Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: