Arulmigu Vadapazhani Thandayuthapani Temple consecrations
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007
12 வருடத்துக்குபின் வடபழனிகோவில் கும்பாபிஷேகம்: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சென்னை, ஆக. 30-
தமிழகத்தில் உள்ள முக்கிய மான முருகப்பெருமான் தலங்களில் சென்னை வடபழனியாண்டவர் தலமும் ஒன்று. பிரசித்தி பெற்ற இத்தலத்தில் சமீபத்தில் ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. ராஜகோபுரங்கள், அனைத்து சந்நிதிகளும் பழுது பார்க்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. மதில் சுவர்கள் மெருகூட்டப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டன. அழகூட்டப் பட்டன. திருக்குளமும் சீர் செய்யப்பட்டது.
திருப்பணிகள் நடை பெற்றதையொட்டி இன்று காலை வடபழனியாண்டவர் ஆலயத்தில் 12 ஆண்டு களுக்குப்பிறகு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலையில் 6-வது யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் 7.55 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. சரியாக 9 மணிக்கு மூலவர் சந்நிதி கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது. பக்தர்கள் மீது ஸ்பிரேயர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடபழனி முருகன் கோவிலில் திரண்டிருந்தனர். கோவிலில் ஆரம்பித்து ஆற்காடு மெயின்ரோடுவரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நீன்று சாமிதரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவில் வளாகம் எங்கும் அரோகரா கோஷம் கேட்டுக்கொண்டபடி இருந்தது.
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக பலத்த பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரன், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஏராளமான போலீசார் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மெட்டல் டிடெக்டர் வைத்து பக்தர்கள் சோதனையிட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், மேயர் மா.சுப்பிர மணியன், அறநிலையத்துறை செயலாளர் ராஜேந்திரன், கமிஷனர் பிச்சாண்டி, இணை கமிஷனர் தனபால், துணைகமிஷனர் பரஞ்சோதி, கோவிலின் அறங்காவலர் குழுதலைவர் சீர்காழி சிவசிதம்பரம், அறங்காவலர்கள் கண்மணி சீனிவாசன், கண்ணப்பன் உள்பட ஏராளமானேர் விழாவில் கலந்து கொண்டனர்.
முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு வசதியாக கோவிலின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடை சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் அமர்ந்திருந்தவர்கள் காயம் இன்றி தப்பினர். பின்னர் மேடை சரிசெய்யப்பட்டது.
—————————————————————————————————
வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது
30 ஆகஸ்ட் 2007
10:29 IST
சென்னை அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயில் 4-வது ஆண்டு கும்பாபிஷேகம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
கோயிலின் ராஜகோபுரம், உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 27ம் தேதியன்றே யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இதற்காக 108 யாகசாலை ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று 4 மற்றும் 5ம் கால யாக பூஜையும், இன்று காலையில் 6ம் கால பூஜைகளும் நடைபெற்றன.
இதையடுத்து சரியாக காலை 9 மணியளவில் திருக்குட முழுக்கு நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் முருகா சரணம், சரவணா சரணம், வடபழனி ஆண்டவா போற்றி என கந்தரின் நாமங்களை விண்ணதிர கூறி பக்தி முழக்கமிட்டனர்.
கும்பாபிஷேகத்தின் போது தெளிக்கப்படும் யாகசாலையில் வைக்கப்பட்ட தண்ணீர் தங்கள் மீது விழ வேண்டும் என்ற பக்தர்களின் ஆர்வத்தை போக்கும் வகையில் தண்ணீரை சுழன்று பீய்ச்சியடிக்கும் ஸ்பிரிங்லர்ஸ் கருவி கோயில் மேல் அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கருவி மூலம் கூடியிருந்த கூட்டத்தினர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்ததும் விமானம் மூலமாக கோயிலின் மேல்பகுதியில் இருந்து பூக்கள் தூவப்பட்டது இந்த கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சமாக விளங்கியது.
கும்பாபிஷேகத்தையொட்டி வாகனங்கள் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
—————————————————————————————————
Vadapalani Murugan kumbabishekam « Manoranjitam said
[…] முருகன் கோவிலுக்கு இன்று(30-Aug-2007) கும்பாபிஷேகம். சுமார் ஒன்றரை கோடி […]