Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 13th, 2007

Nuke Deal With US Draws Domestic Opposition – Indian Communists Say US Nuclear Accord Lacks House Support

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

எண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்


இடதுசாரிகளின் இரட்டைவேடம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை?

இந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.

இந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.

இதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.

அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்?

நாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.

தேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.

ஏன் இந்த இரட்டை வேடம்?

——————————————————————————————————————————-
அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதியா?

என். ராமதுரை

இந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

அணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.

தமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.

ஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை போலவும் வாதிப்பதும் தவறு.

அணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.

இந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.

ஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும்? முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்பற்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.

தோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

அணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.

இந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம் கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.

இந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.

இப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.

இப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

——————————————————————————————————————————-

அரசுக்கு “கெடு’ ஆரம்பம்?

நீரஜா செüத்ரி

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.

இந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.

இனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.

காட்சி 1:

பிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

மன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.

காட்சி 2:

இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.

ஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.

அப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.

காட்சி 3:

ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.

அப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.

அதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.

“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.

அதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.

சிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.

காட்சி 4:

பிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.

இதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் இருக்கிறது.

இந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.

————————————————————————————————————————————————

விதியின் விளையாட்டு!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.

தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா? புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா?’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.

ஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.

கேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.

இதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.

ஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.

கேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத்? பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்!

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————-

தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா?

நீரஜா செüத்ரி

இந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.

எந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒவ்வொரு கட்சியும் நினைக்கும்.

“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

பிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.

அணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

ஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதைய ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.

பாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.

நவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.

காங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.

இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.

எனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.

எனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.

இன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.

மக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.

இப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்!

Posted in abuse, Accord, Alliance, America, Army, Artillery, Assembly, Atom, Atomic, Attack, Bombs, Brinda, China, Coalition, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Comunists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), deal, defence, Defense, Duty, EU, Europe, Force, House, Jothibasu, Karat, Left, LokSaba, LokSabha, Manmohan, Marines, MP, Navy, NCC, NSS, Nuclear, Nuke, Opposition, Pakistan, Party, Planes, Pokhran, Politics, Power, Prakash, Rajasthan, Reserve, Russia, Somnath, Sonia, Soviet, support, US, USA, USSR, Wars | 1 Comment »

TV wars of Tamil Nadu: DMK vs ADMK vs Congress vs PMK

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

அரசியல் சார்புடன் மேலும் 3 அலைவரிசைகள்: தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது “தொலைக்காட்சிப் போர்’

புதுதில்லி, ஆக. 13: அரசியல் சார்புடன் புதிதாக மேலும் 3 தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பாக உள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் போர் தீவிரமடைகிறது.

தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் தொடங்கும் “கலைஞர் டிவி’, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.வி.தங்கபாலு தொடங்க உள்ள “மெகா டிவி’ மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் தொடங்க உள்ள “வசந்த் டிவி’ ஆகிய மூன்றும் விரைவில் ஒளிபரப்பைத் தொடங்க உள்ளன. இவற்றில், “மெகா டிவி’ ஆகஸ்ட் 20-ம் தேதியும், “கலைஞர் டிவி’ செப்டம்பர் 15-ம் தேதியும் ஒளிபரப்பைத் தொடங்குகின்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தமக்கென ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக ஏற்கெனவே ஜெயா டிவியை நடத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் குரலாக 2006 முதல் “மக்கள் தொலைக்காட்சி’ ஒளிபரப்பாகி வருகிறது.

“இந்தப் போக்கு ஆரோக்கியமானதும் அல்ல; போட்டிச் சூழலுக்கு உகந்ததும் அல்ல. அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இந்த முயற்சிகள் எதுவும் வணிக அடிப்படையில் வெற்றிபெறப் போவதில்லை.

தொலைக்காட்சி என்ற வலிமைமிக்க ஊடகத்தை, ஒரு குறிப்பிட்ட ஆள் அல்லது கட்சியின் கருத்துகளை பரப்புவதற்குத்தான் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தும். பார்வையாளர்கள் மத்தியில் தமது கருத்துகளைத் திணிப்பதற்கு இந்த அலைவரிசைகள் முயற்சி செய்யும்’ என பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆசியுடன் “வசந்த் டிவி’ தனது ஒளிபரப்பைத் தொடங்கும் என்று கூறியுள்ளார் வசந்தகுமார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான இவர், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்திவருகிறார்.

“ஒரு நாளுக்கு 6 முறை செய்தி ஒளிபரப்புடன் கூடிய, 24 மணி நேர பொழுதுபோக்கு அலைவரிசையாக வசந்த் டிவி இருக்கும். எமது செய்திகளில் காங்கிரஸ் தொடர்பான குறிப்பாக சோனியா காந்தி தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி அன்றாடம் இடம்பெறும்’ என்று கூறும் வசந்தகுமார், “தனது அலைவரிசை வணிக அடிப்படையிலும் வெற்றிபெறும்’ என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார பீரங்கிகளாக செயல்பட்டு வரும் சன் டிவியும் ஜெயா டிவியும் தொலைக்காட்சி மூலம் அரசியல் யுத்தம் நடத்தியுள்ளன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் பெரும் அரசியல் லாவணியை இவை நடத்தும்.

கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் (கலாநிதி, தயாநிதி) சகோதரர்களுக்கும் இடையே வெடித்த குடும்பச் சண்டையால், மற்றொரு முன்னணி அலைவரிசையான ராஜ் டிவி திமுக ஜோதியில் ஐக்கியமாகியுள்ளது. ராஜ் டிவிதான் கலைஞர் டிவிக்கு வேண்டிய அனைத்து ஒளிபரப்பு ஒத்தாசைகளையும் செய்து வருகிறது.

“மக்களை ஏமாற்ற முடியாது. உண்மைக்கும், பொய்ச் செய்திக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பகுத்துப் பார்க்கும் திறன் அவர்களுக்கு உண்டு. செய்தியின் உண்மைநிலை ஐயத்துக்கிடமானதாக மாறும்போது உடனடியாக பார்வையாளர் வேறு அலைவரிசைக்குச் சென்று, உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்வார்’ என்கிறார் சோ.

“மக்கள் தொலைக்காட்சி, அரசியல் அலைவரிசை அல்ல. பாட்டாளி மக்கள் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் மக்கள் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதில்லை. செய்தியை அரசியலுக்காகத் திரிப்பதில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கிறோம். மற்ற பிற அலைவரிசைகள் சீரழிக்கும் தமிழ்ப் பண்பாட்டை மக்கள் தொலைக்காட்சியில் உயர்த்திப் பிடிக்கிறோம். எங்களது நிகழ்ச்சிகளை குறிப்பாக செய்திகளை ஏராளமான மக்கள் விரும்புகின்றனர்’ என்கிறார் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த அலுவலர் ஒருவர்.

Posted in abuse, ADMK, Anbumani, Cho, Color TVs, Colour TV, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Dinamalar, DMK, Entertainment, Jaya, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya TV, Jeyalalitha, JJ, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Makkal, Makkal TV, Manipulation, Media, MSM, News, PMK, Power, Ramadas, Ramadass, Ramadoss, Tamil Nadu, TamilNadu, Television, Thangabalu, Thankabalu, Thuglaq, TN, Vasanth, Vasanth&Co, Wars | Leave a Comment »

Pupils go hungry in Bihar because cook is low-caste

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிட மாணவர்களுக்கு தடை: பிகாரில் தொடரும் ஜாதிக் கொடுமை

சசாராம் (பிகார்), ஆக. 13: பிகாரில் அரசு நடத்தி வரும் தொடக்கப்பள்ளியில் தலித் பெண் சமைத்த மதிய உணவை மாணவர்கள் சாப்பிட பள்ளிக்குழு செயலர் கடந்த ஒரு மாதமாக தடை விதித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டிலும் இத்தகைய ஜாதிக் கொடுமைகள் நடப்பது சமூக நீதி ஆர்வலர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோடாஸ் மாவட்டத்தில் உள்ளது பிப்ரி கிராமம். உயர்ஜாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது.

இப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியை தலித் பெண் செய்து வருகிறார். இவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிடக் கூடாது என பள்ளிக் குழு செயலர் உமா சங்கர் திவாரி என்பவர் தடை விதித்துள்ளார்.

மகிளா சமாக்ய சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு பள்ளியில் மதிய உணவு தயாரிக்க தலித் பெண் நியமித்துள்ளது. அவர் சமைத்த உணவை மாணவர்கள் சாப்பிட நான் அனுமதிக்க மாட்டேன் என உமா சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகிளா சமாக்ய சங்க ஒருங்கிணைப்பாளர் சிகா குமாரி கூறியது:

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிப்பதற்காக 3 தலித் பெண்களும் 2 மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளி செயலரிடம், மாணவர்களை மதிய உணவை சாப்பிட விடுங்கள் என பல முறை வற்புறுத்தியும் பலன் இல்லை. மாணவர்கள் தொடர்ந்து மதிய உணவு சாப்பிடாமல் செல்கின்றனர்.

திவாரியும் அவரது ஆட்களும் சமையல் கூடத்தை சேதப்படுத்தி சமையல் பாத்திரங்களையும் எடுத்து சென்று விட்டனர் என்றார்.

மனித வள துணை செயலர் ராஜேந்திர பிரசாத்துடன் பிப்ரி கிராமத்திற்கு திங்கள்கிழமை சென்று இது விசாரணை நடத்த உள்ளதாக மனித வள செயலர் எம்.எம். ஜா பாட்னாவில் கூறினார்.

