Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 30th, 2007

Murder sparks violence in Haryana town: Dalit-Jat fight breaks out in Sonepat

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

தலித் இளைஞர் கொலை: ஹரியாணாவில் வன்முறை

கோஹணா, ஆக. 30: ஹரியாணா மாநிலத்தில் மேலும் சில ஊர்களில் தலித் இளைஞர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.

ராகேஷ் லாரா என்ற தலித் இளைஞர், முன்விரோதம் காரணமாக கோஹணா என்ற ஊரில் கடந்த திங்கள்கிழமை இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 ஆகஸ்ட் 27-ம் தேதி பல்ஜீத் சிவாச் என்ற ஜாட் சமூகத்தைச் சேர்ந்த லேவாதேவிக்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ராகேஷ் லாரா முக்கிய எதிரியாகக் குறிப்பிடப்பட்டார்.

ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது.

கடந்த திங்கள்கிழமை இரவு விக்கி என்ற நண்பருடன் அவர் பைக்கில் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சுட்டுக்கொன்றது. இதை அடுத்து தலித் இயக்கங்கள் கூடி பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தின. கொலைகாரர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

புதன்கிழமை கோஹணாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக சீரடைந்தது. ஆனால் கர்னால், பிவானி போன்ற ஊர்களில் வன்செயல்களும் மோதல்களும் தொடர்ந்தன.

ராகேஷின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தேசியக் கமிஷன் தலைவர் பூட்டா சிங், வால்மீகி சமாஜத் தலைவர் தசரத் ரத்தன் ராவண், நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸ் அதாவாலே ஆகியோர் அக்கிராமங்களுக்குச்சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர். போலீஸôர் அத்துமிறீ நடந்ததாகக் கூறி கண்டித்தனர்.

ஹரியாணா மாநிலம் முழுக்க புதன்கிழமை முழு அடைப்பு நடத்த தலித் இயக்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன. அதனால் சில ஊர்களில் போலீஸôருக்கும் தலித் இளைஞர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

கர்னாலில் தடியடி: கர்னாலில் தேசிய நெடுஞ்சாலையில் தலித் இளைஞர்கள் மறியல் செய்ததால் அவர்களைக் கலைக்க போலீஸôர் லேசாக தடியடி நடத்தினர். அதில் 5 இளைஞர்கள் காயம் அடைந்தனர். இளைஞர்களில் சிலர் போலீஸôர் மீது கல் வீசினர். வாகனங்களையும் தாக்க அவர்கள் முற்பட்டனர்.

சோனேபட்டில் அமைதி: சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்த கோஹணா அமைந்துள்ள சோனேபட் மாவட்டத்தில் புதன்கிழமை சகஜநிலைமை நிலவியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. கல்வி நிலையங்கள், வங்கிகள், பிற நிறுவனங்கள் செயல்பட்டன. போலீஸôர் கோஹணா நகரில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிவானி நகரில் பழைய பஸ் நிலையம் அருகில் கல்வீச்சில் ஈடுபட்ட தலித் இளைஞர்களைக் கலைக்க போலீஸôர் தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். பிவானியில் முழு அடைப்புக்கு முழு ஆதரவு இருந்தது.

யமுனா நகர் என்ற இடத்தில் பைக்குகளில் சென்ற தலித் இளைஞர்கள் எதிர்ப்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

அம்பாலா நகரிலும் அம்பாலா கன்டோன்மென்டிலும் தலித்துகள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

சர்க்கி தாத்ரி என்ற ஊரில் தலித்துகள் ஊர்வலமாகச் சென்று தங்களுடைய கோரிக்கை அடங்கிய மனுவை சார்பு-கோட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

கைதால் நகரில் தலித்துகள் விடுத்த முழு அடைப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை.

பக்வாரா நகரில் தலித்துகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் மாவட்ட அதிகாரிகள் அவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி, அழைப்பைத் திரும்பப்பெற வைத்தனர். பிறகு தலித்துகள் சாலையில் அமர்ந்து போக்குவரத்தைத் தடுத்தனர். அதிகாரிகள் மீண்டும் பேசி அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

பஸ் எரிப்பு: ஹிஸ்ஸôர் மாவட்டத்தின் ஹான்சி நகரில் தலித் இளைஞர்கள், அரசு பஸ்ஸýக்கு தீ வைத்தனர். பஸ் ஊழியர்களே அதை அணைத்தனர். ஹிஸ்ஸôரில் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் திறந்தே இருந்தன. பஸ்கள் வழக்கம்போல ஓடின.

Posted in Caste, Community, Dalit, Haryana, Jat, Murder, Punjab, Sonepat, Violence | Leave a Comment »

Se Ku Thamizharasan – Panchami Lands: Dalit empowerment & Self sufficiency

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

“பஞ்சமி நிலம்’-தேடலும் தீர்வும்!

செ.கு.தமிழரசன்

பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்…, பஞ்சமி நிலம் பற்றிய வெள்ளை அறிக்கை தேவை…, பஞ்சமி நில மீட்பு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முழக்கங்களை தலித் இயக்கங்களின் போராட்டங்களில் அதிகமாகக் கேட்கலாம். கழகங்கள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என பல தரப்பிலும் பஞ்சமி நிலத்தைப் பற்றி பேசத்தான் செய்கிறார்கள். தேர்தல் அறிக்கைகளிலும் பஞ்சமி நிலம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பஞ்சமி நிலத்தின் பின்னணியைப் பார்ப்பது அவசியம்

“இந்தியா’-என்றொரு நாடு இல்லாமலிருந்த காலகட்டம் அது. புரோகிதத் தொழில் புரியும் பிராமணர்களுக்கு கையடக்க நிலம் கொடுத்த நிலை வளர்ந்து, கிராமத்தையே தானமாகக் கொடுக்கும் நிலை வந்தது. இதற்கு “சதுர்வேதி மங்கலம்’ என்னும் நாமகர்ணம் சூட்டப்பட்டது. இது பின்னர் மதியூகி மந்திரிகளுக்கும் மண்ணுரிமை என்று விரிந்து, இறுதியில் அரசனுக்குப் பிடித்த புலவனுக்கும் போய்ச் சேர்ந்து. இதற்கு ஆதாரமான கல்வெட்டுகள் உள்ளன.

1600-ல் தான் லண்டனில் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது. 1611-ல் மசூலிப்பட்டணத்தில் தனது வணிகக் கிளையைத் தொடங்கிய கம்பெனி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிலங்களை- ராஜ்ஜியங்களை விலைக்கு வாங்கிச் சேர்த்த தொடர்பணியில் 1641-ல் சென்னை ஜார்ஜ் கோட்டையை கட்டியது. வியாபாரக் கம்பெனி வாங்கிப்போட்ட ராஜ்ஜியத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்ட நிலவரியை வசூல் செய்து, அதற்கு நிர்வாக ரீதியான சில ஏற்பாடுகளையும் செய்து கொண்டது. அதற்கான ஆட்களையும் நியமித்தது. அந்த வகையில் “ஜாகிர்தாரி முறை’ அமலுக்கு வந்தது.

இந்நிலையில், கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமான இந்திய நிர்வாகத்தை பிரிட்டிஷ் பேரரசு தனது நேரடி அதிகாரித்துக்கு 2.8.1858-ல் மாற்றிக்கொண்டது. அதன் பின்னர் ஏற்பட்ட நிர்வாகச் சீர்திருத்தத்தில் நிலச்சீரமைப்பும் மாற்றம் பெற்றது.

சதுர்வர்ண சாதிய அமைப்புக்கு அப்பாற்பட்ட “அவர்ணா’ என்ற மக்கள் திரள் எவ்வித மனித உரிமையுமின்றி, ஊருக்குப் புறத்தே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு எண்ணற்றத் தடைகளைப் போட்டு, கொத்தடிமைகளை விடக் கேவலமாக தீண்டாமைக் கொடுமைக்குள் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் பள்ளு-பறை பதினெட்டு சாதி என்று குறிப்பிடப்பட்டாலும் “பஞ்சமர்’ என்ற ஒரு பெயருக்குரியவர்களானார்கள். இவர்களுக்கான மனித உரிமை வேண்டி, பண்டிதர் அயோத்திதாசர் முதல் எண்ணற்ற தலைவர்கள் போராடிக்கொண்டிருந்தார்கள்.

இதையடுத்து பிரிட்டிஷ் அதிகாரிகள் இரக்கம் காட்டத் தொடங்கினர். அதில் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவர், அன்றைய செங்கல்பட்டு ஜில்லா கலெக்டராக இருந்த “ட்ரிமென்கிரி’ என்பவர். இவர் இம் மக்களின் அன்றாடத் துயரங்களை ஆராய்ந்து, அதற்கு வடிகாலாக இவர்களுக்கு நிலமான்யம் வழங்க வேண்டிய அவசியத்தை மேலிடத்தில் வலியுறுத்தினார்.

அதன் விளைவாக 1891-ம் ஆண்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பஞ்சமர்களுக்கு நிலம் கொடுக்கும் பிரச்னைக்கு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான அரசாணை எண்.1010, 30-9-1892-ல் வெளியானது. இதனடிப்படையில் சென்னை மாகாண பிரிட்டிஷ் அரசு, பஞ்சமர்களுக்கு டி.சி.லேண்ட் என்ற பெயரில் நிலங்களைப் பகிர்ந்தளித்தது. இதுவே “பஞ்சமி நிலம்’ என்று பெயர் பெற்றது. இந்நிலங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டன.

நிலம் பெற்ற பத்தாண்டுகளுக்குள் அதை எவருக்கும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ கூடாது. அப்படிச் செய்தால் அது செல்லுபடியாகாது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் அந்நிலத்தை பஞ்சமர்களுக்குள்ளே மட்டும் குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ, தானம் கொடுக்கவோ, விற்கவோ செய்யலாம்.

