மனிதாபிமான பணியாளர்களுக்கு மிகவும் மோசமான நாடு இலங்கை: ஐ.நா செயலரின் பேச்சாளர்
![]() |
![]() |
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலாளர் நாயகம் ஜான் ஹோம்ஸ் அவர்களால் கூறப்பட்ட, இலங்கை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் பணியற்றுவதற்கு மிகவும் பாதுகாப்பற்ற இடம் என்ற கருத்தை ஐ. நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தக் கருத்து எந்த அடிப்படையில் கூறப்பட்டது என்று பிபிசி சந்தேசிய சார்பில் ஐ.நா தலைமைச் செயலரின் பேச்சாளரான, பாரான் ஹக் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஐக்கிய நாடுகளின் ஜான் ஹோம்ஸ் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது பல நல்ல சமிஞ்சைகள் தென் பட்டன என்பதை தாங்கள் முதலில் சுட்டிக் காட்ட விரும்புவதாகவும், அதே நேரத்தில் உண்மை விவரங்களின் படி பார்த்தால், 2006 ஆம் ஆண்டில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவு கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், இதற்கு மூதூரில் நடந்த சம்பவம்தான் பெரிதும் காரணம் என்றும் இச்சம்பவம் தொடர்பான முறையான விசாரணை தேவை என்றும் கூறினார்.
இதற்கிடையே, சமீபத்தில் இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலாளர் நாயகம் ஜான் ஹோம்ஸ் அவர்கள் ஒரு தீவிரவாதி என்று, இலங்கையின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜான்ஹோம்ஸ் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிடம் கையூட்டு பெற்றதாகவும், அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதையும் அமைச்சர் தரவில்லை.
இலங்கையில் பணிபுரியும் தொண்டுநிறுவன ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து, ஜான் ஹோம்ஸ் அவர்கள் கவலை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து, இலங்கை அமைச்சரின் இன்றைய குற்றச்சாட்டு வந்துள்ளது.
இலங்கை அதிகாரப்பகிர்வுக்கான அடிப்படை அலகாக மாகாணங்களே திகழும்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண
![]() |
![]() |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த் ராஜபக்ஷ |
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியாக அதிகாரப்பரவலாக்கல் குறித்து ஆராயும் சர்வகட்சிக் குழு, அடிப்படை அதிகாரப் பகிர்வுக்கான அலகாக மாகாணங்களே திகழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பகிர்வுக்கான அடிப்படை அலகாக மாகாணங்களே திகழ வேண்டும் என்றும், அதேவேளை அத்தகைய மாகாணங்களுக்கு உள்ளே மாவட்டங்கள் நிர்வாக அலகுகளாக பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வகட்சிக் குழுவில் ஒருமித்த நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அடிப்படை அலகாக மாவட்டங்களே இருக்க வேண்டும் என்று இலங்கை ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சுதந்திரக் கட்சி முன்னர் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், தற்போது அவர்களும் மாகாணங்களை, அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை அலகாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து ஊடக அமைப்பு கண்டனம்
![]() |
![]() |
செய்தியாளர்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிரான செய்தியாளர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று(ஆவணப்படம்) |
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் தினசரியான தினக்குரல் பத்திரிகையின் செய்தியாளரான கே. பி. மோகன் நேற்று திராவக வீச்சுக்கு இலக்கானதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் படையினரால் தாக்கப்பட்ட போது தனக்கு ஏற்பட்ட காயத்துக்காக கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சையை முடித்துக்கொண்டு மோகன் வெளியே வந்த போது, அவர் மீதுதிராவகம் வீசப்பட்டதாகவும், முகம் கழுத்து, மற்றும் பின்புறம் ஆகிய இடங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்த புலன்விசாரணை நடப்பதாக இலங்கை பொலிஸாரின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிப்பதற்கு மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக செயற்பாட்டாளர்களால் கூறப்படும் இலங்கையில், செய்தியாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கவலைகள் அதிகரித்துள்ளதாகவும் சுதந்திர ஊடக இயக்கம் கூறியுள்ளது.