Rare Chozha Grain Jacket found near Wallajah
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007
வாலாஜா அருகே சோழர்கால அரிய தானிய உறை
வேலூர், ஆக. 8: வேலூர் மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள அவரைக்கரை-நவ்லாக் அருகில் எழுத்துகளுடன் அரிய சோழர்கால தானிய உறை கிடைத்துள்ளது.
நவ்லாக் அரசு தோட்டப் பண்ணை அருகே செங்கல் சூளைக்காக மண் எடுக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது இந்த உறை 10 அடி ஆழத்தில் காணப்பட்டது.
உறையின் மேல்பகுதி நாலரை அடி சுற்றளவும், கீழ்ப்பகுதி 11 அடி சுற்றளவும், உயரம் 3 அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுடுமண்ணால் செய்யப்பட்டதாகும்.
உறையின் கழுத்துப் பகுதியை சுற்றிலும் அலைவரிகளும், சிறிய மணி வரிகளும் காணப்படுகின்றன. உறையின் விளிம்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. விளிம்புக்கு கீழே புடைப்புச் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.
தற்போது உறையின் பாதி பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. மீதமுள்ள பகுதி பூமியில் புதைந்துள்ளது.
உறையின் 8 செ.மீ விளிம்பைச் சுற்றி சோழர்கால பாணியில் “ஸ்வஸ்திஸ்ரீ கடக்கங் கொண்டான் அகமுடையான் துக்கையாண்டி தன்மம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
உறையில் காணப்படும் பெயருடையவர் ஊர்ப் பொதுமக்களுக்கோ அல்லது கோயிலுக்கோ இந்த தானிய சேமிப்பு உறையை தானமாக அளித்திருக்கக் கூடும். “அகமுடையான் துக்கையாண்டி’ என்பவர் சோழர் காலத்தில் அப்பகுதி படைத் தலைவராக விளங்கியதும் கல்வெட்டில் இருந்து தெரிகிறது.
உறையில் உள்ள புடைப்பு சிற்பங்கள் 5 தொகுதிகளாகக் காணப்படுகின்றன. முதல் தொகுதியில் அமர்ந்த நிலையில் விநாயகரும், வலப்புறத்தில் மூஞ்சூரும், இடப்புறத்தில் பக்தரின் உருவமும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது தொகுதியில் குதிரை வீரனும், மூன்றாவது தொகுதியில் தோளுடன்தோள் சேர்ந்த மங்கையர் மூவரும். அவர்களில் நடுவில் உள்ள மங்கையை கர்ப்பிணியாகவும் புடைப்பு சிற்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மங்கையருக்கு வலப்புறம் நின்ற நிலையில் மாருதி ஒன்று காணப்படுகிறது.
நான்காவது தொகுதியில் வலப்புறமாக திரும்பி நிற்கும் யானை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 5-வது தொகுதியில் மத்தளம் கொட்டும் ஆடவன், நடனமாடும் மங்கை, தாளம் போடும் பெண் ஆகியன இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் கிடைத்துள்ள முதல் தானிய உறை இதுவே என்கிறார் தொல்லியல் துறை, ஆர்க்காடு அகழ்வைப்பக காப்பாட்சியர் மா. கலைவாணன்.
மறுமொழியொன்றை இடுங்கள்