Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஓகஸ்ட் 9th, 2007

Ignoring the sports development opportunity in Southern TN: Why only Chennai & why just cricket?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 9, 2007

தெரிந்தே செய்யும் தவறுகள்

தமிழகத்தைப் பொருத்தவரை விளையாட்டு அரங்கத்தில் நமது பங்களிப்பு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. அகில இந்திய ரீதியில் கிரிக்கெட், ஹாக்கி, செஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் நமது வீரர்கள் பிரமிக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துவந்திருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் அரசு தரும் ஊக்கம் என்பதைவிட, நமது இளைஞர்கள் மத்தியில் காணப்படும் ஆர்வம்தான்.

விளையாட்டுத் துறைக்கான தனி ஆணையம் செயல்படுவதுடன், கணிசமான அளவு நிதி ஒதுக்கீடும் மாநில அரசாலும் மத்திய அரசாலும் விளையாட்டுக்காக ஒதுக்கவும் செய்யப்படுகிறது. இத்தனை இருந்தும், கிராமப்புற நிலையிலிருந்து முறையாக விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து அகில இந்திய அளவில் எல்லா விளையாட்டுகளிலும் நமது வீரர்களை முன்னணியில் நிறுத்த இன்னும் ஏன் முடிவதில்லை என்கிற கேள்விக்கு, அரசும் விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆணையமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்ட, அதற்கு பதிலளிக்கும் முகமாக, ஒரு கோடி ரூபாய் செலவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைய இருப்பதாகவும், அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

விளையாட்டுத் துறையைப் பற்றிய மிகப்பெரிய குறைபாடு, சர்வதேசத் தரத்திலான விளையாட்டு அரங்கங்களும் பயிற்சிக்கூடங்களும் சென்னையில் மட்டுமே அமைந்திருக்கின்றன என்பதுதான். நெல்லையில் அமைய இருக்கும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை மையம்போல, உலகத் தரம் வாய்ந்த தடகள மைதானங்கள், கிரிக்கெட் மைதானங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து மற்றும் ஹாக்கி மைதானங்கள் போன்றவை தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் அமைய வேண்டியது அவசியம்.

விளையாட்டு என்பதே சென்னையை மட்டுமே மையமாகக் கொண்ட விஷயமாகி விட்டது. ஆனால், விளையாட்டு வீரர்களோ, மாவட்டங்களிலிருந்துதான் அதிகமாக உருவாகிறார்கள். பள்ளிக் கல்விக்கும் சுற்றுலாவுக்கும் தரப்படும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கும் அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. தனியார் கல்வி நிலையங்கள் பல, முறையான விளையாட்டுப் பயிற்சியாளர்களோ, மைதானமோ இல்லாமலே செயல்படுகின்றன என்பது அரசுக்குத் தெரிந்தும், இந்த விஷயத்தில் அரசு கண்மூடி மௌனம் சாதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. குக்கிராமம் வரை கிரிக்கெட்டின் பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. ஆனால், சென்னையைத் தவிர வேறு எந்த நகரிலும் சென்னையில் இருப்பதுபோல கிரிக்கெட் ஸ்டேடியம் இல்லையே, ஏன்?

சென்னையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கட்டுப்பாட்டில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த மைதானம் சர்வதேசத் தரத்திலான மைதானம் என்பதும் உலகறிந்த உண்மை. அப்படி இருக்கும்போது, பழைய மகாபலிபுரம் சாலையில் கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் இன்னொரு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க 50 ஏக்கர் நிலத்தை 30 ஆண்டுகளுக்கான குத்தகைக்குத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குத் தமிழக அரசு வழங்க ஒப்புதல் அளித்திருப்பது ஏன்?

கோடிக்கணக்கில் பணமிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அரசு நிலம் அளித்து உதவியதற்குப் பதிலாக, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை அல்லது சேலத்தில் ஏன் ஒரு நல்ல கிரிக்கெட் மைதானத்தை அரசின் பராமரிப்பில் கட்டக் கூடாது? வேட்டி கட்டிய தமிழக முதல்வரால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்குள் நுழைய முடியாது என்பதாவது அவருக்குத் தெரியுமா? தெரிந்துமா இப்படியொரு தவறு நடந்திருக்கிறது?

——————————————————————————————————————————

விளையாட்டு ஆணையத்தின் கவனத்துக்கு…

வி. துரைப்பாண்டி

தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் “உருவாக்கம்’ அரிதாகிவருவது, விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“சாம்பியன்ஸ்’ மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு- எஸ்டிஏடி) இளம் வீரர்களை உருவாக்குவதிலும், அதற்கான பயிற்சியாளர்களை நியமனம் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

“கேட்ச் தெம் யங்’ (இளமையில் தெரிந்தெடுத்தல்) எனும் பெயரில் முன்னர் செயல்பட்டுவந்த திட்டம் தற்போது இல்லை. அந்த குறைபாட்டால்தான் என்னவோ அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து வீரர், வீராங்கனைகளை கல்லூரிகள் “இறக்குமதி’ செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் எழுகிறது.

