பீதிïட்டும் குற்றங்களை செய்து வருகிறார்
ஜெயலலிதா மீது வழக்கு
கருணாநிதி எச்சரிக்கை
சென்னை, செப்.5-
`கிரிமினல் பிரிவுகளில் வழக்கை சந்திக்க வேண்டிய பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்’ என்று முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காழ்ப்புணர்ச்சி
கேள்வி:- ஜெயலலிதா அன்றாடம் வெளியிடும் அறிக்கைகளை கையெழுத்திட்டுத் தான் ஏடுகளுக்கு அனுப்புகிறார். அதிலிருந்து அவற்றுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்கிறார் என்றுதான் அர்த்தம். திருமுட்டம் பேரூராட்சியில் மருத்துவமனை ஒன்று கட்ட அவர் ஆட்சிக் காலத்தில் 2004-ம் ஆண்டு பணம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் அது கட்டி முடிக்கப்பட்ட பிறகும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தற்போது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருக்கிறாரே?
பதில்:- அந்தப் பேரூராட்சியில் கட்டப்பட்ட மருத்துவமனைக்கு 2004-ம் ஆண்டே நிதி ஒதுக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறிக் கொள்கிறார். அதற்குப் பிறகு இரண்டரை ஆண்டுக் காலம் அவர்தான் ஆட்சியிலே இருந்திருக்கிறார். அந்த மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு ஒன்றும் கோடிக் கணக்கிலே அல்ல. லட்சக்கணக்கிலே நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட வேண்டியதுதான். எனவே அவரது ஆட்சியிலேயே அதனைக் கட்டி முடித்து திறந்திருக்கலாம் அல்லவா? அதுமாத்திரமல்ல, அறிக்கை விடுவதற்கு முன்பு, முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தவர், இப்போதும் சில நாட்களில் பதவிக்கு வந்துவிடுவேன் என்று மக்களையெல்லாம் பயமுறுத்திக் கொண்டிருப்பவர் அந்தச் செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொண்டுவிட வேண்டாமா? திருமுட்டத்தில் உள்ள மருத்துவமனையை கடந்த 30-ந் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவில் நானே திறந்து வைத்த உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், காழ்ப்புணர்ச்சி என்றெல்லாம் ஜெயலலிதா கதை அளந்திருப்பது எப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்தி என்பதை மக்களே புரிந்து கொள்வார்கள்.
அ.தி.மு.க.வினரே சிரிக்கிறார்கள்
கேள்வி:- திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் சரியில்லை என்று கூறி அதற்காகவும் ஒரு போராட்டம் நடத்தும்படி ஜெயலலிதா விடுத்த அறிக்கை பற்றி?
பதில்:- திண்டிவனத்திலே உள்ள அ.தி.மு.க.வினரில் சிலரே அதிகாரிகளிடம் கூறும்போது இதைப்பற்றி சிரித்து விமர்சனம் செய்தார்களாம். ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்து அந்த நகராட்சியின் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு விசாரித்தால், அந்த ஆணையாளரே 1.9.2007 தேதியிட்டு கடிதம் எழுதியிருக்கின்றார். அந்தக் கடிதத்தில் “திண்டிவனம் நகரின் குடிநீர் விநியோகம் தென்பெண்ணை ஆறு கண்ரக்கோட்டை மற்றும் புளிச்சப்பள்ளம் ஆகியவைகளை நீர் ஆதாரமாக கொண்டதாகும். நகரில் தற்போதைய மக்கள் தொகை 67 ஆயிரத்து 737 ஆகும். தினசரி 35 லட்சம் லிட்டர் குடிநீர் ஒருநாள் விட்டு, ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது. தற்பொழுது நீர் ஆதாரத்தை பொறுத்தமட்டில் அதிகபட்சமாகவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குடிநீர் விநியோகத்தில் முந்தைய நிலையைவிட நகராட்சியால் முழு கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக செய்யப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஒரு சிலர் தேவையற்ற போராட்டத்தை தற்பொழுது அறிவித்துள்ளனர்” என்று எழுதியிருப்பதில் இருந்தே, இந்த அறிக்கை பற்றிய உண்மையையும் புரிந்து கொள்ளலாம்.
பயிர்க்கடன்
கேள்வி:- தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்று கூறி, அதற்காக போராட்டம் நடத்தச் சொல்லி ஜெயலலிதா கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ஒரு அறிக்கை விடுத்துள்ளாரே?
