Ilaiyaraja – Gangai Amaran, Bharathiraja & declined projects
Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007
திரைப்பட வரலாறு 708
இளையராஜா
இசை அமைக்க மறுத்த படங்கள்!
இளையராஜா:-
“எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்” என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், “இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!” என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!
அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் “ஒரு கை ஓசை” (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)
இப்படி, “நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை” என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் “புதிய பாதை”); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: “சிகரம்.”
தீஸ்ரி மஞ்சில்
சாருசித்ரா சீனுவாசன், “தீஸ்ரி மஞ்ஜில்” என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் – ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.
படம் முடிந்ததும், “இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.
சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.
டைரக்டர்கள்
சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று – நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.
என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.
கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.
காதல் ஓவியம்
பாரதிராஜா அவரது “காதல் ஓவியம்” படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், “படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்” என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.
நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்’ அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.
படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், “படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்” என்றேன். “சரி” என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.
திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, “ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!” என்றார்.
“அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!” என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.
பாரதி என்னிடம் வந்து, “வா, குருவாïர் போய் வரலாம்” என்றார். “படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!” என்று கூறிவிட்டேன்.
“காதல் ஓவியம்” படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.
“பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்” என்றேன்.
“உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!” என்றார்.
அதற்கு நான், “யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் “ஜெகன்மோகினி” படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்” என்றேன்.
ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.
ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த “வாலிபமே வா வா.” படம் ஓடவில்லை.
டைரக்டர் கங்கை அமரன்
“அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, “அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது’‘ என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.
நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.
அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!”
This entry was posted on ஜூலை 18, 2007 இல் 12:57 பிப and is filed under Amaran, Anandhu, Ananthu, Balumahendhira, Balumahendhra, Balumahendra, Balumahenthira, Barathiraja, Bharathiraja, Cinema, Directors, Films, Gangai Amaran, Ilaiaraja, Ilaiyaraja, Kaathal Oviyam, KSG, Mani, Manirathnam, Movies, MSV, music, Sigaram, Sikaram, Sridhar, Visvanathan, VIswanadhan, Viswanathan. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
ஸ்ரீதர் பற்றி இளையராஜா « அவார்டா கொடுக்கறாங்க? said
[…] சொல்லி இருக்கிறார். முழு கட்டுரை இங்கே […]