Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 26th, 2007

Rupee full convertibility – American sub-prime Mortgage Loan imbroglio: Economic Analysis

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

ரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்

எஸ். கோபாலகிருஷ்ணன்

நல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது!

அண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது! ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன? தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமானம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.

இப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.

ஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.

இன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.

ஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.

1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறைந்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).

கடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.

இதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய்வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.

மூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?

எனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.

(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).

Posted in America, Analysis, Assets, Banks, Cash, Commerce, Deflation, Economics, Economy, Inflation, Loan, Loans, Mortgage, Recession, Rupee, Rupees, Stagflation, USA | Leave a Comment »

Cuddalore – PMK vs Dalit Panthers party squabbles

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

பாமக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்: விடுதலைச் சிறுத்தைகள் மூவர் கைது

கடலூர், ஆக. 26: கடலூரில் பாமக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடந்த 17-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவன் பிறந்ததின விழா, தமிழர் எழுச்சி மாநாடாக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.

மாநாட்டுக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பாமக அலுவலகம் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பேனர் கிழிக்கப்பட்டது.

இதுகுறித்து பாமக மாவட்ட அலுவலக செயலர் போஸ்ராமச்சந்திரன், கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, கடலூர் செல்லங்குப்பம் விடுதலைச் சிறுத்தைகள் முகாம் பொறுப்பாளர் சேதுராமன் (27), தோட்டப்பட்டு வெங்கடேசன் (27), குண்டு உப்பளவாடி முத்து (25) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் பலரை போலீஸôர் தேடி வருகிறார்கள்

Posted in DPI, Party, PMK, Thiruma, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

North Korea and South Korea – Foreign Relations, Wars, Reunification

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

மீண்டும் இணையுமா கொரிய தீபகற்பம்?

எஸ். ராஜாராம்

போரால் இரண்டாகப் பிரிந்த நாடு மீண்டும் ஒன்றாக இணைய, பொருளாதாரம் தடையாக இருக்குமா…? தென்கொரியா, வடகொரியா நாடுகளின் இணைப்பு முயற்சிகள் – இதைத்தான் உணர்த்துகின்றன.

1910ஆம் ஆண்டுமுதல் 1945-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் பிடியில் இருந்தது கொரியா. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் வீழ்ச்சிக்குப் பிறகு, வடக்கிலிருந்து ரஷியாவும், தெற்குப் பகுதியில் அமெரிக்காவும் ஆதிக்கம் செலுத்தியதையடுத்து, ஐ.நா.வின் நடவடிக்கையால் தென்கொரியா, வடகொரியா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1948-ல் தனித்தனி அரசுகள் அமைக்கப்பட்டன.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1950-ல் இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய கொரியப் போர் 3 ஆண்டுகள் நீடித்து 1953-ல் முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு அமெரிக்காவின் உதவியோடு தென்கொரியா பொருளாதாரத்தில் கிடுகிடுவென முன்னேறியது. மாறாக, வடகொரியா ரஷியாவின் ஆதரவுடன் ராணுவ பலத்தை மட்டுமே அதிகரித்தது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான பகை மட்டும் நீடித்தது.

பிரிவினையின் கொடுமை அரசுகளுக்குத் தெரியாது. அதை மக்களால் மட்டுமே உணரமுடியும். இதற்கேற்றார்போல, ஒரே நாட்டில் இருந்த மக்கள், பிரிவினைக்குப் பிறகு உறவினர்களைச் சந்திக்கக்கூட முடியாமல் துயரத்தை அனுபவித்தபோதுதான் மீண்டும் கொரியா ஒரே நாடாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, இரு நாடுகளின் இணைப்பு முயற்சிக்கு 1972ஆம் ஆண்டில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இரு நாட்டு அரசுகளும் மீண்டும் அமைதியான முறையில் இணைவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தன.

இதன் அடுத்தகட்ட முக்கியமான முன்னேற்றமாக, 2000-ல் அப்போதைய தென்கொரிய அதிபர் கிம் டே-ஜங், வடகொரிய அதிபர் கிம்ஜோங் இடையிலான முதல் சந்திப்பு நடைபெற்றது.

போருக்குப் பிறகு பிரிந்த இருநாடுகளிலும் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ப்பது என அந்தச் சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டது.

2007, மே மாதம் இருநாடுகளின் எல்லைகளையும் தாண்டி முதல்முறையாக ரயில் இயக்கப்பட்டது. பிரிந்திருந்த பல குடும்பங்கள் தங்கள் சொந்தங்களைச் சந்திக்க வாய்ப்பாக அது அமைந்தது.

இதற்கிடையே, வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகள் மற்றும் ஐ.நா. தலையிட்டதன் பேரில், 2007, ஜூலையில் யாங்பியானில் உள்ள அணுஉலையின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்திவைத்தது.

நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் விளையாட்டு எந்த அளவு பங்கு வகிக்க முடியும் என்பதை கொரிய இணைப்பு முயற்சி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

2004ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் தொடக்க அணிவகுப்பிற்காக (மட்டும்) தென்கொரிய, வடகொரிய நாடுகள் இணைந்து கொரியா என்ற ஒரே அணியாக பங்கேற்கின்றன.

இதேபோல, 2004ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக், 2006ஆம் ஆண்டு துரின் நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் அணிவகுப்பு நிகழ்ச்சிகளிலும் ஒரே அணியாகப் பங்கேற்றன.

2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் அணிவகுப்புக்கு மட்டுமின்றி போட்டிகளுக்கும் ஒரே அணியாக அனுப்ப இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.

ஆனால், படிப்படியான இந்த இணைப்பு முயற்சிக்கு பொருளாதார இடைவெளி உள்ளிட்ட தடைகளும் பூதாகரமாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

தென்கொரியா – வடகொரியாவின் பொருளாதார விகிதம் 13:1 என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், மக்கள் தொகையோ சரிபாதியாக உள்ளது.

“”கொரிய இணைப்புக்காக அவசரமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், தென்கொரியாவின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிடும்” என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.

“”வடகொரியாவும் தனியாக பொருளாதாரத்தில் உயரும்வரை இரு நாடுகளின் இணைப்புக்குக் காத்திருக்க வேண்டும்” என அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

கொரியத் தீபகற்பத்தில் அணுஆயுதமற்ற சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காக தலையிட்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா நாடுகளின் கருத்துகள் வேறுவிதமாக இருக்கின்றன.

இணைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் சீனா, ஒருங்கிணைந்த கொரியா தனது நாட்டுக்கு ஆபத்தாக மாறிவிடக்கூடாது என்ற அச்சத்தையும் தெரிவிக்கிறது.

இணைப்புக்கு ரஷியா ஆதரவு தெரிவித்தாலும், இணைப்புக்குப் பின்னர் கொரியாவுக்கு அமெரிக்கா உதவி அளிக்கும் சூழ்நிலையை விரும்பவில்லை.

இச்சூழ்நிலையில், வடகொரிய – தென்கொரிய அதிபர்களின் சந்திப்பு ஆகஸ்ட் 28-ல் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கில் நடைபெறவுள்ளது.

இதில் கொரியத் தீபகற்பத்தில் அமைதி நடவடிக்கைகள், இரு நாடுகளிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசப்படும் என்றாலும், இந்தச் சந்திப்பு கொரிய இணைப்பு முயற்சியின் மைல்கல்லாகவும் கருதப்படுகிறது.

நம் நாடு, நம் மக்கள் என்ற எண்ணம் இரு நாட்டு மக்களிடையே உள்ளது. பழைய சண்டைகள், பேதங்களை மறந்து, தடைகளைக் கடந்து இனி முடிவெடுக்க வேண்டியது தலைவர்கள்தான்.

போரால் பிரிந்த ஜெர்மனி, வியத்நாம், கம்போடியா (லாவோஸ்) நாடுகள் இணைந்துள்ளபோது, கொரியா ஏன் இணையக்கூடாது?

இந்தக் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Posted in Korea, UN | Leave a Comment »

TJS George – Happy Independence Day: Congress, BJP, UDA, NDA, Alliance, Coalition Politics

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

நமக்கெல்லாம் எதற்கு சுதந்திரம்?

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

இந்த 60-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் அதிகம் ஒலித்த கோஷம், “”நாம் எதிர்கொள்வோம்” என்பதுதான்.

மல்லிகைப்பூவைப் போன்ற தூய வெண்ணிற ஆடையை அணிந்த நமது தலைவர்கள் மேடைகளில் ஏறி, “”நம்முடைய நலனுக்காகவே அவதாரம் எடுத்து, மாடாய் உழைத்து -ஓடாய் தேய்ந்து அவர்கள் எப்படி சர்வபரித் தியாகங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று முழங்கினார்கள். அவர்கள் பேசியதற்கும், நம்முடைய அவலநிலைக்கும் யாதொரு தொடர்பும் இல்லாததைப் போலவே தோன்றியது.

நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் ஆன பின்னர், மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் கட்சி என்று ஒன்றுகூட இல்லை என்பதையே இந்த சுதந்திர தின விழாவும், ஆட்சியாளர்களின் மேடைப் பேச்சுகளும் உணர்த்துகின்றன.