இத்தகைய கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும் காலப்போக்கில், என்னதான் நிலமிருந்தாலும் அதில் பயிர் விளைவிக்கும் அனைத்து வசதிகளுக்கும் அந்நியரையே சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இம்மக்களின் வாழ்நிலை அமையப்பட்டிருந்தால் சுலபமாக வஞ்சிக்கப்பட்டனர். அதனால் இவர்களின் நிலங்களை அந்நியர்கள் கைப்பற்றினர். சிலர் வறுமையினால் ஏமாற்றப்பட்டு அதன் விளைவாய் விற்றனர்.

இந்த இழிநிலையைக் கண்ணுற்ற சமுதாயத் தலைவர்கள் ரெட்டைமலை சீனிவாசன், சிவராஜ், எம்.சி.ராஜா போன்றவர்கள் மீண்டும் உரிமை மீட்க வாதாடியதால், 1933-ல் பஞ்சமி நிலங்களுக்கான பட்டாக்களை புதுப்பித்து வழங்கியது பிரிட்டிஷ் அரசு. மேலும் விதிமுறையை வலியுறுத்தி நிலையான அரசாணை 1.10.1941-ல் வெளியிட்டது.

ஆனாலும் பஞ்சமி நிலங்கள் அப்பாவி மக்களிடமிருந்து பறிமுதலாவதை முற்றிலுமாய் நிறுத்த முடியவில்லை. செங்கை மாவட்டத்தில் காரணை, கிராமத்தில் தலித் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை 10-101994-ல் சந்திக்க வந்த தலித் மக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால், இரு இளைஞர்கள் பலியானார்கள். இதையொட்டி கண்டனக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்று தலித் இயக்கங்களால் தமிழகமெங்கும் நடத்தப்பட்டன.

இன்றைய நிலையில் “பஞ்சமி நிலம்’ பல கை மாறியிருக்கும். ஆனாலும் மூலப் பத்திரத்தை பார்ப்பது என்பது கடினமல்ல. ஏனெனில், நிலங்களைப் பற்றிய நிலையான பதிவேடுகள் சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஓட்டு மொத்த பஞ்சமி நிலம் பற்றிய தகவல்களை 1832-லிருந்தே திரட்டிக் கொள்ளலாம்.

ஆனால், இதற்கு அரசு நிர்வாகம் வேகமாக முடுக்கிவிடப்படவேண்டும். தன்னலமர்ற அர்ப்பணிப்பு மனோநிலை கொண்ட ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பஞ்சமி நில மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அது யாரிடம் உள்ளது, என்ன நிலை, மீட்பது எப்படி என்பது ஒரு கேள்விக்குறி. அடுத்தது அந்த நில உரிமையாளர்களைக் கண்டறிந்து பணத்தை யாரிடம் திருவது என்பதும் மற்றொரு கேள்வி.

பஞ்சமி நிலத்தை மீட்டுக்கொடுப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் எப்படிச் செயலாக்கப் போகிறது என்பதை இதுவரை எடுத்துரைக்கவில்லை. ஆனால், ஏழை விவாசயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலமென்று யார் யாருக்கோ, எங்கெங்கோ பூதானம் செய்து கொண்டிருக்கிறது.

“”ஆண்டுக்கு ஏழாயிரம் தலித் குடும்பங்களுக்கு நிலம் வாங்க, தலா இரண்டு லட்சம் ரூபாய் அதிக பட்சக் கடனாக வழங்குவது, அதில் ஒரு லட்சம் ரூபாயை மானியமாக தருவது” என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேல் உள்ள தலித் மக்களில் தொண்ணூறு சதவீதம் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள்தான். இவர்களைக் கணக்கெடுத்து ஆண்டுக்கு பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிலம் வாங்க கடன் வழங்கத் தொடங்கினாலே, பத்தாண்டுக்குள் அப்பணி முழுமை பெற்றுவிடும். தமிழக அரசு இதை நிறைவேற்ற வேண்டும்.

காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க உரிமையில்லை. காஷ்மீர் நிலம் காஷ்மீரியர்களுக்கே என்பது சட்டமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு நிலம் வழங்க திட்டமிடுவதும் சாத்தியமே.

தமிழக அரசு, பஞ்சமி நிலத்தை மீட்க கடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டப்படி தற்போது கிட்டத்தட்ட தொண்ணூறு ஆயிரம் பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பலனைப் பெற்றவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் தானேயொழிய, தலித் மக்களல்ல. அதிலும் நிலம் பெற்ற குறைந்த அளவு தலித் மக்களும் தாங்கள் ஏற்கெனவே அனுபவ பாத்தியதையில் வைத்துள்ள சிறிதளவு புறம்போக்கு நிலங்களுக்கு மட்டுமே பட்டா வழங்குவதாக புலம்புகிறார்கள். இவையெல்லாம் ஏழை தலித் மக்களை ஏமாற்றும் செயலாகவே தோன்றுகிறது.

தங்களுக்குரிய பஞ்சமி நிலம் மீட்கப்படும் வரை தலித் மக்களின் போராட்டம் தொடரும். அரசு என்ன செய்யப்போகிறது. கடுமையான நடவடிக்கை எடுத்து, பஞ்சமி நிலத்தை மீட்டுத்தரப் போகிறதா ? அல்லது கனிவான நடவடிக்கை எடுத்து பஞ்சமர்களுக்கு நிலத்திற்காக ஈடுகட்டப்போகிறதா? தலித் மக்கள் தமது பஞ்சமி நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்- நாளை தலைமுறை அந்த வெற்றியில் திளைக்கும் என்ற நம்பிக்கையில்!

(கட்டுரையாளர்-தலைவர், தமிழ்நாடு இந்தியக் குடியரசுக் கட்சி.)

Posted in Agriculture, Assets, Britain, British, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Cultivation, Dalit, Famers, Farming, Freedom, GO, Govt, Harijan, Harijans, Independence, J&K, Jammu, Kashmir, Lands, Pancami, Panchami, Panjami, Property, rice, Tamilarasan, Tamizarasan, Tamizharasan | 3 Comments »

New website for Handlooms & textiles Export and Development

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

கைத்தறி மேம்பாடு, ஏற்றுமதிக்கு புதிய இணையதளம்

கோவை, ஆக. 30: கைத்தறி தொழில் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த டிஜி லதா என்பவர் இதனை புதன்கிழமை கோவையில் அறிமுகம் செய்தார். இது பற்றி நிருபர்களிடம் அவர் கூறியது:

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு வேலைவாய்ப்பை அளிக்கக் கூடிய கைத்தறித் துறை மூலம் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீத வருவாய் கிடைக்கிறது.

2012-ம் ஆண்டுக்குள் 17.35 மில்லியன் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 19.24 பில்லியன் டாலராக உள்ள ஜவுளி ஏற்றுமதி 2012-க்குள் 55 பில்லியன் டாலராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆடை வடிவமைப்பு, வண்ணங்களை தேர்வு செய்தல், சர்வதேச சந்தை நிலவரம் போன்ற பிரச்னைகளை தீர்க்க இந்த இணையதளம் உதவும் என்றார் லதா.

இணையதள முகவரி: www.handlooms.com

Posted in Export, Handlooms, Textiles | Leave a Comment »

Distribution of Free Colour TVs by DMK Alliance – Namakkal grabs first place

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

வண்ண தொலைக்காட்சிப் பெட்டி: நாமக்கல் முதலிடம்

30 ஆகஸ்ட் 2007
15:16 IST

தமிழக அரசின் ஏழை மக்களுக்கான இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதில், மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தர மூர்த்தி கூறியிருக்கிறார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனை புதுப்பித்தல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரத்தசேமிப்பு வங்கி அறை மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 55 லட்சமும், ராசிபுரம் மருத்துவமனையில் பல்வேறு பணிகளுக்கு ரூ. ஒரு கோடியே ஆறு லட்சத்து 25 ஆயிரமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனை சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் ஆயிரத்து 333 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் வெள்ளியன்று பங்கேற்கும் விழாவில், ஆயிரத்து 174 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது என்றார்.

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பொறுத்தவரை 54 ஆயிரத்து 955 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் மாநிலத்திலேயே நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

—————————————————————————————————————————————————–

தேவை மறுபரிசீலனை

அரசு தரும் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பயனாளிகளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

அரசு தரும் ஒரு பயனுறு பொருளை ஒருவர் ஏன் குறைந்த விலைக்கு விற்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? இலவச தொலைக்காட்சி பெற்றவர்களிடம் ஏற்கெனவே ஒரு தொலைக்காட்சி பெட்டி இருக்கிறது என்பதும், மிகச் சில வீடுகளில் வறுமையாலும் பணநெருக்கடியாலும் விற்கிறார்கள் என்பதுமே காரணமாக இருக்க முடியும்.

இலவச தொலைக்காட்சிப் பெட்டி, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச நிலம் ஆகியவற்றைப் பெறுவதற்கு அடிப்படைத் தகுதி அவர்கள் பெறப்போகும் பொருள் அவர்களிடம் இருக்கக்கூடாது என்பதும், அவரிடம் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்பதும்தான். குடும்பத்தின் ஆண்டு வருமானம் கவனம் பெறுவதில்லை.

பயனாளிகள் தேர்வு என்பது அந்தந்த பஞ்சாயத்து அளவில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பரிந்துரைக்கும் பெயர் பட்டியல்தான் பயனாளிகள் என்பது அனைவரும் அறிந்தவொன்று.

பயனாளியிடம் ஏற்கெனவே டிவி இருக்கக் கூடாது என்ற நிபந்தனை, 90 சதவிகிதம், சரியாக பின்பற்றப்படுவதில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருக்கும் குடும்பத்துக்கே மீண்டும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி கிடைக்கிறபோது அதை பயன்பாடின்றி வீட்டில் வைத்திருப்பதைவிட, குறைந்த விலைக்கு விற்று விடுவதையே விரும்புகின்றனர்.

உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள பயனாளிகளில் பெரும்பாலோர் நிச்சயமாக மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருப்பதில்லை. அன்றாடத் தொழிலாளர்களான இவர்களுக்கு கேபிள் டிவி கட்டணம் என்பது நாள்கூலியைவிட அதிகமானது. ஆகவே டிவியை விற்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.

இதே நிலைதான் இலவச எரிவாயு இணைப்பிலும்! இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் அன்றாடத் தொழிலாளிகள். அன்றைய பொழுதின் ஊதியத்தை அன்றைய சமையலுக்குச் செலவிடுபவர்கள். 300 ரூபாயை மொத்தமாகக் கொடுத்து சிலிண்டர் வாங்குவது என்பது இவர்களுக்கு இயலாத விஷயம். இவர்களுக்கு மண்ணெண்ணெய் அளவும் 3 லிட்டராக குறைக்கப்படுகிறது.

இந்த அவல நிலையை இடைத்தரகர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எரிவாயு இணைப்பை அடமானமாகப் பெற்று, வீட்டுப்பயன்பாடு சிலிண்டர்களை வணிக நிறுவனங்களுக்கு இரட்டிப்பு விலையில் விற்கிறார்கள். இதற்காக அந்த ஏழைக் குடும்பத்துக்கு ஒரு சிறிய தொகை தரப்படுகிறது.

மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதைக் கொடுக்கும்போதுதான் அவர்கள் அதை மகிழ்ச்சியுடனும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வார்கள். தேவை இல்லாதது அல்லது சக்திக்கு மீறியது கொடுக்கப்பட்டால், அதை தங்களுக்குத் தேவைப்படும் பொருளாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவே செய்வார்கள் என்ற அடிப்படை உண்மை கூட ஆட்சியாளர்களுக்கு ஏன் தெரியவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.

பயனாளிகளைச் சரியாகத் தேர்வு செய்வதும் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்தும் நிதிநிலைக்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்துகொண்டு இலவசங்களை வழங்குவதும்தான் இத் திட்டத்தை பயனுள்ளதாக மாற்றும். கள்ளச்சந்தையும் தவிர்க்கப்படும்.

தேர்தல் வாக்குறுதி என்பதால், ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்வத்தினால் சில விஷயங்கள் கவனத்தில் கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த ஆர்வமே பல தவறுகளுக்கு வழிகோலும்போது, திட்ட அமலாக்கத்தில் நிதானத்தை கடைப்பிடித்து, தகுதியுள்ள பயனாளிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது.

“வருமுன் காப்பவன்தான் புத்திசாலி, அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி’ என்பதுதான் “வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’.

Posted in Bribery, Bribes, Color, Colour, Corruption, Distribution, DMK, Election, first, Free, Govt, Karunanidhi, Manifesto, Namakal, Namakkal, place, Poll, Promise, Stalin, Television, Televisions, TV, TVs | Leave a Comment »

Nissan In Vehicle Venture With Ashok Leyland – Small truck alliance

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

நிஸானுடன் இணைகிறது அசோக் லேலண்ட்

29 ஆகஸ்ட் 2007
18:52 IST

இலகு ரக வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய அசோக் லேலண்ட்  நிறுவனமும், ஜப்பானின் நிஸான் மோட்டார்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் அமைக்கப்படும் இலகு ரக வாகன தயாரிப்பு ஆலையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வாகனங்கள் தயாரிக்கப்படும் என்றும், அசோக் லேலண்ட் மற்றும் நிஸான் நிறுவனங்களின் பெயர்களில் இவை விற்பனை செய்யப்படும் என்றும் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

வாகன தயாரிப்பில் நிஸான் நிறுவனம் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், இந்த ஒப்பந்தம் மூலம் அசோக் லேலண்ட் நிறுவனமும் இலகு ரக வாகனத்துறையில் சிறந்த இடத்தை அடைய முடியும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷேசாயி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Posted in JV, Leyland, Nissan | Leave a Comment »

Chennai Marina Beach – Small vendors & Encroachment: Business vs Environment

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

மெரீனா கடற்கரையில் 400 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஆக. 29-

சென்னை நகருக்கு அழகு சேர்ப்பதில் மெரீனா கடற்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் ஒரே பொழுது போக்கு மெரினா கடற்கரைக்கு சென்று வருவதுதான்.

சென்னை நகர மக்கள் தொகை அதிகரிப்பது போல, மெரீனா கடற்கரையில் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல சிறுசிறு கடைகளும் அங்கு அதிகரித்து வருகிறது. முறையில்லாமல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு உருவாகும் கடைகளால், கடற்கரைக்கு வந்து போகும் பொதுமக்களுக்கு இடைïறு ஏற்படுகிறது. மெரீனா கடற்கரை அழகு பாதிக்கப்படு கிறது என்று புகார்கள் கூறப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடைïறாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பலர் ஆண்டுக்கணக்கில் மெரீனாவில் கடை வைத்து பிழைத்து வருகிறார்கள்.

பல ஆக்கிரமிப்பு கடைகள் முறையான அனுமதி இல்லா மல் சமீபத்தில் உருவாகி உள்ளன. அவற்றின் எண்ணிக்கை 400-க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

புதிய ஆக்கிரமிப்பு கடைகளை நேற்று முன்தினம் போலீஸ் உதவியுடன் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் குப்பை அகற்றும் பணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் செல்ல வேண்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 நாட்களில் கடற்கரையில் உள்ள புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பல நடமாடும் கடைகள் இரவில் கடற்கரையில் நிறுத்தப்படுகின்றன. அவற்றையும் ஒழுங்குப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது குறித்து மேயர் மா. சுப்பிரமணியன் கூறும்போது, “மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே பலர் 10 முதல் 15 ஆண்டுகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் புதிதாக தோன்றிய கடைகள் இடைïறாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. புதிய ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவதும் மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதிதான்” என்று கூறினார்.

சென்னை நகரை அழகு படுத்த ரூ.25 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் 17 கோடி ரூபாய் மெரீனாவை அழகுபடுத்த செலவிடப்படுகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக கடற்கரை அழகை பாதிக்கும் புதிய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுகின்றன.

இது கடற்கரையை நம்பி பிழைக்கும் சிறு வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அண்ணா, எம்.ஜி.ஆர். கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க துணை தலைவர் ராமலிங்கம் கூறும்போது, “நாங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் கடைகள் எந்த வகையிலும் இடைïறாக இல்லை” என்றார்.

காந்தி சிலை கடற்கரை மணல் பரப்பு சிறு வியாபாரிகள் சங்க செயலாளர் நாராயணன், “நாங்கள் கடைகளை இரவில் இங்கிருந்து அப்புறப்படுத்த தயாராக இருக்கிறோம். மாநகராட்சி சிறு வியாபாரிகளுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

இதுபோல பல்வேறு வியாபாரிகள் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளனர். மாநகராட்சி கடற்கரை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

————————————————————————————————–

கோயம்பேடு பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்: போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர்

சென்னை, ஆக. 30: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண கோயம்பேடு பஸ் நிலையத்தை 3-ஆக பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் ஆணையர் சுனில் குமார் தெரிவித்தார்.

சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ள 2-வது மாஸ்டர் பிளான் வரைவு அறிக்கை குறித்த பயிலரங்கில் அவர் புதன்கிழமை பேசியது:

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுவதாகக் கூறி நகரின் உள்ளே இருந்த வெளியூர் பஸ் நிலையத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினார்கள்.

தற்போது கோயம்பேடு பஸ் நிலையத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, உள்வட்ட சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு தீர்வாக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பஸ்கள் ஆகியவற்றுக்கான பஸ் நிலையத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும்.

இவ்வாறு பிரித்து பூந்தமல்லி வழியாகச் செல்லும் பஸ்களுக்கு பூந்தமல்லியிலும், தாம்பரம் வழியாகச் செல்லும் பஸ்களுக்கு தாம்பரத்திலும், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பஸ்களுக்கு அந்த பகுதியிலும் தனித்தனி பஸ் நிலையங்கள் அமைக்கலாம்.

கோயம்பேடு பஸ் நிலையம் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்து மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

சென்னைக்கு வெளியே கண்டெயினர் லாரிகளுக்கான டெர்மினலை அமைப்பதாக முதலாவது மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகைய டெர்மினல் இதுவரை அமைக்கப்படவில்லை. சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி இல்லாதது, போக்குவரத்து நெரிசலுக்கும், சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது.

சென்னையில் இருக்கும் பூங்காக்களில் தரைகீழ்தள வாகன நிறுத்தும் இடங்களை அமைக்கலாம்.

மேலும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வுகான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் நாள்களை மாற்றி அமைக்கலாம். அதேபோல, அதிக அளவில் கடைகள் இருக்கும் மார்க்கெட் பகுதிகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கலாம். இந்த புதிய அணுகுமுறைகளை திட்டமிட்டு நிறைவேற்றினால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு ஏற்படும் என்றார் சுனில் குமார்.
————————————————————————————————–

Posted in Beach, Beauty, Biz, Business, Chennai, Citizen, Commerce, Consumer, Customer, Economy, encroachment, Environment, Govt, Kannagi, Kannaki, Koyambedu, Koyampedu, Law, Madras, Mareena, Marina, Mayor, Nuisance, Obstruction, Order, Pleasure, Poor, Traffic, Vendors, Water | Leave a Comment »

Arulmigu Vadapazhani Thandayuthapani Temple consecrations

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007

12 வருடத்துக்குபின் வடபழனிகோவில் கும்பாபிஷேகம்: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சென்னை, ஆக. 30-

தமிழகத்தில் உள்ள முக்கிய மான முருகப்பெருமான் தலங்களில் சென்னை வடபழனியாண்டவர் தலமும் ஒன்று. பிரசித்தி பெற்ற இத்தலத்தில் சமீபத்தில் ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. ராஜகோபுரங்கள், அனைத்து சந்நிதிகளும் பழுது பார்க்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. மதில் சுவர்கள் மெருகூட்டப்பட்ட கற்கள் பதிக்கப்பட்டன. அழகூட்டப் பட்டன. திருக்குளமும் சீர் செய்யப்பட்டது.

