Hyderabad Bomb Blasts – Inaction against Terrorism by Indian Govt
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007
அரசுக்கு தைரியமில்லை
ஹைதராபாதில் நடந்த குண்டுவெடிப்பில் நாற்பது உயிர்கள் பலியாகி இருக்கின்றன. கடந்த சனிக்கிழமை மாலையில் நடந்த இந்த இரு வேறு குண்டுவெடிப்புகளும், தீவிரவாதத்தின் தென்னிந்திய இலக்காக ஹைதராபாத் மாறி வருகிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆரம்ப காலம் தொட்டு, தக்காணப் பீடபூமி வன்முறையாளர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் உகந்த இடமாக ஒருபோதும் இருந்ததில்லை. வட இந்தியாவில் நடந்த படையெடுப்புகளையும் அங்கே சிந்திய மனித ரத்தத்தையும் பார்க்கும்போது, உண்மையிலேயே தென்னிந்தியா ஓர் அமைதிப் பூங்காவாகக் காட்சி அளித்தது. ஆனால், சமீபகாலமாக, தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சியும், அன்னிய சக்திகளின் ஊடுருவலும் தென்னிந்தியாவின் அமைதியை அடிக்கடி குலைத்தவண்ணம் இருக்கின்றன.
மூன்று மாதங்களுக்கு முன்னால், சரித்திரப் பிரசித்தி பெற்ற ஹைதராபாதின் மெக்கா மசூதியில் வெடித்த குண்டு, தொழுகைக்குப் போயிருந்த பனிரெண்டு பேரின் உயிரைக் குடித்தது. இப்போது, மக்கள் அதிகமாகக் கூடும் லும்பினிப் பூங்காவிலும் “கோகுல் சாட் பண்டார்’ என்கிற உணவு விடுதியிலும் நாற்பது உயிர்கள் பலியிடப்பட்டிருக்கின்றன.
தீவிரவாதிகளின் செயல்பாடு என்பது எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அப்பாவி உயிர்களைப் பலி வாங்குவதும், அதன் மூலம் மக்களுக்கு அரசின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும் தீவிரவாதிகளின் வாடிக்கை. மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியைப் பயன்படுத்தி அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடுவது என்பதுதான் அவர்களது குறிக்கோள். சட்டம் ஒழுங்கைச் சீர்குலைப்பதன் மூலம் தாங்கள் ஏதோ சாதித்துவிட முடியும் என்று கனவு காணும் கொடூர மனம் படைத்தவர்கள்தான் இந்தத் தீவிரவாத இயக்கத்தினர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக, ஆட்சியில் இருப்பவர்கள் இதுபோன்ற தீவிரவாத இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அப்பாவிகள் பாதிக்கப்படுவார்களோ, நமது வாக்கு வங்கி பாதிக்கப்படுமோ என்கிற தவறான கண்ணோட்டத்துடன் பிரச்னையை அணுகுவதும் தீவிரவாதிகள் தங்களை வளர்த்துக்கொள்ளவே உதவி புரியும். தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்று தவறாக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.
தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பது ஒருபுறம். அப்படியே இருந்தாலும் அவர்களை இஸ்லாமிய சமுதாயம் ஆதரிக்கும் என்று கருதுவது அதைவிட அபத்தம். தீவிரவாதிகளைப் பொருத்தவரை, சிந்துகிற ரத்தம் இந்துவினுடையதா, கிறிஸ்துவனுடையதா, இஸ்லாமியனுடையதா என்கிற பாகுபாடுகளை அவர்கள் பார்ப்பதில்லை. அதேபோல, அரசும் அவர்களுக்கு ஜாதி, மத, மொழி, இன முத்திரைகளைக் குத்த வேண்டிய அவசியம் கிடையாது.
உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவி வருகிறது. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிப்பது என்பது, உலகத்தில் பைத்தியக்காரர்களே இல்லாமல் செய்வது போன்ற விஷயம். ஆனால், தீவிரவாதிகளைக் கண்காணிப்பது, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது போன்றவை முதுகெலும்புள்ள எந்தவோர் அரசும் செய்ய வேண்டிய இன்றியமையாத விஷயம். அந்த விஷயத்தில் நமது அரசு தனது கடமையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
பாகிஸ்தான் மீதும் வங்கதேசத்தின் மீதும் பழிபோடுவது அல்ல தீர்வு. முறையான கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுதான் தீவிரவாதத்திற்குத் தீர்வு. கடுமையான தண்டனையின் மூலம் தீவிரவாதிகளை எச்சரிப்பதுதான், தீவிரவாதச் செயல்களுக்கு நம்மால் போட முடிந்த முட்டுக்கட்டை.
நாடாளுமன்றத்தையே தகர்த்தெறிய சதித் திட்டம் தீட்டிய முகம்மது அப்சலின் தூக்கு தண்டனையைக்கூட நிறைவேற்ற தைரியம் இல்லாதபோது, தீவிரவாதத்தை இந்த அரசு எதிர்கொள்ளும் என்று எப்படி நம்புவது?
மறுமொழியொன்றை இடுங்கள்