வீரர், வீராங்கனைகளின் உருவாக்கம் குறைந்துபோனதற்கு நமது கல்வி முறையின் வளர்ச்சிகளைக் காரணமாகக் கூறும் அதிகாரிகளும் ஆர்வலர்களும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா தோற்கும்போது “என்ன மோசமப்பா இது’ என ஆதங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் களமாக பெரும்பாலும் தலைநகரம் திகழ்கிறது. பெரும்பாலான போட்டிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. போட்டிகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் இருப்பது முக்கியமான காரணம் என்றாலும், அவற்றை சிறப்பாக நடத்துவதற்கு ஆதரவு (ஸ்பான்சர்கள்) அளிக்கும் முக்கிய நிறுவனங்களும் சென்னையில்தான் அதிகம் உள்ளன. ஆனால் லயோலா உள்ளிட்ட சென்னையில் உள்ள கலைக் கல்லூரிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான அட்மிஷன், தேக்கத்தை அல்லவா சந்தித்து வருகிறது?

கூடைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஜாம்பவானாகத் திகழ்ந்த லயோலா, இன்று பொறியியல் கல்லூரிகளிடம் உதை வாங்கும் பின்னடைவைப் பெற்றுள்ளது. சென்னையிலேயே இப்படி என்றால் திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகர்களில் உள்ள கலைக் கல்லூரிகளின் நிலைமை நிச்சயம் பரிதாபமாகத்தான் இருக்கும். இதற்கு அப் பகுதியில் உள்ள கல்லூரிகளைக் குறை சொல்ல முடியாது. சிறுவயதிலேயே இனம்கண்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டிவிடாத குறையாக போட்டி போட்டுக்கொண்டு என்னவெல்லாம் கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் இலவசமாகக் கொடுத்து தங்களைப் பிரபலப்படுத்தி வருகின்றன பொறியியல் கல்லூரிகள். சென்னையில் இது மாதிரியான தாக்கம் அதிகம். சில கல்லூரிகள் கேரளத்திலிருந்து நேரடியாக வீரர், வீராங்கனைகளை வரவழைத்து “திறமை’யை வெளி உலகுக்கு காட்டுகின்றன.

இதனாலேயே தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 30 மாவட்டங்கள் உள்ளன. அனைத்திலும் ஓர் அதிகாரியின் கீழ் விளையாட்டு மன்றங்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் போதுமான மைதானங்களோ, பயிற்றுநர்களோ இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். பின்னர் எப்படி இளைஞர்கள் இத் துறையை தேர்ந்தெடுக்க முடியும்?

முறையாகத் தொடங்கப்படும் திட்டங்கள், இடையில் தேக்கத்தை எட்டினால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, திட்டத்தையே கைவிடுவது எவ்விதத்திலும் நல்லதல்ல. அம் மாதிரி கருதப்படும் திட்டங்களில் ஒன்றுதான் “கேட்ச் தெம் யங்’. அது செயல்பாட்டில் இல்லாததால்தான் கலைக் கல்லூரிகள், போதுமான வீரர், வீராங்கனைகள் இல்லாமல் இன்று விளையாட்டுக் கலையுணர்வு இழந்து போயுள்ளன.

வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி அவர்களைத் தயார்படுத்தும் உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்க 2003-04-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்து, அதற்கு “முதலமைச்சர் விருது’ எனப் பெயரிட்டது. ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் அடங்கியது அந்த விருது.

அத் திட்டத்துக்கு உயிரூட்டும்விதமாக தற்போதைய அரசும் தகுதியானவர்களிடமிருந்து ஆண்டுதோறும் தனது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கக் கோரி வருகிறது. ஆனால் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை யாருக்கும் அவ்விருது வழங்கப்படவில்லை. முதலாம் ஆண்டு விருதுக்குரியவர்கள் யார் என்பதுகூட முடிவாகி, ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கடுத்த ஆண்டுக்கும் உரியவர்களை அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு இனம்கண்டுள்ளது. ஆனால் என்ன காரணத்துக்காகவோ இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிக்கு அந்த வியர்வை காயும் முன்பு கூலியைக் கொடுக்க வேண்டும். இல்லையேல், அது விழலுக்கு இரைத்த நீராகத்தான் இருக்கும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

அதேபோல, பயிற்சியாளருக்கான என்.ஐ.எஸ். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்) பயிற்சி பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். என்.ஐ.எஸ். பயிற்சி முடித்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக தவம் கிடக்கின்றனர். தமிழகம் முழுவதும் விளையாட்டு மன்றங்களில் போதுமான பயிற்சியாளர்கள் இல்லாத குறையைப் போக்க அவர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?

மொத்தத்தில் இது போன்ற பின்னடைவுகளால் பாதிக்கப்படுவது – எல்லோராலும் ரசிக்கப்படும் விளையாட்டுத் துறைதான். தேவை – எஸ்டிஏடி கவனம்.

Posted in 600028, Allocation, Asiad, Asset, athlete, athletics, Badminton, Basketball, Budget, Capital, Cars, Chennai, Chepauk, Chess, City, Clubs, CM, Corp, Corpn, Corporation, Cricket, Development, Districts, DMK, Economy, Football, Free, Funds, Game, Govt, Hockey, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, Kaniakumari, Kanniakumari, Kanniyakumari, Kanyakumari, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kovai, Land, League, MAC, Madras, Madurai, match, Matches, MCC, Metro, Needy, Nellai, Olympics, Op-Ed, Play, Players, Poor, Property, Rich, Salem, seat, Seating, Soccer, Sports, Stadium, Suburban, Tamil Nadu, TamilNadu, Tennis, Thiruchirapalli, Thiruchirappalli, Thirunelveli, TN, TNCC, Tour, Tourist, Track, Travel, Traveler, Trichy, Villages, Visit, Visitor, Voleyball, Watch, Wealthy | 1 Comment »