இது குறித்து சதார் காவல் நிலையத்தில் திவாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரச்னைக்குரிய பள்ளியில் 39 தலித் மாணவர்கள் உட்பட 87 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட விடுப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர் மீதும் பள்ளிக் குழு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Bihar, Caste, cook, Dalit, Eat, FC, Food, Hinduism, Hindus, Meals, Oppression | Leave a Comment »

Marathon trainer is allegedly abusing the ‘star’ kid for performance

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

பயிற்சியாளர் மீது “மாரத்தான் சிறுவன்’ புகார்

புவனேஸ்வரம், ஆக. 13: தன்னைத் துன்புறுத்தியதாக பயிற்சியாளர் மீது “மாரத்தான் சிறுவன்’ பூதிய சிங் புகார் தெரிவித்தார். அதையடுத்து பயிற்சியாளரிடம் இருந்து அவர் பிரிக்கப்பட்டார்.

பூதியா சிங் என்ற 5 வயதுச் சிறுவன், கின்னஸ் சாதனைக்காக 65 கி.மீ. தூரத்தை கடந்த ஆண்டு ஒடிக் கடந்தான். இந்த நிகழ்ச்சி, விளையாட்டு உலகத்தையே புருவத்தை உயர்த்தச் செய்தது. இருந்த போதிலும், சிறுவனைத் துன்புறுத்தும் செயல் இது என சமூக ஆர்வலர்கள் சிலர் அப்போதே எதிர்த்தனர்.

இந்நிலையில், தனது பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், சரியாக உணவு வழங்கவில்லை எனவும் உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பூதியா சிங் தெரிவித்தார்.

இதற்குப் பிறகும் பிரஞ்சியுடன் பூதியா இருப்பதை அனுமதிக்கப் போவதில்லை என அவரது தாய் சுகந்தி சிங் கூறினார்.

எனினும், பூதியாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் தெரிவித்துள்ளார்.

Posted in Sports | Leave a Comment »

All Taliban are not terrorists: Pervez Musharraf acknowledges activity by militants & Afghanistan fighting and clashes – Dead Toll

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

பாகிஸ்தானுக்குள் தலிபான்கள்: அதிபர் முஷாராப் ஒப்புதல்

ஆப்கான் அதிபருடன் பாகிஸ்தான் அதிபர்
ஆப்கான் அதிபருடன் பாகிஸ்தான் அதிபர்

பாகிஸ்தானுகுள் இருந்து தலிபான் தீவிரவாதிகள் செயற்படுகின்றார்கள் என்பதை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாராப் ஒப்பு கொண்டுள்ளார். அவர்களின் செல்வாக்கை குறைக்க முயற்சிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மூத்தவர்களின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாராப், இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டின் முடிவில் விடுக்கப்பட்ட அறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒரு முக்கிய விஷயமாக இரு நாடுகளுக்கும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அத்தோடு தீவிரவாதிகளுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து சிப்பாய்கள் பலி

ஆப்கானில் பிரிட்டிஷ் துருப்பினர்
ஆப்கானில் பிரிட்டிஷ் துருப்பினர்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், வீதீயோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்ததில், அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையைச் சேர்ந்த 3 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.

சிவிலியனான மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் அதில் கொல்லப்பட்டார்.

நங்கர்ஹார் மாகாணத்தில், தாக்குதல் நடவடிக்கையில் இந்தப் படையினர் ஈடுபட்டிருந்த போதே, அவர்களது வாகனம் வெடியில் சிக்கியது.

மற்றுமொரு சம்பவத்தில், ஹெல்மண்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் நாட்டுச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார்.

அவரது ரோந்துத் தளத்தின் மீது நடந்த தாக்குதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டார்.

Posted in Tamil | Leave a Comment »

UN’s website breached: Hackers protest US, Israeli policy – Defaced By Cyber protesters

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 13, 2007

ஐ.நாவின் இணையத்தளத்திற்குள் அத்துமீறல்

ஐ.நா இணையத்தளத்திற்குள் அத்துமீறல்
ஐ.நா இணையத்தளத்திற்குள் அத்துமீறல்

ஐ.நா சபையின் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் அத்துமீறி உட்புகுந்தவர்கள், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு எதிரான கோஷங்களை எழுதியுள்ளனர்.

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் விடுக்கும் அறிக்கைளுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதியில், சைபர் எதிர்ப்பு என்ற பெயரில் வாசகம் எழுதப்பட்டடிருந்தது.

போருக்கு எதிரான வாசகங்கள், பொதுவாக ஐ.நாவின் அறிக்கைகளுக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் காணப்பட்டது.

இதற்கு முன்னர் இவ்வாறு நடைபெற்ற அத்து மீறல்களில் ஈடுப்பட்டவர்களில் ஒருவராவது துருக்கியை சேர்ந்தவர் என கூறப்பட்டது.

Posted in Tamil | Leave a Comment »