பதில்:- கடந்த 17.8.2007 அன்று இதே காரணத்தைக் கூறி, நாகப்பட்டினத்தில் போராட்டம் நடத்துமாறு கட்சிக்காரர்களுக்கு ஜெயலலிதா கட்டளையிட்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதற்கு விவரமாகவும், தெளிவாகவும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கூட்டுறவுத்துறை பொறுப்பை வகிப்பவருமான கோ.சி.மணி புள்ளிவிவரங்களோடு பதில் அளித்தார். ஆனால் ஜெயலலிதா அறிக்கைவிட்டதோடு தன் பணி முடிந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு, அந்தப் பதிலையே படிக்காமல், தற்போது தஞ்சை மாவட்டத்திலே அதே காரணத்திற்காகப் போராட்டம் நடத்துமாறு அறிக்கை விடுத்துள்ளார்.
7 ஆயிரம் கோடி கடன் ரத்து
அவர் தற்போது விடுத்துள்ள அறிக்கையிலே விவசாயிகளுக்கு இந்த அரசு எதுவும் நன்மைகளைச் செய்யவில்லை என்றும், பயிர்க்கடன் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லையா என்பதை விவசாயிகளே நன்கறிவார்கள். ஓரளவிற்கு பத்திரிகை படிப்பவர்கள் அனைவருக்கும் அது தெரியும். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில் விவசாயிகள் வாங்கியிருந்த சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை ரத்து செய்து ஆணையிட்டது. அ.தி.மு.க.வை சேர்ந்த பல விவசாயிகளே அந்தச் சலுகையை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவ்வாறு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய இயலாது என்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா, தி.மு.க. அரசின் இந்தச் சலுகைக்குப் பிறகு அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை. மாறாக ஓராண்டு கழித்து இப்போது பயிர்க்கடன் வழங்க வில்லை என்கிறார். அதுவாவது உண்மையா?
ஜெயலலிதா போராட்டம்
தி.மு.க. ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற 2006-07-ம் ஆண்டில் மட்டும், தமிழ்நாடு முழுவதிலும், கூட்டுறவு வங்கிகள், 6 லட்சத்து 31 ஆயிரத்து 283 விவசாயிகளுக்கு 1,251 கோடி ரூபாயை பயிர்க் கடனாக வழங்கியுள்ளது.
மீண்டும் இந்த ஆண்டு 2007-08-க்கு 1,360 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் புதிதாக வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் காலாண்டுக்காக, பங்குத் தொகை உதவியாக 188 கோடி ரூபாயும், வட்டியாக 58 கோடி ரூபாயும் அரசு வழங்கியுள்ளது.
இதுவரை இந்த ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 791 விவசாயிகளுக்கு 255 கோடி ரூபாய் பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா கூட்டுறவு பயிர்க்கடனே வழங்கப்பட வில்லை என்றும், விவசாயிகள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா போராட்டம் அறிவித்துள்ள தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் 2005-06-ம் ஆண்டு அவரது ஆட்சியில் அளித்த கூட்டுறவுக் கடன் 66 கோடி ரூபாய் மட்டும்தான்.
2006-07-ம் ஆண்டுக்கு இந்த மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் தி.மு.க. ஆட்சியில் 167 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவுக்கு விவசாயிகளைப் பற்றி அறிக்கைவிட எந்தத் தகுதியும் கிடையாது என்பதை இந்தப் புள்ளி விவரங்களே கூறும்.
தாமதம் இல்லை
கேள்வி:- ஜெயலலிதா விவசாயிகளுக்காக விடுத்த அறிக்கையில் விதை நெல் மற்றும் உரம் போன்றவை வழங்கப்படவில்லை என்கிறாரே?
பதில்:- நடப்பாண்டிற்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் 15 ஆயிரத்து 116 மெட்ரிக் டன் விதை நெல் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 33 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் விதை நெல் தமிழகம் முழுவதும் இருப்பில் உள்ளது. காவேரி டெல்டா பாசனப் பகுதியில் சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக இதுவரை 1 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதோடு, 58 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் கையிருப்பில் உள்ளது. அதனால் உரப் பற்றாக்குறை என்பதே இல்லை. விவசாயிகளுக்கு தேவையான உரமும், தரமான விதை நெல்லும் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எந்த விவசாயிக்கும் விதை நெல் வழங்குவதிலும் உரம் வழங்குவதிலும் தடையோ, காலதாமதமோ இல்லை என்பதை விவசாயிகள் அனைவரும் நன்கறிவார்கள்.
