Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Rupee full convertibility – American sub-prime Mortgage Loan imbroglio: Economic Analysis

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

ரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்

எஸ். கோபாலகிருஷ்ணன்

நல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது!

அண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது! ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன? தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.

இப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.

ஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.

இன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.

ஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

கடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.

மூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: