Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Primary Education – Tamil as a Language in Schools for youth

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

தமிழுக்கு இனி பொற்காலம்!

தமிழினியன்

தமிழர் வாழ்க்கை இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. தமிழர்கள் கணிசமாக வாழும் நாடுகளில் தமிழை விருப்பப் பாடமாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. குடியேறிய நாடுகளில் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு, சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இல்லை என்பது வேதனை மட்டும் அல்ல, அதிர்ச்சியும் அளிக்கிறது.

சிபிஎஸ்இ-ல் முதல் வகுப்பிலிருந்து விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது; மெட்ரிக் முறையிலும் உள்ளது. கேந்திரிய வித்யாலயங்கள் மட்டும் தமிழைப் புறக்கணிக்கின்றன. தமிழ்நாட்டில் – தமிழ் மாணவர்களுக்கு – தமிழ் சொல்லித் தராத பள்ளிகள் இருக்கத்தான் இருக்கின்றன. நாமும் இந்த நிலைமையைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேந்திரிய வித்யாலயங்களில் பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பயிற்சிக்கு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. இத்தகைய மாணவ, மாணவிகள் நாளைக்கு பெற்றோராகும்போது, அவர்களுடைய குழந்தைகளும் தாய்மொழியின் முக்கியத்துவம் அறியாமல்தானே வளர்க்கப்படும் நிலை ஏற்படும்!

தமிழர்களின் மனதைக் காயப்படுத்தும் நிகழ்கால உண்மை இது. இந்தச் சூழலில் “தமிழ் வளர்ந்தால் நாடு வளரும்’ என்று பேசுகிறோம்; செம்மொழி ஆய்வு நிறுவனம் அமைக்கிறோம்; தொல்காப்பியர், குறள்பீட விருதுகளின் மதிப்பை உயர்த்துகிறோம். ஆனால் இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுக்க நாம் சரியான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறோமா என்றால் – இல்லை.

தமிழ் இலக்கியங்களைத் தனது ஆதரவுப் பதிப்புகளாக வெளியிடச் செய்து வரும் ஓர் ஆன்மிகப் பெரியவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிக வருத்தமாகச் சொன்னார்: “சங்க இலக்கியங்களின் அருமை பெருமைகள் பற்றி நான் அடிக்கடி பேசி வருகிறேன். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது; ஏனென்றால் நம் தமிழகப் பள்ளிகளில் இப்போது தமிழை உரிய முறையில் சொல்லித் தருவதில்லை! என்பது அவரது ஆதங்கம்.

அந்த வருத்தமான உண்மையை அன்றைய கூட்டத்திலேயே காண முடிந்தது. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அரைநூற்றாண்டைக் கடந்தவர்களாகத்தான் இருந்தார்களே தவிர இளைஞர்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குக்கூட இல்லை.

ஆரம்பக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சர்வதேச மொழி ஆய்வாளர்களின் தீர்க்கமான முடிவு. இதை உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்திருக்கின்றன. அம் முறையை அங்கீகரித்தும் இருக்கின்றன. உலகம் ஏற்றுக்கொண்ட அந்த அறிவுபூர்வ உண்மை, தமிழ்நாட்டில் மட்டும்தான் போற்றப்படவில்லை. தமிழகத்தில் தமிழைக் கட்டாயப்படுத்தி முன்னர் ஒரு சட்டம் கொண்டு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலப் பள்ளிகள் அதற்கு நீதிமன்றத்தில் தடைவாங்கி விட்டன.

பிழைக்கும் வழியில் ருசி கண்டவர்கள், தமிழ்மொழி பிழைக்க வேண்டாம் என்று எண்ணியதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அதைவிட ஆச்சரியம், அவர்களின் போக்கைக் கண்டு அரசும் மெத்தனமாக இருந்ததுதான்.

தமிழ்… தமிழ் என்று வாய் ஓயாமல் பேசுகிறோம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கை முழங்கச் செய்கிறோம். இறைவணக்கத்துக்குப் பதிலாக தமிழ் வணக்கம்கூட பாடுகிறோம். ஆனால் மறுகணமே கொஞ்சமும் கூச்சப்படாமல் ஆங்கிலத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறோம்.

