Female Infanticide – Gender selections & Abortions, iPill in India
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007
கருவறையில் கல்லறை வேண்டாம்
நீதி. செங்கோட்டையன்
பெண்களுக்கு எதிரான அநீதி, கருவறையிலேயே தொடங்கி விடுகின்றது. இந்தியாவில் நீண்ட காலத்திற்கு முன் தொடங்கிய பெண் கருக்கலைப்பும், சிசுக்கொலையும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட போது இந்தச் சமூகக் கொடுமை உ.பி. மாநிலத்தில் ஆழவேரூன்றி இருந்தது. இதை ஒழிக்க, 1870-ம் ஆண்டு பெண் சிசுக்கொலைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தனர். இந்தச் சட்டம் ஓரளவுக்கு பெண் குழந்தைகளின் உயிரைக் காத்தது. இருப்பினும், அந்தச் சட்டத்தால் பெண் சிசுக்கொலைக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அன்னியரிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம். 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எண்ணில் அடங்கா சாதனைகளையும் நிகழ்த்திவிட்டோம். ஆனால், பெண் கருக்கலைப்புக்கும், பெண் சிசுக்கொலைக்கும் மட்டும் ஏன் நம்மால் இன்னும் முழுமையான தீர்வு காணமுடியவில்லை?. இதுகுறித்து நாம் உடனடியாக சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.
முந்தையக் காலத்தில் வறுமை, சமய நம்பிக்கை போன்றவைதான் இதுபோன்ற சமூகக் கொடுமைகள் நிகழ முக்கியக் காரணிகளாக இருந்தன. ஆனால், தற்போது வரதட்சிணை, திருமணத்திற்கு பிறகும் பெண்ணைத் தாங்க வேண்டிய பெற்றோரின் நிலை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை, பெண் என்றால் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற மோசமான மனநிலை போன்ற சமூகக் காரணிகள்தான் பெண்ணுக்கு கருவிலேயே சமாதி எழுப்பும் கொடூரச் செயலுக்கு வித்திடுகின்றன.
இதன் விளைவாக நம்நாட்டில் ஆண்கள் எண்ணிக்கை ஏறுமுகத்திலும், பெண்களின் எண்ணிக்கை இறங்கு முகத்திலும் செல்லும் அபாய நிலையும் உருவாகியுள்ளது. 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பஞ்சாபின் பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 789-பெண்களாகவும், ஹரியாணாவில் 819-ஆகவும் குறைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் பெண் குழந்தையைக் கருவிலேயே அழித்திடும் செயல் பரவலாக நடந்து வருகிறது.
ஒரிசாவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் 60 பெண் சிசுக்கள் புதைக்கப்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான மருத்துவமனைகள் பெண் கருக்கலைப்பு, சிசுக்கொலையின் கூடாரங்களாகி வருவதும் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் மதுரை, தேனி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டுமே ஆட்கொண்டிருந்த இந்தச் சமூகக் கொடுமை, தற்போது மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.
பெண் கருக்கலைப்பும், சிசுக்கொலையும் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிக அளவில் நிகழ்ந்து வருகின்றன. 2000-ம் ஆண்டில் மட்டும் அங்கு 439 பெண் சிசுக்கொலைகளும் 2001-ல் 178 பெண் சிசுக்கொலைகளும் நடந்துள்ளன.
இந்தச் சமூகக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால் அரசு பன்முக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். 1961-ம் ஆண்டு வரதட்சிணை தடுப்புச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளின் வாயிலாக, தவறு செய்வோர் எளிதாகத் தப்பித்துவிடுகின்றனர். எனவே, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்.
சட்டத்தைக் கடுமையாக்கினால் மட்டும் போதாது, பெண் சமுதாய அழிவைத் தடுக்க இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அந்த வகையில், ஒவ்வொரு இளைஞரும் வரதட்சிணை வாங்கமாட்டேன் என உறுதிமொழி ஏற்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவு சிசுக்கொலையில் ஈடுபடும் தாய்மார்களைத் தண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. குற்றம் செய்யும் பெண்களைத் தண்டித்துவிடுவதால் மட்டுமே பெண் கருக்கலைப்பையும், பெண் சிசுக்கொலையையும் முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. எனவே, குற்றம் செய்தபிறகு தண்டிப்பதைவிட, முன்பாகவே அதுபோன்ற நிலைக்குப் பெண்கள் தள்ளப்படாமல் இருக்க சட்டம் மட்டுமல்லாது, நம்மைச் சுற்றியுள்ள சமூகமும் அக்கறை காட்டவேண்டும்.
பெண் என்றால் தாழ்வு என்ற நிலையைப் போக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.
அவர்களுக்கு சமூக, அரசியல், பொருளாதார ரீதியாக அதிகாரமளிப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களது பிரச்னைகளை அவர்களாகவே தீர்த்துக் கொள்ளும் நிலை உருவாகும்.
சில மாநில அரசுகள் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளன. இதுபோல் மத்திய அரசுப் பணிகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.
கருவைக் கலைப்பதற்காக வரும் பெண்களுக்கு மருத்துவர்கள் நல்ல ஆலோசனைகளை வழங்கினாலே இந்தப் பிரச்னைக்கு 50 சதவிகித தீர்வு கிடைத்துவிடும். 1994-ம் ஆண்டு பாலினச் சோதனை தடைச் சட்டத்தின் செயல்பாடு மந்த நிலையில் உள்ளது. இதை துரிதப்படுத்தும் நடவடிக்கை அவசியம்.
தமிழ்நாட்டில் அமலில் உள்ள “தொட்டில் குழந்தைத் திட்டம்’ பெண் குழந்தைகளின் புறக்கணிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்தத் திட்டத்துக்குப் பதிலாக மாற்றுவழி காணவேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆணுக்குப் பெண் நிகர் என்ற உண்மை நிலையை உருவாக்கினால்தான், “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்’ என்று பெண்ணின் பெருமையை நிலைநாட்ட முடியும்.
மறுமொழியொன்றை இடுங்கள்