திருப்பணிகள் நடை பெற்றதையொட்டி இன்று காலை வடபழனியாண்டவர் ஆலயத்தில் 12 ஆண்டு களுக்குப்பிறகு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலையில் 6-வது யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் 7.55 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. சரியாக 9 மணிக்கு மூலவர் சந்நிதி கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது. பக்தர்கள் மீது ஸ்பிரேயர் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடபழனி முருகன் கோவிலில் திரண்டிருந்தனர். கோவிலில் ஆரம்பித்து ஆற்காடு மெயின்ரோடுவரை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நீன்று சாமிதரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவில் வளாகம் எங்கும் அரோகரா கோஷம் கேட்டுக்கொண்டபடி இருந்தது.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக பலத்த பாதுகாப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. போலீஸ் கமிஷனர் நாஞ்சில்குமரன், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

ஏராளமான போலீசார் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்காங்கே மெட்டல் டிடெக்டர் வைத்து பக்தர்கள் சோதனையிட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், மேயர் மா.சுப்பிர மணியன், அறநிலையத்துறை செயலாளர் ராஜேந்திரன், கமிஷனர் பிச்சாண்டி, இணை கமிஷனர் தனபால், துணைகமிஷனர் பரஞ்சோதி, கோவிலின் அறங்காவலர் குழுதலைவர் சீர்காழி சிவசிதம்பரம், அறங்காவலர்கள் கண்மணி சீனிவாசன், கண்ணப்பன் உள்பட ஏராளமானேர் விழாவில் கலந்து கொண்டனர்.

முக்கிய பிரமுகர்கள் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு வசதியாக கோவிலின் மேல்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடை சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் அமர்ந்திருந்தவர்கள் காயம் இன்றி தப்பினர். பின்னர் மேடை சரிசெய்யப்பட்டது.

—————————————————————————————————

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது

30 ஆகஸ்ட் 2007
10:29 IST

சென்னை அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோயில் 4-வது ஆண்டு கும்பாபிஷேகம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

கோயிலின் ராஜகோபுரம், உள்ளிட்ட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 27ம் தேதியன்றே யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இதற்காக 108 யாகசாலை ஹோமகுண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று 4 மற்றும் 5ம் கால யாக பூஜையும், இன்று காலையில் 6ம் கால பூஜைகளும் நடைபெற்றன.

இதையடுத்து சரியாக காலை 9 மணியளவில் திருக்குட முழுக்கு நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்கள் முருகா சரணம், சரவணா சரணம், வடபழனி ஆண்டவா போற்றி என கந்தரின் நாமங்களை விண்ணதிர கூறி பக்தி முழக்கமிட்டனர்.

கும்பாபிஷேகத்தின் போது தெளிக்கப்படும் யாகசாலையில் வைக்கப்பட்ட தண்ணீர் தங்கள் மீது விழ வேண்டும் என்ற பக்தர்களின் ஆர்வத்தை போக்கும் வகையில் தண்ணீரை சுழன்று பீய்ச்சியடிக்கும் ஸ்பிரிங்லர்ஸ் கருவி கோயில் மேல் அமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் கருவி மூலம் கூடியிருந்த கூட்டத்தினர் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் முடிந்ததும் விமானம் மூலமாக கோயிலின் மேல்பகுதியில் இருந்து பூக்கள் தூவப்பட்டது இந்த கும்பாபிஷேகத்தின் சிறப்பம்சமாக விளங்கியது.

கும்பாபிஷேகத்தையொட்டி வாகனங்கள் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

—————————————————————————————————

 

Posted in Hindu, Hinduism, Muruga, Religion, Temple, Vadapalani, Vadapazani, Vadapazhani | 1 Comment »

Happy Onam – Kerala Actress Asin & Gopika meet & greet

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2007


பழைய சினேகிதிகளின் அபூர்வ சந்திப்பு
அசின்-கோபிகா கட்டிப்பிடித்து முத்தம்
ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்


நடிகைகள் அசின், கோபிகா இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். அசின் சொந்த ஊர், கொச்சி. கோபிகா, திருச்சூரை சேர்ந்தவர். இருவரும் பழைய சினேகிதிகள்.

நட்பு

இரண்டு பேரும் தமிழ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரிடையே ஏற்பட்ட நட்பு, இன்று வரை தொடர்கிறது.

அசின் அம்மா, அப்பாவை கோபிகாவுக்கு தெரியும். கோபிகா அம்மா, அப்பாவை அசினுக்கு தெரியும். இரண்டு பேர் குடும்பமும் நெருக்கமாக பழகி வந்தார்கள். மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது அசினும், கோபிகாவும் அடிக்கடி நேரில் சந்தித்து, நட்பை வளர்த்து வந்தார்கள்.

இரண்டு பேரும் தமிழ் சினிமாவுக்குள் வந்தபின், நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை. `ஆட்டோகிராப்’ படத்துக்குப்பின், கோபிகா `பிஸி’யாகி விட்டார். `எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்துக்குப்பின், அசின் `பிஸி’யாகி விட்டார். இருவரும் தமிழ் படங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்கள்.

செல்போனில்…

கேரளா-தமிழ்நாடு-ஆந்திரா என்று மூன்று மாநிலங்களுக்கும் இடையே அடிக்கடி பறந்துகொண்டிருந்ததால், சினேகிதிகள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்வதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

என்றாலும், செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டார்கள். “நீ, சென்னையில் இருக்கும்போது, நான் ஆந்திராவில் இருக்கிறேன். நான், ஆந்திராவில் இருக்கும்போது நீ சென்னை வந்துவிடுகிறாய்” என்று அசினும், கோபிகாவும் செல்போனில் ஆதங்கப்பட்டார்கள்.

இவர்களின் ஆதங்கம் தீர்கிற மாதிரி ஒரு சந்தர்ப்பம், சென்னையில் அமைந்தது. `கஜினி’ இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருந்த அசின், அந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, `வேல்’ படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக, சென்னை வந்தார். `வெள்ளித்திரை’ என்ற படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கோபிகா, கேரளாவில் இருந்து சென்னைக்கு பறந்து வந்தார்.

சந்திப்பு

சொல்லிவைத்த மாதிரி, `வேல்,’ `வெள்ளித்திரை’ ஆகிய இரண்டு படப்பிடிப்புகளும் ஏவி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றன. பக்கத்து `செட்’டில் தன் சினேகிதி கோபிகா இருப்பதை அறிந்த அசின், பகல் உணவு இடைவேளை விட்டதும், அந்த `செட்’டை நோக்கி ஓடி வந்தார்.

அப்போது கோபிகா, `கேரவன்’க்குள் இருந்தார். கேரவன் கதவை திறந்துகொண்டு, அசின் ஓடிப்போய் கோபிகாவை கட்டிப்பிடித்தார். கோபிகா, அசினை கட்டிப்பிடித்தார். இருவரும் மகிழ்ச்சி மிகுதியால், ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்தார்கள். “ஹேய்…” என்றபடி துள்ளிக்குதித்தார்கள். கட்டிப்பிடித்தபடி கேரவனுக்குள் இருந்த படுக்கையில் உருண்டார்கள்.

ஓணம் வாழ்த்து

இரண்டு பேரும் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள். “நீ நடித்த `மாயாவி’ (மலையாளம்) படத்தை பார்த்தேன். சூப்பர்” என்று கோபிகாவை அசின் பாராட்டினார். “நீ நடித்த `போக்கிரி’ படத்தை பார்த்தேன். சூப்பர்” என்று அசினை கோபிகா பாராட்டினார்.

அப்போது அசின் தந்தை ஜோசப் தொட்டும்கல் அங்கே வந்தார். “மகளே…கோபிகா…” என்று மலையாளத்தில் பாசமாக கோபிகாவின் முதுகில் தட்டிக்கொடுத்தார். “எங்கே உன் அம்மாவும், அப்பாவும்?” என்று கோபிகாவிடம் அசின் விசாரித்தார். “இரண்டு பேரும் ஷாப்பிங் போய் இருக்கிறார்கள்” என்று கோபிகா சொன்னதும், அசின் தனது செல்போன் மூலம் கோபிகாவின் அம்மா, அப்பா இருவருடனும் “ஆன்ட்டி… அங்கிள்” என்று கொஞ்சிக்குலவினார்.

வியப்பு

இவர்களின் `பாசப்பிணைப்பை’ பார்த்து இரண்டு படப்பிடிப்பு குழுவினரும் ஆச்சரியப்பட்டார்கள். ஒரே மாநிலத்தை சேர்ந்த இரண்டு நடிகைகளும் எத்தனை ஒற்றுமையாக…நட்பாக இருக்கிறார்கள் என்று வியந்தார்கள்.

பொதுவாக, பெரும்பாலான கதாநாயகிகள் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்வார்கள். நேரில் சந்தித்துக்கொண்டால் கூட முகத்தை திருப்பிக்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட திரையுலகில், அசின்-கோபிகா நட்பு அபூர்வமாகவே இருக்கிறது.

Posted in Tamil | Leave a Comment »