1977 முதல் 1980 வரையிலான காலம், இதைத்தான் நமக்கு உணர்த்தியது. சர்வாதிகார ஆட்சியை இந்திரா காந்தி அறிவித்ததையும், அதைத் தொடர்ந்து மக்களை ஒடுக்கும் அடக்குமுறைகள் நாட்டில் கட்டவிழ்த்துவிடப்பட்டதையும் கண்ட மக்கள் வெகுண்டெழுந்து 1977 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மறக்கமுடியாத பாடத்தைப் புகட்டினார்கள். இந்திரா காந்தியே தோற்கடிக்கப்பட்டார்! எத்தனை நம்பிக்கையோடு மக்கள், ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள்!

ஜனதா தலைவர்களின் பதவிச் சண்டையால், மக்களுடைய நம்பிக்கை வற்றி உலர்ந்துபோனது. மிகப்பெரிய தியாகிகள், தீரர்கள், பொதுநலவாதிகள் பங்கேற்ற ஜனதா அரசு கடைசியில், “”கோமாளிக்கூத்தாக” முடிந்தது. 3 ஆண்டுகளுக்குள் இரண்டு பிரதமர்களை நாடு அப்போதுதான் பார்த்தது.

1980 தேர்தலில், நம்பிக்கையைப் பொய்யாக்கிய “”ஜனதா கும்பலை” மக்கள் பதவியிலிருந்து விரட்டினார்கள்; அப்படியானால் யாரை அவர்களால் ஆட்சிக்குக் கொண்டுவர முடிந்தது? வேறு யாரை, அதற்கு முந்தைய தேர்தலில் படுதோல்வி அடையவைத்து, ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றிய இந்திரா காந்தியைத்தான். இந்திய மக்களுக்கு அவரைவிட்டால் வேறு கதியே இல்லாமல் போனது.

“”அவரைவிட்டால் வேறு கதி யார்” என்ற துர்ப்பாக்கிய நிலை, இந்திய வாக்காளர்களுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்ப்படுகிறது.

ஒரு காலத்தில், பாரதீய ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாகவும், நல்ல மாற்றாகவும் தோற்றம் அளித்தது. எனவே அக் கட்சியை மக்கள் ஆதரித்தனர். அவர்களும் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸில் உள்ள தலைவர்களைப் போலவே சுயநலம், பந்தா, கோஷ்டி மனப்பான்மை என்று நடந்துகொண்டனர். எனவே மக்கள் அவர்களைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். அப்படியானால் வேறு யாரை உட்கார வைத்தனர்; வேறு யார், காங்கிரûஸத்தான் மீண்டும் உட்கார வைத்தனர்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சி பீடத்துக்கு வந்திருக்கிறது; எப்படி, இரண்டு ஊன்றுகோல்களுடன்!

மூன்றாவது அணி என்று புதிதாக கடைவிரிக்கப் பார்க்கிறவர்களும், மக்களிடம் போணியாகாமல், ஓரங்கட்டப்பட்டவர்கள்தான்!

யாரைத் தேர்வு செய்வது என்ற கேள்வி எழும்போதெல்லாம், நம்பிக்கைக்கு எந்த வகையிலும் உரியதல்லாத காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதாவும்தான் கண்முன் நிற்கின்றன.

2009-ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் அதற்கு முக்கிய காரணம் பாரதீய ஜனதாவாகத்தான் இருக்க முடியும். (விசுவ ஹிந்து பரிஷத் தொண்டர்களின் கைவண்ணத்தால், சிதைந்து கசங்கிய ஓவியர் எம்.எஃப். உசைனின் ஓவியம்போலவே இப்போது காட்சி தருகிறது பாரதீய ஜனதா!)

மீண்டும் இதே வகையில் ஆட்சிக்கு வருவது காங்கிரஸ் கட்சிக்கே நல்லதல்ல; ஏன் என்றால், எப்போதும் ஆதாயத்துக்காக சுரண்டிக்கொண்டே இருக்கும் தோழமைக் கட்சிகளின் தயவில்தான் அது மீண்டும் ஆட்சி நடத்த வேண்டியிருக்கும்.

150 இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியை, 60-க்கும் குறைவான இடங்களில் வென்ற இடதுசாரி கட்சிகள் ஆட்டிப்படைக்கின்றன. அரசுக்கு உள்ளே இருந்து ஆதரிக்கும் சிறிய கட்சிகள், எல்லா வகையிலும் ஆதாயங்களை அடையாளம் கண்டு கேட்டுப்பெற்று மகிழ்கின்றன; வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிகள் எதற்கெடுத்தாலும் கூச்சல் போட்டு சந்தைக்கடை இரைச்சலை ஏற்படுத்துகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலேயே அதிக அதிகாரம் செலுத்தி காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் ஒரே கட்சி, 16 உறுப்பினர்களைக் கைவசம் வைத்துள்ள திமுகதான். அதுவே தனக்கென கேபினட் அமைச்சர்களை நியமித்துக் கொள்கிறது, அந்த அமைச்சர்களுக்கான இலாகாக்களையும் அதுவே எடுத்துக் கொள்கிறது; அந்த உரிமை அந்தக் கட்சிக்கே உரித்தான “”இறையாண்மை” போலத் தோற்றம் அளிக்கிறது.

டி.ஆர். பாலு, சேது சமுத்திர திட்ட பிரதமரைப் போலவும், பாமகவின் ஆர். வேலு தெற்கு ரயில்வேயின் பிரதமர் போலவும் செயல்படுகின்றனர்.

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளட்டும் என்று காங்கிரஸ் கட்சி விட்டுவிட்டது. காரணம், ஒரு குடும்பத்தின் அதிகாரத்தைக் கட்டிக்காப்பது என்ற அதன் லட்சியம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தேசத்தின் “”அன்பான நண்பன்” ஆத்தோவியோ குவாத்ரோச்சி ஆர்ஜென்டீனாவிலிருந்து தாய் நாடான இத்தாலிக்கு எத்தனை அழகாகப் போனார் பாருங்கள்! அறிவு, துணிவு, விரைவு என்று எதையும் கைக்கொள்ளாமல் இந்த வழக்கை ஏனோதானோவென்று கையாண்டது சி.பி.ஐ.

குவாத்ரோச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ஜென்டீனாவின் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை, அவருக்கு எதிராக கைது வாரண்டைக்கூட அது தாக்கல் செய்யவில்லை.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைவதைத் தடுக்க முடியாமல் உடன் இருந்து பார்த்த ராகுல் காந்தி, ஓய்வெடுக்க மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

காங்கிரஸ் தோல்விக்கான பழி, மாநிலத்திலிருந்து பணியாற்றிய மற்ற தலைவர்களின் தோள் மீது இறக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச பிரசாரப்பணிக்குப் பிறகு, ஸ்ரீமான் காந்திக்கு கட்சியில் அடுத்த உயர் பொறுப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. “”தவறே செய்ய முடியாத” தலைவர்களின் பிறப்புரிமைதான் இந்தப் பதவிகளும் சலுகைகளும்.

ஒவ்வொரு குளறுபடிக்குப் பிறகும் இந்த மேல்மக்கள் அனைவரும் கட்சியில் உயர் பதவிகளைப் பெற்று மேலேமேலே போய்க்கொண்டே இருப்பார்கள்.

கால்நடைகளான நமக்குத்தான் வேறு மேய்ச்சல்காடு கிடையாது!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in Freedom, Independence | Leave a Comment »

Pazha Nedumaran Interview – Tamil Eezham, Dravidian Parties, Tamil Nadu, LTTE, Indian Nationalism

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

நான் தமிழ் தேசியம் பேசுவது ஏன்?

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு பழ. நெடுமாறன் அளித்த பேட்டியின் சென்ற வாரத் தொடர்ச்சி…

எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைந்து விட்டீர்களே, அதற்கு என்ன காரணம்?

இந்திய தேசியம் பேசியவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்னைத் தமிழ் தேசியம் பேச வைத்திருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வதுதான் இந்திய தேசியமா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு கடந்துவிட்ட பிறகும் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை, இந்திய அரசாவது தலையிட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றி வைப்பதுதானே நியாயம்? இந்திய தேசியம் பேசும் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிட்டார்களா, இல்லை நான் குறுகிப் போய்விட்டேனா என்று நீங்களே சொல்லுங்கள். காவிரியில் தண்ணீரே வர வேண்டாம். ஆனால், கர்நாடக அரசு செய்வது தவறு, நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க வேண்டும் என்று இந்திய தேசியம் பேசும் அகில இந்தியத் தலைவர் யாராவது ஒருவர் கண்டித்திருந்தாலோ, குரல் கொடுத்திருந்தாலோ, சற்று ஆறுதலாகவாவது இருந்திருக்கும். எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும்போது, இந்திய தேசியம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் அர்த்தமே கிடையாது.

மாநிலக் கட்சிகள் மத்திய அரசில் பங்குபெறும் இன்றைய நிலையில், உங்கள் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா?

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும்தான் மாநிலக் கட்சிகள் தோன்றின. ஆனால், இந்த மாநிலக் கட்சிகள் ஏதாவது ஓர் அகில இந்தியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் எந்த நோக்கத்துக்காகக் கட்சி தொடங்கினார்களோ அந்தக் கோரிக்கைகள் எதையும் வலியுறுத்துவதும் இல்லை. மாநில சுயாட்சிக்கு சட்டப் பேரவையிலேயே கோரிக்கை போட்ட அதே கட்சி, மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கியபின், அந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஏதாவது நடவடிக்கையை எடுத்தார்களா என்றால் கிடையாது.

ஆட்சியிலேயே அங்கம் வகிக்கும்போது, மாநில சுயாட்சி என்கிற கோரிக்கை நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அப்படிச் சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை. ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப் பலகைகளில் இந்தி இருக்கக்கூடாது என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி அறிவித்தார்கள். இப்போது, அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மத்திய அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார். அத்தனை நெடுஞ்சாலை மைல் கற்களிலும் இந்தி வந்திருக்கிறதே, அது அவருக்குத் தெரியாமலா நடந்தது? பதவிக்குப் போனபிறகு இந்த மாநிலக் கட்சியினர் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். நீர்த்துப்போய் விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மாநிலக் கட்சிகள் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவர்களது ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளைக் கேட்டு வாங்குகிறார்களே தவிர மாநிலங்களுக்கான உரிமைகளைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும். தேசியக் கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்குப் பதிலாக, இந்த மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பைத் தேசியக் கட்சிகள் ஆதரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தத் துணிவு இவர்களுக்கு ஏன் வரவில்லை? இவர்களுக்கு மாநிலங்களில் ஆட்சி வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்ள தில்லியில் செல்வாக்கு வேண்டும், அவ்வளவுதான்.

வீரப்பன் விஷயத்தில் நீங்கள் தலையிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்ததா?

நடிகர் ராஜ்குமார் பணயக் கைதியாகி மூன்று மாதத்துக்கு மேலான பிறகு ஒருநாள் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டனுப்பி, என்னைத் தூதுவராக அனுப்பும்படி வீரப்பனிடமிருந்து செய்தி வந்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீரப்பனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, நான் எப்படிப் போவது என்று மறுத்தேன். கர்நாடகத் தமிழ்ச் சங்கங்களின் வற்புறுத்தலும், அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் தொடர்ந்த வேண்டுகோளும்தான் எனது முடிவை மாற்றிக் கொள்ள செய்தன. ஒரு மனிதநேய முயற்சியாக, ராஜ்குமாரைக் காப்பாற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையில் இனமோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாகத்தான் எனது பயணம் அமைந்தது.

ராஜ்குமார் விடுதலையில் மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை நடந்ததாகச் சொல்லப்படுகிறதே, அது எந்த அளவுக்கு உண்மை?

பண பேரம் நடந்தது என்று தெரிந்திருந்தால் நான் அந்த விஷயத்தில் தலையிட்டிருக்க மாட்டேன்.

உங்களது கணிப்பில் வீரப்பன் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தான்?

எனக்கு அவன் ஒரு கொடியவனாகத் தெரியவில்லை. அவன் நாகரிகமற்றவனாக இருந்தாலும்கூட, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருந்தான் என்பதுதான் நான் பார்த்த உண்மை. நாங்கள் காட்டுக்குள்ளே போனோமே, எங்களையும் பிடித்து வைத்திருந்தால் யார் என்ன செய்துவிட முடியும்? இந்த அரசாங்கம் எங்களைக் காப்பாற்றி இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். எங்களது பேச்சுவார்த்தையின்போது அவன் சில நிபந்தனைகளை முன்வைத்தான். அதிரடிப்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டவர்களில் வீரப்பனின் குடும்பத்தினர் எவருடைய பெயரும் இல்லை. “அவர்கள் பெயரை நான் குறிப்பிட்டால் நான் சொன்னது அனைத்தும் எனது குடும்பத்தினருக்காகத்தான் என்கிற கெட்ட பெயர் வந்துவிடும். அதனால்தான் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை’ என்று வீரப்பன் விளக்கியபோதுதான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

நீங்கள் அவனைச் சரணடையச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லையா?

