Education as basic right
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
அடிப்படை உரிமையாகுமா கல்வி?
எஸ். சையது இப்ராஹிம்
“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.
கல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.
கரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.
பண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.
இவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.
ஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.
இதன் விளைவு என்ன? பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.
ஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
——————————————————————————————————————-
உயர்கல்வியில் குளறுபடி!
தமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.
எண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.
அரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.
அவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.
அரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.
அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது? அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.
தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன? தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும்? இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.
பயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது!
—————————————————————————————————————-
மனித உரிமைக் கல்வி!
ஆர். நடராஜ்
வழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.
“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.
10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.
கட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.
சம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரிவு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
தமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.
தரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.
இவர்களது எதிர்காலம் என்ன? இவர்களின் நிலை உயர்வது எப்போது? இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.
திசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.
கல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.
உள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.
மனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி? சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.
காவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.
எழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.
பொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.
மக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே!
(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).
Diju said
I have realy abused for education in tamil nadu