பயங்கரவாத எச்சரிக்கை
கேள்வி:- இவ்வாறு ஜெயலலிதா வெளியிடும் அன்றாட அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- “தமிழக காவல் துறை தலைவரை அணுகி, மத்திய உளவுப் பிரிவிடம் இருந்து பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் அந்த அதிகாரி, “நான் பொறுப்புக்கு வந்து 3 நாட்கள்தான் ஆகிறது. இது போன்ற தகவல்கள் என் கவனத்துக்கு வரவில்லை” என்றும் பதிலளித்திருக்கிறார். இவர் இதுவரை காவல் துறையில்தானே இருந்தார்? தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் வரும் தகவல்களைக் கண்டு மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள். உன்னிப்பாக இருக்கிறார்கள். கவனிக்கிறார்கள். ஆனால், காவல் துறைத் தலைவரோ விழிப்பாக இல்லை. முதல்-அமைச்சர் கருணாநிதியும் விழிப்பாக இல்லை. அப்படி என்றால் பொதுமக்கள் கதி என்ன? எண்ணிப் பார்க்கையில் அது பயங்கரமாக இருக்கிறது” என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை ஒரு பத்திரிகையில் வந்துள்ளது.
ஆனால் அதற்கு நேர்மாறாக மற்றொரு பத்திரிகையில் தீவிரவாதிகள் குறித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் திங்கட்கிழமை கூறியதாவது:-
“சென்னை போன்ற பெருநகரங்களில் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இரவில் வாகனங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து செல்லவும், சோதனைச் சாவடிகளை அமைத்துக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் மக்கள் அதிகமாகக் கூடும் வழிபாட்டுத் தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த இடத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. இதுகுறித்து எந்த விதமான தகவல் கிடைத்தாலும் போலீசார் மிகவும் முன்னுரிமை அளித்து தீவிரமாக செயல்படுவர். போலீசாரின் பட்டியலில் உள்ள தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தையும் போலீசார் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்” என்று வந்துள்ளது.
சட்டத்தை மீறும் செயல்
காவல் துறை தலைவர் ராஜேந்திரன் பற்றிய இரண்டு செய்திகளும் -இரண்டு பத்திரிகைகளில் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக வருவதற்குக் காரணம் என்ன?
இன்னொரு அபாண்டமானதும்
இட்டுக்கட்டியதுமான செய்தி!
“உளவுப் பிரிவு, உண்மையிலேயே செயல்பட்டு, அந்தத் தகவல் அறிக்கைகளாக வெளிவரும்போது, அதனை முதல்-அமைச்சருக்கு அளிக்கத் தேவையில்லை என்று உள்ளாட்சியும், உயர்கல்வியும் மற்றும் சில காகஸ் கும்பலும் மறித்து பிடுங்கி கிடப்பில் போட்டு விடுவதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன” என்பதாகும்.
இவ்வாறு கிரிமினல் பிரிவுகளில் வழக்கைச் சந்திக்க வேண்டிய, பீதிïட்டும் குற்றங்களை ஜெயலலிதா செய்து கொண்டே இருக்கிறார்- இப்படிச் செய்திகள் பரப்புவதும்; அவற்றை வெளியிடுவதும்; சட்டத்தை அலட்சியப்படுத்தி, அவற்றை மீறும் செயல்களாகும்.
ஆட்சியில் இல்லாத ஆத்திரம்
கேள்வி:- “ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டு வெடிப்பினை நிகழ்த்த 3 அல்லது 4 பயங்கரக் குழுக்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகவும், எந்த நேரத்திலும் குண்டுகள் வெடிக்கும் என்றும், அந்தக் குழுக்கள் தங்கள் மேலிடத்தின் உத்தரவுக்கு காத்திருப்பதாகவும் தகவல்கள் வந்து மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையில் கேட்டு – அந்த அறிக்கை பத்திரிகைகளில் எடுப்பாக வெளியிடப்பட்டுள்ளதே?
பதில்:- யானையின் மீது உட்கார்ந்து கொண்டு “ஈ” நினைத்துக் கொள்ளுமாம், அந்த யானையை அந்த ஈயே ஓட்டிச் செல்வதாக! அப்படித்தான் ஜெயலலிதாவும் நினைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் விமர்சிக்கிறார்; எல்லாவற்றிலும் தலையிட்டு “குட்டு” பெறுகிறார்; பாவம்-ஆட்சியில் இல்லையே என்ற அவஸ்தை! ஆதங்கம்! ஆத்திரம் -அதனால்தான் அன்றாடம் அறிக்கை!
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.