ஆங்கிலம் உலகப் பொதுமொழி என்பதும், அது செய்தி தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அவசியம் என்பதும் உண்மைதான். ஆனால் அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பமாக வேண்டிய அவசியம் இல்லை. ஆறாம் வகுப்பில்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும் – இரண்டாம் மொழியாக.

தமிழைப் போதனா மொழியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்று உலகம் முழுவதும் உயர்பதவி வகித்து வருகிறார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க, எல்.கே.ஜி.யில் நாம் ஆங்கிலம் படிக்க ஆசைப்படுவது ஏன்? சூழ்நிலையால் இது தூண்டிவிடப்பட்ட ஆசை. யாரால் தூண்டப்பட்டது? வியாபாரம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளிகளால். அவர்களால்தான் தமிழ்ப் பெற்றோர்கள் மம்மி, டாடி என்ற மாயையில் மதி மயங்கி விட்டார்கள். எனவே இந்த மாயச் சூழல் உடனடியாகப் போக்கப்பட வேண்டும். அதற்கு அரசு மனது வைத்தால்தான் முடியும். அதற்கான ஒரேவழி, ஐந்தாம் வகுப்புவரை தமிழைத்தவிர வேறு எந்த மொழியையும் எந்தப் பள்ளியும் சொல்லித் தரக்கூடாது என்ற விதியைக் கொண்டு வரலாம்.

தமிழகத்திலுள்ள வேற்றுமொழிக்காரர்கள் நகரங்களில்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் தமிழ் கட்டாயம்தான். ஆனால் அவர்கள் தங்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாகக் கற்றுக் கொள்ளலாம். இந்த மொழியிலான மதிப்பெண்கள் கல்வித்திட்டத்தின் அடிப்படையிலான பாடங்களின் மொத்த மதிப்பெண்களில் சேராது. இந்த வசதி பிராந்திய மொழிப் பிள்ளைகளுக்கு மட்டுமே உள்ளது. விருப்பப்பாடம்தானே என்று தமிழ்க் குழந்தைகளுக்கு எக்காரணம்கொண்டும் அந்த வசதியை அளித்துவிடக் கூடாது.

தாய்மொழி அறிவு இளமையிலேயே விதைக்கப் பெற்றால்தான் மொழி அறிவு வளம்பெறும். பிறமொழி கற்க அது துணையாக அமையும்; உலக ஞானமும் பொது அறிவும் விரிவடையும்.

குழந்தைகளுக்கு தோட்டத்தில் காணும் பட்டாம்பூச்சி ஐந்தாம் வகுப்பு வரை பட்டாம்பூச்சியாகவே இருக்கட்டும். யானையை யானை என்றும் குதிரையை குதிரை என்றும் அவர்கள் சொல்லட்டும். ஐந்தாம் வகுப்பைக் கடந்த பிறகு, “இ’ ஃபார் எலிஃபண்ட்’ எனச் சொல்லித் தருவோம். அப்போதுதான் தமிழில் யானை, ஆங்கிலத்தில் “எலிஃபண்ட்’ என்பது தெளிவாகும்.

அதைவிட்டு, கீழ் வகுப்பில் “எலிஃபண்ட்’ என்று படித்துவிட்டு வரும் குழந்தைக்கு “தெருவில் யானை வருகிறது பார்’ என்றால் அது என்ன என்று தெரியாமல் குழப்பத்தால் குழந்தை திகைக்கக் கூடும்.

புத்தகத்தில் உள்ள படத்தைக் காட்டி இது “கேட்’ என்றால், இந்தப் பிராணியை கேட் என்றுதான் சொல்ல வேண்டும்; “கேட்’தான் அப் பிராணிக்குரிய சொல் என்று பிஞ்சு மனதில் பதிவாகிவிடுகிறது. பூனையைத்தான் ஆங்கிலத்தில் “கேட்’ என்கிறோம் என்பது அக் குழந்தைக்குத் தெரியாது. இதனால் தமிழ்க் குழந்தைக்கு பூனை அன்னியமாகி விடுகிறது. இப்படி அடுத்தடுத்து குழந்தை மனதில் ஆங்கில வார்த்தைகள் பதிவானபின், தமிழ் புகுத்தப்படுவதாய் எண்ணி, தமிழை அறிந்து கொள்ளத் தடுமாறுகிறது.

