North Korea and South Korea – Foreign Relations, Wars, Reunification
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007
மீண்டும் இணையுமா கொரிய தீபகற்பம்?
எஸ். ராஜாராம்
போரால் இரண்டாகப் பிரிந்த நாடு மீண்டும் ஒன்றாக இணைய, பொருளாதாரம் தடையாக இருக்குமா…? தென்கொரியா, வடகொரியா நாடுகளின் இணைப்பு முயற்சிகள் – இதைத்தான் உணர்த்துகின்றன.
1910ஆம் ஆண்டுமுதல் 1945-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பிடியில் இருந்தது கொரியா. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் வீழ்ச்சிக்குப் பிறகு, வடக்கிலிருந்து ரஷியாவும், தெற்குப் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கம் செலுத்தியதையடுத்து, ஐ.நா.வின் நடவடிக்கையால் தென்கொரியா, வடகொரியா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1948-ல் தனித்தனி அரசுகள் அமைக்கப்பட்டன.
இரண்டு ஆண்டுகள் கழித்து 1950-ல் இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய கொரியப் போர் 3 ஆண்டுகள் நீடித்து 1953-ல் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு அமெரிக்காவின் உதவியோடு தென்கொரியா பொருளாதாரத்தில் கிடுகிடுவென முன்னேறியது. மாறாக, வடகொரியா ரஷியாவின் ஆதரவுடன் ராணுவ பலத்தை மட்டுமே அதிகரித்தது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான பகை மட்டும் நீடித்தது.
பிரிவினையின் கொடுமை அரசுகளுக்குத் தெரியாது. அதை மக்களால் மட்டுமே உணரமுடியும். இதற்கேற்றார்போல, ஒரே நாட்டில் இருந்த மக்கள், பிரிவினைக்குப் பிறகு உறவினர்களைச் சந்திக்கக்கூட முடியாமல் துயரத்தை அனுபவித்தபோதுதான் மீண்டும் கொரியா ஒரே நாடாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இரு நாடுகளின் இணைப்பு முயற்சிக்கு 1972ஆம் ஆண்டில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இரு நாட்டு அரசுகளும் மீண்டும் அமைதியான முறையில் இணைவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தன.
இதன் அடுத்தகட்ட முக்கியமான முன்னேற்றமாக, 2000-ல் அப்போதைய தென்கொரிய அதிபர் கிம் டே-ஜங், வடகொரிய அதிபர் கிம்ஜோங் இடையிலான முதல் சந்திப்பு நடைபெற்றது.
போருக்குப் பிறகு பிரிந்த இருநாடுகளிலும் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ப்பது என அந்தச் சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டது.
2007, மே மாதம் இருநாடுகளின் எல்லைகளையும் தாண்டி முதல்முறையாக ரயில் இயக்கப்பட்டது. பிரிந்திருந்த பல குடும்பங்கள் தங்கள் சொந்தங்களைச் சந்திக்க வாய்ப்பாக அது அமைந்தது.
இதற்கிடையே, வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகள் மற்றும் ஐ.நா. தலையிட்டதன் பேரில், 2007, ஜூலையில் யாங்பியானில் உள்ள அணுஉலையின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்திவைத்தது.
நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் விளையாட்டு எந்த அளவு பங்கு வகிக்க முடியும் என்பதை கொரிய இணைப்பு முயற்சி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
2004ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் தொடக்க அணிவகுப்பிற்காக (மட்டும்) தென்கொரிய, வடகொரிய நாடுகள் இணைந்து கொரியா என்ற ஒரே அணியாக பங்கேற்கின்றன.
இதேபோல, 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக், 2006ஆம் ஆண்டு துரின் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் அணிவகுப்பு நிகழ்ச்சிகளிலும் ஒரே அணியாகப் பங்கேற்றன.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் அணிவகுப்புக்கு மட்டுமின்றி போட்டிகளுக்கும் ஒரே அணியாக அனுப்ப இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
ஆனால், படிப்படியான இந்த இணைப்பு முயற்சிக்கு பொருளாதார இடைவெளி உள்ளிட்ட தடைகளும் பூதாகரமாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
தென்கொரியா – வடகொரியாவின் பொருளாதார விகிதம் 13:1 என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், மக்கள் தொகையோ சரிபாதியாக உள்ளது.
“”கொரிய இணைப்புக்காக அவசரமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், தென்கொரியாவின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிடும்” என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.
“”வடகொரியாவும் தனியாக பொருளாதாரத்தில் உயரும்வரை இரு நாடுகளின் இணைப்புக்குக் காத்திருக்க வேண்டும்” என அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
கொரியத் தீபகற்பத்தில் அணுஆயுதமற்ற சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காக தலையிட்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளின் கருத்துகள் வேறுவிதமாக இருக்கின்றன.
இணைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் சீனா, ஒருங்கிணைந்த கொரியா தனது நாட்டுக்கு ஆபத்தாக மாறிவிடக்கூடாது என்ற அச்சத்தையும் தெரிவிக்கிறது.
இணைப்புக்கு ரஷியா ஆதரவு தெரிவித்தாலும், இணைப்புக்குப் பின்னர் கொரியாவுக்கு அமெரிக்கா உதவி அளிக்கும் சூழ்நிலையை விரும்பவில்லை.
இச்சூழ்நிலையில், வடகொரிய – தென்கொரிய அதிபர்களின் சந்திப்பு ஆகஸ்ட் 28-ல் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் நடைபெறவுள்ளது.
இதில் கொரியத் தீபகற்பத்தில் அமைதி நடவடிக்கைகள், இரு நாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசப்படும் என்றாலும், இந்தச் சந்திப்பு கொரிய இணைப்பு முயற்சியின் மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.
நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் இரு நாட்டு மக்களிடையே உள்ளது. பழைய சண்டைகள், பேதங்களை மறந்து, தடைகளைக் கடந்து இனி முடிவெடுக்க வேண்டியது தலைவர்கள்தான்.
போரால் பிரிந்த ஜெர்மனி, வியத்நாம், கம்போடியா (லாவோஸ்) நாடுகள் இணைந்துள்ளபோது, கொரியா ஏன் இணையக்கூடாது?
இந்தக் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்