக்கப்படும் என்று கூறப்பட்டதால், ஒப்புக்கொண்டார். ஆனால், பதவியேற்புக்கு ஒரு நாளைக்குமுன், “முக்கியமான பாதுகாப்புத் துறையைக் கவனித்துக்கொள்ள அவர் தேவைப்படுகிறார்’ என மன்மோகன் சிங் அவரிடம் தெரிவித்தார். துணைப் பிரதமராக பிரணாப் நியமிக்கப்படக்கூடும் என எழுந்த வதந்திகளுக்கும் பின்னர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சோனியா.

இதிலிருந்து தெளிவாகக்கூடிய உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி இல்லாமலும் இருக்க முடியாது; அதே நேரத்தில் அவருக்கு முக்கியமான பதவியையும் கொடுக்க முடியாது என்ற நிலையில் இருக்கிறது காங்கிரஸ். இரண்டாவது இடம் என்னும் தனது நிலையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தனது பலத்தைக் குறைத்துக் காட்டிக்கொண்டு, முதலாவது இடத்துக்கான வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டு இருக்கும் தலைவருக்குச் சிறந்த எடுத்துக்காட்டு பிரணாப் முகர்ஜி.

இரண்டாவது நிலைத் தலைவர்களில் விதிவிலக்காக இருந்தவர்கள் சர்தார் படேலும், எல்.கே. அத்வானியும் மட்டுமே; தம் பதவிக்கும் ஆபத்து ஏற்படாமல், மிகுந்த செல்வாக்குடனும் இருந்தவர்கள் அவர்கள்.

பிரணாப் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரல்ல; மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்; செல்வாக்குப் பெற்ற மக்கள் தலைவரும் அல்ல; அதனால், அவரை இந்திரா காந்திக்கு பிடித்திருந்தது. அவருக்கு இந்திரா ஊக்கமும் அளித்தார்.

இந்திய அரசியலில் உத்தரப் பிரதேசம் ஆதிக்கம் செலுத்திய காலம் அது. (மொரார்ஜி தேசாயைத் தவிர) பிரதமர்கள் எல்லாம் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வி.பி. சிங்குக்கு இரண்டாவது அந்தஸ்து அளித்து, 1985-ல் தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமித்ததுதான் ராஜீவ் காந்தி செய்த முக்கியமான தவறு என்று காங்கிரஸôர் நம்புகின்றனர். அதன் பிறகு பல சம்பவங்கள் நடந்தன; தூய்மையானவர் என்ற பெயரைப் பெற்ற வி.பி. சிங், 1989 தேர்தலில் ராஜீவைத் தோற்கடிக்கவும் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகியுள்ள போதிலும், 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது மக்கள் செல்வாக்கு குறைந்த தலைவர்தான் பிரணாப். இடதுசாரிகளின் மறைமுக ஆதரவில்தான் அவர் வெற்றி பெற்றார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

பிரணாப்பை பெருமளவுக்கு சார்ந்திருந்தபோதிலும், அவரை முழுக்க முழுக்க நம்ப சோனியா தயாராக இல்லை. சோனியாவை எதிர்பார்க்காமல் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடிய முக்கிய பதவி எதையும் அளித்தால், அது எதிர்விளைவை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற கவலை அவருக்கு.

இந்திரா காந்தி எதிர்கொண்டதைவிட வேறுபட்ட சூழ்நிலையைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் சோனியா. 1980-ளில் அரசியலின் உச்சத்தில் இருந்தவர் இந்திரா. சோனியாவோ தீவிர அரசியலில் நுழைந்து 9 ஆண்டுகள்தான் ஆகின்றன. அதோடு, இது கூட்டணி ஆட்சியின் காலம். யாரால் ஆபத்து ஏற்படாதோ, அவரே கூட்டணி அரசில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவராகிறார். ஐ.கே. குஜ்ரால், எச்.டி. தேவெ கெüட ஆகியோர் இதற்கு எடுத்துக்காட்டு. அவ்வளவு ஏன், மன்மோகன் சிங்கையே சோனியா அப்படித்தான் தேர்ந்தெடுத்தார்.

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தால், பிரதமர் பதவியை மன்மோகன் ராஜிநாமா செய்துவிடக்கூடிய ஒரு சூழ்நிலை கடந்த மாதம் நிலவியது. அணுசக்தி உடன்பாட்டை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லையெனில், தன்னால் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று கட்சித் தலைவர்களிடம் அவர் கூறியதாக நம்பப்படுகிறது. அச் சூழலில், பிரணாப் முகர்ஜி தலையிட்டு, இடதுசாரிகளையும் அமெரிக்காவையும் சமாளித்துவிட்டிருக்கக்கூடும். ஆனால், மன்மோகன் சிங் இல்லாமல் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிய சோனியா, அந்த உடன்பாட்டைக் கட்சி ஆதரிக்கும் என்ற உறுதியையும் அவருக்கு அளித்தார்.

எனவே, ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அனைத்து தர்மசங்கடங்களுடனும் வலிகளுடனும் “இன்னொரு பிரதமர்’ ஆக தொடர்ந்து நாள்களை ஓட்டிக்கொண்டிருப்பார் பிரணாப். காங்கிரஸ் கட்சியின் தன்மைகளை உணர்ந்த மூத்த தலைவராகையால், கட்சிக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தி, நட்வர் சிங் போல ஆகிவிடமாட்டார் என்பது மட்டும் நிச்சயம்.

Posted in Arjun, Chowdhry, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, Left, Manmohan, Mukherjee, Neeraja, PM, Pranab, President, Sonia | Leave a Comment »