இத் தடுமாற்றம் நமக்கும் இருந்ததாலோ என்னவோ இதுநாள்வரை வாளா இருந்துவிட்டோம். இப்போது நீதிமன்ற உத்தரவு கிடைத்துவிட்டது. இனிமேலாவது நாம் இதை மனப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டும்.

அரசின் பெரும்பாலான திட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும் தமக்குத் தாமே சரியான தெளிவின்மையாலும் செயலிழந்துவிடுகின்றன.

அந்த அவல நிலை இனி தமிழுக்கு வரக் கூடாது. தமிழ் வாழ்க என்பது அலங்கார மேடைப்பேச்சாக இல்லாமல், மனப்பூர்வமாகத் தமிழை வாழ வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழர்களும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.

(கட்டுரையாளர்: ஆலோசகர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்).

————————————————————————————————-
தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம்

வி.என். ராகவன்

திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது.

ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம்.

இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலைதான்.

ஆனால், அரசு உதவி பெறும் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

சில தன்னாட்சிக் கல்லூரிகளில் வாரத்துக்கு 5 மணி நேரம் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் வாரத்துக்கு 4 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, இயற்பியல், வேதியியல், கணிதம், வணிகவியல் போன்ற பிரதான பாடங்கள் நடத்தப்படுகின்றன. பிரதான பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான் மாணவர்களின் மேல் படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் கை கொடுக்கும் என்பதே இதற்குக் காரணம் என்கின்றன தன்னாட்சிக் கல்லூரி வட்டாரங்கள்.

ஆனால், இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படுவது ஒட்டுமொத்தமாகவே கைவிடப்பட்டாலும் வியப்பதற்கில்லை என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

தமிழ் பயில்வதற்கான வாய்ப்புகள் குறைந்தால், வருங்காலத்தில் தாய் மொழியான தமிழ், தமிழர் பண்பாடு போன்றவை மாணவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறைக்கப்படுவது அரசுக்கே தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் நிலையை முழுமையாகக் கண்டறிவதற்கு ஒரு குழு அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். இதில், பயிற்றுவிக்கும் கால அளவு குறைந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள் பேரமைப்பினர்.

இந்தக் கால அளவு குறைப்பால், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்த் துறைகளில் ஆள் குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

குழு அமைப்பு: இதுபற்றி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ கூறியது:

“கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவைக் குறைக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. இதுதொடர்பாக அரசு குழு அமைத்துள்ளது. இதில் நானும் இடம்பெற்றுள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உள்பட்ட கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு குறையாது. தமிழக அளவிலும் கல்லூரிகளில் குறைக்க விடமாட்டோம். எனவே, தமிழ்ப் பேராசிரியர்கள் கவலைப்படத் தேவையில்லை’ என்றார் பொன்னவைக்கோ. தன்னாட்சிக் கல்லூரிகளில் முடிவு எடுப்பதற்கான உரிமை நிர்வாகத்துக்கு உள்ளதால், மொழிப்பாடத்தில் கை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. மொழிப் பாடம் பயிற்றுவிப்பதற்கான கால அளவைக் குறைக்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழுவே விதிமுறையை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் தமிழ்ப் பேராசிரியர்கள்.

4 பதில்கள் -க்கு “Primary Education – Tamil as a Language in Schools for youth”

  1. என்ன நீதிமன்ற உத்தரவு கிடைத்தது? இந்த கட்டுரை எப்போது எழுதப்பட்டது?

  2. bsubra said

    இந்த சுட்டி: Welcome to Dinamani.com

  3. […] இந்த மாதிரி தூய தமிழில் பாடங்களைக் கோரும் மாதிரி தமிழறிஞர் கட்டுரை: தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்க… […]

  4. bsubra said

    Thinnai: “உயர் கல்வி: அரசு,தனியார்,சிறுபான்மையினர் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: