Tamil Nadu Cooperative Elections – Malpractices & Power Abuse (Savithri Kannan)
Posted by Snapjudge மேல் ஜூலை 27, 2007
கொள்ளையடிப்பவர்களின் கூடாரமா கூட்டுறவுகள்
நெஞ்சு பொறுக்குதில்லையே :: சாவித்திரி கண்ணன்
குமுதம்
25.07.07 தொடர்கள்
வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன கூட்டுறவு சங்கத் தேர்தல்கள்.
ஆளும் கட்சியினரைத் தவிர, வேறு யாரும் மனுதாக்கல் செய்ய முடியாமை, மீறி போட்டியிட்டால் அடிதடி, வெட்டுக்குத்து, தேர்தல் நடந்த ஒரு சில இடங்களிலும் ஓட்டுச் சீட்டுகளை கிழித்தெறிந்தது, ஓட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது, வாக்கு எண்ணிக்கையில் தகராறு என ஏக களேபரம்.
இரண்டு மாத காலத் தேர்தல் ஏற்பாடுகள், கோடிக்கணக்கான பணம், நேரம், உழைப்பு அத்தனையும் விரயமானது.
கோடிகோடியாய் பணம் ஈட்டிவிட்ட கட்சித் தலைமைகள் எந்த வகையிலாவது கட்சிக்காரர்களுக்குச் சம்பாதிக்கும் வழியை சாத்தியப்படுத்தாவிட்டால் கட்சி நடத்த முடியாதென்று உருவாகிவிட்ட சூழலில், தள்ளிப்போடப்பட்ட தேர்தல் என்பது தாமதப்படும் அநீதியே அன்றி தடுக்கப்பட்ட அநீதியாகிவிடாது.
‘‘சுயக்கட்டுப்பாடு இல்லாத தன்னாட்சியையும், சுதந்திரத்தையும் நினைத்தும் பார்க்க முடியாது’’ என்றார் மகாத்மா காந்தி. நினைத்துப் பார்க்க முடியாத கொடுமைகளையெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல்.
கூட்டுறவு என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிலிலோ, இடத்திலோ வாழும் மக்கள் ஒன்றாக இணைந்து தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வதற்கு, அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்படுவதே கூட்டுறவாகும். இங்கே அரசியல் கட்சிகளுக்கோ, அரசாங்கத்திற்கோ வேலையே இல்லை.
1904ல் கூட்டுறவு அமைப்புகள் உதயமானபோது பிரிட்டிஷ் அரசு, ‘‘அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் உதவிகள் இருக்குமே தவிர, தலையீடு இருக்காது’’ என்று தெளிவுபடுத்தியது.
கூட்டுறவு என்பது முழுக்க, முழுக்க மக்களின் தன்னிச்சையான கூட்டிணைந்த செயல்பாடு. இதில் அரசு தலையிடாமல் ஆதரவு அளித்தாலே போதுமானது. அது நாட்டை அகில உலக வல்லரசாக்கும் என்பதை விவசாயக் கூட்டுப் பண்ணைகளின் விஸ்வரூப வளர்ச்சியில் நிரூபித்தது சோவியத் யூனியன்! அப்படிப்பட்ட கூட்டுறவைத்தான் தமிழ்நாட்டில் தழைத்தோங்க விடாமல் கழக ஆட்சிகள் மாறி மாறி களங்கப்படுத்திவிட்டன.
கூட்டுறவுத் துறை வளர்ச்சி என்பது சோசலிஷ சமுதாயத்தின் அடித்தளம் என்பதை அறிந்திருந்த ஜவஹர்லால் நேரு, அரசு மற்றும் அரசியல் தலையீடுகளை அடியோடு ஒழித்து, கூட்டுறவு அமைப்புகளை கோயிலாகப் புனிதப்படுத்தினார். இதனால்தான் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி கூட்டுறவுத் துறையின் பொற்காலமாகப் பொலிந்தது. அன்றைய தினம் தமிழக கூட்டுறவு அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முன் மாதிரியாய் விளங்கின.
1967ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., கூட்டுறவு அமைப்புகளின் ஆணி வேரையே அசைக்கத் துணிந்தது.
1976ல் கூட்டுறவு அமைப்புகளைக் கலைத்தார் கருணாநிதி. அப்போது கலைத்த கூட்டுறவு அமைப்புகளை இன்றுவரை தட்டியெழுப்ப முடியவில்லை.
‘கூட்டுறவு அமைப்புகள் கட்சிக்காரர்களின் வேட்டைக் களமாக மாறலாகாது’ என்ற பயத்தில் எம்.ஜி.ஆர்., அதிகாரிகளைக் கொண்ட கூட்டுறவுகளை நடத்தினார். இதனால் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக அதிகாரிகள் ஆட்டம் போட்ட அவலம் அரங்கேறியது! ஜெயலலிதா ஆட்சியிலும் இந்தச் சீர்கேடுகளே தொடர்ந்தது. இவையாவும் வெளியார் தலையீடுகள் கூட்டுறவுக்கு விரும்பத்தக்கவையல்ல என்பதை அப்பட்டமாய் நிரூபித்தன.
89ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ‘அதிகாரிகள் பிடியிலிருந்து கூட்டுறவை விடுவித்து, அதற்கு ஆக்ஸிஜன் ஏற்றி உயிர்ப்பிக்கிறேன்’ எனக் கூட்டுறவுத் தேர்தல்களை அறிவித்தார். கூட்டுறவு அமைப்புகளைக் கொள்ளையடிக்கத் துடித்த கட்சிக்காரர்களின் அளவற்ற பசி அந்தத் தேர்தலையும் அடிதடியில் ஆழ்த்தி அரைகுறையோடு நிறுத்தியது.
1996ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியில் கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்தக்களரிகளோடு அரங்கேறின. உடன்பிறப்புகள் உறிஞ்சிக் கொழுக்கும் வேட்டைக்களமாகின கூட்டுறவுகள்.
ஜெயலலிதா அணுகுமுறை, வெளிப்படை சர்வாதிகாரமாயிருந்தது என்றால், கருணாநிதி அணுகு முறை,ஜனநாயகத்தின் பெயரிலான சர்வாதிகாரமாக உணரப்பட்டது.
இதனால் இந்திய அளவில் அரசு மற்றும் அரசியல் தலையீட்டிலிருந்து கூட்டுறவை விடுவிக்கும் சிந்தனைகள் வலுப்பெற்றன. 1987ல் அர்த்தநாரீஸ்வரன் கமிட்டியும், 1990ல் பிரேம்பிரகாஷ் கமிட்டியும் கூட்டுறவுத் துறையை அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கக் கோரின. இதன்படி 1991லேயே கூட்டுறவு அமைப்புகளுக்கான மாதிரி சட்டம் வடிவமைக்கப்பட்டது. இன்று ஆந்திரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் நவீன கூட்டுறவு சட்டத்தின்படி கூட்டுறவு அமைப்புகள் சிறப் பாகச் செயல்படுகின்றன. மத்திய அரசும் மற்ற மாநிலங்கள் இதைப் பின்பற்றவேண்டும் என்றது. இதை அமல்படுத்தினால் கட்சிக்காரர்களின் கை கட்டப்பட்டுவிடும் என்பதால், கருணாநிதியும் இதை இன்றுவரை அமல்படுத்த மறுக்கிறார். வற்புறுத்த வேண்டிய காங்கிரஸோ வாய்மூடி மௌனிக்கிறது. இனியும் அரசியல்வாதிகளின் அதிகார எல்லைகளை வரையறுக்காவிட்டால், ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றுக்குமே சாவு மணியடிக்கப்பட்டுவிடும். ஆகவே, மத்திய அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்தும் தற்சார்பு கூட்டுறவு சட்டம் என்பது தமிழ்நாட்டிற்குத் தவிர்க்க முடியாததாகும்.
நடிப்புச் சுதேசிகள்!
கூட்டுறவுக்கு ஐந்து கட்ட தேர்தல்களை அறிவித்த முதலமைச்சர் கருணாநிதி, ‘‘கூட்டுறவுத் தேர்தல்கள் அரசியல் அடிப்படையில் நடைபெறக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு’’ என்றவர் அடுத்த வாக்கியத்திலேயே, ‘‘எனவே தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக மரபுப்படி தோழமைக் கட்சிகளோடு கலந்து பேசி போட்டியிடுவது நல்லது’’ என்றார்.
அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் அதிகாரிகளை, ‘‘சொன்னபடி கேளு, இல்லாவிட்டால் விடுமுறை போட்டு வீட்டுக்குப் போ’’ என்று மிரட்டிய சம்பவங்கள் நடந்தேறின. இதனால் தி.மு.க.வினரின் விண்ணப்ப மனு மட்டுமே ஏற்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட 1921 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களில், 1,338 தொடக்க கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து சுமார் 10,000 பேர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தினசரிகளில், ‘தகுதி படைத்த வேட்பாளருக்கு வேட்புமனு கிடைக்கவில்லை என முதல்வர் கவனத்திற்கு வந்துள்ளது. அப்படிக் கொடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசே விளம்பரம் வெளியிட்டது. 90 சதவிகித இடங்களில் அதிகாரிகள் அராஜகமாக நடந்தபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஜனநாயகத்தின் பெயராலேயே ஜனநாயகத்தைக் கொல்லும் கலை, தி.மு.க.வினரைத் தவிர வேறு யாருக்கு வரும்?.
மறுமொழியொன்றை இடுங்கள்