கனமழை: பஞ்சாபில் 117 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்தது
சண்டீகர், ஆக. 10: பஞ்சாபில் பெய்த கனமழையில் சாக்கி ஆற்றில் கட்டப்பட்டிருந்த 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இடிந்து விழுந்தது.
இதனால் பதான்கோட்-தர்மசாலா-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்திலிருந்து பதான்கோட் வரும் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தொடர்மழையால் ராவி நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ள நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியாணாவிலும் மழை பெய்து வருகிறது.
குஜராத்தில் கனமழை குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ஜுனாகட், வெரவாள் உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து 4 வது நாளாக கனமழை பெய்து வருகிறது.
பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தலாலா, சுத்ரபாடா நகரங்களும், 107 கிராமங்களும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தடைப்படுள்ளது.
பல பகுதிகளில் மின்விநியோகம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர்பந்தர் மாவட்டத்தில் இரு அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.