எங்களது பேச்சுவார்த்தைகள் முடிந்து ராஜ்குமாரை விடுதலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு, வீரப்பனைத் தனியாக அழைத்துப் பேசினேன். சரணடைந்து விடுங்கள் என்று அறிவுரை கூறினேன். ஒரு மாதம் கழித்து வீரப்பனிடமிருந்து சரணடைய விரும்புவதாகத் தகவல் வந்தது. அதை இரண்டு முதல்வர்களுக்கும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. அதற்குக் காரணம், வீரப்பனை உயிரோடு பிடிப்பதில் நமது அதிகாரிகளுக்குச் சம்மதம் கிடையாது என்று கேள்விப்பட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று தமிழக முதல்வரிடமிருந்து, வீரப்பனைச் சரணடையச் சொல்லலாம் என்று தகவல் வந்தது. அப்போது தேர்தல் வர இருந்த நேரம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வீரப்பனின் கதி என்னவாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் செய்தது. வீரப்பனைச் சரணடையச் செய்து, தேர்தலில் அதைப் பிரச்சாரமாக்க நினைத்தார் கலைஞர் கருணாநிதி. அதற்கு நான் உடன்பட்டிருந்தால், வீரப்பன் என் மீது வைத்திருந்த மரியாதையை நான் இழந்திருப்பேன். அதனால்தான் அதற்கு நான் உடன்படவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியா தவிர வேறு யாரும் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அப்படி அனுமதிப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் நான் நினைக்கிறேன். இதை இந்திரா அம்மையார் புரிந்துகொண்டிருந்தார். இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இந்திரா காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது?

1983 ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் நடைபெற்று சுமார் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் அன்றைய வெளியுறவு ஆலோசகர் ஜி. பார்த்தசாரதியையும் வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சிறிய நாடு, அங்கு நடக்கும் சிறிய பிரச்னைதானே என்று கருதாமல் இரண்டு சீனியர்களை அனுப்பி வைத்து, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினார். அதாவது, “இந்தியா இந்த விஷயத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாது, ஜாக்கிரதை’ என்பதைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சரையும் அமைச்சர் அந்தஸ்திலுள்ள மூத்த வெளியுறவுத் துறை ஆலோசகரையும் அனுப்புவதன் மூலம் உணர்த்தினார் இந்திரா அம்மையார். உலக நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் யாரும் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் செய்கை அது. இவ்வளவு செய்தும், ஜெயவர்த்தனா தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் மழுப்புகிறார் என்று தெரிந்ததும், போராளிக் குழுக்களை அழைத்து வந்து, நமது ராணுவத்தின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஒருவேளை, இந்திரா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால், இலங்கைப் பிரச்னை எப்போதோ சுமுகமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.

தமிழ் ஈழத்தை இந்திரா காந்தி ஆதரித்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நான் அப்படிச் சொல்லவில்லை. ஆரம்பம் முதலே இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் இந்திரா அம்மையார் தீர்மானமாக இருந்தார்.

ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?

ராஜீவ் காந்தி வந்தவுடன், இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனை ராஜிநாமா செய்யச் சொன்னதுதான், ஈழப் பிரச்னைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. ஜி. பார்த்தசாரதியும் நரசிம்மராவும் கையாண்ட ஈழப் பிரச்னையை, ரமேஷ் பண்டாரியை அனுப்பிப் பேசச் சொன்னபோது, ராஜீவ் அரசு இந்தப் பிரச்னையை முக்கியமாகக் கருதவில்லை என்கிற தோற்றத்தை இலங்கைக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி விட்டார். அப்போது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைப் பிரச்னைக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறினீர்கள். அது ஏன்?

இந்தியாவின் வடபகுதிதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தாக்குதலுக்கு உட்படும் பகுதியாக இருக்கிறதே தவிர, இந்தியாவின் தென்பகுதி அபாயம் இல்லாத பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையைத் தவிர இங்கே வேறு அண்டை நாடு எதுவும் நமக்குக் கிடையாது. நமக்கு ஆபத்தே இல்லாமல் இருந்த தென்பகுதியில் இப்போது பாகிஸ்தான், இஸ்ரேல் என்று பல அந்நிய சக்திகள் காலூன்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்குத் தலைவலி கொடுக்க இலங்கையைத் தளமாக்க நினைக்கின்றன நமக்கு விரோதமான சக்திகள்.

இந்திரா காந்தியின் காலத்தில் அந்நியத் தலையீடு இலங்கையில் இல்லவே இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனே அமெரிக்காவுடன் ராணுவத் தளம் அமைப்பது பற்றிப் பேச இருக்கிறார் என்பது தெரிந்ததும், இந்திரா அம்மையார் நாடாளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். இந்து மகா சமுத்திரத்தில் எந்த அந்நிய சக்தி நுழைய முயற்சித்தாலும் அது எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தான் இந்தியா கருதும் என்று அவர் சொன்னதுதான் தாமதம், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இலங்கை ராணுவத்தின் விமானங்களையும் பாகிஸ்தானியர்கள்தான் ஓட்டுகிறார்கள். நாம் பயந்துபோய், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை ஆயுதம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா ஆயுதம் கொடுக்கிறது என்று நமது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறார். இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, தில்லியிலிருக்கும் நமது அரசு உணரவே இல்லை.

இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

நேரடி ஆதரவு தர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எங்கேயோ இருக்கும் நார்வே இந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்யும்படி விட்டது இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. இப்போது இந்தப் பிரச்னை தீர்ந்தாலும்கூட அதில் இந்தியாவின் பங்கு இல்லை என்றாகிவிடுகிறதே, அதுதான் தவறு என்கிறேன்.

அப்படியொரு நிலைப்பாடு எடுத்து நாம் அமைதிப்படையை அனுப்பி அவமானப்பட்டது போதாதா? இன்னொரு முறை இந்தியா இந்தப் பிரச்னையில் தலையிட்டு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

தப்பான நிலைப்பாட்டை அப்போது எடுத்ததால்தானே அப்படியொரு நிலைமை ஏற்பட்டது. அமைதிப்படை ஆயுதம் தாங்க வேண்டிய அவசியம் என்ன? “நமது வீரர்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள்தான் செத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று ஜெயவர்த்தனே சந்தோஷமாகச் சொன்னார். அந்த மோதலுக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அல்ல என்று இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய திபேந்தர் சிங் தான் எழுதிய புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார். மோதலுக்குக் காரணம் “ரா’ உளவுத்துறை செய்த தவறு. இந்த மோதல் ஏற்பட வேண்டும் என்று ஜெயவர்த்தனே விரும்பினார். அது நடந்தது.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது மிகப்பெரிய தவறில்லையா? அதற்குப் பிறகும் நாம் எப்படி விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

யார் யாரைக் கொலை செய்தாலும் அது தவறு என்று சொல்பவன் நான். அதுமட்டுமல்ல, நேரு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவன். ஏழாயிரம் ஈழத்தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்ததே என்று அவர்களும், ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர் என்று நாமும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்? நமது நாட்டிற்குள் நுழைந்து நமது முன்னாள் பிரதமரை அவர்கள் கொன்றுவிட்டனர் என்கிறோம் நாம். எங்கள் நாட்டிற்குள் நுழைந்து எங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது உங்கள் ராணுவம் என்கிறார்கள் அவர்கள். இது விடுதலைப் புலிகளின் பிரச்னையோ, ஈழத் தமிழர் பிரச்னையோ அல்ல. இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் நிலையில், நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்தப் பிரச்னையில் திமுக மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதுபோலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்னையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப “மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு’ என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப் பிரச்னை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காளதேச அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லையே ஏன்?

தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?

அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒருகாலத்தில் ஒன்றாகத்தான் வங்காளம் இருந்தது. இரண்டு பகுதிகளுமே

வங்காள மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடும், யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.

நிறைவாக, ஒரு கேள்வி. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைமை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியும் அதிகாரமும் சுயநலத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சரியான மாற்றுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

படம் : ஏ.எஸ்.கணேஷ்

Posted in ADMK, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, Dravidian, Eelam, Eezam, Eezham, Interview, LTTE, Nationalism, Nedumaaran, Nedumaran, Netumaaran, Netumaran, Op-Ed, Opinion, Pazha Nedumaran, Srilanka, TN | Leave a Comment »

Madurai Meenakshi Sundhareswarar – Annual Festival Celebrations: Thiruvilaiyadal

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விழா

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் ஆவணி மூல உற்சவத் திருவிழாவில் சனிக்கிழமை “புட்டுக்கு மண் சுமந்த’ கோலத்தில் சுந்தரேசுவரர்.

மதுரை, ஆக. 26: அருள்மிகு சொக்கநாதர் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நரியைப் பரியாக்கியது உள்ளிட்ட திருவிளையாடல் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதுரையில் வாணிய வைசிய குலத்தைச் சேர்ந்த பக்தையான வந்தியம்மை மூதாட்டிக்கு மோட்ச வீடு அளிக்கும் வகையில் அருள்மிகு சோமசுந்தரர் இயற்றிய 61-வது திருவிளையாடலாகிய புட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி, அருள்மிகு புட்டு உற்சவ வகையறா கட்டளைக்கு சொந்தமான புட்டு சொக்கநாதர் கோயில் மைதானத்தில் நடைபெற்றது.

இதனையடுத்து பிற்பகலில் அருள்மிகு சொக்கநாதருக்கு தங்கக் கூடையில், மண் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பின்னர் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் வந்தியம்மை பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு புட்டுத் தோப்பு பகுதியில் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். சுவாமி உலாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Posted in Festival, Hinduism, Madurai, Mathurai, MDU, Meenakshi, Meenashi, Minakshi, Minaxi, Sundharesvar, Sundharesvarar, Sundhareswar, Sundhareswarar, Sunthareswarar, Thiruvilaiadal, Thiruvilaiyaadal, Thiruvilaiyadal | Leave a Comment »

Dalit Conference – Congress is sold to other parties for MLA, MP Seats: Cong(I) MLA speech

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

காங்கிரஸை அடகு வைத்துவிட்டார்கள்: தலித் மாநாட்டில் எம்.எல்.ஏ. பேச்சு

சென்னை, ஆக. 26: பதவி ஆசைக்காக, காங்கிரஸ் கட்சியை, வேறொரு கட்சியிடம் அடகு வைத்து விட்டார்கள் என்று காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் போளூர் வரதன் புகார் தெரிவித்தார்.

சென்னையில் தேசிய ஜனநாயக தலித் இயக்க மண்டல மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில்

  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி,
  • மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்,
  • டி. சுதர்சனம் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

அனைவரது முன்னிலையிலும் போளூர் வரதன் பேசியது:

4 பேர் மத்திய அமைச்சர் ஆவதற்கும் சிலர் எம்.பி., எம்.எல்.ஏ. ஆவதற்காகவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வேறொரு கட்சியிடம் சிலர் அடகு வைத்துவிட்டார்கள்.

சொரணை இருந்தால் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். மக்களுக்கு பணியாற்றி கட்சியை நிலை நிறுத்த வேண்டும்.

தலித் மக்கள் தான் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம். இவர்களின் நலனுக்காக போராடினால் தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குக் கிடைக்கும்.

எனவே, பதவிக்காக அலைவதை விட்டுவிட்டு தலித் மக்களுக்காக போராடுங்கள் என்றார் போளூர் வரதன்.

கிருஷ்ணசாமி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி பேசியது:

போளூர் வரதன் எற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டுக்கு வருவதை சிலர் புறக்கணிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அப்படித் தான். தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக போராடுவது அவர்களுக்கு பிடிக்காது என்றார்.

2 ஆயுள் தண்டனை தேவையா? இந்த மாநாட்டில் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் டி. யசோதா பேசியது:

தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 40 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் அளிக்காமல் புறக்கணித்துவிட்டனர்.

இது 2 ஆயுள் தண்டனைக்குச் சமம். இதற்கு காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடும் ஒரு முக்கிய காரணம்.

தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிக்காக போராடிய காங்கிரஸ் கட்சிக்கு இந்த அளவுக்கு தண்டனை தேவையா என தமிழக மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் யசோதா.

Posted in Boloor, Bolur, Congress, Congress (I), Congress Party, Congress(I), Dalit, MLA, MP, Poloor, Polur, Speech, Varadan, Varadhan, Varathan | Leave a Comment »

Maya Venkatesan arrested – Six crore scandal: Real estate & Property Violations

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 26, 2007

தலைமறைவான “மோசடி மன்னன்’ மாயா வெங்கடேசன் கைது: ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல்

சென்னை, ஆக. 26: தலைமறைவாக இருந்த “மோசடி மன்னன்’ மாயா வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

மாயவரம் செம்பனார் கோயிலைச் சேர்ந்தவர் மாயா வெங்கடேசன் (34). தூத்துக்குடியில் “நெல்லை சிமென்ட்ஸ்’ என்ற பெயரில் ஆலை தொடங்குவதாகக் கூறி, 24 கட்டட காண்ட்ராக்டர்களிடம் முன்பணமாக ரூ. 5.72 கோடி பணம் பெற்றார். ஆனால், பணம் முழுவதையும் மோசடி செய்து விட்டார்.

இதுதொடர்பாக மாயா வெங்கடேசன் மீது சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் மாயா வெங்கடேசன் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸýக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் மாயா வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் 06.04.2007-ல் விடுவிக்கப்பட்டார். ஆனால், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகாமல் தலைமறைவானார். ஜாமீனை ரத்து செய்யும்படி சிபிசிஐடி போலீஸôர் மனு செய்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மாயா வெங்கடேசனை, சிபிசிஐடி போலீஸôர் தேடி வந்தனர். சென்னை செனாய் நகரில் இருந்த மாயா வெங்கடேசனை சிபிசிஐடி போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார், 2 செல்போன்கள் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 687 ஏக்கர் நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Posted in Arrest, Assets, Estate, Maaya, Maya, Property, Vengatesan, Venkadesan, Venkatesan | Leave a Comment »