Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Bhutan – M Manikandan: Requirement for Democratic Elections

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 4, 2007

பூடான்: தேவை மக்களாட்சி

எம். மணிகண்டன்

இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துமே சமூக, பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கியவையே. இந்த நாடுகள் பின்தங்கியிருப்பதற்கு முழுமையான மக்களாட்சிக் கொள்கையும், உயர்வான அரசியல் சட்டமும் இல்லாததே காரணம் எனலாம்.

இதற்கு அண்மைக்கால உதாரணமாக பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் ஆட்சியாளர்களால் அரசியல் சட்டம் முடக்கப்பட்டிருப்பதைக் கூறலாம். இலங்கையில் மோசமான பிரதிநிதித்துவக் கொள்கைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. நேபாளத்தில் மக்களாட்சிக்கான அடிப்படை மாற்றங்கள் 1990-களிலேயே நடக்க ஆரம்பித்து விட்டாலும்கூட இன்றைக்கும் அங்கு அரசியல்சட்ட குளறுபடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மியான்மரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்களாட்சியே தெரியவில்லை. மாலத்தீவு மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்தச் சூழலுக்கு அப்பாற்பட்டவை.

ஒவ்வொரு நாடும் இந்தியாவைப் பார்த்து அப்படியே பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயம், இந்தியாவின் அரசியல் சட்டம்தான். நாடாளுமன்ற நடைமுறைகள், மத்திய மாநில உறவுகள் பற்றி இந்திய அரசியல் சட்டம் நெகிழ்வுத் தன்மையுடன் வரையறுத்ததுபோல் வேறு எந்த நாட்டுச் சட்டமும் வரையறுக்கவில்லை. அவசரநிலைக் காலம் தவிர, மற்ற காலங்களில் இந்திய அரசியல் சட்டம் மக்களாட்சியைத் தாங்கிப் பிடித்துள்ளது.

இந்தியாவின் பேச்சை அப்படியே கேட்கும் அண்டை நாடுகள் நேபாளமும், பூடானும்; இந்த இரண்டு நாடுகளும் அருகே அமைந்திருப்பதால்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன என்பது அயலுறவுக் கொள்கைகளை வகுப்பவர்கள் மத்தியில் நிலவும் கருத்து. இதில் நேபாளம் கடந்த சில ஆண்டுகளாக சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதும், நிதியுதவிகளைப் பெறுவதும் என இந்தியாவை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவின் அன்புக் “கட்டுப்பாட்டில்’ இருப்பது பூடான் மட்டுமே. பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தாலும், இன்றும் பண்பாட்டை விட்டுக் கொடுக்காத நாடு. 90-களின் இறுதியில்தான் பூடானில் தொலைக்காட்சி மற்றும் இணைய சேவைக்கே அனுமதி கிடைத்தது. பூடான் மன்னர் கடவுளாகப் போற்றப்படுகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகிய 4-வது மன்னர் ஜிக்மே சியாங் வாங்சுக் மக்களாட்சிக்கான வழித்தடங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். பதவிக் காலம் முடியும்வரை மன்னரை யாரும் கேள்வியே கேட்க முடியாது என்ற நிலையை மாற்றும் வகையில் நாடாளுமன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கான முன்னுரையை எழுதினார்.

நாடாளுமன்றம் நினைத்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் மன்னரையே நீக்க முடியும் என்பதுதான் ஜிக்மே சியாங் செய்த அதிரடி நடவடிக்கை.

அவருக்குப் பின் மன்னராகப் பதவியேற்ற அவரது மகன் ஜிக்மே கேசர் வாங்சுக்கும் தந்தையின் வழியிலேயே மக்களாட்சிக்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். அதன் ஒருகட்டமாக கடந்த மே மாத இறுதியில் மாதிரி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும் பொருட்டு இடைக்கால அரசின் பிரதமர் கூடப் பொறுப்பேற்று விட்டார்.

இங்கு வேடிக்கை என்னவெனில் இங்குள்ள மக்களுக்கு மக்களாட்சி, தேர்தல் பற்றி கொஞ்சமும் தெரியாமல் இருப்பதுதான். தேர்தல் நடைமுறைகள் பற்றி அரசே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற மாதிரித் தேர்தலில்கூட மக்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் நடத்துவதற்குள் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

உங்களுக்கு பொருளாதாரச் சீர்திருத்தங்களும், சமூக மாற்றங்களும் தேவையா என்று பூடானில் யாரையாவது கேட்டால், மன்னராட்சியில் எங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். மக்களாட்சியை மக்களே விரும்பவில்லை என்பது இந்த நாட்டைப் பொருத்தவரை உண்மைதான் என்றாலும், இது அறியாமைதான்.

சுமார் 23 லட்சம் மக்கள்தொகை கொண்ட பூடானில் வெளியுறவுக் கொள்கை ஒன்றும் சொல்லிக் கொள்வதுபோல் இல்லை. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவே கையாண்டு வருவதாகக் குற்றச்சாட்டு வேறு. சீனா திபெத்தைக் கைப்பற்றிய பிறகு, பாதுகாப்புக்காக இந்தியாவிடம் ஒட்டிக் கொண்டது பூடான். அந்நாட்டுக்கு உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை என்பதும் நிஜம்தான்.

அமெரிக்க-பூடான் உறவைக் கண்காணிக்கும் பணியைக் கூட இந்தியாதான் செய்துவருகிறது. பூடான்-இந்தியா இடையே பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் விசா தேவையில்லை என்பது வேறு விஷயம். மக்களாட்சி மலர்ந்தால் இந்நிலை நிச்சயம் மாறிவிடும்.

கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்தற்காக மக்களாட்சியை மறுப்பது நியாயமில்லை. எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மேற்கத்திய நாகரிகம் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில் எந்த ஆசிய நாடும் இதுவரை வெற்றி பெறவில்லை. மக்களாட்சியை உருவாக்கி அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைவது ஒன்றே, இந்தக் காலகட்டத்தில் அறிவுபூர்வமான செயலாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: